Month: February 2014

சுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது!

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா?

இவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும் அடிமைப்படும் அளவிற்கு பயம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானேயானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும், பயமும் இணைந்து இருக்க முடியாதவை. கடவுளை நேசிப்பவன் அவரிடம் பயப்படக்கூடாது. பயத்தின் காரணமாக இறைவனை நேசிப்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்.; பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடுகிறார்கள். இப்படி தண்டனைக்கு பயந்து இறைவனை வழிபடுவது, வழிபாடு என்பதையே தரம் தாழ்த்துவதாகும். அத்தகைய வழிபாடு சற்றும் பக்குவப்படாத தாழ்ந்தநிலை வழிபாடாகும். மனத்தில் பயம் இருக்கும்வரை அங்கே அன்பு எப்படி வர முடியும்? பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு!…கடவுள் மீது நாம் கொள்கின்ற பயம் மதத்தின் துவக்கமே; அவர்மீது கொள்ளும் அன்பே மதத்தின் முடிவு. இங்கு பயம் அனைத்தும் ஓடிவிட்டது. அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்தி வாய்ந்தவரா, ஓர் எல்லைக்கு உட்பட்டவரா, உட்படாதவரா என்ற கேள்விகளுக்கும் இங்கே இடமில்லை. அவர் நல்லது செய்தால் நல்லது. தீமை செய்தாலும் அதனால் என்ன? எல்லையற்ற அந்த அன்பைத் தவிர மற்ற எல்லா குணங்களும் மறைகின்றன…கடவுளே அன்பு, அன்பே கடவுள்…தெய்வீக அன்பாக மாறிவிடுவதுதான் உண்மையான வழிபாடு..அன்பின் உருவமாக எண்ணி அவரை வழிபடுங்கள். எல்லையற்ற அன்பு என்பதே அவரது பெயர். இது ஒன்றே அவரைப் பற்றிய விளக்கம்…தகப்பன் அல்லது தாய்க்குக் குழந்தையின்மீது உள்ள பாசம், கணவனுக்கு மனைவிமீதும், மனைவிக்குக் கணவன்மீதும் உள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவையனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பைக் கடவுள்மீது செலுத்தவேண்டும்…கடவுள்மீது நாம் அன்பு செலுத்த வேண்டிய முறை இதுவே: எனக்கு செல்வம் வேண்டாம், உடைமை வேண்டாம், கல்வி வேண்டாம், முக்தியும் வேண்டாம்…ஆனால் ஒன்றுமட்டும் அருள்வாய் நான் உன்னை நேசிக்கவேண்டும். அதுவும் அன்பிற்காக அன்பு செலுத்த அருள்வாய்…இறைமகிமை ஓங்கட்டும்! அன்பின் வடிவான அவன் புகழ் ஓங்கட்டும்!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – வேதாந்தமும் தனிச்சலுகையும்!

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர் அரசனிடம், தான் அவரது ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பால் தேவைப்படுகிறதென்றும், அரசனது அலுவலர் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா உங்கள் சோதனை என்று இகழ்ச்சியுடன் கேட்டான். பின்னர் அவன் தனது அலுவலர் அனைவரையும் அழைத்து, துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூற, அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்குத் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்துத் திரும்பினர். அன்றிரவு அவ்வாறே ஒவ்வொருவரும் ஒரு குடம் பாலை அதற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஊற்றிச் சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது. துணுக்குற்ற அரசன் அலுவலர் அனைவரையும் அழைத்து விசாரித்தான். எல்லோரும் பால் ஊற்றும் போது, தான் ஒருவன் மட்டும் பால் ஊற்றினால் எப்படித் தெரியப் போகிறது என நினைத்து, எல்லோருமே தண்ணீரையே ஊற்றினர் என்பது விளங்கியது.

இந்த உதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டுகிறார்: கதையில் கண்ட அலுவலர்களைப் போலவே நாமும் நமது பங்கு வேலையைச் செய்து வருகிறோம். அதாவது, எல்லா உயிர்களிலும் இறைவன் வசிக்கிறான் என்று கூறுகிறோம், ஆனால் அது கொள்கையளவில் இருக்கிறதே தவிர, நடைமுறைக்கு வரவேயில்லை. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை, அல்லது தனியுரிமை, யாருக்குத் தெரியப் போகிறது என நினைக்கிறோம். ஆனால் நம்மிடமுள்ள இறைவன் எல்லோரிலும் இருக்கிறார். ஒவ்வோர் உயிரும் பரமாத்மாவின் கோயிலே. தனிச் சலுகை என்னும் கருத்து ஒழிந்தால் தான் மதம் என்பதே தோன்றும். எனவே, ஒவ்வொரு சலுகையையும், அதற்குக் காரணமாக நம்முள் இருக்கும் சுயநலப்போக்கையும் தூக்கியெறிந்துவிட்டு, எல்லா மக்களையும் சமமாகக் காணும் ஞானத்தைப் பெற முயலுங்கள் என நமக்கு அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க தேசத்திற்குச் சென்று மிகப்பிரபலமடைந்து பெரும் புகழையும் பெற்றார். 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுவாமிஜி உரை நிகழ்த்தினார். இந்த சொற்பொழிவு அநேகரின் பாராட்டுதல்களைப் பெற்றது பல்கலைக் கழக மாணவர்களுக்கு சுவாமிஜியை மிகவும் பிடித்துப் போயிற்று. கீழைத் தத்துவத் துறை தலைமைப் பதவியை சுவாமிஜிக்கு அளிக்க இப்பல்கலைக்கழகம் முன் வந்தது இது மிகவும் அபூர்வமான விஷயம். நூற்றாண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உடைய ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இத்தகைய பதவி பெறுவதென்பது சாமான்யமானதல்ல. ஆனால் சுவாமிஜியோ, நான் ஒரு துறவி துறவி பட்டமோ பதவியோ பெறுவது அழகல்ல என்று கூறி பல்கலைக் கழகத்தின் வேண்டுகோளை மறுத்து விட்டார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – நாகரீகம் என்பது நன்னடத்தையில்

அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகர வீதியில் சுவாமி விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார் கையிலே ஒரு தடியுடன் உடலின் மீது ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சுவாமிஜி சென்றார். அப்போது எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி சுவாமிஜியின் தோற்றத்தைக் கண்டு மிகவும் சிரித்ததோடு மட்டுமின்றி கேலியாகவும் பேசினார். சிறிதாவது கோபம் வரட்டுமே சுவாமிஜிக்கு ஊஹும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது என்று அப்பெண்ணிடம் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றார். தமது சொந்த மண்ணின் மீது சுவாமிஜிக்குத்தான் எத்துணை மதிப்பு!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை!

அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக வகுப்புகள் எடுத்து வந்தார் சுவாமிஜி. அங்கிருந்த மாணவியரில் சகோதரி கிறிஸ்டைன் இந்த சம்பவத்தினை நினைவு கூர்ந்து எழுதுகிறார்.

அன்றைய தினம் 12 பேர் அந்த வகுப்பில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு பேரொளி வானத்திலிருந்து மெல்ல இறங்கி சுவாமிஜியின் திருப்பாதங்களைத் தீண்டியது போல் இருந்தது. அன்று மதியம் சுவாமிஜி துறவின் பெருமையைப் பற்றியும் காவி அணிவதால் வரும் ஆனந்தம், மற்றும் சுதந்திரம் பற்றியும் விவரித்துக் கொண்டே இருந்தார். திடீரென்று அங்கிருந்து சென்று விட்டார் அவர் பின் சிறிது நேரத்திற்குள் தியாகத்தையும் துறவையும் போற்றும் சந்நியாசி கீதம் என்ற கவிதையை எழுதி முடித்தார். அறுபது ஆண்டுகளுக்காகப் பிறகு 1995 ஆம் வருடம் செப்டம்பர் மாத வாக்கில்தான் சுவாமிஜி கைப்பட எழுதிய சந்நியாசி கீதத்தின் பேப்பர்கள் திரும்பக்கிடைத்தன. இது ஒரு விந்தையான விஷயம் 1948 ஆம் ஆண்டு நியூயார்க் ராமகிருஷ்ண விவேகானந்த மையம் ஆயிரம் தீவுப் பகுதியில் சுவாமிஜி தங்கியிருந்த வீட்டில் மறுசீரமைப்புப் பணிக்கு ஏற்பாடு செய்தது.

சுவாமிஜி எழுதிய சந்நியாசி கீதம் அங்கிருப்பது யாருக்கும் தெரியாததால் அது மற்ற பயனற்ற பொருள்களோடு வெளியே தன் குடும்பத்துடன் வழக்கமாக மடத்திற்குச் சென்று வரும் எலக்ட்ரீஷியனான மிஸ்டர் ஹரால்டு கோல் என்பவர் அந்த சந்நியாசி கீதத்தின் பெருமையை உணர்ந்து அந்தக் கவிதையை எடுத்து வந்து பத்திரமாக வைத்திருந்தார். சுவாமிஜியின் ஞாபகார்த்தமாக அவர் அதை வைத்திருந்தாலும் தன்னிடம் சுவாமிஜியின் கவிதை இருக்கும் தகவலை அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1955 செப்படம்பர் மாதம் அவர் அதை நியூயார்க்கில் உள்ள ராமகிருஷ்ண விவேகானந்த மையத்தின் தலைவரான சுவாமி நிகிலானந்த மகராஜிடம் ஒப்படைத்தார்.

சுவாமி சத்பிரகாஷானந்தர் எழுதிய என்ற நூலில் இந்த செய்தி வெளி வந்துள்ளது. சுவாமிஜியின் திருக்கரங்களினால் எழுதப்பட்ட சந்நியாச கீதத்தைப் பற்றி அவரது சீடர் சிறப்பித்துக் கூறுவதைக் காண்போம். சுவாமி விவேகானந்தரின் சீடர் சுவாமி ஆத்மானந்தர் தன் குருவான சுவாமிஜியிடம் அவர் கொண்டிருந்த பக்தி அளவிடற்கரியது. சுவாமிஜி எழுதிய கவிதைகளை பாடல்களை அவர் பாடும் போது அந்த இடம் முழுமையும் ஆன்மிக அதிர்வுகளால் நிரம்பும் அவரைப் பெரிதும் கவர்ந்தது சுவாமிஜி எழுதிய சந்நியாசி கீதம் என்ற பாடல்கள்.

புதிதாகத் துறவறம்மேற்கொண்டவர்களிடம் ஆத்மானந்தர் நீங்கள் உண்மையிலேயே துறவியாக வாழ விரும்பினால் இன்று முதல் இந்தப் பாடல்களின் ஒவ்வொரு வார்த்தையையும் இன்று முதல் தியானம் செய்யுங்கள் என்று கூறுவார். சுவாமிஜி கூறிய கருத்துக்கள் சந்நியாசிகளுக்கு மட்டும்தானா? வாழ்வை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்கள் அனைவருக்குமே அவை வழிகாட்டு அல்லவா! அவற்றின் ஒரு சிறிய பகுதியை நாமும் காண்போமே!

உறுதி உடைய நற்றுறவீ உம்மைப் பிணைத்துக் கீழ்ப்படுத்தி
இறுக்கும் தளைகளை நீர் நொறுக்கி எறிந்து விடுங்கள் இக்கணமே
மின்னும் தங்கத்தளையெனினும் மிகவும் கரிய இரும்பெனினும்
மன்றும் அன்பே ஆயிடினும் மனத்தில் வளரும் வெறுப்பெனினும்
எல்லாம் இடுக்கிப் பிடிபோல என்றும் உம்மை நெருக்குபவை
தங்கத் தளைகள் ஆனாலும் சற்றும் வலிமை குறைந்தனவா?
சிங்கத் துறவீ தளைமுற்றும் சிதைத் தெறியுங்கள் இப்போதே
ஓம்தத்ஸத் என நீங்கள் உள்ளம் உருகச் சொல்லுங்கள்.

என்ன அற்புதமான பொருள் பொதிந்த கவிதைகளை சுவாமிஜி வழங்கியிருக்கிறார்.

உண்மையான துறவியாக வாழ விரும்பும் சந்நியாசியாக இருந்தாலும் சரி இறைவனை அடைய விரும்பும் சாதகனாக இருந்தாலும் சரி நம்மைப் பிணைத்துள்ள தளைகளிலிருந்து விடுபட்டே ஆக வேண்டுமல்லவா!

தினமும் சுவாமிஜியின் இக் கவிதைகளின் பொருளைத் தியானிக்கும் போது, தளைகளிலிருந்து விடுபடவேண்டுமென்ற ஆர்வத்தையும், அதற்குரிய ஆற்றலையும் சுவாமிஜி வழங்குவார்.

முல்லா கதைகள் – கோழியால் வந்த குழப்பம்

ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். கருணையும் இரக்கமும் மிக்க ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான அல்லாவின் திருப்பெயரால்…. இந்த சமயத்தில் குருநானக் அங்கு வந்தார் அவர் முகத்தில் புன் முறுவல் முல்லாவுக்கு கோபம் வந்து விட்டது. ஏன் சிரிக்கிறாய்? நண்பா! நீ செய்வது தொழுகை அல்ல….அதனால் சிரிக்கிறேன் என்ன சொல்லுகிறாய்? தொழுகை இல்லையா? ஆமாம் உன்னுள்ளே பிரார்த்தனை என்பதே இல்லை முல்லாவின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. நேராக ஒரு நீதிபதியின் முன்னால் போய் நின்றார். நீதிபதி அவர்களே! இந்த ஆள் நாங்கள் தொழுகிற வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் அதுமட்டுமல்ல வழிபாடு செய்கிற எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். இவருக்கு நீங்கள் மரணதண்டனை வழங்க வேண்டும்.

நீதிபதி குருநானக் பக்கம் திரும்பினார். நிங்கள் சிரித்தது உண்மையா? உண்மைதான் ஏன் சிரித்தீர்கள்?அவர் செய்தது பிரார்த்தனை அல்ல….அதனால் சிரித்தேன் அப்படியா ஆமாம்…அவரை நான் சில கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதிக்க வேண்டும். கேளுங்கள்

முல்லா வந்து முன்னால் நின்றார். அவர் கையில் ஒரு புனித குர் ஆனைக்கொண்டு வந்து கொடுங்கள் என்றார் குருநானக் கொடுத்தார்கள். இப்போது சொல்லுங்கள்….. உங்கள் உதடுகள் அல்லாவை உச்சரித்த வேளையில் உங்கள் மனம் வீட்டிலே விட்டு வந்த கோழிகளை நினைத்ததா? இல்லையா? முல்லா கையில் குர் ஆன் இருந்தது. உண்மைதான் என்று முல்லா ஒப்புக் கொண்டார். குருநானக் விடப்பட்டார். குருநானக் முல்லாவை விடவில்லை. நீதிபதி சொன்னார் : முல்லா அவர்களே ! பள்ளி வாசலுக்குப் போய் ஏமாற்றுவதை விட அங்கே போகாமல் இருந்து விடுவது மேல். அங்கே ஒரு வேடதாரியாக இருக்காதீர்கள்.

கருணைமயமான இறைவனது திருநாமத்தைச் சொல்லும்போது கோழியை நினைக்காதீர்கள் உள்ளே இருக்கிற ஒன்றைத் தேடிச் செல்கிற போது வெளியே இருக்கிற ஒன்று நினைவுக்கு வரலாமா?

ஆன்மிகக் கதைகள் – இறுதி மூச்சு வரை உன் பணியே!

ராம லக்ஷ்மணர்கள் சுக்ரீவன் உள்ளிட்ட வானரசேனை, அத்துடன் பராக்கிரம அனுமன் இத்தனை பேரும் ஒன்று கூடி ராவணேஸ்வரன் பிடியிலுள்ள சீதையை எவ்வாறு மீட்பது என்று ஆலோசித்தனர். சுக்ரீவன் வானரங்களை திசைக்கொருவராய்ச் செல்ல உத்தரவிட்டான் பின் அனுமனைப் பார்த்து. பலம், புத்தி நன்னெறி, இடத்திற்கும் காலத்திற்கும் உகந்த வண்ணம் நடத்தல் ஆகிய எல்லா குணங்களும் கொண்டவரே சீதையை மீட்கும் வழியைச் சொல்லுங்கள் என்றான். சுக்ரீவனின் வார்த்தைகளும் அனுமனின் தோற்றமும் ஸ்ரீராமபிரானுக்கு , இவரே தம் காரியத்தை முடிக்க வல்லவர் என்ற எண்ணத்தைத் தந்தது. உடனே தனது மோதிரத்தை ஓர் அடையாளமாக ராமன் அனுமனிடம் அளித்தார். தன் பிரபுவின் எண்ணப்படியே சீதையைக் கண்டு. நல்ல சேதியுடன் ராமனிடம் வந்து அவரது விஸ்வாசமான வேலைக்காரனாக அனுமன் ஆனான்.

எஜமானன் அளிக்கும் வேலையை ஒருவன் சிரத்தையாகச் செய்யும் அளவிற்கு உண்மையான வேலைக்காரனாக ஆகலாம் இறைவனுடைய பணிகளில் நம்மை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டு அதற்கென்றே நாம் உழைக்க வேண்டும். இவ்வாறு செய்யச் செய்ய, நமது மூச்சும் பேச்சும் அவனது வேலைகளைப் பற்றியதாகவே இருக்கும் இதன் பலன் என்ன தெரியுமா? நாம் அவனது வேலைக்காரனாகி விடும்போது. அவனை வேலை வாங்கவே மாட்டோம். இறைவன் வருவதும் தெரியாது நமக்காக வேலை பார்ப்பதும் தெரியாது. அப்படி ஒரு நிலை இது. இரு எடுத்துக்காட்டுகளைக் காணலாம். சிறந்த பக்தர். தனது கிழிந்த துணியைத் தைக்கிறார் அவரது குணத்தில் மகிழ்ந்து சிவனும், பார்வதியும் பக்தருக்கு தரிசனம் தந்து ஏதாவது வரம் கேட்கும்படி அவரிடம் கூறுகின்றனர்.

அவர் எனக்கு எதுவுமே வேண்டாம் என்றாலும் இறைவனும் இறைவியும் திரும்பத் திரும்ப வற்புறுத்துகின்றனர் வரம் கேட்குமாறு. நான் தைக்கும் போது ஊசியின் பின்னாலே நூலும் வரவேண்டும் – இது பக்தர் கேட்ட வரம். இறைவன் சிரித்தவாறே, ஊசியின் பின்னால் நூல் வரத்தானே செய்யும்! இதற்கு எதற்கு வரம் ? என்று கேட்டார். பக்தர் கூறினார் : இந்த உலகில் எல்லாச் செயல்களும் உங்கள் இச்சைப்படியே நடக்கும் பொழுது எனக்கு எதற்கு வரம்? பின் சிவ பார்வதி தம்பதியினர் புன்னகைத்தவாறே மறைந்தனர். இன்ப துன்பங்களைக் கடந்த நிலை இது . மற்றொரு கதை அம்பிகை தனது பக்தன் ஒருவனுக்கு காட்சிகொடுத்து வரம்கேட்குமாறு கூறினாள். என் வலது காலில் உள்ள வீக்கத்தை இடது காலுக்கு மாற்று என்றான் பக்தன் இதெல்லாம் என்னால் முடியாது. வேறு வரம் கேள் என்று கூறினாள் அன்னை. பக்தன் சிரித்தவாறே, வேறு வரம் எனக்கெதற்கு எனக்கென்று உள்ளதை நான் அனுபவித்துத்தானே தீர வேண்டும் என்றதும் தனக்கு இனி வேலையில்லை என்றெண்ணிவாறே அங்கிருந்து அம்பிகை அகன்றாள்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – ஸ்ரீராமகிருஷ்ண சீடர்களின் தவம்!

சுவாமி நித்யாத்மானந்தா எழுதிய M-The Apostle and the Evangelist (ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளை எழுதிய மகேந்திரநாத் குப்தர் என்ற ம) என்ற நூலில் உள்ள 16 ஜூலை 1924-ல் நடந்த உரையாடலிலிருந்து தொகுத்தது.

அபய்பாபு: சுவாமி விவேகானந்தரும் அவரது சகோதரத் துறவிகளும் எதற்கு அவ்வளவு தவம் மேற்கொண்டார்கள்? ஸ்ரீராமகிருஷ்ணர்தான் ஏற்கனவே அவர்களையெல்லாம் சித்தியடைந்த வர்களாக உயர்நிலைக்கு அழைத்துப் போய்விட்டாரே! அப்படியிருந்தும், உணவு, தூக்கம் இவற்றையெல்லாம் துறந்து எதற்கு அவ்வளவு கடுமையான தவம் செய்தார்கள்?

ம: கடவுளை அடைந்த பிறகும் அவர்கள் ஏன் தவம் செய்கிறார்கள் என்றால், தாம் பெற்ற இறையுணர்வைத் திடப்படுத்திக் கொள்வதற்காக என்பதுதான் பதில். புராணத்தில் படித்திருக்கி றோம், முசுகுந்த மகாராஜா இறையனுபவம் கிட்டிய பிறகும் தவம் மேற்கொண்டார் என்று. ஏன்? அந்த உயர் அனுபவ நிலைக்குப் பிறகும் அவருக்கு மனம் அமைதியற்றுச் சலித்துக் கொண்டே இருந்தது. அதனாலேயே அவருக்கு, தவம் செய் என்ற ஆணை கிடைத்தது. அலை பாய்வது மனதின் சுபாவம்; அதைத் தவத்தின் மூலம் அமைதிப்படுத்த முடியும்.இன்னொரு காரணம். இறையுணர்வை அனுபவத்தில் அடைந்த பின்னும் அதிலிருந்து சறுக்கி விழ வாய்ப்புண்டு. ஏன் தினமும் தியானம் செய்கிறீர்கள்? என்று ஸ்ரீராமகிருஷ்ணர், தமக்கு அத்வைத சாதனையைக் கற்றுத் தந்த குருவான தோதாபுரியைக் கேட்டார். அதற்கு தோதாபுரி, பாத்திரத்தைத் தினமும் துலக்க வேண்டும்; இல்லாவிட்டால் அதில் களிம்பு ஏறிக் கறுத்துவிடும் என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் விடாமல், பாத்திரமாக இருந்தால்தானே தினம் தினம் துலக்க வேண்டும்? அதுவே தங்கமாகிவிட்டால் தினமும் துலக்க வேண்டியதில்லை அல்லவா? என்று கேட்டாராம். உண்மை என்னவெனில், எல்லோராலும் தங்கப் பாத்திரமாய் ஆகிவிட முடியாது. ஸ்ரீராம கிருஷ்ணர் ஓர் அவதார புருஷர்; அவர் சொக்கத் தங்கம்தான்.

எல்லோரையும் அவர் நிலைக்கு ஒப்பிட முடியுமா? ஸ்ரீராமகிருஷ்ணரைச் சரணடைந்தவர்கள் முக்தியடைவார்கள் என்பது உண்மைதான். இதுபற்றி அன்னை ஸ்ரீசாரதாதேவி ஒரு சாதுவிடம் விளக்குகையில், கடைசி மூச்சை விடுகையில், குருதேவர் வந்து அழைத்துப் போவார் என்பதில் ஐயமில்லை; ஆனால், நீ உயிரோடிருக்கும்போதே, சாந்தியில் நிலைபெற்று இருக்க வேண்டுமானால், தவம் செய்ய வேண்டும்; குருதேவரைத் தியானிக் கத்தான் வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுவாக, தவம் செய்பவனுக்கே இறைவ னின் கருணை கிட்டுகிறது. தவத்தின் மூலம் மனம் தூய்மையாகிறது; அதன் மூலம் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாவது எளிதாகிறது. அதே சமயம், கடவுளின் கருணை கிட்டுவதற்கு எந்தச் சட்டதிட்டமும் கிடையாது என்பதும் உண்மையே. அவர் நியதிகளுக்கு அப்பாற்பட்டவர்; அருளுவதும் அருளாதிருப்பதும் அவரது விருப்பம். அப்படியென்றால் என்னதான் வழி? செய்தால் அவரை வளைத்துப் போட்டு விட முடியும் என்ற கணக்கு ஏதும் போடாமல், தவம் செய்ய வேண்டும்.அப்படியானால், வாழ்நாள் பூராவும் ஒருவன் தவம் செய்து கொண்டே இருக்க வேண்டுமா? படகோட்டி, பயண தூரம் முழுவதும் துடுப்பு போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதானா? அப்படியல்ல.

அலை அதிகமாகப் பொங்குகையில், காற்று வேகமாகச் சுழன்றடிக்கையில், படகோட்டி துடுப்பைக் கவனமாகப் போடத்தான் வேண்டும். சற்று நேரம் பொறுத்து, கடல் அமைதியாகும்; காற்று சாதகமாய் வீசும். அப்போது, படகோட்டி பாய்மரத்தைச் சரியாகக் கட்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு புகைபிடிக்கிறான். படகு, தானே ஒழுங்காகப் பயணிக்கிறது. இப்போது படகோட்டிக்கு, ஓய்வு, அமைதி, ஆனந்தம்தான். அதுபோலவே ஒரு சாதகன், மனதின் கொந்தளிப்புகளையும், ஆசாபாசங்களையும் சமாளிக்கக் கடுந்தவம் செய்கிறான்; மனம் அமைதியாகும்போது தவமும் முடிவுக்கு வருகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதாரபுருஷராக இருந்தும், அவரே எத்தனை தவம் செய்தார்! எத்தனை வித ஆன்மிகச் சாதனைகள், எத்தனை பஜனை! சாதுசங்கத்தின் அவசியத்தைத் திரும்பத் திரும்ப உபதேசித்த அவர், தாமே சாதுக்களையும் உருவாக்கித் தந்தார். தன் அந்தரங்கச் சீடர்களைப் பூரணத்துவம் அடைந்தவர்களாக ஆக்கித் தந்தார். இறைவனை உருவமுள்ளவராகவும் உருவமற்றவராகவும் காணும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்கினார். அப்படியிருந்தும், அவர்களை இப்படி கடும் தவத்துக்கு ஏன் உட்படுத்தினார் என்றால், அதற்கு மற்றொரு முக்கிய காரணம், அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதால்தான். அவர்களைப் பார்த்துத்தான் பிறரும் சாதனையும் தவமும் செய்யக் கற்றுக் கொள்வார்கள்.குருதேவரின் மறைவுக்குப் பிறகு, தனித்து விடப்பட்ட அந்த இளம்சாதுக்கள், பாராநகர் மடத்தில் எத்தகைய விவேக வைராக்கியத்தோடு தவம் மேற்கொண்டார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேனே.

அவர்கள் இடுப்பில் கோவணம் மட்டும்தான் இருந்தது. நாள் முழுவதும் ஜபத்திலும் தியானத்திலும் மூழ்கிக் கிடப்பார்கள். உடம்பைப் பற்றியோ, உணவைப் பற்றியோ கவலையே படமாட்டார்கள். சில நாட்கள் தொடர்ந்து உண்ண ஒன்றுமே இருக்காது. அவர்களிடம் மொத்தத்தில் உருப்படியாய் இருந்தது ஒரு வேஷ்டியும் ஒரு துண்டும்தான். அவர்களில் யாருக்கு வெளியே போகும் வேலை இருக்கிறதோ, அவர்கள் அதை உடுத்திக் கொண்டு போய் வருவார்கள்.அவர்கள் உலகுக்கே உபதேசிக்கப் பிறந்தவர்கள். ஒரு முறை கண்டவர்கள் என்ற தகுதி அதற்குப் போதாது. பிரம்மஞானத்தில் நிலைபெற்றவர்களாக அவர்கள் உறுதி பெற வேண்டியிருந்தது. அதற்குத்தான் இத்தனை கடின தவம். ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கின்றேன் என்றோ கல்விதம் பிரம்மா (இருப்பதெல்லாம் பிரம்மம் ஒன்றே) என்றோ, வெறுமனே கிளிப்பிள்ளைபோல் வாயால் சொல்லாமல், அதை அனுபவப்பூர்வமாக, எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு வணங்கும் நிலையைப் பெறுவதற்குத்தான் இத்தனை கடினமான தவம். மொத்தத்தில், ஆரம்ப நிலையில் கடவுளை அடைவதற்குத் தவம் வேண்டியிருக்கிறது; அடுத்த நிலையில், அனுபூதியில் பெற்றதை நிலைத்த ஆனந்தமாக ஆக்கவும், தாம் பெற்ற ஆனந்தத்தை அடுத்தவர்களுக்கு வழங்கும் தகுதியைப் பெறவும் தவம் அவசியமாகிறது.- தமிழாக்கம்: சி. வரதராஜன்

சுவாமி விவேகானந்தர் கதைகள் – எது உண்மையான வழிபாடு?

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள். தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள்தான். நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்விகம் மறைந்துவிடும். திருத்தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களைச் சுலபமாக நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழை எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவன்தான் உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கிரகத்தில் மட்டும் சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு ஏழைக்காகிலும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல் – அவனிடம் சிவபெருமானைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார். கோயிலில் மட்டும் தன்னைக் காண்பவனைவிட, அவனிடம் சிவபெருமான் அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

ஒரு பணக்காரனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் சோம்பேறி. அவன் வேலையே செய்ய மாட்டான். ஆனால் யஜமானன் தோட்டத்திற்கு வந்தால் போதும்; உடனே எழுந்துபோய் கைகூப்பி வணங்கியபடி யஜமானனிடம், ஓ, என் யஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று புகழ் பாடி, அவர் முன்னால் பல்லை இளித்துக்கொண்டு நிற்பான். மற்றொரு வேலைக்காரன் அதிகம் பேசுவதே இல்லை. ஆனால் அவன் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, நீண்ட தூரத்தில் வசிக்கும் தன்னுடைய யஜமானனின் வீட்டிற்குச் சுமந்துகொண்டு செல்வான். இந்த இரண்டு தோட்டக்காரர்களில் யாரை யஜமானன் அதிகம் விரும்புவார்? சிவபெருமான்தான் அந்த யஜமானன். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள் – ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏழைகளும், பலவீனர்களுமான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர்.

இவர்களில் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவருடைய பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள். தந்தைக்குச் சேவை செய்ய விரும்புவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவருடைய குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும். இறைவனின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் மிகச் சிறந்த தொண்டர்கள் என்று, சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள்; உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நல்ல செயல். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மையடையும். அதனால் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் உங்களிடம் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோருடைய இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நாம் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அஞ்ஞானமும் தீய குணங்களும்தாம் நம் இதயம் என்ற கண்ணாடியில் படிந்திருக்கும் தூசியும் அழுக்குமாகும்.

நமது நன்மையை மட்டுமே நினைக்கும் சுயநலம், பாவங்கள் எல்லாவற்றிலும் முதல் பாவமாகும். நானே முதலில் சாப்பிடுவேன்; மற்றவர்களைவிட எனக்கு அதிகமாகப் பணம் வேண்டும்; எல்லாம் எனக்கே வேண்டும்; மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கம் போக வேண்டும்; எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. சுயநலம் இல்லாதவனோ, நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் – நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மிகவாதி; அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். அவன் படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி – அவன் அறிந்தாலும் சரி, அறியவில்லை என்றாலும் சரி – அவனே மற்ற எல்லோரையும்விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.
சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களுக்கும் சென்று வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் தரிசித்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடல் முழுவதும் மதச் சின்னங்களை அணிந்திருந்தாலும் – அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

(சுவாமி விவேகானந்தர், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில் 27.1.1897-ஆம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவு.)

சுவாமி விவேகானந்தர் கதைகள் – பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்!

இந்தியாவை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள். அவரிடம் எல்லாமே ஆக்கபூர்வமானவை; அவரிடம் எதிர்மறையாக எதுவும் இல்லை என்று, கவியரசர் ரவீந்தரநாத் தாகூர் கூறினார். சுவாமி விவேகானந்தரிடம் குறுகிய மனப்பான்மை, எதிர்மறைக் கருத்துகள் ஆகியவை ஒருபோதும் இருந்ததில்லை. அவர் மற்றவர்களும் குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு, நடைமுறையில் நன்மை தரக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும்; பரந்த மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு சமயம் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் என்ற இடத்தில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 29 வயது. அங்கு அவரை அறிஞர்கள், உயர் அதிகாரிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள பலர் சந்தித்து உரையாடினார்கள். அவ்விதம் விவேகானந்தரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தவர்களுக்கிடையில், அவ்வப்போது கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்த உரையாடல்களின்போது சிலர் நியாயமில்லாத ஏதேனும் ஒரு கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று முரட்டுத்தனமாகப் பேசினார்கள். சிலர் தங்கள் கருத்து தவறு என்று தெரிந்த பிறகும், அதுதான் சரி என்று விவாதித்தார்கள். அவ்விதம் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு நாள் மனம்போன போக்கில் பண்டிதர்கள் சிலர், தங்களுக்குள் காரசாரமாக விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் படிப்பினை தரும் வகையில் சுவாமி விவேகானந்தர் பின்வரும் ஒரு கதையைக் கூறினார்: ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும் என்றார்கள்.

தச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை என்றனர். அப்போது கொல்லர்கள், நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும் என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும் என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று வாதிட்டார்கள். கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அது வரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள்! முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது! என்றார்கள்.

இப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்பும் இன்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான். நம்மில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம் – என்று சுவாமி விவேகானந்தர் கதையைச் சொல்லி முடித்தார். உண்மை எது? என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, மற்றவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது நல்லது. ஆனால் தெரிந்து வேண்டுமென்றே வீண் வாக்குவாதங்களிலும், வீம்புப் பேச்சுக்களிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. ஒரு பிரச்னை என்று வரும்போது, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் – வெற்றி பெறுவதுதான் அறிவுடைமையாகும். இதற்கு மாறாக புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, திக்குத் தெரியாத காட்டில் நுழைவது போன்றது. கொள்கைவெறி அழிவுக்கு காரணமாக அமையுமே தவிர, ஒருபோதும் ஆக்கபூர்வமான எந்த நன்மையையும் தராது.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மனத்தை ஒருமுகப்படுத்தினால் வெற்றி!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்! அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான். சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின! இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று வினவினார்கள். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.

அவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார். மேலும் சுவாமி விவேகானந்தர் மனஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்: வெற்றியின் ரகசியம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும் தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு, தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும். மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர, வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனத்தை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு கொண்ட நெஞ்சினாய் வா, வா, வா!

காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும் விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர், காசியில் துர்க்கை கோயிலின் மதிற்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக் கூட்டம் கீறிச்சிட்டு, பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில குரங்குகள் அவர் மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தன, சில குரங்குகள் அவரைப் பிறாண்டின, சில குரங்குகள் அவரைக் கடித்தன, சில குரங்குகள் அவரது உடையைப் பிடித்திழுத்தன! எனவே இந்த இக்கட்டான நிலையில் விவேகானந்தர், குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்! ஆனால் அவர் ஓடினாலும், குரங்குகள் பின்தொடர்ந்து அவரை விடாமல் துரத்தின. இந்தக் குரங்குகளிடமிருந்து தப்புவதற்கு வழியில்லை! என்று அவர் நினைத்தார். விவேகானந்தர் ஓடிக்கொண்டிருப்பதையும், ஒரு குரங்குக் கூட்டம் அவரைத் துரத்துவதையும் சற்று தூரத்திலிருந்த சந்நியாசி ஒருவர் பார்த்தார்.

உடனே அவர் விவேகானந்தரைப் பார்த்து, நில்! குரங்குகளை எதிர்த்து நில்! என்று உரத்த குரலில் கூவினார். அந்தச் சொற்கள் விவேகானந்தரின் காதுகளில் விழுந்தன. அவர் புதிய ஓர் ஊக்கம் பெற்றார். உடனே ஓடுவதை நிறுத்தி, துணிவுடன் குரங்குகளை நோக்கித் திரும்பினார். இப்போது அவர் குரங்குளை நோக்கி முனைப்புடன் முன்னேறத் தொடங்கினார். அவர் உறுதியுடன் வீறுடன் குரங்குகளை எதிர்க்கும் நிலையில் இருந்தார். அவ்வளவுதான்! அவரது தோற்றத்தைப் பார்த்து குரங்குக் கூட்டம் பயந்துவிட்டது! இப்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது! இவர் நம்மைத் தாக்குவார்! இவரிடமிருந்து இப்போது நாம் எப்படியும் தப்பிக்க வேண்டும்! இவரிடமிருந்து நாம் தப்பித்தால் போதும்! என்று குரங்குகள் நினைத்து, அங்கிருந்து பின்வாங்கி மிகவும் வேகமாக வந்த வழியில் திரும்பி ஓட ஆரம்பித்தன! இந்த நிகழ்ச்சி விவேகானந்தரின் உள்ளத்தில் மிகவும் நன்றாகப் பதிந்துவிட்டது.

இதை அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் நியூயார்க்கில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் கூறினார். அந்தச் சொற்பொழிவில் அவர், இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினையைப் பற்றியும் இவ்விதம் குறிப்பிட்டார்: இது நம் வாழ்க்கை முழுவதற்கும் நல்ல ஒரு படிப்பினையாகும். பயங்கரத்தை எதிர்த்து நில்! தைரியமாகப் பிரச்னைகளை எதிர்த்து நில்! ஒருபோதும் அவற்றுக்கு பயந்து ஓடாதே! இவற்றுக்கு நாம் பயந்து ஓடாமல் இருந்தால், அந்தக் குரங்குக்கூட்டம் போலவே துன்பங்களும் நம்மிடமிருந்து விலகி ஓடிவிடும். மனிதனைக் கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் இயற்கையின் வேகங்களையும், பிரச்னைகளையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒருபோதும் பணிந்துவிடக் கூடாது. கோழைகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. அச்சத்தை எதிர்த்து நில்லுங்கள்! துன்பங்களை எதிர்த்து நில்லுங்கள்! அறியாமையை எதிர்த்து நில்லுங்கள்!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – இளைஞர்கள் வைத்த சோதனை!

ஒரு முறை அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர், இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை என்பது பற்றிச் சொற்பொழிவு செய்தார். அந்தச் சொற்பொழிவில் அவர், இறைவனைப் பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்ற ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை – பதற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த இளைஞர்கள் மனம் போனபடி வாழ்ந்தனர். அவர்கள், விவேகானந்தர் கூறியதை நாம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்! என்று முடிவு செய்தார்கள்.

எனவே அவர்கள் விவேகானந்தரை, ஒரு சொற்பொழிவுக்காக அழைத்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விவேகானந்தர், சொற்பொழிவு செய்ய வேண்டிய இடத்திற்குச் சென்றார். ஆரம்பத்திலிருந்தே அந்த இளைஞர்கள், விவேகானந்தரைச் சோதிப்பது போலவே நடந்துகொண்டார்கள். ஒரு மரத்தொட்டியைக் கவிழ்த்துப் போட்டு, இதுதான் சொற்பொழிவு மேடை – இதில் நின்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்று கூறினார்கள்.
விவேகானந்தர் எந்த மறுப்பும் கூறாமல் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டார். அவர் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் சொல்லிக்கொண்டிருந்த கருத்தில் மனம் ஒன்றிய நிலையில், சூழ்நிலையை மறந்து பேசினார். திடீரென்று அவரைச் சுற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன! காதைப் பிளக்கும் துப்பாக்கிக் குண்டுகளின் ஓசை அங்கு பலமாக எழுந்தது! சில குண்டுகள் விவேகானந்தரின் காதின் அருகிலும் பாய்ந்து சென்றன! ஆதலால் சுற்றிலும் பதற்றமும் கூக்குரலும் எழுந்தன.

ஆனால் இவ்விதம் சூழ்நிலை மாறியது காரணமாக, விவேகானந்தரிடம் எந்தச் சலனமும் இல்லை. அவர் சூழ்நிலையால் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். இப்போது, விவேகானந்தரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்! என்று நினைத்த இளைஞர்கள் தோற்றார்கள். எதுவுமே அங்கு நடக்காததுபோல், விவேகானந்தர் உரிய நேரத்தில் தன் சொற்பொழிவை முடித்தார்.அந்த இளைஞர்கள் விவேகானந்தரிடம், உண்மைதான் சுவாமிஜி, நீங்கள் அப்பழுக்கற்றவர். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன போதிக்கிறீர்களோ, அப்படியே வாழ்கிறீர்கள் என்று கூறி, அழாத குறையாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – கடமையைச் செய், உயர்வை அடைவாய்!

கடமைகளைச் செய்வதுதான், நாம் உயர்வு பெறுவதற்கு உரிய ஒரே வழியாகும். அவ்விதம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில உலர்ந்த சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும் கொக்கும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம்! கோபத்துடன் அவர், என்ன! எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்! என்று கூறியபடியே, அந்தப் பறவைகளைப் பார்த்தார். யோகி அல்லவா! அவரது கண்களிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது! அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்நின்று, அம்மா, பிச்சை இடுங்கள்! என்று கேட்டார். மகனே! கொஞ்சம் இரு என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்! என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக்கொள்ளாதே! இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல! என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவள் கால்களில் வீழ்ந்து வணங்கி, அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று வினவினார். அதற்கு அவள், மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனபூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன்; இப்போது என் கணவருக்குச் செய்து வருகிறேன். என் கடமைகளை நான் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது, காட்டில் உனக்கு நடந்ததையும் தெரிந்துகொண்டேன். இதற்கு மேலும் நீ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், இன்ன நகரத்திலுள்ள கடைத்தெருவுக்குச் செல். அங்கே ஒரு வியாதனை (இறைச்சி வியாபாரி) நீ சந்திப்பாய். அவன் உனக்குப் போதிப்பான் என்று கூறினாள். முதலில் அந்தத் துறவி, ஒரு வியாதனிடம் நான் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன்பு நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். கடைத்தெருவைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய ஒரு கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, இறைச்சியை விலை பேசுவதும் விற்பதுமாக இருந்தான்.

அடக் கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த கருத்துகளைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே! என்று நினைத்து துறவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? இங்கு சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான். இங்கே என்ன நடக்கப் போகிறதோ? என்று நினைத்துக்கொண்டே துறவி அங்கு உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழிந்தது. வியாதனின் வேலை முடிந்தது. அவன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்து, வாருங்கள், நாம் வீட்டிற்குப் போகலாம்! என்றான். வியாதன் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்கு இருக்கை ஒன்றை அளித்து, இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர், அவன் வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான். பிறகு துறவியிடம் வந்தான்.

துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இது இழிவான தொழில் ஆயிற்றே! என்று வினவினார். அதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, மகனே, கடமைகளில் எதுவும் இழிந்ததும் இல்லை, கேவலமானதும் இல்லை. என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்குப் பற்று எதுவும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கு உரிய சேவைகள் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் நிலைக்கு உரிய என் கடமைகளை நான் பற்றின்றி செய்தேன். அதனால் எனக்குக் கிடைத்தவற்றையே நீங்கள் என்னிடம் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று கூறினான்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்

நியூயார்க்
19.11.1894

என் வீர இளைஞர்களுக்கு,

அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் – வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். என் இளைஞர்களே, அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே! மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும்; ஏழை எளியவர்கள், பாமரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மிகவும் மனம் உருக வேண்டும். மற்றவர்களின் நன்மையின் பொருட்டு உங்கள் இதயமே நின்று, மூளைக் குழம்பி, உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்ற நிலை வரும் வரையில் மற்றவர்களுக்காக நீங்கள் மனம் உருகுங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் ஆன்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும்.
முயற்சி செய்யுங்கள்! முயற்சி செய்யுங்கள்! – கடந்த பத்து ஆண்டுகளாக இதுதான் என் இலட்சியமாக இருந்து வந்தது. முயற்சி செய்யுங்கள்! – இதையே இப்போதும் நான் சொல்கிறேன்.

என்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தபோதும், முயற்சி செய்யுங்கள்! என்று கூறினேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும், முயற்சி செய்யுங்கள்! என்று அதையே நான் சொல்கிறேன். என் குழந்தைகளே! பயப்படாதீர்கள்! பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழலால் பயனில்லை, கல்வியால் பயனில்லை – அன்பு ஒன்றுதான் பயன் தருகிறது; ஒழுக்கம் ஒன்றுதான் துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து நம்மை முன்னேறச் செய்கிறது. சுதந்திரம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது. நமது முன்னோர்கள் ஆன்மிகச் சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள். அதனால் அற்புதமான ஒரு மதம் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதே சமயம், அவர்கள் சமுதாயத்தின் கால்களில் கனத்த சங்கிலியைக் கட்டி வைத்தனர். அதனால் இப்போது நமது சமுதாயம் – ஒரு வார்த்தையில் சொல்வதானால் – மிகவும் பயங்கரமாகவும், காட்டுமிராண்டித்தனமானதாகவும் இருக்கிறது. இதற்கு மாறாக, மேற்கு நாடுகளில் சமுதாயத்தில் மக்களுக்கு எப்போதும் சுதந்திரம் இருந்து வந்திருக்கிறது; அவர்களுடைய சமுதாயத்தைப் பாருங்கள்! அதற்கு மாறாக அவர்களின் மதத்தையும் பாருங்கள்!

வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம் தேவைப்படுவதுபோல் உணவு, உடை, திருமணம் முதலிய ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுக்குத் தீமை செய்யாத அளவில் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு உணவு தர வேண்டும், கல்வியைப் பரப்ப வேண்டும், சமுதாயத்தில் கொடுமைகளை அகற்ற வேண்டும். சமுதாயத்தில் கொடுமைகள் வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் இன்னும் அதிகமாக உணவு வேண்டும், இன்னும் அதிகமான வாய்ப்புகள் தர வேண்டும்! மற்றவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கத் தயாராக இல்லாதவனுக்கு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி கிடையாது. எல்லா அதிகாரங்களையும் ஆங்கிலேயர்கள் உங்களுக்கே தந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதனால் என்ன ஆகும்? அந்த அதிகாரம், சாதாரண மக்கள் அதைப் பெறாமல் இருப்பதற்குத்தான் பயன்படும். அடிமைகள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காகவே அதிகாரம் கேட்கிறார்கள். இந்தியாவில் இந்தியாவின் ஆன்மிகத்தைக் கொண்ட ஓர் ஐரோப்பிய சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியும், முடிய வேண்டும் என்பதுதான் என் நம்பிக்கை. எல்லோருக்கும் முக்தி உண்டு, எல்லோரும் சமம் என்று போதித்த பண்டைய ஆச்சாரியர்களான சங்கரர், இராமானுஜர், சைதன்யர் போன்றவர்களின் வழியில் சமுதாயத்தைப் புதுப்பிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடம் ஊக்கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்டும். பிறகு அதை எல்லா இடங்களிலும் பரப்புங்கள். வேலை செய்யுங்கள், வேலை செய்யுங்கள். மற்றவர்களை வழி நடத்திச் செல்லும்போது, நீ ஒரு வேலைக்காரன் போலவே நடந்துகொள். சுயநலம் இல்லாதவனாக இரு. உன்னுடைய நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதே! எல்லையற்ற பொறுமையுடன் இரு. அவ்விதம் நீ செய்தால் உனக்கு வெற்றி நிச்சயம். மற்றவர்களின் நன்மைக்காக வேலை செய்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம். போலித்தனம் என்பது இருக்கக் கூடாது, பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது – இதைத்தான் நான் விரும்புகிறான். நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்; பெயரும் புகழும் தேடிக்கொள்வதற்காகவோ, ஏன் பொதுநன்மைக்காகவோகூட, நான் போலியாக வாழ்ந்தேன் என்ற கறைபடிந்த மனசாட்சியுடன் இறந்துபோக நான் விரும்பவில்லை. ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்றுகூட வீசக் கூடாது; செயல்முறையில் குற்றத்தின் நிழல்கூடப் படியக் கூடாது.
சலனபுத்தி வேண்டாம், இரகசிய வித்தை என்ற அயோக்கியத்தனம் வேண்டாம், இருட்டில் செய்யும் எதுவும் வேண்டாம். என் வீரக் குழந்தைகளே, முன்னேறுங்கள். பணம் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி – உங்களுடன் மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி – முன்னேறிச் செல்லுங்கள்!

உங்களிடம் அன்பு இருக்கிறதா, இல்லையா? உங்களிடம் இறைவன் இருக்கிறாரா, இல்லையா? முன்னேறிச் செல்லுங்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்! எதுவும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது! கவனமாக இருங்கள். உண்மைக்குப் புறம்பான எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையைவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள், நாம் வெற்றி பெறுவோம்; அது மெதுவாக இருக்கலாம், ஆனால் வெற்றி நிச்சயம். இந்தியாவின் எதிர்காலம் உங்களையே நம்பியிருக்கிறது. வேலை செய்துகொண்டே போங்கள்!

ஆசீர்வாதங்கள்.
அன்புள்ள,
விவேகானந்த

சுவாமி விவேகானந்தர் கதைகள் – என் உடல் புலிக்கு உணவாகட்டும்!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். இவ்விதம் அவர் நாலரை ஆண்டுகள் இருந்தார். அந்நாள்களில் பொதுவாக அவர் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் உணவையே உட்கொண்டார். இந்த நிலையில் ஒருநாள் அவர், எனக்கு ஏழைகள் உணவு தருகிறார்கள். அந்த ஏழைகளுக்கு என்னால் என்ன நன்மை? அவர்கள் எனக்குத் தரும் ஒரு பிடி அரிசியை மீதம் பிடித்தால், அது அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவாகுமே! அதெல்லாம் போகட்டும், நான் இந்த என் உடலைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது? எனவே இனிமேல் நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்துகொண்டார். அந்த எண்ணம் அவரிடம் தீவிரமடைந்தது. எனவே அவர், ஏதாவது ஒரு காட்டிற்குள் சென்று, உணவு எதுவும் உட்கொள்ளாமல் தவம் செய்தபடியே இறந்துவிடுவது! என்று தீர்மானித்தார். இந்த எண்ணத்துடன் அவர் ஒரு காட்டிற்குள் சென்றார்.

அங்குக் காட்டில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்தபோது, மயக்க நிலையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இறைவனைத் தியானம் செய்ய ஆரம்பித்தார். அவரது தியானம் சிறிது கலைந்தபோது… ஆகா… அதோ தெரியும் இரண்டு நெருப்புத் துண்டுகள்… ஆம்! அவை… சந்தேகமேயில்லை! ஒரு புலியின் கண்கள்தாம்! அதோ, அந்தக் கண்கள் அவரை நோக்கி நெருங்கி நெருங்கி வந்தன; இதோ அருகில் வந்துவிட்டன! விவேகானந்தரின் உடலும் சரி, உள்ளமும் சரி – இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்த அந்தப் புலியும், ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது. புலியை அன்புடன் நோக்கினார் விவேகானந்தர்:சரிதான். என்னைப்போல் இந்தப் புலியும் இப்போது பசியோடு இருக்கிறது போலும்! இருவரும் பட்டினியாக இருக்கிறோம். இந்த என் உடலால் உலகத்திற்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த புலிக்காவது என் உடல் உணவாகப் பயன்படும் என்றால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டார். இந்த எண்ணத்துடன் அவர் அமைதியாக, அசைவின்றி மரத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டார்.

கண்களை மூடி அவர், இதோ! இப்போது புலி என்மீது பாயப் போகிறது! என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயவில்லை. அதனால் அவருக்குச் சற்று சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது அங்கிருந்து சென்றுவிட்டிருந்தது. அப்போது அவர், ஆகா! இறைவன் என்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறார்! என்று மனம் உருகி நினைத்துப் பார்த்தார். அன்றைய இரவை விவேகானந்தர் காட்டிலேயே தியானத்தில் கழித்தார். பொழுது விடிந்தது. முந்தின நாளின் களைப்பு, சிரமம் எவையும் அவர் உடலில் இல்லை. உடலும் மனமும் புதிய ஓர் ஆற்றலைப் பெற்றதுபோல் இருந்தன. அவர் மேற்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – ராக்ஃபெல்லருக்கு வழங்கிய அறிவுரை!

அப்போது சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரை ராக்ஃபெல்லர் என்பவர் சந்தித்தார். ராக்ஃபெல்லர், பிற்காலத்தில் உலகில் புகழ் பெற்ற பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். விவேகானந்தரைச் சந்தித்தபோது, ராக்ஃபெல்லர் அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லை. ராக்ஃபெல்லரின் நண்பர்கள் பலர், விவேகானந்தரைப் பற்றி அவ்வப்போது ராக்ஃபெல்லரிடம் கூறியிருந்தார்கள். எனவே விவேகானந்தரைப் பற்றி ராக்ஃபெல்லர் நிறையவே கேள்விப்பட்டிருந்தார். என்றாலும் ஏனோ அவர், விவேகானந்தரைச் சந்திப்பதற்குத் தயங்கினார். விவேகானந்தர் அமெரிக்காவில் பல இடங்களுக்குச் சென்று, சொற்பொழிவுகள் செய்துகொண்டிருந்தார். அவர் ஒருமுறை ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் திடீரென்று, விவேகானந்தரைச் சந்திக்க வேண்டும்! என்ற தீவிர எண்ணம் ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது.

அந்த வேகத்தில் அவர் விவேகானந்தர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அங்கு அவருக்காக வீட்டின் கதவை வேலைக்காரன் திறந்தான். அந்த வேலைக்காரனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ராக்ஃபெல்லர் முன்அனுமதிகூடப் பெறாமல் விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார். விவேகானந்தர் அப்போது அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவ்வளவு வேகமாக ராக்ஃபெல்லர் சென்றும் விவேகானந்தர் தன் முகத்தைத் தூக்கி, வந்தது யார்? என்று பார்க்கவில்லை. இவ்விதம் சிறிது நேரம் கழிந்தது. தலை கவிழ்ந்திருந்த நிலையில் விவேகானந்தர் – தலை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் – திடீரென்று ராக்ஃபெல்லர் மட்டுமே அறிந்திருந்த அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். இறுதியில் அவர், உங்களிடம் இருக்கும் பணம் உண்மையில் உங்களுடையது இல்லை. உலகிற்கு நன்மை செய்வதற்காக இறைவன் உங்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்.

அதனால் உலகிற்கு நன்மை செய்வதற்கு உரிய ஒரு வாய்ப்பை இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான்! எனவே நீங்கள் உங்களிடம் இருக்கும் பணத்தை உலக நன்மைக்காகச் செலவு செய்யுங்கள் என்று கூறினார். இவ்விதம் விவேகானந்தர் கூறியது ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் எனக்குச் சொல்வதா? என்று அவருக்குத் தோன்றியது. எனவே அவர், நன்றி, வணக்கம், சென்று வருகிறேன் என்றுகூட எதுவும் சொல்லாமல், வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினார். ஆனால் விவேகானந்தரின் ஆன்மிகசக்தி ராக்ஃபெல்லரிடமும் வேலை செய்தது. ஒரு வாரம் கழிந்திருக்கும். ராக்ஃபெல்லர், பொதுத்தொண்டு நிறுவனம் ஒன்றுக்குப் பெரிய ஒரு தொகையை நன்கொடை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே அவர் அதற்கான திட்டங்களை விரிவாக ஒரு காகிதத்தில் எழுதி, அதை எடுத்துக்கொண்டு விவேகானந்தரைச் சந்திப்பதற்குச் சென்றார். முன்பு போலவே அதே வேகத்தில் அவர் மீண்டும் முன்அனுமதியின்றி, விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

அன்றைய தினமும் விவேகானந்தர் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர், தாம் கொண்டு சென்றிருந்த காகிதத்தை விவேகானந்தர் முன்பு வேகமாக வீசி, இதோ, இதைப் படித்துப் பாருங்கள்! இப்போது உங்களுக்குத் திருப்திதானே! நீங்கள் இப்போது எனக்கு நன்றி சொல்ல வேண்டும்! என்று கூறினார். விவேகானந்தர் அசையவும் இல்லை; ராக்ஃபெல்லரைத் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை; அவர் அமைதியாக ராக்ஃபெல்லர் காகிதத்தில் எழுதியிருந்த அனைத்தையும் படித்தார். படித்து முடித்ததும் அவர், நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை. நீங்கள்தாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். அதுதான் ராக்ஃபெல்லர் தமது வாழ்க்கையில் அளித்த முதல் பெரிய நன்கொடை ஆகும். ராக்ஃபெல்லர் தன்னிடமிருந்த செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில், நல்ல விதத்தில் செலவு செய்வதற்கு விவேகானந்தர் வழிகாட்டினார். எனவே அவர்தாம் விவேகானந்தருக்கு, நன்றி சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சிகாகோ சொற்பொழிவுகள்

1. வரவேற்புக்கு மறுமொழி – செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

    எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
         இறுதியிலே கடலில் சென்று
    சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
         பின்பற்றும் தன்மை யாலே
    துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
         வளைவாயும் தோன்றி னாலும்
    அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
    அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.’

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

 

2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை? – செப்டம்பர் 15, 1893

ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், ‘நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்’ என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.
ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

‘நீ எங்கிருந்து வருகிறாய்?’

‘கடலிலிருந்து’

‘கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?’ என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

‘நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?’ என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, ‘உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?’ என்று கேட்டது.

‘சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?’

‘நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!’ என்று கத்தியது கிணற்றுத் தவளை.
காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.

3. இந்து மதம் – செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.
யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.
அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.
தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.
இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: ‘பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.’ இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.
இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, ‘நான், நான், நான்’ என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? ‘இல்லை’ என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.
சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.
அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?
ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?
வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன – ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.
பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.
இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.
இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: ‘நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!’
தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.
சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்?
இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: ‘எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.’ உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. ‘எனக்குத் தெரியாது’ என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.
ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, ‘ஆ’ வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்?
இதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இது தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து ‘நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா’ என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: ‘ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்களும். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.’
‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.
இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். ‘அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது’ என்றுகூறுகின்றன.
அவனது இயல்புதான் என்ன? அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். ‘அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய்!’- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது? அன்பினால், இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும் விட அதிக அன்புக்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், மக்களுக்கு போதித்தார் என்று பார்ப்போம்.
மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அது போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் – இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்ய வேண்டும்.

இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்புக்காகவே அவனை அன்பு செய்வது சிறந்தது. ‘எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனதுதிருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் அருள் செய்’ என்கிறது ஒரு பிரர்த்தனை.
ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், ‘அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?’ என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், ‘தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்படவேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால்முடியாது’ என்றார்.
ஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை-நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.
கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.
இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.
இந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன் வயப்பட்டசாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன்அவரைக் காண வேண்டும். அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடியசிறந்த சான்று, ‘நான் ஆன்மாவை கண்டுவிட்டேன்’ என்று அவர் கூறுவது தான். நிறை நிலைக்கு அது தான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கி விடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே; உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.
இடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும் தெய்வதன்மை அடைவதும் தெய்வத்தைஅணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறை நிலை அடைவதும் தான் இந்துக்களின் மதம். நிறை நிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து, அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப் போகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இது தான் பொதுவாக உள்ள மதம். நிறை நிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது.எனவே ஆன்மா நிறை நிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித் தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவது தான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். ‘காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்’.
நான் கூறுகிறேன், அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப்பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும் போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.
எல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும் போது தான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போது தான் துன்பம் அகல முடியும், அறிவுடன் ஒன்றும் போது தான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒருமாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள் தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது.
ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் அறிவியல். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. அது போலவே, எந்த மூலப் பொருளிலிருந்து எல்லா பொருள்களும் படைக்கப் படுகின்றனவோ, அதைக் கண்டு பிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப் படுகின்றனவோ, அதைக்கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.
அறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத் தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பது தான் இன்றைய அறிவியலின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால அறிவியல்முடிவுகளின் ஆதாரவிளக்கங்களுடன் புகட்டப்படப் போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான்.
தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம், பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்ததன்மை உட்படத்தான் – இருப்பதாகக் கூறிவழி படுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வவழிபாடாகாது. பலதெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. ‘ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதேநறுமணம் தான் கமழும்’. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.

நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில், ‘நான் உங்கள் விக்கரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?’ என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், ‘உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?’ என்றுகேட்டார், ‘இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்’ என்று பதிலளித்தார் பாதிரி. ‘அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்’ என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து!
பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுகிறவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, ‘பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?’ என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
மூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?
என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின் படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒருபுறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். ‘எங்கும் நிறைந்தது’ என்று சொல்லும் போது பெரிதாக என்ன தான் புரிந்து கொள்ளமுடியும்?அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன? ‘எங்கும் நிறைந்தவர்’ என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.
எல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறு தான் செயல் படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும்நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும்,தோற்றங்களுடனும் தொடர்பு படுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவவழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புகொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.
அவன் எங்குமே நின்று விடக்கூடாது. ‘புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்நிலைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை’. என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள் : ‘அவனை சூரியனும் விவரிக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.’
இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்றுஅவன் ஏற்றுக் கொள்கிறான். ‘குழந்தை, மனிதனின் தந்தை.’ குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?

ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும்.
சார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.
ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.
இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.
ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால், எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், ‘முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி’ என்று சொன்னார். அதன் பலன் என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். ‘நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்’ என்கிறார் வியாசர்.

இன்னொன்று: ‘அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்?’ பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதரர்களே! இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து, மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.
அத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை பெளத்த மத சபையாக இருந்தது. அக்பரது சபை இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.
இந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது.
சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது.

4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று – செப்டம்பர் 20, 1893

நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.
இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.
இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.

5. புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு – செப்டம்பர் 26, 1893

நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.
ஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும்உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை.
ஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.

இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.
மதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பதுவெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர்தான்.
எல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் தேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், ‘நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.
தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கைஇருந்தே தீரும்.
தத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.
அதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப் பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், ‘பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை’ என்று கூறுகிறார்.
புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள்! பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக!

6. நிறைவு நாள் உரை – செப்டம்பர் 27, 1893

சர்வசமயப் பேரவை சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்று, அவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளார்.
இந்த அற்புதமான கனவை, முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய, பரந்த இதயமும், உண்மையில் பற்றும் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றி, என் மீது ஒரு மித்த அன்பு காட்டியதற்காகவும், சமயங்களுக்கு இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என்நன்றி. இந்த இன்னிசையில் அவ்வப்போது சில அபசுவரங்கள் கேட்டன. அவர்களுக்கு என் சிறப்பான நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால், இன்னிசையை மேலும் இனிமை ஆக்கினர்.
சமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைக்களம் பற்றி திகம் பேசப்பட்டது. இதைப் பற்றி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான், ‘சகோதரா! உனது நம்பிக்கை வீண்’ என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா? கடவுள் தடுப்பாராக! இல்லை, இந்துவோ பெளத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா? கடவுள் தடுப்பாராக!
விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பெளத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்.
இந்த சர்வசமயப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக்காட்டியுள்ளது என்றால் அது இதுதான்: புனிதம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதின் தனிச் சொத்து அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப் படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், ‘உதவி செய், சண்டை போடாதே’, ‘ஒன்றுபடுத்து, அழிக்காதே’, ‘சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்’ என்று எழுதப்படும் என்றுஅவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Share this:

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சமுதாய உணர்வில் போலித்தனம் கூடாது!

சமுதாய நலனில் ஒவ்வொருவருக்கும் உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். சமுதாய உணர்வுடன் ஒவ்வொருவரும் நாட்டு நலனுக்குத் தங்களால் இயன்ற தொண்டு செய்ய வேண்டும். சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று பேசினால் மட்டும் போதுமா? அது செயலிலும் இருக்க வேண்டும் என்பதை, சுவாமி விவேகானந்தர் ஒரு கதை மூலம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை நாம் இப்போது பார்க்கலாமா? அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய அரசவையில் அதிகாரிகள் பலர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், நான்தான் அரசனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன். நான் அரசனுக்காக என் உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம், இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது என்று கூறினான். துறவி புன்சிரிப்புடன், நீ சொல்வதை நான் நம்பவில்லை என்றார். அரசன், நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக்கொள்ளலாம் என்றான். சிறிய ஒரு சோதனை வைத்தார் துறவி – அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு, நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத் தேவையான பாலுக்காக ஓர் அண்டா வைக்கப்படும். அதில் அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும் என்று துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா சோதனை? என்று இகழ்ச்சியாகக் கேட்டான்.

பின்னர் அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக் கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும் தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். நள்ளிரவில் எல்லோரும் அந்த அண்டாவின் அருகில் சென்று, தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். அப்போது, எல்லோரும் பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள். நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது? என்று ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றினார்கள் என்பது தெரிய வந்தது. துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான் இருக்கிறது. இந்தக் கதையில் வரும் அதிகாரிகள் செய்தது போலவே, நாமும் நம் பங்குக்கு உரிய வேலையைச் செய்து வருகிறோம். உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை யாருக்குத் தெரியப் போகிறது? என்கிறார் ஒருவர். இப்படித்தான் பணக்காரர்களும் கொடுங்கோலர்களும் சொல்கிறார்கள். எல்லா மக்களையும் சமமாக நினைக்கும் ஞானத்தைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்வோம்!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மனிதநேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு!

1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றிச் சொற்பொழிவுகள் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது அவர் பிரபலமாகவில்லை. அந்த நிலையில் ஒரு சமயம் விவேகானந்தர் ஓர் ஊரில் தங்கினார். அவரைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் இவ்விதம் கூறியிருக்கிறார்: நம்புவதற்கே உங்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாள்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு விநாடிகூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எவையும் அறவே எனக்கு இல்லாமற் போய்விட்டன. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நானும் அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அநேகமாக எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த, செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன் என்னிடம் வந்தான்.

அவன் என்னிடம், சுவாமிஜி! நீங்கள் மூன்று நாள்களாக உணவு, தூக்கம் எதுவுமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அதனால் என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! மூன்று நாள்களாக ஒரு டம்ளர் தண்ணீர்கூட நீங்கள் குடிக்கவில்லையே! என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என் மனத்தை நெகிழச் செய்தது. நான் அவனிடம், சாப்பிடுவதற்கு நீ எனக்கு ஏதாவது தருகிறாயா? என்று கேட்டேன். அதற்கு அவன், நீங்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது தர வேண்டும் என்றுதான் என் மனம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன்; சக்கிலியன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. கோதுமை மாவும் மற்ற பொருள்களும் நான் உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன். நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நான் அவனிடம், பரவாயில்லை. நீயே சமையல் செய்துகொண்டு வா. நான் சாப்பிடுகிறேன் என்றேன். இவ்விதம் நான் கூறியதைக் கேட்டு அவன் நடுங்கிவிட்டான்.

காரணம், சக்கிலியனான அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தண்டிக்கப்படுவான். ஏன், நாடு கடத்தவும் செய்வார்கள். ஆனால் நான் அவனைச் சமாதானப்படுத்தி, உனக்குத் தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாக நம்பவில்லை. இருந்தாலும் அவனுக்கு என்மீதிருந்த அன்பு காரணமாகச் சப்பாத்தி செய்து கொண்டு வந்தான். அதை நானும் சாப்பிட்டேன். தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரன் ஒரு தங்கக்குவளையில் தேவாமிர்தத்தை எனக்குத் தந்திருந்தால் – அதுகூட அப்போது அவ்வளவு ருசியாக இருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. என் இதயம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. என் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. இதற்கிடையில், விவேகானந்தர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் கொடுத்த உணவைச் சாப்பிடுவதைப் பார்த்த உயர் சாதியினர் சிலர் கோபம் கொண்டார்கள். அதை அவர்கள் விவேகானந்தரிடமே தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டார் விவேகானந்தர். பிறகு அவர்களைப் பார்த்துக் கூறினார்: நீங்கள் என்னை மூன்று நாள்கள் தொடர்ந்து பேச வைத்தீர்கள்!

இடையில் நான் ஏதாவது சாப்பிட்டேனா, ஓய்வெடுத்தேனா என்று ஒருமுறைகூட நீங்கள் யாரும் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய மனிதர்கள், உயர்ந்த சாதியினர்! ஆனால் இங்கே பாருங்கள், தனக்குத் தண்டனை கிடைக்கும்! என்று தெரிந்திருந்தும், மனிதநேயம் என்ற ஒரே காரணத்தால் அவன் எனக்கு உணவு தந்தான். அவனைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று நீங்கள் ஒதுக்குகிறீர்களே! இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சில நாட்களில் விவேகானந்தருக்கு கேத்ரி மன்னருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது விவேகானந்தர், செருப்புத்தைக்கும் தொழிலாளி தனக்கு உதவியதைப் பற்றி மன்னரிடம் தெரிவித்தார். எனவே மன்னர், உடனடியாகச் செருப்புத்தைக்கும் தொழிலாளியைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தார். தொழிலாளி, என்னை மன்னர் அழைத்திருக்கிறாரே! என் தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ! என்று பயந்துகொண்டே வந்தான். ஆனால் கேத்ரி மன்னர் அவனுடைய பயத்தைப் போக்கியதுடன், அவனுடைய செயலைப் புகழ்ந்து பாராட்டினார். மேலும் அரசர் அவனுக்குப் பொன்னும் பொருளும் தாராளமாகக் கொடுத்தனுப்பினார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சுயமரியாதை வேண்டும்!

ஒரு நாள் புவனேசுவரிதேவி தம் மகன் நரேந்திரனிடம், மகனே! நீ என்றும் தூயவனாக இரு. சுயமரியாதையுடன் இரு. அதே சமயத்தில் மற்றவர்களின் சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாகவும், சமநிலை குலையாதவனாகவும் இரு; ஆனால் தேவையேற்படும்போது, உன் இதயத்தை இரும்பாக்கிக்கொள்ளவும் தயங்காதே! என்று கூறினார். தம் தாய் கூறிய இந்த அறிவுரைகளை, நரேந்திரர் துறவறம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் ஆனபிறகும் மறவாமல் பின்பற்றினார். தன்மானம், சுயமரியாதை உணர்வு விவேகானந்தரிடம் முழுமையாக இருந்தது. தம்மைப் போலவே இந்திய மக்களும் தன்மானத்துடன், இணையற்ற பெருமைக்குரிய தங்கள் பாரம்பரியங்களை அறிந்தவர்களாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். இது தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியை இங்கு இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

ஒரு முறை விவேகானந்தரும் மற்றோர் அன்பரும் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் வெள்ளைக்காரர். அவர் அன்பரிடம், நீங்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்ய முடியாது! என்று முரட்டுத்தனமாகக் கூறி, அன்பரை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார். மேலும் அந்த வெள்ளைக்காரர், தமக்குச் சாதகமாக ஏதோ ஒரு ரயில்வே சட்டத்தையும் கூறினார். அன்பரும் ரயில்வேயில் பணி புரியும் ஒருவர்தாம். அன்பர் டிக்கெட் பரிசோதகரிடம், நீங்கள் கூறுவதுபோல் ரயில்வேயில் அப்படி ஒரு சட்டம் இல்லை என்று கூறி, அந்த ரயில் பெட்டியிலிருந்து வெளியேற மறுத்தார். இவ்விதம் தம்மை ஓர் இந்தியன் எதிர்ப்பதைப் பார்த்து, அந்த வெள்ளைக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. கடைசியில் இந்தப் பிரச்னையில் விவேகானந்தர் தலையிட்டார். அதுவும் வெள்ளைக்காரரின் கோபத்தைத் தணிக்கவில்லை. அவர் கோபத்துடன் கடுமையான குரலில் விவேகானந்தரிடம் இந்தியில் பேசினார்.

வெள்ளைக்காரர்: நீ ஏன் இதில் தலையிடுகிறாய்? விவேகானந்தர்:முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவரை நீ என்று நீங்கள் மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்களே! முதலில் நீங்கள் மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.

வெள்ளைக்காரர்:தவறுதான், பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தி சரியாகத் தெரியாது. இவன் (This man) …

விவேகானந்தர் (குறுக்கிட்டு): உங்களுக்கு இந்தி சரியாகத் தெரியாது என்று சொல்கிறீர்கள்! ஆனால் இப்போது உங்களுக்கு உங்கள் தாய்மொழியான ஆங்கிலமும் சரியாகத் தெரியாது என்று தெரிகிறது. இவன் (This man) என்று அல்ல, இவர் (This gentleman) என்று சொல்ல வேண்டும். தமது தவற்றை உணர்ந்த பரிசோதகர், பெட்டியைவிட்டு வெளியேறினார். பின்னர் ஒரு சமயம் விவேகானந்தர், கேத்ரி மன்னரின் தனிச்செயலாளர் ஜக்மோகனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மேற்கூறிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு கூறினார்: வெள்ளைக்காரர்களுடன் பழகும்போது நாம் நமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது. உரியவருக்கு உரிய மரியாதை கொடுத்துப் பழகாததால்தான் வெள்ளைக்காரர்கள் நம்மை அவமதிக்கிறார்கள். நமக்கு சுயமரியாதை வேண்டும், பிறருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – எடுத்த காரியம் யாவினும் வெற்றி!

நரேந்திரன் பதினோரு வயது சிறுவன். தலைமைப் பண்பு அவனிடம் இயல்பாகவே இருந்தது. எனவே தன் வயதுடைய சிறுவர்களுக்கு எப்போதும் அவன்தான் தலைவனாக இருந்தான். கொல்கத்தாவுக்கு சிராபிஸ் என்ற ஒரு போர்க்கப்பல் வந்தது. அதை மக்கள் சென்று பார்த்தார்கள். நரேந்திரனும் அவனது நண்பர்களும், அந்தப் போர்க்கப்பலைத் தாங்களும் சென்று பார்க்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்கள். நரேந்திரன் விசாரித்தபோது, சிராபீஸ் கப்பலைப் பார்க்க வேண்டுமானால், அதற்கு ஆங்கிலேய அதிகாரி ஒருவரிடம் முன்அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று தெரிந்தது. எனவே நரேந்திரன் உரிய விண்ணப்படிவத்துடன், ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்குச் சென்றான். ஆங்கிலேய அதிகாரியின் அலுவலகம் ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்தது. அவரைச் சந்திக்க வேண்டும் என்றால், மாடிப்படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.

மாடிப்படி அருகில் காவல்காரன் ஒருவன் நின்றிருந்தான். அங்கு அவன் அனுமதித்தால்தான், மக்கள் மாடிப்படியில் ஏறிச் சென்று ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்க முடியும். எனவே காவல்காரனிடம் நரேந்திரன், சிராபீஸ் போர்க்கப்பலை நானும் என் நண்பர்களும் சென்று பார்க்க விரும்புகிறோம். அதற்கு ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்து அனுமதி சீட்டு பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்று தெரிவித்துக்கொண்டான். காவல்காரன், நரேந்திரன் சிறுவன் என்பதால், அவனை மாடிப்படி ஏறிச் செல்வதற்கே அனுமதிக்கவில்லை. காவல்காரனின் அனுமதியில்லாமல் மாடிப்படிகளில் ஏறிச் செல்லவும் முடியாது, ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்கவும் முடியாது. இப்போது என்ன செய்வது? என்று யோசித்தான் நரேந்திரன். சரி… மாடியில் இருக்கும் ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்கு, இங்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா? பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அவன் கட்டிடத்தைச் சுற்றி வந்தான். நரேந்திரனின் எண்ணம் வீண் போகவில்லை. கட்டிடத்தின் பின்னால், பொதுமக்களின் பார்வை படாத இடத்தில் சிறிய ஒரு படிக்கட்டு இருந்தது. அதில் நரேந்திரன் ஏறிச் சென்று, அங்கிலேய அதிகாரியைச் சந்தித்து தன் வேண்டுகோளைத் தெரிவித்தான்.

ஆங்கிலேய அதிகாரி நரேந்திரன் எதிர்பார்த்தபடியே, அவனும் அவனுடைய நண்பர்களும் சிரபீஸ் போர்க்கப்பலைச் சென்று பார்ப்பதற்கு அனுமதிசீட்டு கொடுத்தார். நரேந்திரன் அங்கு வந்த வேலை நல்லவிதமாக முடிந்தது. பிறகு நரேந்திரன், காவல்காரன் தன்னைத் தடுத்த முன்படிக்கட்டு வழியாகத் திரும்பி வந்தான். நரேந்திரனைப் பார்த்த காவல்காரன், இந்தச் சிறுவன் மாடிக்கு எப்படிச் சென்றான்? என்று நினைத்தான். எனவே அவன் நரேந்திரனிடம், நீ எப்படி மாடிக்குச் சென்றாய்? என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதற்கு நரேந்திரன், நான் ஒரு மந்திரவாதி! என்று புன்சிரிப்புடன் பதிலளித்தான். இந்த நரேந்திரன் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் ஆனார். அவர் உலகின் பல நாடுகளுக்குச் சென்று, இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தினார். எல்லையற்ற வலிமையும், எல்லையற்ற ஞானமும், வெல்ல முடியாத ஆற்றலும் உனக்குள்ளேயே குடிகொண்டிருப்பதை நீ உணர முடிந்தால் – நீ அந்த ஆற்றலை வெளியே கொண்டுவர முடியுமானால் – நீயும் என்னைப்போல் ஆக முடியும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – விவேகானந்தர் ஒரு சாதாரணத் துறவியல்ல!

சுவாமி விவேகானந்தருக்கு அப்போது இருபத்தி எட்டு வயது. அவர், ராஜஸ்தான் அபு மலையில் பாழடைந்த ஒரு குகையில் தங்கித் தவம் செய்துகொண்டிருந்தார். அங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு நாள் அவர் மாலையில் உலவச் சென்றார். அங்கு அவரை அரசாங்க வழக்கறிஞரான முஸ்லிம் ஒருவர் சந்தித்தார். அவரை விவேகானந்தரின் கம்பீரமான தோற்றம் பெரிதும் ஈர்த்தது. எனவே வழக்கறிஞர் தாமாகவே விவேகானந்தரிடம் சென்று பேசினார். அவ்விதம் பேசியபோது அவர், இவர் ஒரு சாதாரண துறவியல்ல; அறிவிலும் ஆன்மிகத்திலும் மிகவும் உயர்ந்தவர் என்று சில நிமிடங்களில் புரிந்துகொண்டார். அதன்பிறகு முஸ்லிம் வழக்கறிஞர், அடிக்கடி விவேகானந்தரைச் சந்தித்து உரையாடினார். ஒரு நாள் அவர் விவேகானந்தரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சுவாமிஜி, நான் உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமா? என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

அதற்கு விவேகானந்தர், இப்போது மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தக் குகைக்குக் கதவுகள் இல்லை. எனவே மழை பெய்தால் குகைக்குள் தண்ணீர் வந்து தேங்கிவிடும். நீங்கள் விரும்பினால் இந்தக் குகைக்குக் கதவுகள் செய்து கொடுங்கள் என்றார். அதைக் கேட்ட வழக்கறிஞர், சுவாமிஜி, நீங்கள் எனக்கு அத்தகைய ஒரு வாய்ப்புக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. இந்தக் குகைக்குக் கதவுகள் போட்டாலும்கூட இந்த இடம் மிகவும் வசதியற்றது. நீங்கள் ஏன் இங்கே இருக்க வேண்டும்? ஆதலால் என்னுடைய பணிவான ஒரு வேண்டுகோளை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்: எனக்குப் பெரிய ஒரு பங்களா இருக்கிறது. அங்கே நான் ஒருவன்தான் தனியாக வாழ்ந்து வருகிறேன். உங்களுக்குச் சம்மதம் என்றால், நீங்கள் அந்த பங்களாவில் வந்து தங்கலாம் என்று கூறினார். விவேகானந்தர் வழக்கறிஞரின் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

மேலும் வழக்கறிஞர், ஆனால் சுவாமிஜி! நான் ஒரு முஸ்லிம். எனவே உங்கள் உணவிற்கு நான் தனியாக ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் தெரிவித்துக்கொண்டார். விவேகானந்தர், வழக்கறிஞர் உணவு பற்றி கூறியதைப் பொருட்படுத்தவில்லை. அவர் வழக்கறிஞருடன் அவரது பங்களாவிற்குச் சென்றார். அங்கு விவேகானந்தருக்குப் பலர் அறிமுகமானார்கள். அவர்களில் ஜக்மோகன் என்பவரும் ஒருவர். அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த கேத்ரி மன்னரின் தனிச் செயலாளராக இருந்தார். ஜக்மோகன் வந்தபோது, விவேகானந்தர் வெறும் கௌபீனம் மட்டும் அணிந்து தூங்கிக்கொண்டிருந்தார். அந்த நிலையில் விவேகானந்தரைப் பார்த்ததும் ஜக்மோகன், ஓ! இவர் பத்தோடு ஒன்று பதினொன்று என்ற வகையைச் சேர்ந்த ஒரு சாதாரண துறவி! போக்கிரி, திருட்டுக் கூட்டம், ஏமாற்றுக் கும்பல் போன்றவற்றைச் சேர்ந்த ஒருவர்! என்று தமக்குள் நினைத்துக்கொண்டார். விவேகானந்தர் தூக்கம் கலைந்து கண் விழித்தார். உடனே ஜக்மோகன் முதல் கேள்வியாக அவரிடம், சுவாமிஜி! நீங்கள் ஓர் இந்துத் துறவி. அப்படியிருக்கும்போது முஸ்லிம் ஒருவருடன் தங்கியிருக்கிறீர்களே! அது எப்படி? உங்கள் உணவை அவர் அடிக்கடி தொட நேரிடுமே! என்று வினவினார்.

இந்தக் கேள்வி விவேகானந்தருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் நெருப்புச்சுடர்கள் தெறித்துக்கிளம்புவதுபோல் பேசினார்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் ஒரு துறவி. உங்கள் சமுதாயக் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் நான் கடந்தவன். நான் ஒரு துப்புரவுத் தொழிலாளியுடன்கூட அமர்ந்து உணவு உட்கொள்ளலாம். அதற்காக எனக்கு இறைவனிடம் பயமில்லை; ஏனென்றால் அவர் அதை அனுமதிக்கிறார். எனக்கு சாஸ்திரங்களிடமும் பயமில்லை; ஏனென்றால் அவையும் அதை அனுமதிக்கின்றன. ஆனால் நான் உங்களுக்குத்தான் பயப்படுகிறேன், இந்தச் சமுதாயத்திற்குத்தான் பயப்படுகிறேன். உங்களுக்கு இறைவனைப் பற்றியும் தெரியாது, சாஸ்திரங்களைப் பற்றியும் எதுவும் தெரியாது. நான் எங்கும் இறைவனைப் பார்க்கிறேன்; மிகவும் சாதாரண ஓர் உயிரிடம்கூட இறைவனே நிறைந்திருப்பதைப் பார்க்கிறேன்.

எனக்கு உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது! இப்படி விவேகானந்தர் கூறியதைக் கேட்டு ஜக்மோகன் அதிர்ந்து போனார். அவருக்கு விவேகானந்தரிடம் பெரிய மதிப்பு ஏற்பட்டது. அவர், நமது கேத்ரி மன்னர் இந்தத் துறவியைச் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். அதனால் அவர் விவேகானந்தரிடம், உங்களை எங்கள் கேத்ரி அரசர் அவசியம் பார்க்க வேண்டும். நீங்கள் எங்கள் அரண்மனைக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். விவேகானந்தர், நாளைய மறுநாள் வருகிறேன் என்று வாக்களித்தார். அதன்படி விவேகானந்தர் 1891 ஜூன் 4-ஆம் தேதி கேத்ரி மன்னரைச் சென்று சந்தித்தார். கேத்ரி மன்னர் அஜீத்சிங், விவேகானந்தரை மிகவும் நன்றாகப் புரிந்துகொண்டார். அதனால் அவர் விவேகானந்தரின் சீடர்களில் ஒருவராகவும் ஆனார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – நரேந்திரன் கண்ட தீர்வு!

சிறுவன் நரேந்திரனிடம் “தலைமைப் பண்பு’ என்பது இயல்பாகவே அமைந்திருந்தது. அவன் தன் நண்பர்களை பொருட்காட்சி, கண்காட்சி, நினைவுச் சின்னம், பூங்கா போன்ற இடங்களுக்கு அவ்வப்போது சுற்றுலாவாக அழைத்துச் செல்வான். கொல்கத்தா, புறநகர் பகுதியில் உயிரியில் பூங்கா ஒன்று இருந்தது. ஒரு நாள் நரேந்திரன் தன் நண்பர்களை, அந்த உயிரியில் பூங்காவுக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவர்களுக்கு மகிழ்ச்சியாக பொழுது போயிற்று. அங்கிருந்து அவர்கள், கங்கையில் படகில் கொல்கத்தாவிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். படகில் வந்துகொண்டிருந்தபோது, நரேந்திரனின் நண்பன் ஒருவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிற்று. அதனால் அவன் படகிலேயே வாந்தி எடுத்தான்.

அதைப் பார்த்த படகோட்டிகள் சிறுவர்களிடம், “”நீங்களே உங்கள் கையால் படகை சுத்தப்படுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நீங்கள் இங்கிருந்து போக முடியாது!”” என்று கண்டிப்புடன் கூறினர். அதை மறுத்து நரேந்திரனும் அவனது நண்பர்களும், “”படகுப் பயணத்திற்கு இரண்டு மடங்குக் கட்டணம் தருகிறோம்” என்று படகோட்டிகளிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதற்கு படகோட்டிகள் ஒப்புக்கொள்ளாமல் தகராறு செய்தனர். படகு கரையை அடைந்தது. படகோட்டிகள் சிறுவர்களிடம், “”நீங்கள்தான் படகைச் சுத்தப்படுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நீங்கள் படகிலிருந்து இறங்க முடியாது!” என்று கடுமையாகக் கூறி பயமுறுத்தினார்கள். அப்போது யாரும் கவனிக்காத சமயத்தில், நரேந்திரன் படகிலிருந்து இறங்கிக் கரைக்குச் சென்றான். அங்கு கங்கைக் கரையில் இரண்டு ஆங்கிலேய சிப்பாய்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நரேந்திரன் அணுகி, தனக்கும் தன் நண்பர்களுக்கும் படகோட்டிகளால் ஏற்பட்டிருக்கும் சங்கடத்தைத் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்து உதவும்படி கேட்டுக்கொண்டான்.

மேலும் அவன் ஆங்கிலேய சிப்பாய்களின் கைகளை மெல்லப் பற்றி, அவர்களைப் படகு இருந்த இடத்திற்கே அழைத்தும் வந்துவிட்டான். ஆங்கிலேய சிப்பாய்கள் படகோட்டிகளிடம், சிறுவர்களைப் படகிலிருந்து இறங்கவிடுங்கள்!” என்று கடிந்து கூறினர். இப்படி ஆங்கிலேய சிப்பாய்கள் கூறியதும், மறு பேச்சில்லாமல் படகோட்டிகள் சிறுவர்கள் படகிலிருந்து இறங்கிச் செல்ல அனுமதித்தனர். நரேந்திரனின் துணிவு ஆங்கிலேய சிப்பாய்களை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நரேந்திரனை ஏதோ ஒரு பொழுபோக்கு நிகழ்ச்சிக்குத் தங்களுடன் வருமாறு அழைத்தனர். அதற்கு நரேந்திரன் ஒப்புக்கொள்ளாமல், “”மிகவும் நன்றி, நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றான். இந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவராகி, “சுவாமி விவேகானந்தர்’ என்ற உலக புகழ்பெற்ற துறவியாக விளங்கினார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சூழ்நிலையால் தடுமாறாதே!

சிறுவன் நரேந்திரன் கொல்கத்தாவைச் சேர்ந்தவன். அப்போது அவனுக்கு பத்து வயது நடந்துகொண்டிருந்தது. அவன் தன் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு நாடக்குழுவை அமைத்தான். அதில் அவனும் அவனது நண்பர்களும் பல நாடகங்கள் நடத்தினார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு நரேந்திரன், தன் வீட்டு முற்றத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓர் உடற்பயிற்சி குழுவை அமைத்தான். பின்னர் நரேந்திரனும் அவனது நண்பர்களும், முறைப்படி உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். எனவே அவர்கள், நவகோபால் மித்ரா என்பவர் நடத்தி வந்த உடற்பயிற்சி நிலையத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். அங்கு நரேந்திரன் கபடி, சிலம்பம், மல்யுத்தம், நீச்சல் பயிற்சி, படகு செலுத்துதல், கத்திச்சண்டை, கிரிக்கெட், லத்திச்சண்டை ஆகியவற்றைப் பெரிதும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டான். அவனுடைய ஆர்வத்தை நவகோபால் மித்ரா கவனித்தார். எனவே அவர், தன்னுடைய உடற்பயிற்சி நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை நரேந்திரனிடமே ஒப்படைத்தார்.

ட்ரபீஸ் (tணூச்ணீஞுத்ஞு) என்பது ஒரு வகையான உடற்பயிற்சியாகும். கூரையில் இரண்டு கயிறுகளுக்கு இடையில் கனமான மரக்கட்டையைத் தொங்கவிட்டிருப்பார்கள். அந்த மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வதுதான் ட்ரபீஸ் உடற்பயிற்சியாகும். ஒரு நாள் நரேந்திரனும் அவனது நண்பர்களும் சேர்ந்து, ட்ரபீஸ் மரக்கட்டையைக் கூரையில் பொறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அதைப் பார்ப்பதற்கு அங்கு மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அந்தக் கூட்டத்தில் ஆங்கிலேய மாலுமி ஒருவரும் இருந்தார். அவரை நரேந்திரன் உதவிக்கு அழைத்தான்.
ஆங்கிலேய மாலுமியும் நரேந்திரனும் அவனது நண்பர்களும் ஒன்றுசேர்ந்து, கனமான மரக்கட்டையைக் கூரையில் பொறுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். ஒரு தருணத்தில் மரக்கட்டை நழுவி, நேராக மாலுமியின் தலையில் விழுந்தது. மாலுமி சுயநினைவு இழந்து விழுந்துவிட்டார். அவர் தலையில் பலமாக அடிபட்டு இரத்தம் கசிந்தது. அதைப் பார்த்து, மாலுமி இறந்துவிட்டார்! என்று நினைத்து, அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் வேகமாகக் கலைந்து போயிற்று.

நரேந்திரனும் அவனுடைய ஒன்றிரண்டு நண்பர்களையும் தவிர, மற்ற நண்பர்கள் அங்கிருந்து நழுவிவிட்டார்கள். இந்தக் குழப்ப நிலையில் நரேந்திரனின் மனம் ஒரு சிறிதும் தடுமாறவில்லை. அவன் தன் வேட்டியைக் கிழித்து, ஆங்கிலேய மாலுமியின் தலையில் அடிபட்ட இடத்தில் கட்டினான்; மாலுமியின் முகத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, மெல்ல விசிறி தேவையான முதலுதவி சிகிச்சை செய்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு மாலுமிக்கு சுயநினைவு திரும்பியது. உடனே நரேந்திரனும் அவனது நண்பர்களும், கைத்தாங்கலாக மாலுமியை அருகில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தார்கள். அங்கு நரேந்திரன் டாக்டர் ஒருவரை அழைத்து வந்து, மாலுமிக்கு உரிய சிகிச்சை அளித்தான்.
மாலுமிக்கு அங்கு ஒரு வாரம் சிகிச்சை நடந்தது. மாலுமி உடல் நலம் தேறியதும், நரேந்திரனுக்கும் அவனது நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். அவர் புறப்பட்டபோது நரேந்திரன், தன் நண்பர்களிடம் திரட்டிய பணத்துடன் தன் பங்கையும் சேர்த்து மாலுமிக்குச் சிறிது பணம் தந்தான். இந்த நரேந்திரன் வளர்ந்து பெரியவனாகி, சுவாமி விவேகானந்தர் என்ற புகழ் பெற்ற துறவியானார். அவர் உலகின் பல நாடுகளுக்கும் சென்று, இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தினார்.

இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து நீ தப்பியோட முயற்சி செய்யாதே. இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். – சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவும் வீரமும்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு – குறள் -423

இதற்கு, எந்தச் செய்தியை யார் கூறக் கேட்டாலும், கூறியவர் யார் என்று பாராமல் அந்தச் செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்பது பொருள். திருவள்ளுவரின் இந்தக் கருத்துக்கு, எடுத்துக்காட்டாக நரேந்திரன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது: சிறுவன் நரேந்திரன் சுறுசுறுப்பானவன், எப்போதும் உற்சாகத்துடன் இருப்பவன். ஓடி விளையாடு பாப்பா! என்று பாரதியார் கூறியதுபோல், விளையாட்டுகளில் நரேந்திரனுக்கு ஆர்வம் அதிகம். நரேந்திரனின் நண்பர்களில் ஒருவனுடைய வீட்டில் ஒரு செண்பகமரம் இருந்தது. நரேந்திரன் தன் நண்பர்களுடன் அங்கு சென்று, செண்பகமரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டிருப்பான்; அப்படியே குட்டிக்கரணம் போட்டுத் தரையில் குதிப்பான். இந்த விளையாட்டு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. நரேந்திரன் தன் நண்பர்களுடன் அடிக்கடி இப்படி செண்பகமரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருப்பதை, அந்த வீட்டிலிருந்த தாத்தா ஒருவர் பார்த்தார்.

அவர், இந்தச் சிறுவர்கள் மரத்தில் இப்படி தலைகீழாகத் தொங்கி விளையாடப்போய், கைகால்களை உடைத்துக்கொண்டால் என்ன செய்வது? நரேந்திரன் விளையாடினால், மற்ற சிறுவர்களும் அவனுடன் சேர்ந்து விளையாடத்தான் செய்வார்கள். எனவே நரேந்திரன் இங்கு விளையாடுவதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே அவர், செண்பகமரத்தில் விளையாடிக்கொண்டிருந்த நரேந்திரனை அருகில் அழைத்தார். நரேந்திரன் அவர் முன்பு சென்று நின்றான். தாத்தா, நரேந்திரா! நீ இப்படி உன் நண்பர்களுடன் இந்த மரத்தில் ஏறி தலைகீழாகத் தொங்கி விளையாடாதே! என்றார். ஏன் விளையாடக் கூடாது? என்று கேட்டான் நரேந்திரன். இவனுக்கு என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லி இப்போது இவனைப் பயமுறுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தார் தாத்தா. எனவே அவர், இந்த மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது! அந்த பூதம் இரவில் வெள்ளையுடை உடுத்திக்கொண்டுச் செல்வதைப் பார்த்தால் பயமாக இருக்கும். அந்த பூதம் மரத்தில் ஏறுபவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடும்! என்று கூறினார்.

தாத்தா கூறியதைப் பணிவுடன் அமைதியாக இருந்து, நரேந்திரன் கேட்டுக்கொண்டான். தாத்தா, ஒருவிதமாக நரேந்திரனை ஏமாற்றிவிட்டோம்! என்று மனதிற்குள் சிரித்தபடியே அங்கிருந்து சென்றார். தாத்தா அந்த இடத்தைவிட்டு சென்றாரோ இல்லையோ, உடனே நரேந்திரன் மீண்டும் கிடுகிடுவென்று மரத்தில் ஏறி, முன்புபோல் தலைகீழாகத் தொங்கி விளையாட ஆரம்பித்தான். நரேந்திரனின் இந்தச் செயலை, தாத்தா அது வரையில் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் பார்த்தான். அவன் பதற்றத்துடன், நரேந்திரா! தாத்தா இப்போதுதானே இந்த மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது என்று சொன்னார்! அது உன் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடப் போகிறது! சீக்கிரம் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்துவிடு! என்று கூவினான். பயந்து போயிருந்த நண்பனைப் பார்த்து கண் சிமிட்டி கலகலவென்று சிரித்துக்கொண்டே நரேந்திரன், நீ ஒரு முட்டாள்! யாரோ கதை கட்டினால் அதை நாம் நம்பி விடுவதா? தாத்தா நாம் மரத்தில் ஏறக் கூடாது என்பதற்காக அப்படி ஒரு கதை கட்டிவிட்டிருக்கிறார்! நாம் முன்பு எத்தனை முறை இந்த மரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி விளையாடியிருக்கிறோம்? தாத்தா சொன்னது உண்மையாக இருந்தால், அந்த பூதம் எப்போதோ என் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்குமே! என்று கூறினான்.

நரேந்திரனிடம் துணிச்சலும் இருந்தது, வீரமும் இருந்தது. ஆனால் அவனுடைய துணிச்சலும் வீரமும் எப்போதும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. இந்த நரேந்திரன்தான் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்று புகழ் பெற்றார். அப்போது அவர் கூறியவை இவை: நாம் எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், அதன் உள்நோக்கத்தையும் அடிப்படைத் தன்மையையும் கண்டறிய வேண்டும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் – முதலில் நீ உன்னிடத்தில் நம்பிக்கை வை. நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து பார்க்க வேண்டும். தனக்கு இறைவன் கொடுத்திருக்கும் அறிவாற்றலைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமாக நம்புபவனை மன்னிப்பதைவிட, தன்னுடைய பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தி நம்பாமல் இருக்கும் ஒருவனை இறைவன் மன்னித்துவிடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – வெள்ளரிக்காய் வழங்கிய முஸ்லிம் அன்பர்!

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் 1893-ஆம் ஆண்டு சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லா மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். இந்தப் பேரவை நிகழ்ச்சிகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல், 27-ஆம் தேதி வரை பதினேழு நாள்கள் நடைபெற்றன. பேரவை நிகழ்ச்சிகளில், சுவாமி விவேகானந்தர் இந்துமதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதனால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு சுமார் நாலரை ஆண்டுகள், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் திருத்தலப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவ்விதம் அவர் பயணம் செய்தபோது, ஒருமுறை அவருடன் சுவாமி அகண்டானந்தரும் இருந்தார். சுவாமி அகண்டானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களில் ஒருவர்.

இருவரும் இமயமலையில் இருக்கும் அல்மோரா என்ற இடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். இருவரும் உணவு சாப்பிட்டு பல மணி நேரங்கள் ஆகியிருந்தது. அல்மோராவை அடைவதற்கு முன்பு, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் முஸ்லிம்களின் இடுகாடு இருந்தது. அந்த இடத்தை அடைந்தபோது, பசி தாகம் காரணமாக விவேகானந்தருக்கு மிகுந்த களைப்பும் சோர்வும் ஏற்பட்டது. அதனால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. மயங்கிக் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டார். எனவே அவரை அங்கேயே படுக்க வைத்துவிட்டு, பக்கத்தில் எங்காவது உணவோ, தண்ணீரோ கிடைக்குமா? என்று பார்ப்பதற்கு அகண்டானந்தர் சென்றார். அந்த இடுகாட்டில் ஜுல்பிகர் அலி என்ற முஸ்லிம் ஒருவர் வேலை செய்து வந்தார். அவர் இடுகாட்டிற்கு அருகில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். அவரிடம் அன்றைய தினம் உணவு என்று சொல்வதற்கு, ஒரே ஒரு வெள்ளரிக்காய் மட்டும்தான் இருந்தது. விவேகானந்தரின் மோசமான உடல் நிலை ஜுல்பிகர் அலிக்குப் புரிந்தது. எனவே அவர் ஓடிச் சென்று, தம்மிடமிருந்த வெள்ளரிக்காயை விவேகானந்தருக்குக் கொடுத்தார். மிகவும் பலவீனமாக இருந்த விவேகானந்தர், அதைத் தமது வாயில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஜுல்பிகர் அலி, சுவாமிஜி, நான் ஒரு முஸ்லிம் ஆயிற்றே! என்றார். அதனால் என்ன! நாம் அனைவரும் சகோதரர்களே அல்லவா? என்று புன்முறுவலுடன் கேட்டார் விவேகானந்தர். முஸ்லிம் வெள்ளரிக்காயை விவேகானந்தர் வாயில் வைத்து சாப்பிடும்படி செய்தார். அதனால் விவேகானந்தரின் களைப்பு ஒரு சிறிது நீங்கியது. இதைப் பற்றி பிற்காலத்தில் விவேகானந்தர், அந்த முஸ்லிம் உண்மையிலேயே அப்போது என் உயிரைக் காப்பாற்றினார். அதுபோல் என் வாழ்நாளில் எப்போதும் நான் களைப்படைந்ததில்லை என்று கூறினார். பின்னர் விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மிகக் கருத்துகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் செய்து புகழ் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒருமுறை அல்மோராவிற்குச் சென்றார். அப்போது அல்மோராவில் விவேகானந்தரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மிகவும் சிறந்த முறையில் வரவேற்பு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியின்போது, ஜுல்பிகர் அலி ஓர் ஓரமாக நின்று விவேகானந்தரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவேகானந்தரை இன்னார் என்று அடையாளம் தெரியவில்லை. ஆனால் விவேகானந்தர், ஜுல்பிகர் அலியைப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துகொண்டார். உடனே அவர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தையும் பரபரப்பையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் நேராக ஜுல்பிகர் அலியிடம் சென்று, அவரைக் கட்டியணைத்துக் கொண்டார். மேலும் விவேகானந்தர் அருகில் இருந்தவர்களிடம் ஜுல்பிகர் அலியைப் பற்றி நன்றியுணர்வுடன் கூறி, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் ஜுல்பிகருக்கு விவேகானந்தர் பணமும் கொடுத்தார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்!

கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடகமேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடகமேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது. விஷயம் இதுதான் – நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடகமேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.

அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது: மேடையை விட்டு வெளியே போ! நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள்! நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே! அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீஸாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீஸாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள்! என்று கூவினர். பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்துகொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மூன்று வரங்கள்!

ஏழை ஒருவன் ஒரு தேவதைக்குத் திருப்தி ஏற்படும்படி நடந்து கொண்டான். அந்தத் தேவதை அவன் முன்னர்த் தோன்றி, மூன்று சொக்கட்டான் காய்களைக் கொடுத்து, அவற்றை உருட்டி மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது. மகிழ்ச்சி அடைந்த அந்த மனிதன் வீடு திரும்பி, தன் மனைவியிடம் விவரத்தைச் சொன்னான். பண ஆசை பிடித்த அவளோ பணத்திற்காகக் காயை உருட்டும்படிச் சொன்னாள். அதற்கு அவன், நம் இருவருக்கும் மூக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது. ஊரார் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். முதலில் அழகான மூக்கு வேண்டும் என்று காயை உருட்டுவோம் என்றான். ஆனால் பணத்தை விரும்பிய மனைவியோ காயை உருட்ட விடாமல் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டாள். கணவனோ திமிறிக் கையை விடுவித்துக் கொண்டு எங்கள் இருவருக்கும் அழகான மூக்குகள் அமையட்டும்’ மூக்குகளைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம் என்று காயை உருட்டி விட்டான்.

உடனே அவர்கள் இருவர் உடம்பிலும், அழகிய ஆனால் பல மூக்குகள் தோன்றி விட்டன. பல மூக்குகள் இருப்பது அவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால் மூக்குகளே வேண்டாம் என்று காயை உருட்ட அவர்கள் இருவரும் சம்மதித்தார்கள். அதன்படி உருட்டியப் போது மூக்குகளே இல்லாமல் போய்விட்டன. இப்படி இரண்டு வரங்கள் வீணாகிவிட்டன. என்ன செய்வது என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கேட்பதற்கு இனி ஒரே ஒரு வரம் தான் மீதி இருந்தது. மூக்குகள் இல்லாத காரணத்தால் அதிக விகாரமாக இருந்தது. இந்த நிலையில் வெளியில் போக அவர்கள் மிகவும் நாணினார்கள். அழகிய மூக்குடன் எப்படி வந்தது என்று ஊரார் கேட்பார்களே, அதற்கு என்ன பதில் சொல்வது என்று அஞசினார்கள். தங்கள் மடமையை நினைத்து வருத்தப் பட்டார்கள். அதனால் அழகற்ற பழைய மூக்கு தங்களுக்கு வந்தால் போதும் என்று காயை உருட்டினார்கள். ஆசைப்படாதே ஆசைப்படுவது உனக்கு கிட்டும். அதோடு கூட, பந்தமும் வரும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – பிச்சைக்கார அரசன்
சுவாமி விவேகானந்தர் கதைகள் – பிச்சைக்கார அரசன்

பெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.

நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு?

சுவாமி விவேகானந்தர் கதைகள் – கங்கை ஜாடி

மேலைநாடுகளுக்கு சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாகக் கப்பலில் புறப்பட்டார். 1899 ஜூன் 24-இல் கப்பல் சென்னை வந்து சேர்ந்தது. சுவாமி துரியானந்தரும் சகோதரி நிவேதிதையும் சுவாமிஜியுடன் பயணித்தனர்.

சென்னை மடத்தில் பூஜைக்காக கங்கை நீர் தேவைப்பட்டது. சுவாமிஜியிடம் சசி மகராஜ் அதைக் கேட்டிருந்தார். எனவே ஒரு பெரிய பீங்கான் ஜாடியில் சுவாமிஜி கங்கை நீரைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாகக் கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவியிருந்தது. சுவாமிஜி கப்பலிலிருந்து தரையில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் சசி மகராஜ் ஒரு படகை அமர்த்திக் கொண்டு கப்பலுக்கு அருகில் சென்றார். சுவாமிஜிக்காகத் தான் அன்புடன் கொண்டு சென்றிருந்த இனிப்புக்களையும் உணவு வகைகளையும் ஒரு கூடையில் வைத்தார். கூடை மேலே ஏற்றப்பட்டது. அதே கூடையில் கங்கை நீர் நிறைந்த பீங்கான் ஜாடி கீழே இறக்கப்பட்டது. அந்த ஜாடியை சுவாமிஜி ஒரு கயிற்றினால் அழுத்தமாகக் கட்டியிருந்தார்; அதை சசி மகராஜால் அவிழ்க்க முடியவில்லை. ஆகவே, சுவாமிஜி அதை அறுப்பதற்காக ஒரு கத்தியையும் கீழே போட்டார்.

திரும்புவதற்கு முன்னால் சசி மகராஜ் படகுக்காரனிடம் கப்பலை மூன்று முறை வலம் வருமாறு பணித்தார். இரண்டு பெரிய மகான்களின் பாதங்களை இன்று நம்மால் பணிய முடியவில்லை கப்பலை வலம் வந்தாவது நாம் திருப்தி அடைவோம் என்றார். சுவாமிஜி கொண்டுவந்தது என்பதற்காக அந்த ஜாடியையும் அவரது திருக்கரங்கள் பட்டது என்பதற்காக அந்தக் கத்தியையும் சசி மகராஜ் பூஜையறையில் வைத்து வழிபடத் தொடங்கினார். அவை இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மன உறுதி

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். “சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

Tamil Language Resources

There are a number of resources available for learning Tamil. Sometimes it can be hard to navigate or find things at the correct level. This is my current list of resources, which I update regularly.

I have them sorted first by what is available free online and which are hard copy books. Within those categories, I have tried to sort resources by type, author, etc.

[toggle] [item title=”Word editor/Transliteration Software“]
  • Azhagi is both a word processing software as well as a transliterating software. I love this program. You can type in Tamil and it has a large number of other languages in “beta.” You can save your work as an rtf or convert to unicode and post online. Having the program open and hitting F10 allows you to type in any application in Tamil. Very useful for google searches, email, chat etc.
  • NHM This one installs in the bottom tray in windows, you click a bell icon to toggle between Tamil and English. Sometimes I can’t convince this one to give me the right “n.”
  • Google now has download-able software as well as what is built into your blogger and gmail accounts. Since the top two work fine for me, I have not tried this yet.
[/item] [item title=”Online lessons courtesy of the S. Asia Inst and Univ of Pennsylvania“]
  • The Tamil Language in Context — This page has great videos with transcripts to follow! Huge asset! They also have a page with the alphabet in a chart format. Print it, paste a copy into the cover of your notebook and refer back to it often. Recommended for Beginners!
  • TamilWeb  — I think this was the original page before the video one was produced, still lots of audio recordings of words to help you out.   
[/item] [item title=”Tamil Virtual University“]

Originally I found the page hard to navigate, I am starting to use it more now. Tamil VU has a number of videos, click through lessons and workbooks. Here are some direct links to some of their free resources.

[/item][item title=”Tamil textbooks available online“] [/item][item title=”Online Dictionaries“] [/item][item title=”Social Networking Sites for Language Learning“]

It is important to me to have many contacts for language learning, because when you are dealing with native speakers, they don’t always know the grammar rules, they just know the language. Asking lots of people the same question can give you some great insight into language variations that you don’t get from a text book.

  • Livemocha — free to join, free to contact members, no Tamil course available, but you can create your own flashcards and chat with members.
  • Lingo Friends — free to join, free to contact members, people don’t seem very active on the site
  • My Language Exchange — free to join and post a profile, but costs $6 a month to contact other members. If you are lucky, you can post for free and hope someone contacts you.
  • italki has a Tamil section as well.
[/item][item title=”Google Books“]

Learn Tamil in 30 Days

A Reference Grammar of Spoken Tamil— this book is written by one of the professors at U. of Penn.


G.U. Pope has a number of out of print Tamil language books on Google Books. The problem is that language is fluid, and books from the 1800’s don’t necessarily give a good idea of modern language…

Tamil Self Taught, reprinted by Amazon , free from google This seems to be a good book for vocabulary lists. It also uses some archaic language which modern native speakers would not understand.

[/item][item title=”Authentic Materials/Resources:“]

These are resources for more Intermediate and Advanced students who are able to read Tamil materials intended for Tamil readers (as opposed to intended for learners)

[/item] [item title=”Hard Copy Books“]
  • Colloquial Tamil: The Complete Course for Beginners (Colloquial Series) Asher’s Colloquial Tamil focuses on the spoken language and often leaves me wondering which Tamil characters would be used to represent what is written on the page. The CDs that go along with the book are helpful in learning pronunciation, but they go very fast. It is hard for me as a beginner to really catch what is going on. I don’t process spoken language that quickly!
  • Tamil for Beginners by Hart: This textbook is used by the author in her Tamil courses at UC Berkeley. The grammar book is very straightforward in explaining rules.
  • Tamil: A Foundation Course by Balasubramaniam (out of print) This is the best I have seen for teaching the written language. It introduces a few letters at a time with words that use those letters. These units are then followed by a grammar section.
  • An Intensive Course in Tamil Rajaram assumes you can read Devanagari before learning Tamil and uses that to teach you pronunciation. Once you already know how to read the orthography, you read having new grammar rules introduced with each chapter’s conversation. Printed in India, sometimes imported to the US.
  • The Lifco Tamil-Tamil-English Dictionary (English and Tamil Edition) — Somewhat hard to find since it is published in India, but if you live in India or the US, you can order books directly from the publisher. Tamil-Tamil-English means you have the words only listed in Tamil, with Tamil definitions, followed by English definitions.
[/item][/toggle]
சிறுவர் கதைகள் – மலைப்பாம்பும் மான் குட்டியும்

குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும்.

இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது.

கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது.

மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.

ஆனால் குறட்டி சற்று வித்தியாசமானது. காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது.

குறட்டி தனது தலையை ஒரு கிளையின் மீது வைத்தபடி ஆற்றங்கரையையே பார்த்துக் கொண்டு இருந்தது.

மிரண்டு மிரண்டு ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டி அதன் கண்ணில் பட்டது.

நீண்டு கிடந்த தனது உடலை வேகமாக தன்னை நோக்கி இழுத்தது.

அநேகமாக அந்த மான்குட்டி மிகவும் குறுகலாக ஓடும், அந்த ஆற்றைக் கடந்து வரலாம். அப்படிக் கடந்து வந்தால் குறட்டி இருக்கும் வழியாகத்தான் வரவேண்டும்.

அந்த மிளா மான் ஆற்றில் இறங்கியது. குறட்டியில் வாயில் நீர் சுரந்தது.

மீதமுள்ள குறட்டி தனது உடலை கிளையில் சுற்றி தனது தலையை மட்டும் தொங்க வைத்தபடி அசையாமல் இருந்தது. பார்வை மட்டும் ஆற்றில் இறங்கிய மான் மீது இருந்தது.

ஆற்றில் மான் நீந்தியது. இதே மரத்திலிருந்துதான் குறட்டி ஒரு நாள் ஒரு சிறுத்தையை மடக்கிப் பிடித்தது. ரப்பர் போன்ற தனது உடம்பை கயிறு போல் பாவித்து இறுக்கிய வேகத்தில் சிறுத்தையின் எலும்புகள் மடமடவென்று முறிந்தன.

மான் கரையேறி விட்டது. குறட்டி அசையாமல் இருந்தது. அந்த மரத்திற்கு அருகாமையில வந்த பாதையில் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தது அந்த மான்.

சொல்லி வைத்ததுபோல் அந்த மரத்தடியில் வந்து நின்றது. குறட்டி மான்குட்டியில் கழுத்தில் மாலையாய் விழுந்தது.

“அம்மா” என்று கதறியது மான்குட்டி. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போனது. அப்படி இப்படி கூட அசையாமல் நின்றது.

குறட்டிக்குக் கூட ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது பாவமாக இருந்தது. அதற்குள் குறட்டி ரப்பர் போன்ற நீண்ட தனது உடலால் மானைச் சுற்றிது.

மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் இதனிடம் தப்பிக்க போராட்டம் நடத்துமே தவிர இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது.

“ஆமாம்…. ஏன் அழுகிறாய்” என்றது குறட்டி.

மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு உறுதியான குரலில் சொன்னது.

“இப்போது சாவு என்பது நிச்சயமாகி விட்டது. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் மனது வைத்தால் எனக்கு உதவலாம்” என்றது.

“நான் எப்படி உதவ முடியும்?” என்றது.

“மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு மீண்டும் இங்கு வந்து சேருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு” என்றது மான்.

“நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?”

“நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீ என் கூடவே வா.. நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு”

“உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன?” என்றது குறட்டி.

“என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன்”

“நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும்” என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டது. குறட்டியை சுமந்தபடியே சென்றது மான்.

மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்றது. நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது.

மலைப்பாம்பு தன் உடலைச் சுற்றியிருக்க உற்சாகத்துடன் நடந்தது.

தனது அம்மாவுக்காக தன்னுடைய உயிரைக் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அதற்கு சந்தோஷமாக இருந்தது.

மான் தன் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்தது. தன் இருப்பிடத்தையும் படுத்துக்கிடக்கும் அம்மாவையும் காட்டியது. குறட்டி அதன் உடம்பிலிருந்து மெல்ல இறங்கியது.

“நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால்…. அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும்” என்றது குறட்டி.

“நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன்” என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடியது மான் குட்டி.

குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களின் ஊடே மறைந்து கொண்டது.

அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன.

அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விட முடியும்.

இப்படித்தான் சென்ற வாரம் ஒரு மலைப்பாம்பை இரண்டு பெரிய மிளா மான்கள் கொம்பினால் நசுக்கி எடுத்துவிட்டன. அந்த மாலைப் பாம்பு அங்கேயே உயிரை விட்டது.

பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக் கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.

“கையில் கிடைத்ததை விட்டு விட்டோமோ?” என்று கூட ஆதங்கமாக இருந்தது.

எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. குறட்டி பெரிய தனது உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர ஏதோ அரவம் கேட்டது.

அதே மான்குட்டி தனியாக வந்தது.

“என் கடமை முடிந்தது… எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன்…..உனக்கு எனது நன்றி” என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி.

குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது.
“என்னைப் பற்றியா சொன்னாய்” என்றது குறட்டி

“இல்லை எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன்.”

“உன்னை கொன்று தின்னப் போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்?”

“நீ சொன்னது சரிதான்.. ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?”

குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது.

“தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்கினாலே ….எனக்குப் பெருமை” என்று சொல்லியபடி குறட்டி அதனை உயிரோடு விட்டுச் சென்றது.

மான்குட்டி குறட்டியை ஆச்சரியமாகப் பார்த்துது.

மரக்கிளைகளில் தவழ அதன் உடம்பின் கரும்புள்ளிகள் வைரமாக மின்னின.

அரசர் கதைகள் – மானமே பெரிது

சோழ நாட்டின் தலைநகரம் காவிரிப் பூம்பட்டினம்.

அரசவை கூடியுள்ளது. அரியணையில் அரசர் பெருவளத்தான் பெருமிதத்துடன் அமர்ந்து உள்ளார். அமைச்சர்களும் படைத் தலைவனும் அவையினரும் இருக்கைகளில் அமர்ந்து உள்ளனர்.

“அமைச்சரே! சேர நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்தோம். முறைப்படி நம் தூதரை அந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தோம். எங்கு எப்பொழுது இரு நாட்டுப் படைகளும் போரிடுவது? இது குறித்து சேர நாட்டு அரசரே முடிவு செய்ய வேண்டும் என்றோம். இதுவரை அந்த அரசரிடம் இருந்து எந்தச் செய்தியும் இல்லை.”

“வெற்றி வேந்தே! சேர அரசரும் போருக்கு அஞ்சுபவர் அல்லர். எங்கு போர் செய்வது? ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பதில் தாமதம் என்று நினைக்கிறேன். விரைவில் செய்தி வரும்” என்றார் அமைச்சர்.

அப்பொழுது வீரன் ஒருவன் அரசவைக்குள் வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான்.

“காவிரி நாட வாழி! வெற்றி வேந்தே வாழி! நீதிநெறி தவறாத வேந்தே வாழி” என்று வணங்கினான்.

“வீரனே! என்ன செய்தி?”

“அரசே! சேர நாட்டுத் தூதர் வந்திருக்கிறார். உங்கள் அனுமதிக்காக வாயிலில் காத்திருக்கிறார்.”

“தூதனை உடனே இங்கு அழைத்து வா.”

“கட்டளை அரசே” என்று வணங்கிவிட்டு வீரன் சென்றான்.

தூதன் உள்ளே நுழைந்தான். அரசரைப் பணிவா வணங்கினான்.

“அரசே! வாழி! எங்கள் பேரரசர் சேரமான் நெடுஞ்சேரலாதன் செய்தி அனுப்பி உள்ளார்.”

“தூதனே! உன் வருகையைத் தான் எதிர்பார்த்து இருந்தோம். அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல். எங்களுக்குத் திறை செலுத்த உங்கள் அரசர் ஒப்புக் கொண்டாரா? அல்லது சோழர் பெரும்படையைச் சந்திக்க உள்ளாரா? எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்?”

“அரசே! எங்கள் அரசர் பெருமான் வீரர்களுக்கு எல்லாம் வீரர். பகை அரசர்கள் நடுங்கும் பேராற்றல் வாய்ந்தவர். எம் நாட்டு மக்களும் வீர மறவர்கள். போர் வேண்டி எங்கள் நாட்டிற்கு ஓலை வந்தது இல்லை.

உங்கள் ஓலையைக் கண்டு எங்கள் அரசர் மகிழ்ச்சி அடைந்தார். வீரர்களோ நல்விருந்து கிடைத்தது என்று ஆரவாரம் செய்தார்கள்.

போர் என்று முடிவு செய்து விட்டார் எங்கள் அரசர். போரிடுவதற்கு ஏற்ற இடத்தையும் தெரிவு செய்து விட்டார்.

வெண்ணிப் பறந்தலை என்ற இடம் தான் அது. வரும் முழுமதி நாளன்று இரு படைகளும் அங்கே சந்திக்கலாம். இதுதான் எங்கள் அரசர் அனுப்பிய செய்தி” என்றான் தூதன்.

சோழ அரசரை வணங்கி விட்டுப் புறப்பட்டான்.

“அமைச்சரே! கடல் போன்ற பெரும்படை நம்மிடம் உள்ளது. போர்ப் பயிற்சி மிக்க எண்ணற்ற வீரர்கள் உள்ளனர். நம்மை வெல்லும் ஆற்றல் யாருக்கு உள்ளது? நம் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசனாக சேரன் இருந்து இருக்கலாம். வீணாக நம்முடன் போரிட்டு அழியப் போகிறான்.”

“அரசே! சேர அரசரின் தன்மானம் நமக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது. வரும் முழுமதி நாள் நம் நாட்டிற்கு வெற்றி நாள். உங்கள் வீரச் சிறப்பை உலகமே அறியும் நன்னாள்” என்றார் அமைச்சர்.

“நன்று சொன்னீர்! அமைச்சரே! படைத்தலைவரே! நம் பெரும்படை நாளையே வெண்ணிப் பறந்தலை நோக்கிப் புறப்படட்டும். சேரர் படையின் வருகைக்காக நாம் அங்கே காத்திருப்போம்.

வீரம் பேசிய அந்தச் சேரனைப் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறேன். என் வேலுக்கு அவன் பதில் சொல்லட்டும்.”

“கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன்” என்றார் படைத்தலைவர். அரசரை வணங்கி விட்டுச் சென்றார்.

சோழர் படை வெண்ணிப் பறந்தலையை அடைந்தது.

“படைத் தலைவரே! இந்த இடம் தான் வெண்ணிப் பறந்தலையா? கண்ணுக்கு எட்டிய தொலைவு மணற் பரப்பு தான் உள்ளது. செடிகளோ கொடிகளோ மரங்களோ எதுவும் இல்லை.

நல்ல இடத்தைத்தான் சேர அரசர் தேர்ந்து எடுத்து உள்ளார்” என்றார் சோழ அரசர்.

“ஆம் அரசே” என்றார் படைத்தலைவர்.

முழுமதி நாள் வந்தது.

காலை நேரம். இரு நாட்டுப் படைகளும் எதிரெதிரே அணிவகுத்து நின்றன.

சோழர் பெரும்படை முன் சேரர் படை சிறுத்துக் காட்சி அளித்தது.

கரிகாற் பெருவளத்தான் சோழர் படைக்குத் தலைமை தாங்கித் தேரில் அமர்ந்தார்.

அதே போலச் சேரமான் நெடுஞ்சேரலாதனும் தன் தேரில் அமர்ந்தார்.

இரு நாட்டு முரசங்களும் ஒரே நேரத்தில் முழங்கின. போர் தொடங்கியது.

வீரர்கள் வீர முழக்கம் செய்தனர். ஒருவரோடு ஒருவர் கடுமையாகப் போரிட்டனர்.

யானைகளின் பிளிறல் ஒரு பக்கம் கேட்டது. குதிரைகளின் கனைப்பொலி இன்னொரு பக்கம் கேட்டது. வாளோடு வாள் மோதும் ஓசை பல இடங்களில் கேட்டது.

எங்கும் ஆரவாரம் இருந்தது.

கரிகாற் பெருவளத்தானும் நெடுஞ்சேரலாதனும் போர்க் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர். சினத்தால் இருவர் கண்களும் தீ உமிழ்ந்தன.

இருவரும் போர் செய்யத் தொடங்கினர்.

வெற்றி தோல்வி அறியவே முடியவில்லை. இருவரும் இணையாகப் போர் செய்து கொண்டிருந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் அது நடந்து முடிந்தது.

சோழ அரசர் தன் வேலைச் சேர அரசரின் மார்பில் பாய்ச்சினார். சேர அரசரின் மார்பை ஊடுருவிப் பாய்ந்தது அந்த வேல். அப்படியே மண்ணில் சாய்ந்தார் சேர அரசர். அவர் உடலிலிருந்து வழிந்த குருதி நிலத்தைச் செம்மை ஆக்கியது.

“ஆ! நம் அரசர் வீழ்ந்து விட்டார்” என்ற சேர வீரர்களின் அவலக் குரல் எங்கும் கேட்டது.

“நாம் வெற்றி அடைந்து விட்டோம். நம் வீரத்திற்குப் பெருமை சேர்ந்து விட்டது. வீரத்துடன் போரிட்டான் சேர அரசன். என்ன பயன். என்னிடம் தோற்று வீழ்ந்தான்.

வெற்றி அடைந்த நம் படை போரிடுவதை நிறுத்தட்டும். ஆரவாரத்துடன் நாடு திரும்பட்டும்” என்று கட்டளை இட்டார் சோழ அரசர்.

வேல் பாய்ந்ததால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைப் பாசறைக்குக் கொண்டு சென்றனர்.

அரசரைச் சோதித்த மருத்துவர் “அரசரின் மார்பில் பாய்ந்த வேல் முதுகைத் துளைத்து உள்ளது. ஏராளமான குருதி வெளியேறி விட்டது.

வேலைப் பிடுங்கி விட்டேன். மேலும் குருதி வெளியேறா வண்ணம் மருந்திட்டு உள்ளேன்.

உடனே நம் அரசரை அரண்மனைக்குத் தூக்கிச் செல்லுங்கள். ஆற்றல் வாய்ந்த மூலிகைகள் பல அங்கு உள்ளன. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. நாடித்து துடிப்பு அடங்கிக் கொண்டே வருகிறது. விரைந்து செயல்படுங்கள்.”

மயங்கிக் கிடந்த சேர அரசரைப் பல்லக்கில் வைத்தார்கள் வீரர்கள். பல்லக்கு விரைந்து கருவூரை அடைந்தது.

சோழ நாடெங்கும் விழாக் கோலம் பூண்டது. வீதியெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன.

வெற்றியுடன் திரும்பும் அரசரையும் வீரர்களையும் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர் மக்கள்.

எங்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.
வெண்ணிப் பறந்தலைப் போர் நிகழ்ந்து சில திங்கள் கழிந்தன.

வழக்கம் போல அரசவை கூடி இருந்தது. அரியணையில் கரிகாற் பெருவளத்தான் அமர்ந்து இருந்தார். அவையினர் அவரவர் இருக்கையில் இருந்தனர்.

வீரன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கினான்.

“வெற்றி வேந்தே வாழி! பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார் வந்து கொண்டிருக்கிறார்” என்றான்.

“ஆ! பெரும்புலவர் வெண்ணியக் குயத்தியாரா? இங்கு வருகிறாரா? அவர் வருகையால் நம் நாடே பெருமை பெற்றது” என்று அரியணையில் இருந்து இறங்கினார் அரசர்.

புலவர் வெண்ணியக் குயத்தியார் உள்ளே நுழைந்தார்.

அவரை வரவேற்ற அரசர் “வாருங்கள்! வெண்ணிக் குயத்தியாரே! வாருங்கள்” என்ற மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்.

அவையினர் எல்லோரும் எழுந்து “புலவர் வெண்ணிக் குயத்தியார் வாழ்க” என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

உயர்ந்த இருக்கை ஒன்றைக் காட்டிய அரசர் “புலவரே! இதில் அமருங்கள்” என்று வேண்டினார்.

தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். அந்த இருக்கையில் அமர்ந்தார்.

அரசரும் அரியணையில் அமர்ந்தார்.

புலவர் எழுந்து நின்று “நானிலம் காக்கும் அரசே வாழி! செங்கோல் தவறாத அரசே வாழி! பகை நடுங்கும் வெற்றி வேந்தே வாழி! தமிழின் மீது நீர் கொண்டிருக்கும் பேரன்பை உலகமே போற்றுகிறது. உம்மைப் போல் புலவர்களை மதிக்கும் அரசர் யார் இருக்கிறார்கள்? உம்மோடு உரையாடி மகிழவே இங்கு வந்தேன். என் சில நாட்கள் இங்கே தங்குவதாகத் திட்டம்” என்றார்.

“தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் புலவர் பெருந்தகையே! கிடைத்தற்கு அரிய பெரும் பேறாகக் கருதுகிறோம். உங்கள் வருகையால் இந்தச் சோழ நாடே சிறப்புப் பெற்றது. நீங்கள் இங்கேயே நிலையாகத் தங்கினால் பெரிதும் மகிழ்வோம்” என்றார் அரசர்.

“வெற்றி வேந்தே! எங்கள் அறிவுச் செல்வம் ஒரு நாட்டிற்கு உரியது அல்ல. உலகிற்குப் பயன்பட வேண்டும். பல நாடுகளையும் சுற்றி விட்டுச் சேர நாடு சென்றேன். அங்கே சில நாட்கள் தங்கினேன். அங்கிருந்து இங்கு வந்தேன்” என்றார் அவர்.

“சேர நாட்டிலிருந்தா வருகிறீர்கள்? எனக்கும் சேர அரசனுக்கும் நிகழ்ந்த போரைப் பற்றிக் கேட்டு இருப்பீர்கள்.

அதைப் போன்று கடுமையான போர் எங்கும் நிகழ்ந்தது இல்லை.

அந்தப் போரில் அடைந்த வெற்றி எனக்குப் பெரும்புகழைத் தந்தது. அதைப் போற்றிப் புகழாத புலவர்களே இல்லை.

அந்தப் போரைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார் அரசர்.

“அரசே! போர் முடிந்து விட்டது. சேர நாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் உமக்குத் தெரியாதா?”

“புலவரே! சேரரின் படையைப் போர்க்களத்தில் சந்தித்தேன். என் வேலால் தாக்கப்பட்ட ரே அரசன் நிலத்தில் வீழ்ந்தார். வெற்றிக்காகப் போர் செய்தேன். என் எண்ணம் நிறைவேறியது.

தோல்வி அடைந்த அவர்களால் பல ஆண்டுகள் போரிட முடியாது. அதனால் அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை நான் பொருட்படுத்தவில்லை.”

“அரசே! உங்கள் வேலால் தாக்கப்பட்டார் அரசர் நெடுஞ்சேரலாதன். அவர் உயிர் பிழைத்து விட்டார். அந்தச் செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா?”

“புலவரே” என்னால் நம்ப இயலவில்லையே. என் வேல் நெடுஞ்சேரலாதனின் மார்பைத் துளைத்து ஆழமாகப் பாய்ந்தது. அப்படியே நிலத்தில் அவர் வீழ்ந்தார். அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லையே.”

“அரசே! சேர நாட்டு மூலிகைகளின் ஆற்றல் அளவிட முடியாதது. அவை இறந்தவரின் உயிரையே மீட்கும். அப்படி இருக்கையில் படுகாயம் அடைந்த அரசரின் உயிரையா மீட்காது?”

“மூலிகைகளால் சேர அரசர் உயிர் பிழைக்கட்டும். என்னிடம் தோற்ற பழி அவரை விட்டு நீங்காதே. அதற்கு அவர் போர்க்களத்திலேயே இறந்து இருக்கலாம். உயிர் பிழைத்துப் பழி சுமக்கின்ற கொடுமை யாருக்கு வேண்டும்?”

“அரசே! சேர அரசர் உயிர் பிழைத்ததால் புகழில் உயர்ந்து விட்டார். புலவர்கள், சான்றோர்கள் எல்லோரும் சேர அரசரையே புகழ்ந்து பேசுகிறார்கள். நீங்கள் போரில் அடைந்த வெற்றிப் புகழும் மங்கி விட்டது.”

“புலவரே! போரில் பெருவீரம் காட்டி வென்றவன் நான். என்னிடம் தோற்று உயிர் பிழைத்தவன் சேர அரசன். அவனை இந்த உலகம் புகழ்கிறதா? கேட்பதற்கு வேடிக்கையாக உள்ளதே?”

“அரசே! உங்கள் வேல் சேர அரசரின் மார்பில் ஆழமாகப் பாய்ந்தது. முதுகைத் துளைத்து வெளியே வந்தது.”

“என் வீரத்திற்கும் வலிமைக்கும் அந்த வேலே சான்று ஆகிறதே.”

“அரசே! உங்கள் வேலால் நிலத்தில் வீழ்ந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைக் கருவூருக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அரிய பச்சிலைகள் கட்டினார்கள்.

ஒரே திங்களில் அவர் மீண்டும் பழைய வலிமையைப் பெற்றார்.

மார்பிலும் முதுகிலும் வேல் குத்திய வடு இருப்பை அறிந்து துடித்தார்.”

“இதில் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? புலவரே”

“அரசே! விழுப்புண் பட்ட வடு மார்பில் இருந்தால் பெருமை. நேருக்கு நேர் நின்று போர் செய்தவர். எதிரியின் படைக் கலங்களை மார்பில் தாங்கியவர் என்று புகழ்வார்கள். முதுகில் வடு இருந்தால் புறமுதுகு காட்டி ஓடி வந்தது ஆகாதா? அது வீரர்களுக்கு மாறாப் பழி தரும் செயல் அல்லவா?”

“ஆம் புலவரே! புறமுதுகிட்டு ஓடுவது மிக இழிவான செயல். அப்படிப்பட்டவனை ஈன்ற தாய் வேண்டாள். மனைவி விரும்பாள். உற்றாரும் மற்றோரும் வெறுப்பார்கள்.

இதில் சேர அரசர் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? என் வேலை அவர் மார்பில் தாங்கியதை எல்லோரும் அறிவார்களே. அதே வடுதானே முதுகில் உள்ளது.”

“அரசே! சேர அரசர் மானம் மிக்கவர். முதுகில் வடு உள்ளது. உண்மை அறியாதவர்கள் என்ன நினைப்பார்கள்? புறமுதுகு காட்டியதால் ஏற்பட்ட வடு என்று தானே நினைப்பார்கள். என்ன செய்வது என்று கலங்கினார்.

அந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவிற்கு வந்தார்.”

“என்ன! செய்யாத பழிக்காக வடக்கிருக்க நினைத்தாரா? இதைப் புலவர்களும் சான்றோர்களும் தடுக்க வில்லையா?”

அரசே! சேர அரசரின் செயலை எல்லோரும் தடுக்க முயற்சி செய்தார்கள்.

ஆனால் அவரோ எம் சேரர் குடி மானம் மிக்க குடி. என் முன்னோன் ஒருவன் பகைவரால் சிறையிடப்பட்டான் காலந்தாழ்த்து வந்த நீரைப் பருகாமல் உயிரை விட்டான்.

அப்படிப்பட்ட உயர்ந்த மரபில் வந்தவன் நான். என்னைப் புறப்புண் கண்டவன் என்றால் குடிக்கே இழுக்கு நேருமே. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் வடக்கிருந்து உயிரைத் துறப்பது உறுதி என்றார்.

“பிறகு என்ன நடந்தது புலவரே?”

“வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. அரசர் வடக்கிருப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்து எடுத்தார்கள். அங்கேயே வடக்கிருந்து உயிர் துறந்தார் அவர்.”

“ஆ! என்ன சேர அரசரின் மானச் சிறப்பு! செயற்கருஞ் செயலை அல்லவா அவர் செய்து விட்டார். செய்யாத பழிக்காக இதுவரை யார் உயிரைத் துறந்து இருக்கிறார்கள்? அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்”.

“அரசே! போரில் பெரு வீரம் காட்டி வெற்றி பெற்றவர் நீங்கள். உங்களிடம் தோற்ற சேர அரசரோ புறப்புண்ணுக்கு நாணினார். வடக்கிருந்து உயிர் துறந்தார். உங்கள் புகழை விட அவர் புகழையே சிறப்பித்துப் பாடுகிறார்கள் புலவர்கள்.”

“புலவரே! என் வீரத்தினும் சேர அரசரின் மானம் உயர்ந்து நிற்கிறது. வென்ற நான் தோற்றவனாகி விட்டேன். தோற்றும் அவர் புகழில் என்னை வென்று விட்டார். வாழ்க அவர் புகழ்” என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் கரிகாற் பெருவளத்தான்.

1. “நனியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
செனறமர்க் கடந்தனின் னாற்றற் றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாகி வடக்கிருந் தோனே”

(புறநானூற்றுப் பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது)

அரசர் கதைகள் – உயர்ந்த நட்பு

சோழ நாட்டின் தலை நகரம் உறையூர். எப்பொழுதும் ஆரவாரமாக இருக்கும் அந்த நகரம் அன்று அமைதியாக இருந்தது.

நகர வீதியில் முதியவர்கள் இருவர் சந்தித்தனர்.

“முத்தனாரே! அரசவையில் இருந்துதானே வருகிறீர். ஏதேதோ தீய செய்திகளைக் கேள்விப் படுகிறோமே. மக்கள் கூட்டமாக அழுது புலம்புகிறார்களே. நாடெங்கும் இதே பேச்சாக உள்ளதே. உண்மையா?”

“இளவழகனாரே! நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான். அதனால்தான் சோழ நாடே அவலத்தில் ஆழ்ந்து உள்ளது. நகர வீதிகளில் எங்கும் அழுகை ஒலி கேட்கிறது.”

“முத்தனாரே! எல்லாம் அறிந்தவர் நீங்கள். அரசவையில் என்ன நிகழ்ந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள்.”
“தன்மானம் மிக்கவர் நம் அரசர். புதல்வர்களால் மானத்திற்கு இழுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார். அதனால்தான் வடக்கிருந்து உயிர் விடும் முடிவுக்கு வந்து விட்டார்.”

“எங்கு தான் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் பிணக்கு இல்லை.”

“இளவழகனாரே! நம் அரசர் நீதிநெறி தவறாதவர். வீரம் மிக்கவர். எல்லா நாட்டு அரசர்களும் மதித்துப் போற்றும் நற்பண்பாளர்.

ஆனால் அவருக்குப் பிறந்த மக்கள் இருவருமே தீயவர்களாக உள்ளனர். அவர்களைத் திருத்த அரசரும் தம்மாலான முயற்சி செய்தார். முயற்சி பயன் ஏதும் தர வில்லை. தீயவர்களான அவர்கள் தந்தையையே வெறுக்கத் தொடங்கினார்கள்.”

“நாட்டு மக்கள் எல்லோரும் அறிந்த செய்திதானே இது.”

“இளவழகனாரே! இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நம் அரசரை எதிர்த்தனர் அவர் மக்கள். அவருடன் போர் செய்யத் துணிந்து விட்டார்கள்.

அந்தத் தீயவர்களுக்கு ஆதரவாகப் புல்லர்கள் சிலரும் துணை நின்றனர்.
இதைக் கேட்ட அரசர் கோபத்தால் துடித்தார்.

“என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டார்களா என் மக்கள்? அவர்களை இந்த வாளுக்கு இரையாக்குவேன்” என்று போருக்கு எழுந்தார்.

சினம் கொண்ட அவரைப் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் தடுத்தார்.”

“முத்தனாரே! தீயவர்களைக் கொன்று ஒழிப்பது அரச நீதிதானே. எதற்காகப் புலவர் எயிற்றியனார் குறுக்கிட்டார். அவர் என்ன சொன்னார்.?”

“அரசே! நீங்கள் யாரோடு போரிடச் செல்கிறீர்கள்? உங்கள் மக்களுடனா? உங்களுக்குப் பின் ஆட்சிக்கு உரியவர்கள் அவர்கள்தானே.

அவர்களை வென்ற பின் யாருக்கு இந்த நாட்டைத் தரப் போகிறீர்கள்?
இந்த வெற்றியால் உங்களுக்குப் புகழ் வருமா? போரில் தன் மக்களையே கொன்றான் சோழன். இப்படித்தான் உலகம் உங்களை ஏசும். இந்தப் போரில் தோற்றாலோ மாறாகப் பழிதான் உங்களைச் சூழும்.
நான் சொல்வதை எண்ணிப் பாருங்கள். போரில் வென்றாலும் பழிதான். தோற்றாலும் பழிதான் என்றார் எயிற்றியனார்.”

“முத்தனாரே! இதைக் கேட்ட அரசர் என்ன செய்தார்?”
“கோபத்தை அடக்கிக் கொண்ட அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

“புலவரே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் போ‘ரில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் பழிக்கு ஆளாவேன். இதிலிருந்து நான் மீள வழியே இல்லை.என் மக்களின் பொருந்தாச் செய்கையினால் பழிக்கு ஆளாகிவிட்டேன். இந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கப் போகிறேன். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை” என்று உறுதியுடன் சொன்னார்.”
“ஆ! நம் அரசரா அப்படிச் சொன்னார்?”

“அரசர் சொன்னதைக் கேட்டு அவையில் இருந்த எல்லோரும் கலங்கி விட்டனர்.”
“முத்தனாரே! வடக்கிருத்தால் என்றால் என்ன?”

“பெரியவர்கள் தங்கள் மானமே பெரிது என்று கருதுவார்கள். மானத்திற்குச் சிறிது இழிவு வந்தாலும் உயிரை விடத் துணிவார்கள். அப்படி உயிரைத் துறக்கின்ற முறைக்கு வடக்கிருத்தல் என்று பெயர்.
வடக்கிருத்தலுக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பார்கள். அங்கே வடக்கு நோக்கி அமர்வார்கள். உண்ணா நோன்பு இருந்து உயிரை விடுவார்கள்.அது மட்டும் அல்ல. அவருக்காக உயிரை விட முன்வருபவர்களும் அவரோடு வடக்கு இருப்பார்கள்.”
“முத்தனாரே! உண்ணா நோம்பிருந்து உயிர்விடும் முறையா வடக்கிருத்தல். மிகக் கடுமையாக உள்ளதே.”
“இளவழகனாரே! அரசர் வடக்கிருக்கும் இடத்தைப் புலவர் பொத்தியார் தேர்ந்து எடுத்தார்.
அரசரும் அங்கே சென்று வடக்கிருக்க அமர்ந்து விட்டார். புலவர்கள் பலரும் அவருடன் சென்று விட்டனர்.
செய்தி அறிந்த மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.”

“முத்தனாரே! நம் அரசரின் பெருமை யாருக்கு வரும்? வடக்கிருக்கும் போதும் நண்பர்கள் சூழ இருக்கிறாரே.”
“இளவழகனாரே! நானும் அரசருடன் வடக்கிருக்கத்தான் செல்கிறேன்” என்று புறப்பட்டார் முத்தனார்.

வடக்கிருப்பதற்காகப் பெரிய திடலைத் தேர்ந்து எடுத்து இருந்தார்கள்.
அதன் ஒரு பக்கத்தில் கோப்பெருஞ் சோழன் அமர்ந்து இருந்தார். அவர் அருகே புலவர் பொத்தியார் உள்ளார். பல புலவர்கள் நெருக்கமாக அமர்ந்து இருக்கின்றனர்.

திடல் முழுவதும் மக்கள் கூட்டமாக அமர்ந்து உள்ளனர்.
“அரசே! இவ்வளவு பெரிய திடலில் எத்தனை பேர் என்று பாருங்கள். எல்லோரும் நெருக்கமாக அமர்ந்து உள்ளனர். நாட்டு மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் நீங்கள். அதற்கு இதுவே நல்ல சான்று” என்றார் பொத்தியார்.

“பொத்தியாரே புலவர்கள் பலரும் என்னுடன் நெருக்கமாகவே அமர்ந்து உள்ளீர்கள். வடக்கிருக்கும் போதும் உங்களுடன் இலக்கியச் சுவை நுகருகின்றேனே. என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
என் வேண்டுகோள் ஒன்று. எனக்காக நீங்கள் அனைவரும் ஓர் உதவி செய்ய வேண்டும்.”
அங்கிருந்த புலவர்கள் திகைத்தனர்.

“அரசே! எங்களை வடக்கிருக்க வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள். உங்கள் கட்டளை வேறு எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுகிறோம்” என்றார் பொத்தியார்.

“புலவர்களே! பெரும்புலவர் பிசிராந்தையார் என் உயிர் நண்பர். நான் வடக்கிருக்கும் செய்தி அறிந்ததும் அவர் இங்கே ஓடி வருவார். அவருக்கு என் அருகே ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள். இது என் வேண்டுகோள்” என்றார் அரசர்.

இதைக் கேட்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர்.
“அரசே! நீங்கள் சொல்வது பாண்டிய நாட்டுப் புலவராகிய பிசிராந்தையாரைத்தானே. அவர் தம் ஊராகிய பிசிரை விட்டு அதிகம் வெளியே வந்தது இல்லை.

பல ஊர்கள் சுற்றும் புலவர்கள் நாங்கள். அவர் பெயரைத்தான் கேட்டு இருக்கிறோம். அவரை நேரில் பார்த்தது இல்லை. அவர் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்ததாகவும் எனக்குத் தெரிய வில்லையே” என்று கேட்டார் பொத்தியார்.

“நீங்கள் சொல்வது உண்மைதான். பிசிராந்தையார் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்தது இல்லை. நானும் பாண்டிய நாட்டிற்குச் சென்றது இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததும் இல்லை.”
“அரசே! நீங்களும் பிசிராந்தையாரும் சந்தித்தது இல்லை என்கிறீர்கள். பேசிப் பழகவில்லை என்கிறீர்கள்.
உங்களுக்காக வடக்கிருந்து உயிர் விட அவர் இங்கே வருவார். அவருக்கு இடம் ஒதுக்கி வையுங்கள் எனச் சொல்கிறீர்கள். அவர் இங்கே வருவாரா? எங்களால் நம்ப முடியவில்லையே” என்று கேட்டார் பொத்தியார்.
“பொத்தியாரே! நானும் பிசிராந்தையாரும் உள்ளம் ஒன்றுபட்ட உயிர் நண்பர்கள். என்னுடைய உள்ளம் அவர் அறிவார். அதே போல அவருடைய உள்ளத்தை நான் அறிவேன். நல்ல நட்பிற்கு, உயர்ந்த நட்பிற்குப் பேசிப் பழக வேண்டுமா?”

“அரசே! பேசாமல் பழகாமல் நட்பு எப்படி வளர முடியும்? உங்கள் பெருமையையும் புகழையும் பிசிராந்தையார் அறிந்து இருக்கலாம். அதே போல அவருடைய புலமைச்சிறப்பை நீங்கள் அறிந்து இருக்கலாம்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில் அவர் உங்களுக்காக வடக்கிருக்க வருவார் என்கிறீர்களே. இதை என்னால் நம்ப முடியவில்லை.”

“பொத்தியாரே! பிசிராந்தையார் என்னை நண்பனாக விளித்துப் பாடல் எழுதி உள்ளார். நானும் அவருக்கு மடல் எழுதி உள்ளேன். மடல் வழியாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம்.
நல்ல நட்பிற்குப் புணர்ச்சி பழகுதல் வேண்டா. இது உங்களுக்குத் தெரியாதா? எனக்காக உயிரை விட பிசிராந்தையார் இங்கே வருவார். இது உறுதி. என் அருகில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.”
“அரசே! பிசிராந்தையார் இங்கு வருவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வடக்கிருக்கும் செய்தி அவரை அடைய இரண்டு திங்களாவது ஆகும். இல்லக் கடமைகளை எல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர் புறப்பட முடியும். இங்கு வர மேலும் சில நாட்கள் ஆகும்.

அதற்குள் நீங்கள் விண்ணுலகம் சென்று விடுவீர்கள். அவர் வந்தாலும் உங்களைச் சந்திக்க முடியாது.
இங்குள்ள இட நெருக்கடி உங்களுக்கே தெரியும். இந்தச் சூழலில் உங்களுக்கு அருகில் அவருக்கு இடம் ஒதுக்க வேண்டுமா?”

“பொத்தியாரே! எங்கள் நட்பின் ஆழத்தை நீங்கள் அறியவில்லை. அவருடைய வருகைக்காக என் உள்ளம் துடிப்பது எனக்குத்தான் தெரியும். என் உயிர் நண்பர் வளமான காலத்தில் சந்திக்காமல் இருந்து இருக்கலாம். இப்பொழுது என்னைக் காண ஓடோடி வருவார்.”

“அரசே! என்னை மன்னியுங்கள். இட நெருக்கடியால்தான் மறுத்துப் பேச வேண்டி வந்தது. உங்களுக்கு அடுத்தே பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்கி உள்ளோம். இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சிதானே.”
“மகிழ்ச்சி பொத்தியாரே! என் மக்கள் மீது கொண்ட பிணக்கு. அதனால் ஏற்பட்ட சூழல்களால் உங்களை மறந்து விட்டேன்.

உங்கள் மனைவி கருவுற்று இருப்பதாக மகிழ்ச்சியுடன் சொன்னீர்களே. குழவி பிறந்து விட்டதா? ஆண் குழவியா? பெண் குழவியா?”
“அரசே! பெற்ற மகவைப் பார்ப்பதா பேறு? உங்களுடன் உயிர் விடுவதே பெரும் பேறு.”
“பொத்தியாரே! வடக்கிருக்கும் மரபு உங்களுக்குத் தெரிந்து இருக்குமே. யார் யார் வடககிருக்கலாம். யார் யார் கூடாது என்ற விதி தெளிவாக உள்ளதே.

திருமணம் ஆகாதவர்கள். கருவுற்ற மனைவியை உடையவர்கள். அவர் வருவாயையே நம்பி இருக்கும் குடும்பத்தினர். இப்படிப்பட்டவர்கள் வடன்கிருத்தல் கூடாது.
வடக்கிருப்பவர்கள் இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்களாக இருக்க வேண்டும்.
மானத்திற்கு இழுக்கு வந்ததால் நான் வடக்கிருக்கிறேன். இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்கள் மட்டுமே என்னுடன் வடக்கிருக்க வேண்டும்.”

“அரசே! வடக்கிருக்கும் மரபை நான் நன்கு அறிவேன். இருந்தாலும்.”
“மனைவி கருவுற்று இருக்கும் நிலையில் எப்படி இங்கு வந்தீர்? இதனால் எனக்குத்தானே பழி வந்து சேரும். உடனே இங்கிருந்து புறப்படுங்கள். மகவின் அழகிய திருமுகத்தைப் பாருங்கள். தமிழ்ப் பெயர் சூட்டுங்கள். உங்கள் மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லுங்கள். இல்லக் கடமைகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இங்கே வந்து வடக்கிருங்கள்.”

“அரசே! அறநெறிகளை விதிமுறைகளைச் சொல்லி என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீர்கள். உங்களுடனேயே வடக்கிருந்து உயிர்விட விரும்புகிறேன். என் எண்ணத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். இது என் அன்பு வேண்டுகோள்.”

“பொத்தியாரே! நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இல்லப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னரே வடக்கிருக்க வேண்டும். என் மீது உங்களுக்கு உண்மையான அன்பிருந்தால் இல்லத்திற்குச் சொல்லுங்கள். பிறக்கும் குழந்தையில் திருமுகத்தைக் கண்டு மகிழுங்கள். இல்லக் கடமைகளை முடித்து விட்டு இங்கே வாருங்கள். இது என் அன்புக் கட்டளை.”

“அரசே! உங்கள் அன்பை மீறும் ஆற்றல் எனக்கு இல்லை. இப்பொழுதே என் இல்லத்திற்குச் செல்கிறேன். நான் மீண்டும் இங்குத் திரும்பச் சில திங்கள் ஆகும்.

அப்பொழுது நீங்கள் விண்ணுலகம் சென்றிருப்பீர்கள். உங்கள் திருமுகத்தை என்னால் காண இயலாது. உங்கள் நினைவாகவே இங்கே வடக்கிருந்து உயிர் விடுவேன்” என்று கண்ணீர் வழிய புறப்பட்டார் பொத்தியார்.
கோப்பெருஞ் சோழனும் புலவர்களும் அவரை வழியனுப்பி வைத்தார்கள்.

கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி எங்க்ம் பரவியது. நாள்தோறும் பலர் அங்கு வந்து வடக்கிருந்தனர்.
சில நாட்களில் கோப்பெருஞ் சோழன் உயிர் துறந்தார். வடக்கிருந்த இடத்திலேயே அவரை நல்லடக்கம் செய்தார்கள். அங்கே நடுகல் நட்டார்கள். அவரோடு வடக்கிருப்பவர்களும் ஒவ்வொருவராக இறந்தனர்.

மூன்று திங்கள் கழிந்தது- புலவர் பொதியார் அங்கு வந்தார். வடக்கிருக்கும் பெரியவர்கள் சிலர் அவரை வரவேற்றார்கள். தமக்கு உரிய இடத்தில் அவர் அமர்ந்தார்.

கோப்பெருஞ் சோழனுடன் உயிர் துறக்க இயலவில்லையே” என்று கலங்கினார்.
“ஆ! நண்பனே! நற்பண்பாளனே! உலகம் போற்றும் புகழோனே! மானமே பெரிதென்று உயிர் துறந்தாயே! உன் புகழ் உலகு உள்ளளவும் நிலைத்து நிற்குமே!

கடமைகளை முடித்து விட்டு வரச் சொன்னாயே! அப்படியே வந்து விட்டேன். என்னை விட்டு எங்கே சென்றாய்?
இறக்கும் போது அருகில் இருக்கும் பேறு கிடைக்க வில்லையே. கொடியவனாகி விட்டேனே.

காலனே! நண்பன் இல்லாமல் நான் உயிர் வாழ்வேனா? என் உயிரையும் உடனே எடுத்துச் செல்” என்று புலம்பினார் அவர்.

அங்கிருந்த பெரியவர் ஒருவர், “புலவரே! உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. மானத்தின் பெருமை காக்க உயிர் விட்டார் நம் அரசர். நாமும் அவருக்காக உயிரை விட வந்து உள்ளோம்.
இங்கே அழுகை ஒலியோ புலம்பல் ஒலியோ கேட்க வேண்டாம்.

நம் அரசரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சொல்லுங்கள். வாழ்க்கையின் உண்மை நிலையினை விளக்குங்கள். நல்ல அறிவுரைகளை வாரி வழங்குங்கள். அவற்றைக் கேட்டுக் கொண்டே நாங்கள் பெருமிதத்துடன் உயிர் விடுகிறோம்” என்றார்.

“பெரியவரே! மன்னியுங்கள். எல்லை மீறிய உணர்ச்சியில் என்னேயே மறந்து விட்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி. உயர்ந்த குறிக்கோளுக்காக இங்கே உயிர் விட வந்துள்ளோம். அழுது புலம்பி அதன் மதிப்பைக் குறைக்க மாட்டேன்.

நிலையான மெய்ப் பொருள்களைப் பற்றி இனி நாம் உரையாடுவோம். சாகும் போதும் இனிமையாகச் சாவோம்” என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் பொத்தியார்.

மறுநாள் அங்கே பெரியவர் ஒருவர் வந்தார்.
அறிஞரைப் போல அவர் தோற்றம் இருந்தது. நீண்ட பயணம் செய்தவரைப் போலக் காட்சி அளித்தார் அவர்.
வடக்கிருக்கும் போலக் காட்சி அளித்தார் அவர்.

“மதிப்பிற்கு உரியவரைப் போல இவர் தோற்றம் உள்ளது. யார் என்று கேட்போம்” என்று நினைத்தார் பொத்தியார். எழுந்து அவரை வரவேற்றார்.

“பெரியவரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? சொல்லுங்கள்? அப்பொழுதுதான் உங்களுக்கு உரிய இடத்தை ஒதுக்க முடியும்” என்றார் பொத்தியார்.

“ஐயா! நான் பாண்டிய நாட்டுப் புலவன். என் ஊர் பிசிர். பிசிராந்தையார் என்று என்னை அழைப்பார்கள். உயிர் நண்பர் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி கிடைத்தது. வடக்கிருந்து உயிர் துறக்க நானும் இங்கு வந்தேன்.”

“ஆ! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெரும்புலவர் பிசிராந்தையாரா நீங்கள்? பாண்டியன் அறிவுடை நம்பி மக்களிடம் அதிக வரி வாங்கினான். அவனுக்கு அறிவுரை சொல்வதற்காகக் “காய்நெல் அறுத்து” என்ற பாடலை பாடினீர்களே? அரசர்கள் எப்படி வரி வாங்க வேண்டும். இதற்கு இலக்கணமாக அந்தப் பாடலையே பயன் படுத்துகிறார்களே.”

“நீங்கள் சொன்ன அத்தனைக்கும் உரியவன் அடியேன்தான். அன்பின் மிகுதியால் பலர் என்னை இப்படிப் புகழ்கிறார்கள். நீங்கள் யார் என்று சொல்ல வில்லையே?”
“பெரும்புலவரே! என் பெயர் பொத்தியார்.”

“புலவர் பொத்தியாரா! என் உயிர் நண்பருக்கு எல்லாமாக இருந்தவரா? உங்களைச் சந்திக்கும் பேறு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை. கோப்பெருஞ் சோழனுடன் நீங்களும் உயிர் துறந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.”

“நீங்கள் நினைத்தது போலத்தான் நடந்திருக்க வேண்டும். என் மனைவி கருவுற்று இருந்தாள். அவள் மகவு ஈன்ற பிறகு வருமாறு அரசர் கட்டளை இட்டார்.

“என் இல்லக் கடமைகளை முடித்து விட்டேன். வடக்கிருக்க நேற்றுத்தான் இங்கு வந்தேன். அப்படி நடந்ததும் நல்லதற்குத்தான் அதனால் உங்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்.”

கோப்பெருஞ் சோழன் தமக்கு அருகிலேயே உங்களுக்கு இடம் ஒதுக்கி வைத்துள்ளார். நீங்கள் இங்கே அமரலாம்.”
“பொத்தியாரே! எந்த இடம்? காட்டுங்கள்.”
“என் அருகில் உள்ள இந்த இடம்தான்.”
பிசிராந்தையார் அந்த இடத்தில் அமர்ந்தார்.

அருகிருந்த மற்ற புலவர்கள் அவரை வியப்புடன் பார்த்தார்கள்.
பொத்தியார் தயக்கத்துடன் “பெரும் புலவரே! எனக்கு ஓர் ஐயம்?” என்று கேட்டார்.
“எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்.”

“நான் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பன். நான் அவரைப் பிரிந்ததோ அவர் என்னைப் பிரிந்ததோ இல்லை. நான் அறிந்து கோப்பெருஞ் சோழனை நீ சந்தித்ததோ பேசியதோ இல்லை.
உங்கள் பெரும்புலமையைப் அவர் அறிந்து இருக்கலாம். அவருடைய வள்ளன்மையைப் பற்றியும் புலமையைப் பற்றியும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் அறியாமலே நட்பும் கொண்டிருக்கலாம். மடல் வழியாக இருவர் நட்பும் வளர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.

பார்க்கலாம். பழகாமல் உங்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு எப்படி மலர்ந்தது? எனக்கு வியப்பாக உள்ளது.”
“பொத்தியாரே! உயர்வுதான் நட்பிற்கு அடிப்படை. பேசுவதும் பழகுவதும் நட்பின் வெளிப்பாடுகள். உள்ளத்தால் கலப்பதே உயர்ந்த நட்பு.

நானும் கோப்பெருஞ் சோழனும் உள்ளத்தால் ஒன்றுபட்டு இருந்தோம். ஆனால் உடலால் பிரிக்கப்பட்டு இருந்தோம். நீண்ட தொலைவு எங்களைச் சந்திக்க இயலாமல் தடுத்தது. அதனால் என்ன? உள்ளம் ஒன்றுபட்ட நாங்கள் மடல் வழியாக உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டோம்.

அவர் உள்ளத்தை நான் அறிவேன். என் உள்ளத்தை அவர் அறிவார். இணைந்த எங்கள் உள்ளங்கள் காலத்தாலோ நாட்டாலோ பிரிக்கப் படுவன அல்ல” என்றார் பிசிராந்தையார்.
“புலவரே! உங்களை வியப்பதா? அல்லது கோப்பெருஞ் சோழனை வியப்பதா? யாரை வியப்பது என்று புரியாமல் குழம்பி நிற்கிறேன்.”
“பொத்தியாரே! என்ன சொல்கிறீர்?”

“என்னுடன் வடக்கிருந்து உயிர் துறக்கப் பிசிராந்தையார் வருவார். அவருக்காக என் அருகே ஓர் இடம் வையுங்கள் என்றார். நாங்கள் கோப்பெருஞ் சோழனிடம் எவ்வளவோ மறுத்து உரைத்தோம். ஆனால் அவரோ நீங்கள் இங்கே வருவீர்கள் என்று உறுதியுடன் சொன்னார்.
அவர் சொன்னது போலவே நீங்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். இருவரில் யார் செயலை வியப்பது என்று தான் குழப்பம்.”

“பொத்தியாரே! ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் அறிவதே உண்மை நட்பு. இதில் வியப்பதற்கு என்ன உள்ளது?
என் நண்பர் வடக்கிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டேன்.

நான் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமைகளை விரைந்து முடிந்தேன். இங்கு வந்தேன் அதற்குள் என் உணிர் நண்பர் விண்ணுலகம் சென்று விட்டார்.

காணாமலே காதல் என்பார்கள். பிறகு சந்தித்து உரையாடி மகிழ்வார்கள். என் நிலையைப் பாருங்கள். என் உயிர் நண்பரை நான் இதுவரை சந்தித்தது இல்லை.
அவருடைய உள்ளத்தை அறிவேன். அவர் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறியேன். இங்கு வந்ததும் அவரைச் சந்திக்க இயல வில்லை.

என் வருகைக்காக அவர் விண்ணுலகில் ஆவலுடன் காத்திருப்பார். விரைவில் என் உயிர் நீங்க வேண்டும். என் நண்பரைச் சந்தித்து மகிழ வேண்டும். இதுதான் என் ஆவல்” என்றார் பிசிராந்தையார்.

“பிசிராந்தையாரே! நீங்களும் கோப்பெருஞ் சோழனும் சிறந்த நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறீர்கள். இனி இந்த உலகமே உங்கள் நட்பைப் போற்றிப் புகழப் போகிறது. உங்கள் இருவர் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். உங்கள் காலத்தில் வாழும் பேறு பெற்றதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார் பொத்தியார்.

1. “எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே
(புறநானூற்றுப் பாடல் 212, அடிகள் 15 முதல் 18 வரை, புல்லாற்றூர், எயிற்றியனார் பாடியது).

2. வடக்கிருத்தல்: – வடக்கிருத்தலாவது ஊர்ப் புறத்தே
தனியிடங்கண்டு அறமுரைக்கும் சான்றோர் புடைசூழப்
புல்லைப் பரப்பி அதன் மீதிருந்து உண்ணா நோன்பு
மேற்கொண்டு அறங்கூறும் தவம் செய்தலாகும்.
(புறநானூறு – இரண்டாம் தொகுதி – ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை உரை – கழக வெளியீடு)

3. தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே
(புறநானூற்றுப் பாடல் 215, பாடல் அடிகள் 6 முதல் 10 வரை)

4. இசை மரபாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்
வியத்தொறும் வியத்தொறும் யிப்பிறந் தன்றே
(புறநானூற்றுப் பாடல் 217, பாடல் அடிகள் 5 முதல் 9 வரை)

சிறுவர் கதைகள் – பெரிய சோம்பேறி யார் ?

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது.

மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்க்கத் தொடங்கினான். அதுவும் நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் உலாவுவான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். காலில் அணிய வேண்டிய உடைகளை உடம்புக்கு அணிந்து கொள்வான். உடம்புக்கு அணியும் உடைகளைக் காலுக்கு அணிந்து கொள்வான். முன்புறம் அணிய வேண்டியதைப் பின்புறமாக அணிந்து கொள்வான். பின்புறம் அணிய வேண்டியதை முன்புறம் அணிந்து கொள்வான். எப்பொழுதும் பின்பக்கமாக நடப்பானே தவிர முன்பக்கமாக நடக்க மாட்டான். இரவு முழுவதும் விழித்து இருப்பான். பகல் முழுவதும் தூங்குவான்.

அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான் அவன். அமைச்சர்கள் ஐந்து பேரையும் அரசவைக்கு வரவழைத்தான்.

இளவரசிக்குத் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். மற்ற அரசர்கள் விரும்புவதைப் போல எனக்கு மருமகனாக வீரன் வேண்டாம். அறிவுள்ளவன் வேண்டாம். நல்ல பண்புள்ளவன் வேண்டாம். அழகானவனும் வேண்டாம், என்றான் அரசன். இதைக் கேட்ட அமைச்சர்கள் திகைப்பு அடைந்தனர்.

இளவரசியார்க்கு யார் கணவனாக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டார் ஓர் அமைச்சர்.

சோம்பேறியான ஒருவன் தான் எனக்கு மருமகனாக வர வேண்டும். மிகப் பெரிய சோம்பேறியைத் தேடும் வேலையை உங்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். அதற்காகத்தான் உங்களை வரவழைத்தேன், என்றான் அரசன்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அரசே! என்று கேட்டார் இன்னொரு அமைச்சர்.

உங்க ஒவ்வொருவருக்கும் ஓராண்டு தவணை தருகிறேன். நீங்கள் பல நாடுகளுக்கும் சென்று சிறந்த சோம்பேறியைக் கண்டுபிடிக்க வேண்டும். தேவையான பணத்தை கருவூலத்தில் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான் அரசன். ஐந்து அமைச்சர்களும் அரசனிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்கள். ஐவரும் வெவ்வேறு திரைகளில் பிரிந்தார்கள்.

ஓராண்டு கழிந்தது. ஐந்து அமைச்சர்களும் நாடு திரும்பினார்கள். அவர்களை வரவேற்றான் அரசன்.

முதலாம் அமைச்சனைப் பார்த்து, உம் அனுபவங்களைச் சொல்லும். எனக்கு மருமகனாகும் சோம்பேறியை எங்கே கண்டுபிடித்தீர்? சொல்லும், என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன்.

அரசே! நான் பல நாடுகளுக்குச் சென்றேன். எத்தனையோ விந்தையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. இருந்தும் சோம்பேறிகளைத் தேடி அலைந்தேன். எத்தனையோ சோம்பேறிகளைச் சந்தித்தேன். யாருமே நம் இளவரசியார்க்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லை. பெரிய சோம்பேறியைச் சந்திக்கும் பேறு பெற்றேன். என்றான் அமைச்சன். அவன் என்ன செய்தான்? என்று கேட்டான் அரசன்.

அந்தச் சோம்பேறியை வழியில் சந்தித்தேன். அரசே! அவனுடைய ஒரு கால் சேற்றிலும் மற்றொரு கால் சாலையிலும் இருந்தது. அப்படியே நின்று கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து, ஏன் இப்படி நிற்கிறாய்? என்று கேட்டேன். இரண்டு மாதமாக நான் இப்படித்தான் நின்று கொண்டிருக்கிறேன். சேற்றில் உள்ள காலை எடுக்க எனக்குச் சோம்பலாக உள்ளது, என்று பதில் தந்தான் அவன், என்றான் அமைச்சன்.

இளவரசிக்குப் பொருத்தமான பெரிய சோம்பேறி தான் அவன், என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் அரசன்.

குறுக்கிட்ட இரண்டாம் அமைச்சன், அரசே! நானும் ஒரு சோம்பேறியைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன், என்றான். உன் அனுபவங்களைச் சொல், என்றான் அரசன்.

அரசே! உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதற்காகப் பல மலைகளையும் ஆறுகளையும் கடந்து சென்றேன். ஓர் ஊரில் மிகப் பெரிய சோம்பேறியைக் கண்டேன். அவனுக்கு மிக நீண்ட தாடி இருந்தது. அந்தத் தாடி ஊர் முழுவதும் பரவிக் கிடந்தது- பார்ப்பதற்கு மேகக் கூட்டம் போல இருந்தது. இரண்டு மீசைகளும் நீண்டு இருந்தன. ஒரு மீசையில் குருவி ஒன்று கூடு கட்டி இருந்தது. இன்னொரு மீசையில் எறும்புப் புற்று வளர்ந்து இருந்தது. நான் அவனைப் பார்த்து, எதற்காக இவ்வளவு நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து இருக்கிறாய்? என்று கேட்டேன்.

சோம்பேறியான அவன் எனக்கு எந்தப் பதிலும் தரவில்லை. அவன் அருகில் முக சவரம் செய்யும் கத்தி துருப்பிடித்துக் கிடந்தது. அங்கிருந்தவர்கள் அவன் முக சவரம் செய்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றார்கள். நல்ல சோம்பேறிதான், என்ற அரசன், அவன் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறானா அல்லது அதற்கும் சோம்பலா? என்று கேட்டான். அவன் சில சமயங்களில் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறான். அது மட்டும் அல்ல. தன் மீசையில் அமர வரும் காக்கைகளை விரட்டுவதற்காக கூழாங்கற்களை அவற்றின் மேல் எறிகிறான், என்றான்.

மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, நீ பார்த்து வந்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்று கேட்டான், அரசன்.

அரசே! நானும் பல நாடுகளுக்குச் சென்றேன், ஓர் ஊரில் சோம்பேறி ஒருவனைக் கண்டேன். உங்களுக்கு மருமகனாக மிகவும் பொருத்தம் உடையவன். சோம்பல் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளாக அவன் வீட்டை விட்டு வெளியே சென்றது இல்லை. நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே எல்லோருக்கும் அவன் அறிவுரை வழங்குவான். நான் சென்றிருந்த சமயம் அவன் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. அவன் உடையிலும் தீப்பிடித்துக் கொண்டது. இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை அவன். வெளியே இருந்தவர்கள் எல்லோரும் கத்தினார்கள். எந்தப் பயனும் இல்லை. வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவனை அப்படியே வெளியே தூக்கி வந்து காப்பாற்றினார்கள், என்றான்.

உண்மையிலேயே இவன் பெரிய சோம்பேறிதான், என்ற அரசன் நான்காம் அமைச்சனைப் பார்த்தான்.

அரசே! நான் காடு மலைகளில் அலைந்தேன். முட்புதர்களில் சிக்கி என் உடைகள் கிழிந்து விட்டன. அதுவும் நல்லதற்குத்தான். அதனால்தான் அந்தச் சோம்பேறியைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்றான் அவன். அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான் அரசன். அரசே! அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் பதினைந்து ஆண்டுகளாகப்படுத்திருக்கிறான். தன் வாயிற்கு அருகே காரட் முள்ளங்கி ஏதேனும் முளையாதா என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவன் நெற்றியில் உள்ள சுருக்கத்தில் இரண்டு முள்ளங்கிச் செடிகள் முளைத்துள்ளன. அதைப் பிடுங்கிப் போடக்கூட அவன் தன் கை விரல்களைப் பயன்படுத்தவில்லை. மரத்திலிருந்து அவன் வாயிற்கு நேராக ஏதேனும் பழங்கள் விழுந்தால் உண்பான். பக்கத்தில் விழுந்தால் அதை எடுத்து உண்ண மாட்டான், என்றான் அவன். அந்த வாழ்க்கை அவனுக்குப் பிடித்து இருக்கிறதா? என்று கேட்டான் அரசன்.

அவனிடம் நீண்ட நேரம் பேசினேன். அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினான். தன் மூக்கிலோ அல்லது வாயிலோ பழ மரம் முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பழத்திற்காக நான் வாயைத் திறந்து கொண்டு படுத்திருக்க வேண்டாமே என்றான் அவன், என்று விளக்கமாகச் சொன்னான், அமைச்சன். நான் கேட்டதிலேயே அற்புதமான சோம்பேறி இவன். என் மகளுக்கு ஏற்றவன், என்ற அரசன் ஐந்தாம் அமைச்சனைப் பார்த்தான்.

உடனே அந்த அமைச்சன், அரசே! நான் பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொன்னால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். இவனுடைய சோம்பேறித்தனத்திற்கு மற்ற நால்வரும் கால் தூசி பெற மாட்டார்கள், என்றான். நீ பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்றான் அரசன்.

அரசே! சோம்பேறியைத் தேடும் முயற்சியில் நான் பலமுறை உயிர் பிழைத்தேன். ஒரு நாட்டை அடைந்தேன். உலக மகா சோம்பேறி ஒருவனைக் கண்டேன், என்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அரசன், அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான். சிலர் அவன் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் அவன் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். சிலர் அவனைத் துறவி என்றார்கள். சிலர் அவனைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்தார்கள். நானே சென்று அவனை நேரில் பார்த்தேன். அவனைச் சுற்றிலும் புற்று வளர்ந்து இருந்தது. எழுபது ஆண்டுகளாக அவன் சிறிதுகூட அசையவில்லை. யார் பேச்சையும் கேட்க விரும்பாத அவன் காதுகளில் மெழுகை அடைத்துகூ கொண்டான். பேச வேண்டி வரும் என்பதால் தன் நாக்கை ஒரு பாறாங்கல்லில் கட்டி இருந்தான். எதையும் அவன் சாப்பிடுவது இல்லை. காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்கிறான். யாராவது உணவைக் கொண்டு வந்தால்கூட அதைக் கையில் வாங்க அவனுக்குச் சோம்பல். பத்தாண்டுகளுக்கு முன் அவன் தன் உதடுகளைச் சிறிது அசைத்தானாம் அதனால்தான் அவன் உயிரோடு இருப்பது மற்றவர்க்குத் தெரிந்ததாம், என்று நடந்ததைச் சொன்னான் அந்த அமைச்சன்.

வியப்பு அடைந்த அரசன், இப்படி ஒரு சோம்பேறியா? அவனே என் மருமகன். அவனுக்கும் இளவரசிக்கும் விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். ஒரு நல்ல நாளில் அந்தச் சோம்பேறிக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தது.

சிறுவர் கதைகள் – திறமையான குள்ளன்

ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள்.

ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

மனைவி அவனிடம், “நாம் எவ்வளவு காலம் துன்பப்படுவது? வயிறார உண்டு எத்தனை நாட்கள் ஆகிறது? நம் மகன்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம்” என்றாள்.

“நீ சொன்னபடியே செய்கிறேன். நாளை அவர்களுக்கு உணவு சமைத்து வை” என்றான் அவன்.

கடைசி மகனான குள்ளன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

விடிகாலையில் எல்லோருக்கும் முன் எழுந்தான் அவன். ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருந்த சிறுசிறு கூழாங்கற்களை எடுத்தான். சட்டைப் பை நிறைய அவற்றைப் போட்டுக் கொண்டான். வீடு திரும்பினான் அவன். தாயும் தந்தையும் அண்ணன்களும் அவனுக்காகக் காத்திருந்தனர்.

” ஏன் இவ்வளவு நேரம்? அம்மாவிடம் உன் பங்கு அடையை வாங்கிக் கொள். காட்டில் சாப்பிடலாம். இன்று நாம் எல்லோரும் விறகு வெட்டச் செல்கிறோம்” என்றான் விறகுவெட்டி.

எல்லோரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள். கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் பையிலிருந்த கூழாங்கல்லை வழி எங்கும் போட்டுக் கொண்டே வந்தான்.

நீண்ட தூரம் நடந்து காட்டின் நடுப்பகுதிக்கு வந்தார்கள்.

“இனி என்ன முயன்றாலும் தன் மகன்களால் வீட்டை அடைய முடியாது. அவர்களை ஏமாற்றி விட்டுப் புறப்பட வேண்டும்” என்று நினைத்தான் அவன்.

” நீங்கள் விளையாடிக் கொண்டிருங்கள். நான் சிறிது தூரம் சென்று நல்ல மரமாகப் பார்த்து வெட்டுகிறேன். இருட்டியதும் வீட்டிற்குப் புறப்படலாம்” என்றான் அவன்.

அவர்களும் மகிழ்ச்சியாக விளையாடத் தொடங்கினார்கள்.

அருகில் இருந்த மரத்தில் ஒரு கட்டையைத் தொங்க விட்டான் அவன். காற்று அடிக்கும் போதெல்லாம் மரத்தில் அது மோதியது. விறகு வெட்டுவது போல ஓசை கேட்டது. மகன்களுக்கத் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான் அவன்.

அவர்கள் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் தொடங்கியது.

” தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்வோம்” என்றான் மூத்தவன்.

எல்லோரும் விறகு வெட்டும் ஓசை கேட்ட இடத்திற்கு வந்தனர். ” ஐயோ! அப்பாவைக் காணோமே! இந்தக் காட்டிலிருந்து எப்படி வீட்டுக்குச் செல்வது? கொடிய விலங்குகள் நம்மைக் கொன்று விடுமே! என்ன செய்வது?” என்று அலறினான் இரண்டாமவன்.

” கவலைப்படாதீர்கள். இன்னும் சிறிது நேரத்தில் நிலவு வெளிச்சம் தெரியும். அதன் பிறகு நான் வழி காட்டுகிறேன். நாம் அனைவரும் வீட்டை அடையலாம்” என்று ஆறுதல் சொன்னான் குள்ளன்.

நிலவு வெளிச்சம் பட்டப் பகல் போலக் காய்ந்தது. வழி எங்கும் போட்டு வந்த கூழாங்கல்லை அடையாளமாகக் கொண்டு நடந்தான் குள்ளன். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.

” வீட்டில் தன் மனைவியிடம், நம் குழந்தைகள் காட்டில் எப்படித் தவிப்பார்களோ?” என்றான் அவன்.

” எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா? நம் கண் எதிரில் ஏன் அவர்கள் துன்பப்பட வேண்டும்? அதனால் தான் அவர்களைக் காட்டில் விட்டுவிட்டு வரச் சொன்னேன். அவர்கள் எங்காவது நலமாக இருக்கட்டும் நான் உணவு சமைக்கிறேன். இருவரும் சாப்பிடலாம்” என்றாள் அவள்.

நள்ளிரவு நேரம், இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

கதவு தட்டும் ஓசை கேட்டது. ” இந்த நேரத்தில் யார்? கதவைத் திற” என்றான் அவன். கதவைத் திறந்தாள் அவள். தன் மகன்களைக் கண்ட அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சமைத்து வைத்திருந்த உணவை அவர்களுக்குப் பரிமாறினாள்.

சாப்பாடு முடிந்தது. நடந்து வந்த களைப்பால் அவர்கள் தூங்கத் தொடங்கினார்கள்.

விறகுவெட்டிக்கும் அவன் மனைவிக்கும் சாப்பிட உணவில்லை.

” நம் மகன்கள் வந்து விட்டார்களே. இப்பொழுது என்ன செய்வது?” என்று கேட்டான் அவன்.

” நிலவு வெளிச்சத்தில் வழி கண்டுபிடித்து வந்து விட்டார்கள். அமாவாசையன்று மீண்டும் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். இன்னும் அதிக தூரம் சென்று விட்டுவிட்டு வாருங்கள். அவர்களால் திரும்ப முடியாது” என்றாள் அவள்.

அமாவாசை வந்தது. விடிகாலையில் தன் மகன்களை எழுப்பினாள் அவள். ” காட்டிற்கு விறகு வெட்டச் செல்லும் அப்பாவுடன் நீங்களும் செல்லுங்கள். மதிய உணவிற்காக ஆளுக்கு இரண்டு அடை சுட்டு வைத்து இருக்கிறேன்” என்றாள் அவள்.

குள்ளனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்தது. கூழாங்கல்லைப் பொறுக்கி வர நேரமில்லை. என்ன செய்வது” என்று குழம்பினான் அவன்.

“நேரமாகி விட்டது. புறப்படுங்கள்” என்று அவசரப் படுத்தினான் விறகுவெட்டி.

அவர்களுடன் கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் கையிலிருந்த அடையைச் சிறுசிறு துண்டுகள் ஆக்கினான். வழி எங்கும் அதைப் போட்டுக் கொண்டே வந்தான்.

அவன் போட்டு வந்த அடைகளைக் குருவிகளும் எறும்புகளும் சாப்பிட்டு விட்டன. விறகுவெட்டி அவர்களை வழக்கம் போல விளையாடச் சொன்னான். கட்டையைத் தொங்க விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தான். இருட்டத் தொடங்கியது. எல்லோரும் தந்தையைக் காணாது திகைத்தனர்.

” நான் வழி காட்டுகிறேன். கவலைப்படாதீர்கள்” என்றான் குள்ளன். வழி தெரியாமல் அவன் அங்கும் இங்கும் அலைந்தான்.

பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் மேல் ஏறினான். தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிவதைப் பார்த்தான்.

கீழே இறங்கிய அவன், ” அண்ணன்களே! சிறிது தொலைவில் வெளிச்சம் தெரிகிறது. கண்டிப்பாக அங்கே வீடு இருக்க வேண்டும். நாம் அங்கே சென்று இன்றிரவு தங்குவோம்” என்றான்.

எல்லோரும் வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள் கண்களுக்குப் பெரிய வீடு தெரிந்தது. அது ஒரு அரக்கனின் வீடு. அரக்கனும் அவனுடைய ஏழு மகன்களும் வெளியே சென்றிருந்தார்கள். அரக்கனின் தாய் மட்டும் அப்பொழுது வீட்டில் இருந்தாள்.

குள்ளன் கதவைத் தட்டினான். அரக்கி கதவைத் திறந்தாள். ஏழு சிறுவர்களைப் பார்த்ததும் அவள் நாக்கில் எச்சில் ஊறியது. ” பாட்டி ! இந்தக் காட்டில் நாங்கள் வழி தவறி விட்டோம்” இன்றிரவு மட்டும் இங்கே தங்கிச் செல்கிறோம்” என்றான் குள்ளன்.

” இங்கே நீங்கள் மகிழ்ச்சியாகக் தங்கலாம், இன்னும் சிறிது நேரத்தில் என் மகனும் ஏழு பேரனும் வந்து விடுவார்கள். உங்களைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். அந்த அறை என் பேரன்கள் தூங்கும் அறை. அங்கே சென்று நிம்மதியாகத் தூங்குங்கள்” என்று இனிமையாகப் பேசினாள் கிழவி. அவர்களும் அந்த அறையில் சென்று படுத்தார்கள்.

சிறிது நேரத்தில் அரக்கனும் ஏழு மகன்களும் அங்கே வந்தனர், ஏழு பேரன்களின் தலையிலும் கிரீடத்தை அணிவித்தாள் அவள்.

” நீங்கள் சென்று அவர்கள் பக்கத்தில் படுத்துத் தூங்குங்கள்” என்றாள். அவர்களும் சென்று சிறுவர் பக்கத்தில் படுத்தனர்.

தன் மகனைப் பார்த்துக் கிழவி, ” இன்று நமக்கு நல்ல வேட்டை ஏழு சிறுவர்கள் வழி தவறி இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி நம் பேரன்கள் தங்கும் அறையில் தூங்க வைத்திருக்கிறேன்.

பெரிய அண்டாவில் கறிக் குழம்பு வைக்கிறேன். குழம்பு கொதி வந்ததும் நீ அந்த ஏழு பேரையும் தூக்கி வந்து அதில் போடு. அவர்கள் நன்றாக வெந்ததும் நாம் வயிறார உண்போம். மீதி உள்ளதைப் பொழுது விடிந்ததும் பேரன்கள் சாப்பிடட்டும்” என்றாள்.

” அம்மா! எனக்குப் பசி உயிர் போகிறது. சீக்கிரம் அண்டாவை அடுப்பில் வை. அந்த அறையில் என் மகன்களும் படுத்திருக்கிறார்களே? இருட்டில் எப்படி அந்தச் சிறுவர்களை மட்டும் தூக்கி வருவது? விழித்துக் கொண்டால் தப்பி விடுவார்களே?” என்று கேட்டான் அரக்கன்.

” நீ எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் அதற்காகத்தான் என் பேரன்களின் தலையில் மட்டும் கிரீடம் அணிந்து உள்ளேன்” என்றாள் அவள்.

குள்ளனுக்குத் திடீரென்று விழிப்பு வந்தது.

கிழவியின் ஏழு பேரன்களும் தலையில் கிரீடத்துடன் படுத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. “ஏன் இவர்கள் கிரீடத்துடன் தூங்க வேண்டும். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது” என்பதைப் புரிந்து கொண்டான் அவன். அவர்கள் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்தான், தன் அண்ணன்களின் தலையில் அவற்றை அணிவித்தான். தன் தலையிலும் கிரீடத்தை அணிந்து கொண்டான். என்ன நடக்கிறது என்பதை விழித்திருந்து பார்த்தான்.

சிறிது நேரத்தில் அரக்கன் உள்ளே நுழைந்தான். கிரீடம் அணிந்திராத சிறுவர்களை ஒவ்வொருவராகத் தூக்கிச் சென்றான். கொதிக்கும் குழம்பில் அவர்களைப் போட்டான்.

நடந்ததைப் பார்த்த குள்ளன் திகைத்தான். தன் அண்ணன்களை மெதுவாக எழுப்பிய அவன், ” அரக்கனின் வீட்டில் சிக்கிக் கொண்டோம். உடனே தப்பிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நம்மைக் கொன்று விடுவார்கள்” என்றான்.

இதைக் கேட்டு எல்லோரும் பயந்தனர். அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சமைத்த கறியை அரக்கனும் கிழவியும் சுவைத்துச் சாப்பிட்டார்கள். பிறகு இருவரும் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினார்கள்.

பொழுது விடிந்தது. அரக்கனை எழுப்பினாள் கிழவி. ” என் பேரன்களை அழைத்துவா. அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிடட்டும்” என்றாள்.

அறைக்குள் நுழைந்த அவன், ” அம்மா! இங்கு யாருமே இல்லையே” என்று அலறினான்.

அங்கு வந்த அவளுக்கு உண்மை புரிந்தது. ” ஐயோ அந்தச் சிறுவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். நம் குழந்தைகளைக் கொன்று நாமே தின்று இருக்கிறோம்” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். ” கொதிக்கும் குழும்பில் என் குழந்தைகளையா போட்டேன்? அவர்களையா சாப்பிட்டேன்? என்ன கொடுமை இது? இனி நான் என்ன செய்வேன்?” என்று சுவரில் மோதிக் கொண்டு அழுதான் அவன்.

இருவரும் நீண்ட நேரம் அழுதார்கள்.

ஒருவாறு மனம் தேறிய அரக்கன், ” என் குழந்தைகளைக் கொன்றவர்கள் அந்தச் சிறுவர்கள் தான். என்னிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது. எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பேன். கொன்று தின்று பழி தீர்ப்பேன்” என்று கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான்.

” என் மந்திரச் செருப்பைக் கொண்டு வா” என்று கத்தினான் அவன்.

கிழவியும் செருப்பைக் கொண்டு வந்தாள். அதைப் போட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன்.

” அரக்கன் தேடி வருவான். நம்மைப் பிடித்தால் கொன்று விடுவான். வேகமாக ஓடுவோம்” என்றான் குள்ளன். எல்லோரும் நீண்ட தூரம் வந்தனர்.

” என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை” என்றான் மூத்தவன்.

” அரக்கன் இனி நம்மைத் துரத்த முடியாது. எதற்கும் பாதுகாப்பாக இங்கிருக்கும் குகைக்குள் பதுங்கிக் கொள்வோம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது” என்றான் குள்ளன்.

எல்லோரும் பதுங்கிக் கொண்டனர். அரக்கனின் காலடி ஓசை அவர்களுக்கு கேட்டது. எல்லோரும் நடுங்கினார்கள். அங்கு வந்த அரக்கன் எல்லாத் திசைகளிலும் பார்த்தான். அவர்கள் பதுங்கி இருப்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லை.

” ஏ! மந்திரச் செருப்பே! இங்குதான் அவர்கள் இருப்பார்கள் என்று என்னை அழைத்து வந்தாயே! இங்கு அவர்களைக் காணோமே? நீயும் என்னை ஏமாற்றுகிறாயா?” என்று சொல்லிவிட்டு அங்கேயே படுத்தான். களைப்படைந்த அவன் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.

இதைப் பார்த்த குள்ளன், ” அரக்கன் தூங்குகிறான். அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டான். நீங்கள் சத்தம் போடாமல் இங்கேயே இருங்கள். மநதிரச் செருப்பை அணிந்து நான் அரக்கன் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கிருந்து ஏராளமான பொருள் கொண்டு வருகிறேன். பிறகு நாம் அனைவரும் நம் வீட்டிற்குச் செல்வோம்” என்றான்.

எல்லோரும், ” எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு நீ என்ன நினைக்கிறாயோ அப்படியே செய்” என்றார்கள்.

வெளியே வந்தான் குள்ளன். அரக்கனின் காலில் இருந்த செருப்பைக் கழற்றினான். அவற்றைத் தன் காலில் அணிந்து கொண்டான்.

“ஏ! மந்திரச் செருப்பே! நான் அரக்கனின் வீட்டை அடைய வேண்டும்” என்று சொல்லிவிட்டு நடந்தான். மந்திரச் செருப்பு அவனை அரக்கனின் வீட்டின் முன் நிறுத்தியது.

” பாட்டி! கதவைத் திற. உன் மகனுக்கு ஆபத்து” என்று கத்தினான் அவன்.

கதவைத் திறந்த கிழவி, ” என் மகனுக்கு என்ன?” என்று கேட்டாள்.

” உன் மகன் கொடிய திருடர்களிடம் சிக்கிக் கொண்டான். அவர்கள் அவனைக் கட்டி வைத்துத் துன்புறுத்துகிறார்கள் நிறைய பொருள் கொடுத்தால் உன் மகன் உயிர் பிழைப்பான். இல்லையேல் அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள்.

மந்திரச் செருப்பை அடையாளத்திற்கு என்னிடம் தந்தான். ” இதைக் காட்டினால் என் தாய் நிறைய பொருள் தருவார். வாங்கிக் கொண்டு ஓடி வா. அப்பொழுது தான் நான் உயிர் பிழைப்பேன்” என்று என்னை அனுப்பினார்” என்று பரபரப்புடன் சொன்னான் அவன்.

” ஐயோ! மகனே! உனக்கு ஆபத்தா? உன்னைவிட எனக்குப் பொருளா பெரிது?” என்று அலறினாள் அவள். பெரிய சாக்குப் பையில் பொற்காசுகளை நிரப்பி அவனிடம் தந்தாள்.

அந்தப் பையை வாங்கிய அவன், ” இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் மகன் கண்டிப்பாக வந்து சேருவார்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

மந்திரச் செருப்பின் உதவியால் அண்ணன்கள் இருந்த இடத்தை அடைந்தான் அவன். அரக்கன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான்.

” இனி இந்த அரக்கனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. மந்திரச் செருப்பை இழந்து விட்டான். அவன் தேடி வைத்த செல்வத்தையும் கொண்டு வந்து விட்டேன்.

எல்லோரும் என்னை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றான் குள்ளன். அண்ணன்கள் எல்லோரும் குள்ளனை நன்றாகப் பிடித்துக் கொண்டார்கள்.

” மந்திரச் செருப்பே! நாங்கள் எங்கள் வீட்டை அடைய வேண்டும்” என்றான் அவன். சிறிது நேரத்தில் எல்லோரும் வீட்டை அடைந்தார்கள்.

அவர்கள் தந்தையும் தாயும், ” மகன்களே! காட்டில் என்ன பாடுபடுகிறீர்களோ? வறுமையினால் தான் இந்தக் கொடுமையைச் செய்து விட்டோம்” என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

கதவு தட்டும் ஓசை கேட்டு அவர்கள் கதவைத் திறந்தார்கள். ஏழு மகன்களும் நிற்பதைக் கண்டு அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.

” அம்மா! இனி நமக்கு வறுமையே இல்லை. பல தலைமுறைக்குத் தேவையான பொற்காசுகளுடன் வந்து இருக்கிறோம்” என்றான் குள்ளன்.

சாக்கைப் பிரித்தான் விறகுவெட்டி. அதற்குள் ஏராளமான பொற்காசுகள் மின்னின. எதிர்பாராமல் கிடைத்த இந்த நல்வாழ்வை எண்ணி எல்லோரும் மகிழ்ந்தார்கள்.

தூக்கம் கலைந்து எழுந்தான் அரக்கன். தன் காலில் மந்திரச் செருப்பு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். எப்படியோ துன்பப்பட்டு தன் வீட்டை அடைந்தான் அவன்.

வாசலிலேயே காத்திருந்த அவன் தாய், ” மகனே! உன்னை விட்டு விட்டார்களா? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகளை அப்படியே கொடுத்து அனுப்பினேன்” என்றாள்.

” என்னம்மா சொல்கிறாய்? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகள் போய்விட்டனவா? என்ன நடந்தது?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அவன்.

நடந்ததை எல்லாம் சொன்னாள் அவள்.

” அம்மா! அந்தச் சிறுவர்கள் நம்மை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். நாமே நம் அருமைக் குழந்தைகளைக் கொன்று விட்டோம். என் மந்திரச் செருப்பை இழந்து விட்டேன். சேர்த்து வைத்த பொற்காசுகளும் போய்விட்டன. என்ன செய்வது?” என்று அழுதுகொண்டே கேட்டான் அவன்.

“மகனே! ஒரே ஒருநாள் அவர்கள் இங்கே இருந்தார்கள். நமக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டு விட்டது? இனி அவர்கள் வழிக்கே போகாமல் இருப்பது நமக்கு நல்லது” என்று அறிவுரை சொன்னாள் அவள்.

” நீ சொன்னபடியே நடக்கிறேன்” என்றான் அவன்.

பிறகென்ன, விறகுவெட்டி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.

சிறுவர் கதைகள் – எள்ளு போச்சு! எண்ணெய் வந்தது!

ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். உழுவதற்காக அவன் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது.

புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தான் அவன்.

அங்கிருந்த பெரிய மரம் ஒன்றைத் தேர்ந்து எடுத்தான். “நல்ல வைரம் பாய்ந்த மரம். இதில் கலப்பை செய்தால் நீண்ட காலம் உழைக்கும்” என்று சொல்லிக் கொண்டே கோடரியால் உதை வெட்டத் தொடங்கினான்.

அந்த மரத்தில் நிறைய பேய்கள் குடி இருந்தன. அந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு அவை பயந்து நடுங்கின.

மரத்தை விட்டுக் கீழே இறங்கிய எல்லாப் பேய்களும் அவன் காலில் விழுந்தன.

பேய்களைக் கண்ட அவனுக்கு அச்சத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று நடுங்கியபடியே இருந்தான்.

கிழப்பேய் ஒன்று, “ஐயா! இந்த மரத்தில் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எதற்காக இதை வெட்டுகிறீர்கள்? எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்” என்று கெஞ்சியது.

இதைக் கேட்டதும் அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டான்.

பேய்களைப் பார்த்து அதிகாரக் குரலில், “நிலத்தில் எள் விதைக்க வேண்டும் புதிய கலப்பை செய்வதற்காக இந்த மரத்தை வெட்டுகிறேன். நீங்கள் என் காலில் விழுந்ததால் பிழைத்தீர்கள். இல்லையேல் உங்களை எல்லாம் ஒழித்து இருப்பேன். என் வீட்டுத் தோட்டத்தில் பத்துப் பேய்களைக் கட்டி வைத்து இருக்கிறேன்” என்று கதை அளந்தான் அவன்.

“ஐயா! மரத்தை வெட்டாதீர்கள். நாங்கள் வேறு எங்கே போவோம்? எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்” என்று எல்லாப் பேய்களும் அவன் காலைப் பிடித்துக் கொண்டு அழுதன.

“கலப்பை இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள். மரத்தை வெட்டியே தீருவேன்” என்றான் அவன்.

கிழப்பேய் அவனைப் பார்த்து, “ஐயா! உங்கள் நிலத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு எள் விளைகிறது?” என்று கேட்டது.

“ஐம்பது மூட்டை எள்?” என்றான் அவன்.

“ஆண்டிற்கு நூறு மூட்டை எள் நாங்கள் தருகிறோம். இந்த மரத்தை வெட்டாதீர்கள்” என்று கெஞ்சியது அது.

உங்கள் மீது இரக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாமல் விடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அறுவடை நேரத்தில் நூறு மூட்டை எள் வந்தாக வேண்டும். வரத் தவறினால் இந்த மரத்தை வெட்டுவதோடு நிற்க மாட்டேன். உங்களையும் அழித்து விடுவேன்” என்றான் அவன்.

“எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நாங்கள் சொன்ன சொல் தவற மாட்டோம்” என்றது அந்தப் பேய்.

மகிழ்ச்சியுடன் அவனும் வீடு வந்து சேர்ந்தான்.

அறுவடைக் காலம் வந்தது. பல இடங்களில் விளைந்த எள்ளைப் பேய்கள் திருடின. எப்படியோ நூறு மூட்டை எள்ளைச் சேர்த்து அவனிடம் கொண்டு வந்தன.

பேய்களைப் பார்த்து அவன், “சொன்னபடியே எள் கொண்டு வந்து இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற முயன்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன். ஆண்டு தோறும் இப்படியே வர வேண்டும்” என்று மிரட்டி அவற்றை அனுப்பி வைத்தான்.

நடுங்கியபடியே பேய்கள் அங்கிருந்து சென்றன.

சில நாட்கள் கழிந்தன. புதுப்பேய் என்ற பெயருடைய பேய் தன் உறவினர்களைப் பார்க்க அங்கு வந்தது. எல்லாப் பேய்களும் இளைத்துத் துரும்பாக இருப்பதைக் கண்டது அது.

“சென்ற ஆண்டு உங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இன்றோ மெலிந்து சோகத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். என்ன நடந்தது? சொல்லுங்கள்” என்று கேட்டது அது.

நடந்தது அனைத்தையும் சொன்னது ஒரு பேய்.

“நூறு மூட்டை எள்ளைத் தேடி அலைவதிலேயே எங்கள் காலம் கழிகிறது” என்று எல்லாப் பேய்களும் வருத்தத்துடன் சொல்லின.

புதுப்பேயால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “நீங்கள் இவ்வளவு முட்டாள்களா? நாம் பேய்கள் அல்லவா? நமக்குத்தான் மனிதர்கள் பயப்பட வேண்டும். நாம் அவர்களுக்குப் பயப்படலாமா?” என்று கேட்டது.

“அவன் சாதாரண மனிதன் அல்ல. எத்தனையோ பெரிய பேய்களை வீட்டில் கட்டி வைத்து இருக்கிறான். எதற்கும் அஞ்சாத முரடன். அதனால்தான் நூறு மூட்டை எள் தர ஒப்புக் கொண்டோம்” என்றது ஒரு பேய்.

“போயும் போயும் ஒரு மனிதனுக்கா அஞ்சுகிறீர்கள்? வெட்கம்! வெட்கம்! இன்றே அவனைக் கொன்றுவிட்டுத் திரும்புகிறேன்” என்று புறப்பட்டது புதுப்பேய்.

“வேண்டாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ அவனிடம் மாட்டிக் கொண்டு துன்பப்படப் போகிறாய்” என்று எச்சரித்தன மற்ற பேய்கள்.

உழவனின் வீட்டிற்குச் சென்றது புதுப்பேய். வாய்ப்பை எதிர்பார்த்து மாட்டுத் தொழுவத்தில் பதுங்கி இருந்தது அது.

வெளியூரில் இருந்து வாங்கி வந்த பல மாடுகள் அங்கே கட்டப்பட்டு இருந்தன. புதுப்பேய் என்ற ஊரில் வாங்கிய மாடும் அவற்றுள் ஒன்று. அது முரட்டு மாடாக இருந்தது.

புதிய மாடுகளுக்கு அடையாளம் தெரிவதற்காக சூடு வைக்க நினைத்தான் அவன்.

தன் வேலைக்காரனைப் பார்த்து, “டேய்! அந்தப் புதுப்பேயை இழுத்து வந்து கட்டு. பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டால் பெரிய சூடு போட வேண்டும். வெளியூர் என்பதால் நம்மைப் பற்றித் தெரியாமல் ஆட்டம் போடுகிறது. சூடு போட்டவுடன் அதுவும் இங்குள்ளவை போல ஆகிவிடும். ஒழுங்காகப் பணிந்து நடக்கும்” என்று உரத்த குரலில் கத்தினான் அவன்.

பதுங்கி இருந்த புதுப்பேய் இதை கேட்டு நடுங்கியது. “ஐயோ! எல்லாப் பேய்களும் தடுத்தனவே! என் ஆணவத்தால் அவற்றை மீறி வந்தேனே! பெரிய மீசையுடன் இருக்கும் இவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே. சிறிதும் இரக்கம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். நாம் நன்றாக மாட்டிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. நமக்குப் பெரிய சூடு போடத்தான் போகிறான். என்ன செய்வது?” என்று குழம்பியது அது.

மாட்டைக் கட்டுவதற்காக உழவன் பெரிய கயிற்றுடன் வந்தான்.

அவன் கால்களில் விழுந்த புதுப்பேய், “ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் நான் இங்கே வந்து விட்டேன். எனக்குச் சூடு போட்டு விடாதீர்கள்” என்று கெஞ்சியது.

தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், “என் எதிரில் வர உனக்கு என்ன துணிச்சல்? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று கோபத்துடுன் கத்தினான்.

இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது அது, “எல்லாப் பேய்களும் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தன” என்று பொய் சொன்னது.

“எதற்காக அனுப்பினார்கள்? உண்மையைச் சொல். இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்” என்று இடிக்குரலில் முழங்கினான் அவன்.

“பேய்கள் உங்களுக்கு ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. நீங்கள் அவற்றை எண்ணெய் ஆக்குவதற்காக ஏன் துன்பப்பட வேண்டும்?” எள்ளுக்குப் பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாக அவை முடிவு எடுத்தன.

உங்களுக்கு எள் வேண்டுமா? எண்ணெய் வேண்டுமா? இதைத் தெரிந்து வருவதற்காக என்னை அனுப்பி வைத்தன. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்” என்று நடுங்கியபடியே கேட்டது அது.

“இனிமேல் எனக்கு எள் வேண்டாம். எண்ணெயாகவே தாருங்கள். ஏதேனும் தவறு நடக்குமானால் உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். ஓடு.” என்று விரட்டினான் அவன்.

எப்படியோ தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடியது அது. மூச்சு வாங்கக் காட்டை அடைந்தது.

அதன் நிலையைப் பார்த்த மற்ற பேய்களும் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது.

“என்ன புதுப்பேயே? வீரம் பேசிவிட்டுச் சென்றாயே? அவனைக் கொன்று விட்டாயா?” என்று கேலியாகக் கேட்டது ஒரு பேய்.

“உங்கள் பேச்சைக் கேட்காதது தப்புதான். முரடனான அவனிடம் நான் நன்றாகச் சிக்கிக் கொண்டேன். எனக்குப் பெரிய சூடு வைத்து இருப்பான். அதை இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது” என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி விட்டேன்? என்றது புதுப்பேய்.

“அவன் பெரிய ஆளாயிற்றே! அவனிடம் என்ன சொல்லித் தப்பினாய்?” என்று கேட்டது ஒரு கிழப் பேய்.

“நூறு மூட்டை எள்ளாகத் தருவதா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெயாகத் தருவதா? என்று கேட்டு வர நீங்கள் அனுப்பியதாகச் சொன்னேன். அவனும் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெயே தருமாறு கட்டளை இட்டான்” என்று நடந்ததைச் சொன்னது புதுப்பேய்.

“என்ன காரியம் செய்துவிட்டாய். நூறு மூட்டை எள்ளைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தோம் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாகச் சொல்லி விட்டு வந்திருக்கிறாய். அவ்வளவு எண்ணெயைச் சேர்ப்பதற்காக நாங்கள் தூக்கம் இல்லாமல் துன்பப்பட வேண்டும். நாங்கள் தடுத்தும் நீ கேட்கவில்லையே. இனி என்ன செய்வது” என்று வருத்தத்துடன் புலம்பின அங்கிருந்த பேய்கள்.

எல்லாப் பேய்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டன. ஆண்டுதோறும் உழவனுக்கு நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன.

“தன் அறிவுக்கூர்மை தன்னைக் காப்பாற்றியது. உழைக்காமலேயே வளமாக வாழும் வாய்ப்பும் வந்தது” என்று மகிழ்ந்தான் அவன்.

சிறுவர் கதைகள் – குருவி கொடுத்த விதை

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.

அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவன், ” ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்” என்றான்.

” என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்” என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோகத்துடன் வீடு திரும்பினான் அவன். தன் மனைவியிடம், ” நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி” என்று வருத்தத்துடன் கூறினான்.
அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது.

இதைப் பார்த்த அவன் மனைவி ” நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்” என்று கணவனிடம் சொன்னாள்.
” பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்” என்றான் அவன்.
கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.

திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.

அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.

அதை அன்போடு எடுத்தான் அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான்.
சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.

” இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?” என்றாள் மனைவி.
அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன்.
அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. ” இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.

மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது. ” இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது ” இதை சன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான் அவன்.
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன்.

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான்.
என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசனிக் காய் ஆனது.

மகிழ்ச்சி அடைந்த அவன், ” இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை” என்றான்.
” வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்” என்றாள் மனைவி.

அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக் கொண்டு வந்தான் அவன். கத்தியால் அதை வெட்டினான். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.

சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து வெட்டினான். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.

அதன் பிறகு அவனும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள்.
உழவன் சில நாள்களில் பெருஞ்செல்வனானதை அறிந்தார் பண்ணையார்.

அவனிடம் வந்த அவர், ” டேய்! முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்” என்று கேட்டார்.

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான்.

தன் மாளிகைக்கு வந்தார் அவர். எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அவரும் அதில் தங்கும் என்று எதிர்பார்த்தார்.
அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.

” பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார். மூன்று குஞ்சுகளை அடித்துக் கொன்றார். ஒன்றன் காலை உடைத்துக் கீழே எறிந்தார்.
பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்தார். வேளை தவறாமல் உணவு அளித்தார்.
கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது.

” மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட செல்வன் ஆவேன்” என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.

அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ” ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது.

எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார்.

மறுநாளே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை வெட்டினார்.
அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன.

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார்.
அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அவரையும் அந்த மாளிகையையும் ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது.
கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.

மூன்றாவது பூசனிக்காயை உடைக்க யாருமே முன்வரவில்லை. அதற்குள் பாம்பு, தேள், பூரான் போன்ற எண்ணற்றவை இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.

சிறுவர் கதைகள் – பாடாதே! செத்தேன்!

ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான்.
கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை.

மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான்.
கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான்.

நீ என்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு காசு கூலி, என்றான் செல்வன்.
வேலைக்காரனுக்குப் பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா! என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.

காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் எதிரில் ஒரு குள்ளன் வந்தான்.
அந்தக் குள்ளன் இரண்டடி உயரமே இருந்தான். அவனின் நீண்ட வெள்ளைத் தாடி தரையில் புரண்டது தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான். வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன்.
எதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன், ஐயா! நான் ஏழை, குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வேலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். என் மீது இரக்கப்பட்டு ஏதேனும் உதவி செய்யுங்கள், என்று கெஞ்சினான்.

உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது. இதை நீ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கிறது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்ட முடியும், என்று சொல்லி விட்டுத் தன் பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான்.

அதை பெற்றுக் கொண்ட குள்ளன், நீ நல்லவன் உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுகளை என்னிடம் தந்து உள்ளாய். என்னால் எதுவும் செய்ய முடியும். உன் மூன்று விருப்பங்களைச் சொல். எப்படிப் பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன், என்றான்.
சிந்தனையில் ஆழ்ந்த அவன், குறி வைத்தால் குறி தப்பவே கூடாது. அப்படிப்பட்ட வில்லும் அம்புகளும் தேவை. நான் புல்லாங்குழலை இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் அத்தகைய புல்லாங்குழல் தேவை. நான் எதைக் கேட்டாலும் மற்றவர்கள் அதை மறுக்கக் கூடாது. இதுவே என் மூன்று விருப்பங்கள், என்றான்.

அடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும் புல்லாங்குழலும் இருந்தன. அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன். உன் விருப்பங்கள் நிறைவேறும், போய் வா, என்றான்.
குள்ளனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். சிறிது தூரம் சென்றிருப்பான்.
அங்கே ஒரு திருடன் கையில் பொற்காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் ஒரு பறவை கத்திக் கொண்டிருந்தது.
இந்தப் பறவை மட்டும் என் கையில் கிடைத்தால் போதும். என் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன்? அதை அடித்து வீழ்த்த வில்லோ அம்புகளோ என்னிடம் இல்லையே, என்று சொல்லிக் கொண்டு இருந்தான் திருடன்.

இதைக் கேட்டான் அவன் தன் வில்லில் அம்பு பூட்டிப் பறவைக்குக் குறி வைத்தான். குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது.
திருடனே! அந்தப் பறவையை எடுத்துக் கொள், என்று கத்தினான் அவன்.
முள் நிறைந்த புதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காகக் குனிந்தான்.
உடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான்.
தன்னை அறியாமல் பாட்டிற்கு ஏற்ப ஆடத் தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன்.

இசைக்கு ஏற்ப திருடன் இங்கும் அங்கும் வேகமாக ஆடத் தொடங்கினான். சுற்றி இருந்த முட்கள் அவன் உடைகளைக் கிழித்தன. உடலுக்குள் தைத்து வேதனையை ஏற்படுத்தின.

திருடன் வலியைத் தாங்க முடியவில்லை. ஐயா! பாடுவதை நிறுத்துங்கள் என்று கெஞ்சினான்.
எத்தனை பேருக்கு நீ எவ்வளவு துன்பம் தந்து இருப்பாய்? யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா? கொடியவனான உனக்குத் தக்க தண்டனை இதுதான், என்ற அவன் மேலும் வேகமாக இசைக்கத் தொடங்கினான்.
முட்கள் மேலும் மேலும் திருடனின் உடலைக் கிழித்தன.

ஐயா! இனிமேல் என்னால் தாங்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். நல்லவனாகி விட்டேன். நான் திருடிச் சேர்த்த இந்த பொற்காசுகளை உங்களுக்குத் தந்து விடுகிறேன். பாடுவதை நிறுத்துங்கள், என்று பரிதாபமாகச் சொன்னான் திருடன்.

நீ திருந்தி விட்டதாகச் சொல்கிறாய். பெருந்தன்மையுடன் பொற்காசுகளை எனக்குத் தருவதாகச் சொல்கிறாய். பாட்டை நிறுத்துகிறேன், என்ற அவன் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தான்.
உடலெங்கும் குருதி சொட்டச் சொட்ட எழுந்தான் திருடன். சொன்னபடியே அவனிடம் பொற்காசுப் பையைத் தந்தான்.

அதைப் பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.
அவன் கண்ணுக்கு மறைந்ததும் திருடன், டேய்! அயோக்கியப் பயலே! என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா? நீ விரைவில் கொடுமையாக இறக்கப் போகிறாய், என்று திட்டினான். குறுக்கு வழியாகப் பக்கத்தில் இருந்த நகரத்தை அடைந்தான்.

நீதிபதியிடம் சென்ற திருடன், ஐயா! நான் உழைத்துத் தேடிய பொற்காசுகளைக் காட்டில் ஒரு திருடன் பறித்துக் கொண்டான். நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும், என்றான்.
அந்தத் திருடன் எப்படி இருப்பான்? என்று கேட்டார் நீதிபதி.

எப்படியும் இந்த நகரத்திற்கு அவன் வருவான். தோளில் வில், கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான். எளிதில் கண்டுபிடித்து விடலாம், என்றான் திருடன்.
வீரர்களை அழைத்தார் நீதிபதி. இவன் குறிப்பிடும் ஆள் கிடைத்தால் கைது செய்து இழுத்து வாருங்கள், என்று கட்டளை இட்டார்.

நடக்கப் போவதை அறியாத அவன் நகரத்திற்குள் நுழைந்தான். வீரர்கள் அவனைக் கைது செய்தனர். நீதிபதியின் முன்னர் அவனை இழுத்து வந்தனர்.
அவனைப் பார்த்ததும் திருடன், நீதிபதி அவர்களே! இவன் தான் திருடியவன், இவனிடம் என் பொற்காசுப் பை இருக்கலாம், என்று கத்தினான்.

வீரர்கள் அவனைச் சோதனை செய்தனர். பொற்காசுப் பை கிடைத்தது.
உடனே அவன், ஐயா! நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப் பொற்காசுகளை எனக்குத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள், என்றான்.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்க்கு யாராவது இவ்வளவு பொற்காசுகளைத் தருவார்களா? நீ பொய் சொல்கிறாய். நீ திருடன் தான். இவனைத் தூக்கில் போடுங்கள், என்று கட்டளை இட்டார் நீதிபதி.
அங்கிருந்த தூக்கு மேடைக்கு அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட
ஒரு காவலன் வந்தான்.

நீதிபதி அவர்களே! இறப்பதற்கு முன் என் கடைசி ஆசை. இந்தப் புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும்.. அனுமதி தாருங்கள், என்று கேட்டான் அவன்.
புல்லாங்குழலை அவனிடம் தருமாறு கட்டளை இட்டார் நீதிபதி.

அங்கிருந்த திருடன். ஐயோ! வேண்டாம். புல்லாங்குழலை அவனிடம் தராதீர்கள். எல்லோருக்கும் ஆபத்து என்று கத்தினான்.
சாகப் போகிறவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப் போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிபதி.

அப்படியானால் என்னை இந்தத் தூணோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். பிறகு அனுமதி கொடுங்கள், என்றான் திருடன்.
உடனே திருடன் தூணில் கட்டப்பட்டான்.
புல்லாங்குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கு ஏற்ப எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். காவலன் கையில் இருந்த தூக்குக் கயிறு நழுவிக் கீழே விழுந்தது.
அவன் இசைப்பதின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினார்கள். தூணில்
கட்டப்பட்டு இருந்த திருடனும் கை கால்களை ஆட்டினான்.
பாடுவதை நிறுத்து. உன்னை விடுதலை செய்கிறேன், என்று ஆடிக் கொண்டே கெஞ்சினார், நீதிபதி.
பாடுவதை நிறுத்தினான் அவன். எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

திருடனின் அருகே சென்ற அவன், உண்மையைச் சொல்.. பொற்காசுகளை நான் உன்னிடம் இருந்து திருடினேனா? அல்லது நீயாக எனக்குத் தந்தாயா? மீண்டும் இசைக்கத் தொடங்குவேன், என்றான்.
கட்டப்பட்டு இருந்ததால் மூச்சுத் திணறிய திருடன், நானாகத்தான் தந்தேன். நான்தான் திருடன். வீணாக இவன் மீது பொய்க் குற்றம் சுமத்தினேன், என்றான்.

உண்மையை அறிந்த நீதிபதி அந்தத் திருடனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார்.
எல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்குப் புறப்பட்டான்.

சிறுவர் கதைகள் – ஒருவர் மட்டும் போதாது

ஓர் ஊரில் கிழவன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு பூனையை அவர்கள் அன்பாக வளர்த்து வந்தார்கள். முதுமையான அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மகன் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் இருவரும் இறந்து விட்டனர்.
அந்தக் குழந்தையை பூனை வளர்க்கத் தொடங்கியது. எங்கிருந்தோ பறவையின் மெல்லிய இறகுகளைக் கொண்டு வந்தது. அதில் மெத்தை செய்தது. குழந்தையை அந்த மெத்தையில் படுக்க வைத்தது. குழந்தையை வேளை தவறாமல் உணவு தந்தது. எப்பொழுதும் மெத்தையிலேயே அந்தக் குழந்தை இருந்ததால் அவனை இறகு இளவரசன் என்று அழைத்தது.

ஆண்டுகள் ஓடின, குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆனான்.
கட்டழகு வாய்ந்த அவனைக் கண்டு பூனை மகிழ்ந்தது. இறகு இளவரசனே! உனக்குத் திருமணம் செய்ய எண்ணியுள்ளேன், என்றது அது.

எனக்கு யாரைப் பெண் கேட்பாய்? என்று கேட்டான் அவன்.
இந்த நாட்டு அரசனிடம் செல்வேன். இளவரசியை உனக்காகப் பெண் கேட்பேன்.

ஏழையாகிய எனக்கு இளவரசி மனைவியா? நடக்கக் கூடிய செயலா இது? கனவு காண்கிறாயா?
உனக்கு ஏற்றவள் இளவரசிதான். நான் முடிவு செய்து விட்டேன். எப்படியும் இந்தத் திருமணத்தை முடிப்பேன். பொறுத்திருந்து பார். உனக்குப் பெண் கேட்டு நாளையே நான் அரசனிடம் செல்கிறேன், என்றது பூனை.
மறுநாள் விடிகாலையில் எழுந்தது. அரசனைக் காண்பதற்காகப் புறப்பட்டது. காட்டு வழியே சென்று கொண்டிருந்த அதன் எதிரில் ஒரு முயல் வந்தது.

முயலைப் பார்த்துப் பயந்து போன பூனை ஓட்டம் பிடித்தது. பூனையைப் பார்த்துப் பயந்து முயலும் ஓட்டம் பிடித்தது.
பக்கத்தில் இருந்த குன்றைச் சுற்றி வந்த இரண்டும் சந்தித்தன.

பூனையே! எங்கே போகிறாய்? என்று கேட்டது முயல்.
நான் அரசனிடம் செல்கிறேன். ஊரில் யாரும் என்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்கிறார்கள். என்னை எப்பொழுதும் துரத்துகிறார்கள். நான் பயந்து கொண்டே வாழ்கிறேன். இவர்கள் செயல் குறித்து அரசனிடம் குறை சொல்லப் போகிறேன். நீதி தவறாத அரசன் எனக்கு நல்லது செய்வான், என்று இனிமையாகச் சொன்னது பூனை.
கண்களில் கண்ணீர் வழிய, பூனையே! உன் நிலை பரவாயில்லை. அரசனின் வீரர்கள் வேட்டை நாய்களுடன் இங்கே வருகிறார்கள். எங்களை விரட்டுகிறார்கள். பொறி வைத்துப் பிடிக்கிறார்கள். சிறிது நேரம் கூட நாங்கள் நிம்மதியாகத் தங்க இங்கே இடம் இல்லை. நானும் உன்னுடன் வருகிறேன். அரசனிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லி எங்களைக் காப்பாற்றும்படி வேண்டுகிறேன், என்றது முயல்.

நீ அரசனிடம் செல். ஆனால் உன் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
ஏன்?

எங்கள் ஊரில் நான் ஒரே ஒரு பூனைதான் இருக்கிறேன். நான் சொல்வதை அரசர் கேட்டு உதவி செய்வார். ஆனால் உன்னைப் பார்த்ததும் அவர், காட்டில் நூற்றுக்கணக்கான முயல்கள் உள்ளன. நீ மட்டும் தான் குறை சொல்ல வந்திருக்கிறாய், என்பார். குறைந்தது ஐம்பது முயல்களுடன் நீ அரசனிடம் சென்றால் அவர் கண்டிப்பாக உதவி செய்வார்.

பூனையே! இங்கேயே நில். நான் ஐம்பது முயல்களுடன் வருகிறேன், என்று அருகில் இருந்த புதருக்குள் மறைந்தது முயல்.

சிறிது நேரத்தில் ஐம்பது முயல்களுடன் வந்தது அது.
பூனை முன்னால் சென்றது. எல்லா முயல்களும் அதைப் பின் தொடர்ந்தன.
விந்தையான இந்த ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது.

இதைப் பார்த்த மக்கள், பூனை தலைமை தாங்கி ஐம்பது முயல்களை அழைத்துச் செல்கிறதே, என்று வியப்புடன் பேசிக் கொண்டார்கள்.

கடைசியாக அந்த ஊர்வலம் அரசனின் அரண்மனையை அடைந்தது.
அங்கு காவலுக்கு இருந்த வீரனைப் பார்த்து, நாங்கள் அரசனைப் பார்க்க வேண்டும், என்றது பூனை.
அரண்மனை வாயிலில் எல்லோரும் தங்க வைக்கப்பட்டனர்.

பூனையை மட்டும் அரசனிடம் அழைத்துச் சென்றான் ஒரு வீரன்.

அரசனைப் பணிவாக வணங்கிய பூனை, இறகு இளவரசன் ஐம்பது முயல்களை உங்களுக்குப் பரிசாக அனுப்பி உள்ளார். இளவரசியாரை மணந்து கொள்ள அவர் விரும்புகிறார். இளவரசியாருக்கு அவரை விடப் பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது, என்றது.

வாயிலுக்கு வந்த அரசன் ஐம்பது முயல்களையும் பார்த்து வியப்பு அடைந்தான்.

இறகு இளவரசன் மிகவும் திறமையான வேட்டைக் காரனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது முயல்களை எப்படிப் பிடிக்க முடியும் என்று நினைத்தான். என் வீரர்களும் முயல் வேட்டைக்குச் செல்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று முயல்களுக்கு மேல் அவர்கள் பிடித்து வருவது இல்லை. உங்கள் இளவரசன் ஐம்பது முயல்களை அதுவும் உயிருடன் பிடித்து இருக்கிறான், என்றான் அவன்.

அரசே! இந்த முயல்களை எல்லாம் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்ட வேண்டும். அவற்றைக் காவல் காக்கின்றவர் யாரும் இல்லை, என்றது பூனை.

சமையல்காரனை அழைத்த அரசன், இனி நம் அரண்மனையில் நல்ல விருந்துதான். ஐம்பது முயல்களையும் அடைத்து வைக்க ஒரு அறையைத் திறந்து விடு, என்று கட்டளை இட்டான்.

முயல்களிடம் வந்தது பூனை. நாம் அனைவரும் தங்குவதற்கு அரசர் ஒரு அறையைத் தந்து உள்ளார். நமக்கு நல்ல சாப்பாடு அங்கே உள்ளது. அரசர் பிறகு வந்து நம் குறையைக் கேட்டு உதவி செய்வார், என்றது.

சமையல்காரன் ஓர் அறையைத் திறந்து விட்டான். எல்லா முயல்களும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டுப் போட்டான். வெளியே காவலுக்கு வீரர்கள் நின்றனர்.

பூனை தங்களை ஏமாற்றி விட்டதை முயல்கள் உணர்ந்தன. பாவம் அவை என்ன செய்யும்? தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி அவை அழுதன.

பூனைக்கு அரசன் சிறந்த விருந்து அளித்தான்.
இறகு இளவரசனைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியது அது.
இளவரசரை வந்து என்னைச் சந்திக்கச் சொல், என்றான் அரசன்.

அரசே! எங்கள் இளவரசர் தங்களைச் சந்திக்கக் கட்டாயம் வருவார். ஆனால் அவருக்கு இப்பொழுது ஏராளமான வேலைகள் உள்ளன, என்றது பூனை.

விருந்து முடிந்தது. அரசன் நிறைய பரிசுகளைப் பூனைக்குத் தந்தான்.
அரசனிடம் விடை பெற்ற பூனை மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்கு வந்தது.

இளைஞனே! உனக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன், என்றது அது.
யாருடன்? என்று மீண்டும் கேட்டான் அவன்.
இளவரசிதான் மணமகள், என்றது அது.

ஒரு வாரம் சென்றது. மீண்டும் அது அரசனைக் காணக் காட்டு வழியே சென்றது. எதிரில் வந்த நரியை நேருக்கு நேர் பார்த்தது அது. இரண்டும் எதிர் எதிர் திசையில் ஓடின. மலைக்குப் பின்னால் இரண்டும் மீண்டும் சந்தித்தன.
பூனையே! எங்கே செல்கிறாய்?
அரசனிடம் என் நிலையை எடுத்துச் சொல்ல?
உனக்கு என்ன குறை?

ஊரில் எல்லோரும் என்னை அடித்து விரட்டுகிறார்கள். சரியாக சாப்பாடு போடுவது இல்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. நீதி கேட்டு அரசரிடம் செல்கிறேன்.

நரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இப்பொழுது, என்னால் இந்தக் காட்டில் இருக்கவே முடியவில்லை. வேட்டைக்காரர்கள் நாய்களுடன் வந்து எங்களை விரட்டுகிறார்கள். குழிக்குள் மறைந்தாலும் புகை போட்டு எங்களை வெளியே வரவழைக்கிறார்கள். அவர்களுடைய அம்புகளால் நாங்கள் பலர் சாகிறோம். உன்னுடன் நானும் வந்து அரசரிடம் நீதி கேட்கிறேன். என்னையும் அழைத்துச் செல், என்றது.

நரியாரே! நீர் தனியாக வருவது நல்லது அல்ல. எங்கள் ஊரில் நான் ஒருவன்தான் பூனை. அதனால் நான் சொல்வதை அரசர் கேட்பார். நீர் மட்டும் தனியே வந்து குறை சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். காட்டில் ஏராளமான நரிகள் உள்ளனவே. ஏன் அவை வந்து குறை சொல்லவில்லை! என்று கேட்பார். ஐம்பது நரிகள் ஒன்றாக வந்தால் அரசர் நீங்கள் சொல்வதை நம்புவார், என்றது.

சிறிது நேரம் காத்திரு, என்ற நரி அங்கும் இங்கும் ஓடியது. ஐம்பது நரிகளுடன் அங்கு வந்தது.
அரண்மனைக்குச் சென்றதும் யார் எப்படிப் பேச வேண்டும் என்று அவற்றிடம் விளக்கிச் சொன்னது பூனை.
நீ சொல்வது போலவே நாங்கள் நடந்து கொள்வோம், என்றது நரிகள்.

பூனை முன்னால் சென்றது. எல்லா நரிகளும் அதைப் பின் தொடர்ந்தன.
அவற்றின் ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது.

இதைப் பார்த்த மக்கள், என்ன வேடிக்கையாக இருக்கிறது. போன வாரம் தான் இந்த பூனை ஐம்பது முயல்களுடன் ஊர்வலம் போனது. இப்பொழுது ஐம்பது நரிகளுடன் ஊர்வலம் போகிறது, என்று பேசிக் கொண்டார்கள்.
ஊர்வலம் அரண்மனையை அடைந்தது. காவலுக்கு இருந்த வீரர்கள் பூனையை அரசனிடம் அழைத்துச் சென்றார்கள்.
பணிவாக வணங்கிய பூனை, அரசர் பெருமானே! இறகு இளவரசர் தங்களுக்கு அன்பளிப்பாக ஐம்பது நரிகளை அனுப்பி வைத்துள்ளார். இளவரசியாரை மணக்க விரும்புகிறார், என்றது.

வேலைக்காரர்களை அழைதூத அரசன், நரிகளை ஒரு அறையில் அடைத்து வையுங்கள். எவையும் தப்பிச் செல்லக் கூடாது. பூனைக்கு நல்ல விருந்து தர வேண்டும். அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள், என்று கட்டளை இட்டான்.
நரிகளை அரண்மனைக்குள் அழைத்து வந்தது பூனை.

அங்கே ஒரு அறையில் முயல்களைக் கொன்று தோல் உரித்துக் கொண்டிருந்தார்கள் வேலைக்காரர்கள். முயல்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தன.
பெருங் கூச்சலையும் அலறலையும் கேட்ட நரிகள், அங்கே என்ன சத்தம்?, என்று பூனையைக் கேட்டன.
ஏழு நாட்களுக்கு முன் இங்கே சில முயல்கள் வந்தன. தங்கள் குறையை அரசரிடம் தெரிவித்தன. கவனமாகக் கேட்ட அவர் அவற்றிற்கு நீதி வழங்கினார். அது மட்டும் அல்ல. பெரிய விருந்திற்கும் ஏற்பாடு செய்தார். விருந்தில் முயல்கள் ஏராளமான மதுரைக் குடித்தன. மகிழ்ச்சியால் தலையே வெடித்து விடுவது போல அவை கூச்சல் போடுகின்றன. அந்த சத்தம் தான் இது, என்றது பூனை.

முயல்கள் இருக்கும் அறையில் எங்களைத் தங்க வைக்க வேண்டாம். அவை எப்பொழுதும் குடித்து விட்டுச் சண்டை போடும் இயல்புடையவை. எங்களையும் கெடுத்து விடும். வேறு அறையில் தங்க வையுங்கள், என்றன நரிகள்.
வேலைக்காரன் பக்கத்து அறையைத் திறந்து விட்டான். எல்லா நரிகளும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டு போட்டான்.

தாங்கள் தவறை நரிகள் உணர்ந்தன. தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி வருந்தின.
விருந்திற்கு வந்த பூனையை அரசன் வரவேற்றார். விதவிதமான உணவு வகைகள் மேசையில் பரிமாறப்பட்டு இருந்தன.

உங்கள் இறகு இளவரசன் மிகச் சிறந்த வேட்டைக்காரனாக இருக்க வேண்டும். ஆற்றல் வாய்ந்தவனாகவும் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது நரிகளை உயிருடன் பிடிக்க முடியுமா?
என்னுடைய வேட்டைக்காரர்களும் நரி வேட்டைக்குச் செல்கிறார்கள் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள். சில சமயம் ஒன்று அல்லது இரண்டு நரியைக் கொன்று எடுத்து வருவார்கள். அதன் மேல் தோல் எதற்கும் பயன்படாத வண்ணம் கிழிந்து வீணாகி இருக்கும், என்றான் அரசன்.
அரசே! எங்கள் இளவரசர் வீரம் உள்ளவர். வலிமை வாய்ந்தவர். இந்த உலகத்திலேயே அவரைப் போன்ற வீரம் யாரும் இல்லை. என்று புகழ்ந்தது பூனை.
அவர் எங்கள் அரண்மனைக்கு வந்தால் இந்த அரண்மனையே பெருமை பெறும். இளவரசிக்கு அவர் பொருத்தமானவர். நான் அவரைச் சந்தித்தால் திருமணம் பற்றிப் பேசலாம், என்றான் அரசன்.
கண்டிப்பாக அவரை அழைத்து வருகிறேன். மேன்மை தங்கிய தங்களைச் சந்திப்பதில் அவருக்கு மகிழ்ச்சி, என்றது பூனை.

விலை உயர்ந்த ஏராளமான பரிசுப் பொருள்களைப் பூனைக்கு வழங்கினார் அரசர்.
வீட்டிற்கு வந்தது அது. தூங்கிக் கொண்டிருந்த இளைஞனை எழுப்பியது.
உனக்கும் இளவரசிக்கும் திருமணம் உறுதியாகி விட்டது. நான் சொல்கிறபடி நட, என்றது அது.
மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். பூனை வழிகாட்டிக் கொண்டே நடந்தது. இருவரும் நெடுந்தூரம் நடந்தார்கள்.
வழியில் பாலம் ஒன்று வந்தது.

பாலத்திற்கு அடியில் நீ ஒளிந்து கொள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன், என்றது பூனை.
அவனும் ஒளிந்து கொண்டான்.
ஊருக்குள் சென்ற பூனை கவசங்கள், தொப்பிகள் பலவற்றை வாங்கியது. எல்லாவற்றையும் ஆற்றில் போட்டது.
இறகு இளவரசனே! இங்கேயே இரு. நான் அரசனுடன் இங்கே வருகிறேன். எங்களைப் பார்த்த உடன் வெளியே வந்து விடாதே. நான் நல்ல ஆடைகளை உன்னிடம் தருகிறேன். அதன் பிறகு வெளியே வரலாம், என்று சொன்னது.
அப்படியே செய்கிறேன், என்றான் அவன்.

அரண்மனைக்கு வேகமாக ஓடியது பூனை.
அதைப் பார்த்து அரசன், இப்பொழுதும் இறகு இளவரசன் வரவில்லையா? என்று ஆர்வத்துடன் கேட்டான்.
அரசே! இளவரசர் தங்களைக் காணப் பெரும் படையுடன் வந்தார். வழியில் ஆற்றைக் கடக்கும்போது எல்லா வீரர்களும் மூழ்கி விட்டனர். அவர்களின் தலைக் கவசங்களும் தொப்பிகளும் மிதக்கின்றன. நான் எப்படியோ இளவரசரைக் காப்பாற்றி விட்டேன். அவர் கொண்டு வந்த விலை உயர்ந்த பொருள்கள் எல்லாம் ஆற்றில் போய் விட்டன. உடைகள் ஏதுமின்றிப் பாலத்தின் கீழ் இருக்கிறார். இப்படி ஒரு கொடுமை நிகழுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை, என்று பரபரப்புடன் சொன்னது அது.

இளவரசருக்கு இப்படி ஒரு கொடுமை என் நாட்டிலா நடந்திருக்க வேண்டும்? விலை உயர்ந்த ஆடைகளை இப்பொழுதே கொண்டு செல்லுங்கள். வீரர்கள் அவருக்குத் துணையாக அணிவகுத்து வரட்டும். நானும் பூனையுடன் வருகிறேன், என்றான் அரசன்.

வீரர்கள் சூழ அரசனும் பூனையும் அந்தப் பாலத்தை அடைந்தார்கள். ஆற்றில் நிறைய கவசங்களும் தொப்பிகளும் மிதந்து செல்வதைப் பார்த்தான் அரசன்.

விலை உயர்ந்த ஆடைகளை இளவரசனிடம் தந்தது பூனை. அவன் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
அரசன் அவனைச் சிறப்பாக வரவேற்றான். அழகான வண்டியில் அவனை அமரச் சொன்னான். கோலாகலத்துடன் இளவரசனின் ஊர்வலம் தொடங்கியது.
அரண்மனை வாயிலிலேயே அரசியும் இளவரசியும் காத்திருந்தனர்.
இளவரசனின் அழகைக் கண்டு இளவரசி மகிழ்ந்தாள்.
இருவருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.

சில நாட்கள் சென்றன. பூனையை அழைத்த அரசன், உங்கள் இளவரசனின் செல்வச் செழிப்பைக் காண நினைக்கிறேன். எப்பொழுது உங்கள் நாட்டிற்குச் செல்லலாம்? நான் பெரிய படை சூழ வருகிறேன், என்றான்.
எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம், என்றது பூனை.
அடுத்த வாரம் புறப்படுவோம், என்றான் அரசன்.
என்ன செய்யலாம் என்று சிந்தித்தது பூனை.

சில அரக்கர்களுக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்களும் அரண்மனைகளும் இருப்பது அதன் நினைவுக்கு வந்தது.
எப்படியாவது அவற்றை இளவரசனுக்கு சொந்தமானது என்று சொல்லி அரசனை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது அது.

இளவரசன் தேரில் அமர்ந்தான். அரசனும் அருகில் அமர்ந்தான். பெரும்படை சூழ ஆரவாரத்துடன் புறப்பட்டனர்.
பூனை வழிகாட்டிக் கொண்டே முன்னால் சென்றது.
அங்கே நிலத்தில் நிறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் வந்த பூனை. இன்னும் சிறிது நேரத்தில் பெரும்படையுடன் அரசர் ஒருவர் இங்கே வருவார். இந்த நிலம் யாருடையது என்று உங்களைக் கேட்பார்? நீங்கள் இந்த நிலங்கள் எல்லாம் இறகு இளவரசர் உடையது என்று சொல்ல வேண்டும். இதைக் கேட்டால் அரசர் மகிழ்ச்சியுடன் உங்களுக்குப் பரிசு வழங்குவான். மாறாக அரக்கன் உடையது என்று உண்மையைச் சொன்னால் உங்களை எல்லாம் கொன்று விடுவார், என்றது.

அரசன் அங்கு வந்தான். உழவு வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, இந்த நிலம் யாருடையது? என்று கேட்டான்.
எல்லோரும் இறகு இளவரசர் உடையது, என்று சொன்னார்கள்.
மகிழ்ந்த அரசன் அவர்களுக்குப் பொற்காசுகளை வாரி வழங்கினான்.
வழியில் ஏராளமான ஆடுகளை நிறைய பேர் மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது பூனை.
அவர்களிடமும் சென்று அதையே சொன்னது.
அரசன் வந்து கேட்ட போது, எல்லா மந்தையும் இறகு இளவரசர் உடையது, என்று அவர்கள் சொன்னார்கள்.
தன்னைவிட இளவரசனிடம் அதிக செல்வம் இருக்கிறது என்று மகிழ்ந்தான் அரசன்.
இனி இளவரசனின் அரண்மனைக்குச் செல்லலாம், என்றான் அரசன்.
அரக்கர்கள் தங்கி இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தது பூனை.
அவர்களைப் பார்த்து, உங்களுக்கு ஆபத்து வந்து விட்டது. உங்களைக் கொல்வதற்காக அரசர் பெரும் படையுடன் வருகிறார், என்றது.
வெளியே பார்த்த அவர்களுக்குப் பெரும்படை வருவது தெரிந்தது. பூனையே! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும், என்று கெஞ்சினார்கள்.
தோட்டத்தில் உள்ள வைக்கோல் போருக்குள் நீங்கள் எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள், என்றது அது.
அவர்களும் அதற்குள் ஒளிந்து கொண்டார்கள். வைக்கோல் போருக்குத் தீ வைத்தது பூனை. தீயில் வெந்து எல்லா அரக்கர்களும் இறந்து போனார்கள்.
ஊர்வலம் அரக்கர்களின் அரண்மனையை அடைந்தது. எல்லோரையும் வரவேற்றது பூனை.
இளவரசரின் அரண்மனை மிக அழகாக உள்ளது, என்றான் அரசன்.
இளவரசனிடம் தனியே நடந்ததை எல்லாம் சொன்னது பூனை.
மகிழ்ச்சி அடைந்தான் அவன்.

இளவரசன் இளவரசியுடன் நீண்ட காலம் அந்த அரண்மனையில் வாழ்ந்தான். பூனை அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.

பரமார்த்த குரு கதைகள் – கிருஷ்ணா! புடவை கொடு!

பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர்.

அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள்.

“அதோ பாருங்கள் குருதேவா! கிருஷ்ண பரமாத்மான வருகிறார்!” என்று குதித்தான் மட்டி.

“ஆமாம் குருவே! கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்!” என்றான் மடையன்.

பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்! உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார்!

“சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்” என்றார் பரமார்த்தர்.

“புதுத் துணிகளைக் கிழிப்பதா?” ஏன் குருவே?” என்று கேட்டான், முடூடாள்.

“புத்தி கெட்டவனே! ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி! அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்!” என ஆணையிட்டார் பரமார்த்த குரு.

சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்!

உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார்!

“பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா! அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்!” என்று வேண்டினார் பரமார்த்தர்.

“குருவே! நமக்கு எதற்குப் புடவை?” என்று கேட்டான் மண்டு.

“அதானே?” நமக்கு வேட்டி அல்லவா தேவை!” என்றான் மூடன்.

“கார்மேகக் கண்ணா!” இந்தா, பொரி! உன் இஷ்டம் போல் கொரி!” என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான், மட்டி.

கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. “நான் கடவுள் இல்லை! எனக்கு நேரமாகிறது; என்னைப் போகவிடுங்கள்” என்றார்.

“கண்ண பெருமானே! எங்களை ஏமாற்ற நினைக்காதிர்கள்” எனக் கெஞ்சினான், முட்டாள்.

“கண்ணா! அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்தர் தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?” என்றார் குரு.

“கோபாலா கோவிந்தா! தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு” என்றான் மடையன்.

“பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்” என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர்.

“பொரி கொடுத்ததற்கு நன்றி! நான் போய் வருகிறேன்” என்று நகரத் தொடங்கினார் நடிகர்.

“என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்” என்றார் பரமார்த்தர்.

“வரமா?” அதென்ன?”

“ஆமாம்! குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்!” என்றான்.

“எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்” என்றான் முட்டாள்.

“வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்!” என்றான் மடையன்.

“சரி! நீங்கள் நினைத்தபடியே நடக்க்கடவது!” என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர்.

“ஆஹா! பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா! உன் கருணையே கருணை” என்றபடி குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.

“ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார்.”

“அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம்! அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்!” என்றார் பரமார்த்தர்.

“குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்‘ம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்! அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது!” என்றான் மட்டி.

“எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்” என்றான் மடையன்.

போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், “குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு! இதையே விலைக்கு வாங்கி விடலாம்!” என்றான் மடையன்.

பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, “இந்தப் பல்லக்கு என்ன விலை?” என்று விசாரித்தான்.

“இது பல்லக்கு இல்லை” என்றான் பாடை கட்டியவன்.

“நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! இது பல்லக்கேதான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்” என்றான் மடையன்.

சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், “நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான், அவன்.

பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார்.

இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர்.

சிறிது தூரம் வந்ததும், “ஒரே தாகமாக இருக்கிறது” என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள்.

ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். “என்ன? யாரையுமே காணோம்?” என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது.

திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.

மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. “லொள், வள்” என்று குரைத்தது.

அவ்வளவுதான்! பாடையைத் “தொப்” என்று கீழே போட்ட சீடர்கள், “ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே!” என அலறினார்கள்.

“அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்!” என்றான் முட்டாள்.

“நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே!” என்று துக்கப்பட்டான் மண்டு.

அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், “புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே!” எனத் திட்டினார்.

“குருநாதா!” அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்! அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ!” என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள்.

பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்!.

பரமார்த்த குரு கதைகள் – கால் முளைத்த மீன்கள்

கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டிக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தைக் குருவிடம் தெரிவித்தான்.

அதைக் கேட்ட மடையன், “குருவே! பகலில் போனால், பெரிய பெரிய அலைகள் நம்மைச் சாகடித்து விடும். அதனால் ராத்திரியில் தான் போக வேண்டும்” என்றான்.

“ஆமாம் குருவே! அப்போது தான் கடல் தூங்கிக் கொண்டு இருக்கும்!” என்றான், மண்டு

“ஒரே இருட்டாக இருக்குமே? என்ன செய்வது?” எனக் கேட்டான் மூடன்

“என் கையில் தான் கொள்ளிக்கட்டை இருக்கிறதே!” என்றான், முட்டாள்.

கடல் என்றதுமே பரமார்த்தருக்குப் பயமாக இருந்தது. இருந்தாலும், சீடர்கள் தன்னைக் கோழை என்று நினைத்து விடக்கூடாது என்பதால் சம்மதம் தெரிவித்தார்.

சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆளுக்கு ஒரு தூண்டில் தயார் செய்தனர்.

இரவு வந்தது. குருவும் சீடர்களும் கொள்ளிக்கட்டை வெளிச்சத்தில் மீன் பிடிக்கப் புறப்பட்டார்கள்.

கடற்கரை ஓரத்தில் படகு ஒன்று இருந்தது. அதில் பரமார்த்தரும், அவரது ஐந்து சீடர்களும் ஏறிக் கொண்டனர். மட்டியும், மடையனும் கண்டப துடுப்புப் போட்டனர்.

மூடன் தூண்டிலைப் போட்டான். அவன் போட்ட தூண்டிலில் தவளை ஒன்று மாட்டியது.

அதைக் கண்ட சீடர்கள், “இதென்ன? விசித்திரமாக இருக்கிறதே!” என்று கேட்டனர்.

அது தவளை என்பதை மறந்த பரமார்த்தர் “இதுவும் ஒரு வகை மீன்தான் அதிகமாக தின்று கொழுத்து விட்டால் இப்படிக் கால்கள் முளைத்து விடும்” என்று விளக்கம் கூறினார்.

“அப்படியானால் கால் முளைத்த மீன்களைக் கட்டிப் போட்டு, வீட்டிலேயே வளர்க்கலாம்!” என்றான் மட்டி

அதற்குப் பிறகு, மண்டு போட்ட தூண்டிலில் ஒரு சிறிய மீன் மட்டுமே மாட்டியது.

“குருநாதா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. படகுக்கு வெளியே நிறைய மீன்கள் இருந்தாலும் கொஞ்சம் தான் நமக்குக் கிடைக்கின்றன. அதனால் படகில் சில ஓட்டைகளைப் போட்டு, பக்கத்தில் கொஞ்சம் பூச்சிகளை வைத்து விடுவோம்! அந்தப் பூச்சிகளைத் தின்பதற்காக, மீன்கள் ஓட்டை வழியாகப் படகுக்குள் வரும். உடனே லபக் என்று பிடித்துக் கொள்ளலாம்!” என்றான் முட்டாள்.

“சபாஷ்! சரியான யோசனை!” என்று முட்டாளைப் பாராட்டினார், பரமார்த்தர்.

அவன் யோசனைப்படி படகிலிருந்த ஆணிகளால், ஆளுக்கு ஒரு ஓட்டை போட்டனர்.

அவ்வளவு தான்! அப்போதே கடல் நீர் குபுகுபு என்று படகுக்குள் பாய்ந்து வந்தது.

அதைக் கண்ட சீடர்கள் “ஐயோ” என்று கத்திக் கொண்டு எகிறிக் குதித்தனர். அதனால் இன்னும் கொஞ்சம் ஆட்டம் கண்டது படகு

அதற்குள் படகு முழுவதும் நீர் நிரம்பி விடவே, படகு கடலுக்குள் மூழ்கியது. குருவும் சீடர்களும் லபோ திபோ என்று அலறியபடி நீருக்குள் தத்தளித்தனர்.

அவர்கள் போட்ட சப்தத்தைக் கேட்டு, அங்கு வந்த சில மீனவர்கள் நீந்திச் சென்று அனைவரையும் காப்பாற்றினர்.

மடத்துக்கு வந்து சேர்ந்த சீடர்கள், “நம் படகு எப்படிக் கவிழ்ந்தது?” என்று கேட்டனர்.

“கடலும், மீன்களும் சேர்ந்து சதித் திட்டம் செய்து தான் நம் படகைக் கவிழ்த்து விட்டன! என்றார் பரமார்த்தர்.

“அப்படியானால், எப்படியாவது கடலின் திமிரையும் மீன்களின் கொட்டத்தையும அடக்க வேண்டும்” என்றான் மட்டி

குருவே! முடிந்தவரை மீன்களைப் பிடித்துக் கொன்று விடுவோம்” என்றான் மடையன்.

“ஆமாம்! சும்மா விடக்கூடாது. மறுபடியும் மீன் பிடிப்போம், வாருங்கள்” என்றான் முட்டாள்.

மறுநாளும் மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.

கடலுக்குள் சென்றதும், “குருவே! எங்களை விட உங்கள் மீது தான் மீன்களுக்குக் கோபம் அதிகமாக இருக்கும். அதனால், தூண்டில் போடுவதற்குப் பதில், உங்களையே கயிற்றில் கட்டி கடலுக்குள் இறக்கி விடுகிறோம்” என்றான் மட்டி.

“உங்களைக் கடிப்பதற்காகக் கடலில் உள்ள எல்லா மீன்களும் வரும். உடனே நாங்கள் எல்லா மீன்களையும் பிடித்து விடுகிறோம்” என்றான் மடையன்.

குரு சற்று நேரம் யோசித்தார். “நீங்கள் சொல்வதும் சரியே” என்றார்.

உடனே சீடர்கள் அவரைக் கயிற்றில் கட்டி, கடலில் தூக்கிப் போட்டனர். நீச்சல் தெரியாத பரமார்த்தர், நீருக்குள் மூழ்கியதும் மூச்சுவிட முடியாமல் துடித்தார்.

நீரின் மேல் பரப்பில் காற்றுக் குமிழிகள் வருவதைக் கண்ட சீடர்கள், “அடேயப்பா! நம் குரு நிறைய மீன்களைப் பிடிக்கிறார் போலிருக்கிறது” என்றனர்.

பரமார்த்தரின் வயிறு முழுவதும் நீர் நிரம்பியதால் குமிழிகள் வருவது நின்றன.

எல்லா மீன்களையும் பிடித்து விட்டார் என்று நினைத்த சீடர்கள், நீரிலிருந்து குருவைத் தூக்கினர்.

ஆனால் பரமார்த்தரோ மயங்கிக் கிடந்தார்.

“மீன்களோடு நீண்ட நேரம் சண்டை போட்டதால் களைத்து விட்டார்!” என்றான் மட்டி.

கண் விழித்த பரமார்த்தர், “சீடர்களே! இன்னும் நம் மீது, கடலுக்கு இருக்கும் கோபம் தீரவில்லை. எப்படியோ இந்தத் தடவை தப்பித்துக் கொண்டோம். இனிமேல், கடல் பக்கமே போகவேண்டாம்!” என்றார்.

கடைசியில் கடலையும் மீன்களையும் திட்டிய படி அனைவரும் கரை சேர்ந்தனர்.

பரமார்த்த குரு கதைகள் – உதைக்கிற கழுதையே உழைக்கும்

குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர்.

துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர்.

கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர்.

இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு.

அன்று மாலையே அவர் மடத்துகுக் கழுதை ஒன்று வந்து சேர்ந்தது.

கழுதையைப் பார்வையிட்ட பரமார்த்தர், அதன் வாலைப் பிடித்து முறுக்கிப் பார்த்தார்! கோபம் கொண்ட கழுதை, விலுக் கென்று ஒரு உதை விட்டது!

ஐயோ! என்று அலறியபடி தூரப் போய் விழுந்தார் பரமார்த்தர். முட்டாள்களே! என் பெருமைகளைப் பற்றி கழுதையிடம் ஒன்றுமே சொல்ல வில்லையா? என்று கோபமாகக் கேட்டார்.

குருதேவா! உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெளிவாக எடுத்துச் சொன்னோம்! அதனால்தான் உதைத்ததோ என்னவோ! என்றான் மடையன்.

ஆமாம் குருவே! அப்படியும் இருக்கலாம். என்று ஒத்து ஊதினான், மட்டி.

பரவாயில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல் உதைக்கிற கழுதைதான் உண்மையாய் உழைக்கும். ஆகையால் இந்தக் கழுதையே இருக்கட்டும்! என்றார் பரமார்த்தர்.

குருவும் சீடர்களும் கழுதை வைத்திருப்பதை அறிந்த உள்ளூர் திருடன், அதை எப்படியாவது திருடிச் செல்ல திட்டமிட்டான்.

ஒருநாள், கழுதையின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு இருந்தான், திருடன். ஆனால் அதற்குள் சீடர்கள் வரும் சப்தம் கேட்கவே அவசரம் அவசரமாகக் கழுதையை மட்டும் தூர ஓட்டிவிட்டு, அதன் இடத்தில் தான் நின்று கொண்டான்.

வெளியே வந்து பார்த்த சீடர்களுக்கு வியப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது.

இதென்ன? கழுதை இருந்த இடத்தில், மனிதன் இருக்கிறானே! என்றான் மூடன்.

ஒருவேளை இது மாயமந்திரம் தெரிந்த கழுதையாக இருக்குமோ! எனச் சந்தேகப்பட்டான் மண்டு.

அதற்குள் பரமார்த்தரும் வந்து சேர்ந்தார். உன்னைக் கழுதையாகத்தானே வாங்கி வந்தோம். நீ எப்படி மனிதமாக மாறினாய்? என்று கேட்டான் முட்டாள்.

நான் முதலில் மனிதனாகத்தான் இருந்தேன். ஒரு முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். அவர்தான் என்னைக் கழுதையாகப் போகும்படிச் சாபம் இட்டார்.. இப்போது சாபம் நீங்கி விட்டதால் மறுபடி மனிதனாக மாறி விட்டேன்! என்று புளுகினான், திருடன்.

திருடனின் பொய்யைப் புரிந்து கொள்ளாத பரமார்த்தர், மனிதனைக் கழுதையாக மாற்றியதால் தப்பித்தோம். அதே முனிவர் சிங்கத்தையோ, புலியையோ கழுதையாக மாற்றியிருந்தால் இந்நேரம் நம்மையெல்லாம் சாப்பிட்டிருக்கும். நல்லகாலம்! தப்பித்தோம்! என்று மகிழ்ந்தார்.

சீடர்களும், விட்டது தொல்லை, என்று மகிழ்ந்தனர்.

கழுதை இல்லாமலேயே ஜமீன்தார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த சீடர்கள், துணிகளை மூட்டை கட்டி, பாசி பிடித்த ஒரு குட்டைக்கு எடுத்துச் சென்றார்கள்.

வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்பது ஜமீன்தார் கட்டளை என்று சொல்லியபடி, வெவ்வேறு நிறங்களில் இருந்த துணிகளைக் கல்லில் தேய்த்துக் கிழித்தான், மட்டி.

வெள்ளையாக இருந்த வேஷ்டியில் பாசியை தோய்த்துப் பச்சை நிறமாக மாற்றினான் மடையன்.

ஒரே துணியாக இருந்ததைக் கசக்கிப் பிழிந்து முறுக்கி, பல துண்டுகளாக ஆக்கினார்கள், முட்டாளும் மூடனும்.

அப்பாடா! ஒரு வழியாக நன்றாக வெளுத்துக் கட்டி விட்டோம்! என்று மகிழ்ந்தபடி ஜமீன்தார் வீட்டுக்குப் புறப்பட்டனர்.

நீங்கள் ஒரு துணி போட்டீர்கள். நான் அதையே பத்தாக்கிக் கொண்டு வந்திருக்கிறேன்! என்று பெருஐம அடித்துக் கொண்டான், முட்டாள்!

வெள்ளையைப் பச்சையாக்கி விட்டேன்! என்று குதித்தான் மடையன்.

சீடர்கள் கொண்டு வந்த துணிகளைப் பிரித்துப் பார்த்த ஜமீன்தாருக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது.

அடப்பாவிகளா! முழுசாய் இருந்ததை எல்லாம் கிழித்துக் கோவணத் துணிகளாய் ஆக்கி விட்டீர்களே; புத்திகெட்டவர்களை நம்பி இந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னேனே! என்று புலம்பியபடி சீடர்களை விரட்டி அடித்தார்.

உம்… நம் தொழிலூ திறமையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே! என்று வருத்தப்பட்டபடி மடத்துக்கே திரும்பினார்கள், ஐந்து சீடர்களும்.

பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை

ஒரு கோயிலுக்குள் இரண்டு திருடர்கள், பூட்டை உடைத்துச் சாமி சிலைகளைத் திருடிக் கொண்டு இருந்தார்கள்.

அந்த வழியே சென்ற பரமார்த்தரும் சீடர்களும் அதைக் கண்டனர்.

“ஐயா! யார் நீங்கள்? ஏன் இந்தச் சிலைகளை எடுக்கிறீர்கள்?” என்று பணிவுடன் கேட்டார் பரமார்த்தர்.

குருவையும் சீடர்களையும் கண்ட திருடர்கள் முதலில் சற்று பயந்தார்கள். பிறகு சமாளித்துக் கொண்டு, “நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இங்கே உள்ள சிலைகளை எல்லாம் அங்கே கொண்டு போகப் போகிறோம்” என்றனர்.

“வெளியூருக்கா? ஏன்?” என்று கேட்டான், மட்டி.

“இந்தச் சிலைகள் இங்கேயே இருப்பதால் என்ன பயன்? வெளியூருக்குப் போனால்தான் அங்கிருக்கும் மக்களும் பார்ப்பார்கள். அப்போதுதான் உங்கள் ஊரின் பெருமை மற்ற ஊருக்கும் தெரியும்” என்றான், திருடரில் ஒருவன்.

“ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த தொண்டைவிட, நீங்கள் செய்யும் தொண்டுதான் பெரியது. உங்கள் பக்தியை மெச்சுகிறேன்” என்று பாராட்டினார், பரமார்த்தர்.

ஆனால், மட்டிக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. “இதை நீங்கள் திருடிக் கொண்டு போகிறீர்கள்” என்றான்.

அதைக் கேட்ட திருடர்கள், “சே, சே! திருடுவதாய் இருந்தால் யாருக்கும் தெரியாமல் அல்லவா திருட வேண்டும்? உங்களுக்குத் தெரிந்துதானே எடுத்துக் கொண்ட போகிறோம்? இது எப்படித் திருடுவது ஆகும்?” என்று கேட்டனர்.

“ஆமாம்! எங்கள் முன்னிலையில் நடப்பதால் இது திருட்டு இல்லைதான்!” என்று ஒப்புக் கொண்டான் மட்டி.

மறுபடியும் சாமி சிலைகளைப் பெயர்த்து எடுத்தனர், திருடர்கள்.

அவர்கள், கஷ்டப்படுவதைக் கண்ட மடையன் “குருதேவா! இவர்களுடன் சேர்ந்து நாமும் கொஞ்சம் தூக்கி விடலாமே” என்று கேட்டான்.

“ஓ! தாராளமாக உதவி செய்வோம்” என்று சொல்லியவாறு சிலைகளைத் தூக்கப் போனார் குரு.

ஒரு வழியாக இராமர் சிலை, சீதை சிலை, ஆஞ்சநேயர் சிலை எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்தனர்.

“குருவே! இவ்வளவு காலமாக இந்தச் சாமி சிலைகள் நம் ஊரில் இருந்தன. இப்போது வெளிநாடு எல்லாம் சுற்றிப் பார்க்கப் போகின்றன. ஆதலால் இன்று விசேஷ பூசை செய்துதான் அனுப்ப வேண்டும்” என்றான், முட்டாள்.

“யாராவது ஆள் வந்துவிடப் போகிறார்கள் என்று பயந்த திருடர்கள், “சீக்கிரம் செய்யுங்கள்” என்று அவசரப்படுத்தினர்.

பரமார்த்தரும் அவசரம் அவசரமாக மந்திரம் சொல்லியபடியே பூசை செய்தார். சீடர்களும் சிலைகளின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தனர்.

பூசை முடிந்ததும் கோயிலுக்கு வெளியில் தயாராக இருந்த வண்டியில் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போக நினைத்தனர், திருடர்கள்.

அப்போது பரமார்த்தரும், மட்டி, மடையன், முட்டாள் ஆகிய மூன்று சீடர்களுக்கும் உற்சாகம் அதிகம் ஆயிற்று.

“சாமிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வாழ்க இராமர்! வாழ்க சீதை! ஆஞ்சநேயருக்கு ஜே!” என்று காட்டுக் கத்தலாகக் கத்தினார்கள்.

அவர்கள் கத்துவதைக் கண்ட திருடர்களுக்குப் பொறுமை போய் விட்டது.

“அடப் பாவிகளா! கடைசி நேரத்தில் சத்தம் போட்டு எங்கள் காரியத்தையே கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று திட்டினார்கள்.

“சத்தம் போட்டால் என்ன தப்பு?” என்று கேட்டான் மடையன்.

குதிரை மீது ஏறிக் கொண்ட திருடர்கள், வண்டியை ஓட்டியபடியே, “முட்டாள்களே! நாங்கள் இந்தச் சிலைகளைத் திருடிக் கொண்டு போகிறோம். இது கூட உங்களுக்குத் தெரியவில்லையே!” என்று உண்மையைக் கூறினர்.

அதைக் கேட்டுப் பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

“என்ன? திருடிக் கொண்டு போகிறீர்களா?” என்றபடி மயங்கி விழுந்தான், முட்டாள்.

“ஐயோ, திருடர்கள்! திருடர்கள்!” என்று கத்தினான், மட்டி.

அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை வண்டியின் பின்னே ஓடிப்போய், கீழே விழுந்து உருண்டான், மடையன்.

பரமார்த்தரோ, அதிர்ச்சியில் சாமிபோல் சிலையாகி நின்றார்.

பரமார்த்தரின் மடத்தருகே வந்ததும், திருடர்கள் வண்டியை நிறுத்தினர். சிலைகளுடன் மடத்துக்கள் சென்றனர்.

உள்ளே மண்டுவும், மூடனும் இருந்தனர்.

“அடேய்! நாங்கள் கொஞ்ச நேரம் இங்கே தூங்கப் போகிறோம். அதுவரை இந்தச் சிலைகளைப் பத்திரமாக வைத்திருங்கள். தூங்கி எழுந்ததும் சிலைகளை எங்களிடமே ஒப்படைத்து விட வேண்டும்” என்று கட்டளை இட்டனர்.

அவர்களைப் பார்த்த பயந்து போன மண்டுவும், மூடனும், சரி என்று சம்மதித்தனர். சிறிது நேரத்தில் திருடர்கள் குறட்டை விட்டுத் தூங்கி விட்டனர்.

“சிலைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே? என்ன செய்வது?” எனக் கேட்டான் மண்டு.

“நம்மால் காவல் காக்க முடியாது. தொலைத்து விடுவோம். இல்லாவிட்டால் நாமும் தூங்கி விடுவோம். அதனால் நேராக மன்னரிடமே கொண்டு அரண்மனைக்குப் போனார்கள்.

அரண்மனையில் பரமார்த்தரும் மற்ற சீடர்களும் அழுது கொண்டு இருந்தனர்.

மண்டுவும், மூடனும் சிலைகளுடன் வருவதைக் கண்டு, அரசன் உட்பட அனைவரும் வியப்படைந்தனர். நடந்தவற்றை கேள்விப்பட்ட அரசன், “சிலைகள் திருடு போவதற்கு உதவியாக இருந்ததும் நீங்களே! அதனால் தண்டனையும் தராமல், பரிசும் தராமல் அனைவரையும் சும்மா விட்டு விடுகிறேன்” என்றான்.

குருவும், சீடர்களும் தப்பித்தால் போதும் என்று அரண்மனையை விட்டு ஓடிவந்தனர்.

பரமார்த்த குரு கதைகள் – தண்டச் சோற்றுத் தடிராமன்கள்

எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர்.

“நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்” என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும்

ஒருநாள், “நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?” என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன்.

இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். “மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன!” என்று புளுகினார்.

சீடர்களும், “ஆமாம் அரசே! இப்படியே கவனிக்காமல் விட்டால், போரில் கட்டாயம் தோல்வியே ஏற்படும்” என்று ஒத்து ஊதினார்கள்.

அதைக் கேட்ட மன்னன், “அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள்” என்று கட்டளை இட்டான்.

மட்டியும் மடையனும் ஓடிச் சென்று இரண்டு பன்றிக் குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர்.

அதைப் பார்த்த அரசன், “சே! சே! பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்?” என்று கேட்டான்.

முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. “இது யானை என்றால், தும்பிக்கையைக் காணோமே?” என்று கேட்டான்.

“மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள் தான். பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து விட்டது, தும்பிக்கையும் சுருங்கி விட்டது” என்று விளக்கினார் பரமார்த்தர்.

“இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் மடமன்னன்.

“மன்னா! இன்னொரு விஷயம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம்” என்றார் குரு.

“நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இதே போல் இளைத்து விட்டன. எல்லாம் ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன!” என்றான் மூடன்.

அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றான் மன்னன்.

மன்னா! நாங்கள் அருமையான திட்டம் ஒன்று வைத்துள்ளோம். அதன்படி ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும்

மடமன்னன் பெரிய கஞ்சன். அதனால் ஆயிரம் பொற்காசு செலவழிக்க மனம் வரவில்லை.

“வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

“சே! நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே!” என்று வருந்தினார், பரமார்த்தர். சீடர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது

“அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!” என்றான் மண்டு.

“இதை வேண்டுமானால் செய்யலாம்!” என்றான் மடமன்னன்.

பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விடப்பட்டன.

எல்லாம் சேர்ந்து கொண்டு, குடி மக்களின் வயல்களில் சென்று மேயத் தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன.

அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர்.

பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான்.

அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – பூதம் காத்த புதையல்

பரமார்த்த குருவும் சீடர்களும் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.

தூக்கத்தில், “ஆகா! தங்கம்! வெள்ளி! வைடூரியம்!” என்று உளறிக் கொண்டு இருந்தார், பரமார்த்தர்.

திடுக்கிட்டு எழுந்த சீடர்கள், குரு உளறுவதைக் கண்டு அவரை தட்டி எழுப்பினார்கள்.

தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பரமார்த்தர், “புத்தி கெட்டவர்களே! ஏன் என்னை எழுப்பினீர்கள்? அற்புதமான கனவு ஒன்று கண்டு கொண்டு இருந்தேன். கெடுத்து விட்டீர்களே!” என்று சீடர்களைத் திட்டினார்.

உடனே எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டு கனவா? என்ன கனவு கண்டீர்கள்?” என்று கேட்டார்கள்.

பரமார்த்தர், சிறிது நினைவுபடுத்தி, “புதையல்! புதையல்!” என்று கத்தினார்.

“புதையலா? எங்கே? எங்கே?” என்று குதித்தார்கள், சீடர்கள்.

பிறகு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “சீடர்களே, இந்த அறையின் பின்னால் உள்ள தோட்டம் தான் என் கனவில் வந்தது. தோட்டத்தின் சனி மூலையில் ஒரு பானை நிறைய பொன்னும் வெள்ளியுமாய்க் கிடக்கிறது!” என்று மெல்ல கூறினார்.

“அடேயப்பா! பானை நிறைய தங்கமா?” என்று மகிழ்ச்சியால் கீழே விழுந்து புரண்டான் மட்டி.

“குருவே! இந்தப் புதையலை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது?” என்று கேட்டான் மூடன்.

அதற்குள் முட்டாள், “நம் குருவுக்குப் பெரிய குதிரையாக, அழகான குதிரையாக வாங்கலாமே!” என்று பதில் சொன்னான்.

“நாம் கூட ஆளுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொள்ளலாம்!” என்று மகிழ்ந்தான் மட்டி.

“குருவே! இந்த இடம் சரியில்லை. இதை இடித்து விட்டு ராஜாவுக்குப் போட்டியாக அரண்மனை கட்ட வேண்டும்!” என்று யோசனை சொன்னான் மூடன்.

“இனிமேல் நமக்குக் கவலையே இருக்காது. தினமும் வடையும் பாயாசமுமாகச் சாப்பிடலாம்!” என்று குதித்தான், மடையன்.

“குருவே! அப்படியானால் நாம் எல்லோரும் இப்போதே ஓடிப்போய் அந்த இடத்தைத் தோண்டிப்பார்ப்போம்” என்றான் முட்டாள்.

“ஆமாம்! அதுதான் நல்லது. பகலில் தோண்டினால் ஊர் பூராவும் தெரிந்து விடும். அப்புறம் எல்லோரும் பங்கு கேட்பார்களே!” என்றான் மடையன்.

“மடையன் சொல்வதும் சரிதான். வாருங்கள், எல்லோரும் போய் இப்போதே தோண்டுவோம்!” என்று தோட்டத்துக்குப் போனார்கள்.

வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றான், முட்டாள்.

யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்து விட்டு, தம்முடைய கைத்தடியால் ஓர் இடத்தில் வட்டமாகக் கோடு போட்டார், பரமார்த்தர். உடனே மட்டியும் மடையனும் வேகம் வேகமாக அந்த இடத்தைக் கையால் பரக் பரக் என்று தோண்ட ஆரம்பித்தார்கள்.

சிறிது நேரம் ஆனதும், “கை எல்லாம் வலிக்கிறதே!” என்று மூச்சு வாங்க உட்கார்ந்து விட்டனர்.

“குருவே! புதையலை விடக்கூடாது!” என்றபடி மூடனும், மண்டுவும் தொடர்ந்து பள்ளம் பறித்தார்கள்.

நான்கு பேரும் மாறி மாறி தோண்டிக் கொண்டே இருந்தபோது, திடீரென்று வெள்ளையாக ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.

“ஆ! புதையல்! புதையல்!” என்று குதித்தபடி இன்னும் வேகமாகத் தோண்டினான், மட்டி.

உடனே பரமார்த்தர் குழிக்குள் கையை விட்டுப் பார்த்தார். உருண்டையாக ஏதோ ஒன்று கிடைத்தது.

எல்லோரும் ஆசையோடு அதை வெளிச்சத்தில் காட்டிப் பார்த்தார்கள்.

பரமார்த்தரின் கையில் இருந்தது ஒரு மண்டை ஓடு!

அவ்வளவுதான்! “ஐயோ! ஐயோ!” என்று அலறியபடி ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தடித்து ஓடினார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – தொப்பை கரைச்சான் லேகியம்!

திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை; நின்றால் உட்கார முடியவில்லை. இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர்.

“குருவே! தினம் தினம் உங்கள் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போகிறதே! எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது” என்றான் மட்டி.

“வயிறு இவ்வளவு பெரியதாய் இருக்கிறதே! ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை ஏதாவது பிறக்கப் போகிறதா?” என்று ஆச்சரியப்பட்டான், மூடன்.

“குருவே! இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. அப்புறம் ஒரு நாளைக்கு உங்கள் தொப்பை டமார் என்று வெடித்து விடும்!” என்று பயம் காட்டினான் மடையன்.

“ஐயையோ!” என்று அலறிய பரமார்த்தர், “இதற்கு என்ன செய்வது?” என்று கேட்டார்.

“சித்த வைத்தியர் யாரிடமாவது காட்டலாம்” என்று யோசனை சொன்னான் மண்டு.

“வைத்தியரிடம் போனால் நிறைய செலவாகும். அதனால் நாங்களே காட்டுக்குச் சென்று மூலிகைகள் பறித்து வருகிறோம். அதிலிருந்து ஏதாவது லேகியம் தயாரித்துச் சாப்பிட்டால், தொப்பை கரைந்து விடும்!” என்று வேறொரு யோசனை சொன்னான், முட்டாள்.

உடனே மூடன், கிடுகிடு என்று பரண்மேல் ஏறி, செல்லரித்துப் போன பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தான்.

“குருவே! தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி இதிலே எழுதியிருக்கு! இதில் குறிப்பிட்டிருக்கும் செடிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்” என்றபடி கீழே குதித்தான்.

எப்படியாவது தொப்பை கரைந்தால் போதும் என்று நினைத்த பரமார்த்தர், “சீடர்களே! சீக்கிரம் புறப்படுங்கள். நிறைய லேகியம் தயாரித்தால் அதை மற்றவர்களுக்கும் விற்று விடலாம்” என்று அனுப்பி வைத்தார்.

காட்டுக்குச் சென்ற சீடர்கள், “தொப்பை கரைச்சான் மூலிகை” எது என்று தெரியாமல் விழித்தார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் முனிவர் ஒருவ ஒட்டிய வயிறுடன் தவம் செய்து கொண்டிருந்தார்.

அவரைக் கண்ட மட்டி, இவர் வயிறு இவ்வளவு ஒட்டி இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் போனான்.

“முனிவரே! இந்தச் செடிகளில் தொப்பை கரைச்சான் செடி எது என்று தெரியுமா?” என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.

கோபம் கொண்ட முனிவர், “எந்தச் செடி நாறுகிறதோ, அதுதான் நீ கேட்கும் செடி!” என்று வேண்டுமென்றே சொல்லி அனுப்பினார்!

முனிவர் சொன்னதை நம்பிய சீடர்கள், கண்ட கண்ட இலைகளையும் பறிக்க ஆரம்பித்தார்கள். சாப்பிட்டால் பல வியாதிகளை உருவாக்குகிற இலைகளை எல்லாம் பறித்து மூட்டை கட்டினார்கள்.

சீடர்கள் பறித்து வந்த இலைகளை மோந்த பரமார்த்தர், முகத்தைச் சுளித்தார். “நன்றாக நாறுகிறது! எப்படியும் என் தொப்பை கரைந்து விடும்!” என்று மகிழ்ந்தார். அதன்பிறகு, “சீக்கிரம் ஆகட்டும்! எல்லாவற்றையும் கலந்து அரைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.

முட்டாளும் மூடனும் இலைகளைத் துண்டு துண்டாகக் கிள்ளிப் போட்டனர். மட்டியும் மடையனும் கல்லில் வைத்து அரைக்க ஆரம்பித்தனர். அப்போது இலையில் இருந்து நாற்றம் வரவே, ஒருவர் மூக்கை இன்னொருவர் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அரைத்தனர்.

எல்லாவற்றையும் வழித்துச் சட்டியில் போட்டனர். அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினான்.

அதன்பிறகு சீடர்கள் அனைவரும் லேகியத்தை உருண்டை பிடித்து எடுத்துக் கொண்டு குருவிடம் போனார்கள். “எங்கள் அருமை குருவே! இதோ, தொப்பை கரைச்சான் லேகியம் தயார்! உடனே இதைச் சாப்பிடுங்கள்” என்று பரமார்த்தரை வேண்டினார்கள்.

“பார்ப்பதற்குக் கொழ கொழ என்றும் கன்னங்கரேல் என்றும் இருந்த லேகியத்தைக் கண்டதுமே பரமார்த்தரின் முகம் பல கோணலாக மாறியது.

முட்டளிடமிருந்து ஓர் உருண்டையை வாங்கி மூக்கருகே கொண்ட போனார். அதிலிருந்து வந்த நாற்றம் அவர் வயிற்றைக் கலக்கியது.

“குருவே! யோசிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழ வேண்டுமானால் உங்கள் தொப்பை கரைய வேண்டும். உங்கள் தொப்பை கரைய வேண்டுமானால் இதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!” என்று கூறினான், மட்டி.

பரமார்த்தரும், வேறு வழியின்றி இரண்டு உருண்டைகள் விழுங்கினார்.

“குருவே! இதையும் சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் தொப்பை சீக்கிரம் கரையும்!” என்ற படி இன்னும் சில உருண்டைகளை அவர் வாயில் கட்டாயமாகத் திணித்தனர், முட்டாளும் மூடனும்.

பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், தாங்களும் அந்த லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டனர்.

அந்த நாட்டு அரசனுக்கும் பெரிய தொப்பை இருந்ததால், அவனும் பரமார்த்தர் தயாரித்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டான்.

நேரம் செல்லச் செல்ல, எல்லோருக்கும் வயிற்றைக் கலக்கியது. “ஐயோ! என் தொப்பை வலிக்கிறதே!” என்று பரமார்த்தரும், மற்ற தொப்பைக்காரர்களும் அலற ஆரம்பித்தனர்.

தொப்பை கரைச்சான் லேகியம் என்று நினைத்து கண்டதையும் சாப்பிட்டதால், அனைவருக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது. எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினார்கள்.

மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர் மீது கோபம் கொண்டார்.

இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச் சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!” என்று ஆணையிட்டான்.

சிறையிலிருந்து தள்ளாடியபடி அந்தக் குருவைக் கண்ட சீடர்களுக்கு வியப்பாகப் போயிற்று. முன்பு வீங்கியிருந்த அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது.

“குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக் கரைத்திருக்கிறது” என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள்.

“லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு தண்ணீர் இல்லாமல் பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதுதான் இப்படி ஆகிவிட்டேன்!” என்றபடி பசிக் களைப்பால் சுருண்டு விழுந்தார், பரமார்த்தர்.

பரமார்த்த குரு கதைகள் – நொண்டிக் குதிரை

பரமார்த்த குருவுக்கு ஒரு பணக்காரன் இலவசமாக ஒரு குதிரையைக் கொடுத்தான்.

அந்தக் குதிரையோ கிழடு தட்டிப் போயிருந்தது. ஒரு கண் நொள்ளை! ஒரு காது மூளி! முன் கால்களில் ஒன்று நொண்டி! பின் கால்கள் வீங்கிப் போய் இருந்தன.

உடம்பு பூராவும் சொறிபிடித்து, பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது. இருந்தாலும், பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் பரம சந்தோஷம். “பணம் செலவு செய்யாமல் இலவசமாகக் கிடைத்ததே!” என்று நினைத்தனர்.

“குருவே! கடிவாளம் கட்டுவதற்கு வார் இல்லை. அதனால் வைக்கோல் பிரியைச் சுற்றி விடலாம்!” என்று அப்படியே செய்தான் மட்டி.

குரு உட்காருவதற்காக, கிழிந்து போன பழைய கந்தல் கோணி ஒன்றைக் குதிரைமேல் போட்டான் மண்டு. எருக்கம் பூவைப் பறித்து மாலையாக்கி குதிரையின் கழுத்தில் அணிவித்தான், முட்டாள்.

இவர்கள் செய்வதைப் பார்ப்பதற்கு ஊரே கூடி விட்டது. குதிரைக்கு எல்லா அலங்காரமும் முடிந்தது.

தொந்தியும், தொப்பையுமாய் இருக்கும் பரமார்த்தர், குதிரையின் மேல் பெருமையோடு ஏறி உட்கார்ந்தார். அவ்வளவுதான்!

கனம் தாங்காமல் வலியால் குதிரை அலற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அப்படியே படுத்து விட்டது.

“சே, சே! இதென்ன சண்டித்தனம் பண்ணுகிறது?” என்று சலித்துக் கொண்டே கீழே இறங்கினார் குரு.

முட்டாளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கையில் வைத்திருந்த கொள்ளிக் கட்டையைக் கொண்டு போய் குதிரையின் காலில் வைத்தான். உடனே அது விலுக்கென்று உதைத்துக் கொண்டு எழுந்தது. இப்படியும் அப்படியுமாக கொஞ்ச தூரம் ஓடி நின்றது.

மறுபடியும் குரு அதன் மேல் உட்கார்ந்தார். இப்போது மட்டி, அதன் வாலைப் பிடித்து முறுக்கினான். கோபம் கொண்ட குதிரை எட்டி ஓர் உதை விட்டது.

அது உதைத்த உதையில் கீழே விழுந்து புரண்ட மட்டிக்கு நாலு பற்கள் உடைந்து விட்டன! வாயெல்லாம் ரத்தம்.

இதை எல்லாம் பார்த்த குருவுக்கு உதறல் எடுத்தது.

“சீடர்களே! எனக்குப் பயமாக இருக்கிறது. நான் கீழே இறங்கி விடுகிறேன்!” என்றார்.

“குருவே! நீங்கள் கவலையே பட வேண்டாம். அப்படியே உட்கார்ந்து இருங்கள். நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்!” என்று பதில் சொன்னான் முட்டாள்.

மண்டுவுக்கும் மடையனுக்கும் வேறு ஒரு யோசனை உதித்தது.

குதிரைக்கு முன்னால் நின்று கொண்டு, முகத்தைக் கோணலாக்கி, கண்களை உருட்டி, உதட்டைப் பிதுக்கி, “ஆ….ஊ….ஊ…” என்று ஊளையிட்டுப் பயம் காட்டினார்கள்.

இதனால் குதிரை ஒரேயடியாக மிரண்டு, மெல்ல மெல்லப் பின் பக்கமாக நடக்க ஆரம்பித்தது! குருவுக்கும், சீடர்களுக்கும் அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கைதட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து பின்பக்கமாகவே குதிரை ஓடவும் தொடங்கியது.

“நொண்டிக் குதிரை! நொள்ளைக் குதிரை! குருவுக்கேற்ற குதிரை! கழுதைபோல எட்டி உதைக்கும்! நாயைப் போல் ஆளைக் கடிக்கும்! ஓரம் போங்கோ! வழியை விடுங்கோ!” என்று பாடியபடி சீடர்கள் போய்க் கொண்டு இருந்தனர்.

பின்பக்கமாகவே ஓடுவது குதிரைக்குப் பழகி விட்டது.

அப்போது அடுத்த ஊரின் எல்லை வந்தது. அங்கிருந்த மணியக்காரன் இவர்களை நிறுத்தினார்கள்.

“வெளியூர்க் குதிரைக்கு வரி கட்ட வேண்டும். பத்துப் பணம் எடுங்கள்” என்றான்.

“வரியா? நான் ஏறி வருகிற குதிரைக்கு வரிக வாங்கலாமா? அதுவும் இது இனாமாகவே வந்த குதிரை. இதற்கு வரி கட்ட மாட்டோம்!” என்று கூறினார் குரு.

“எதுவானாலும் சரி. வரி கொடுக்காவிட்டால் விடமாட்டேன்” என்று சொல்லி அவர்களை மடக்கினான், மணியக்காரன்.

“நாம் கொடாக்கண்டன் என்றால் இவன் விடாக்கண்டனாய் இருக்கிறானே!” என்று நினைத்து ஐந்து பணம் கொடுத்தனர்.

“இன்னும் ஐந்து பணம் கொடுங்கள்”

“ஒரு குதிரைக்கு ஐந்து பணம்தானே வரி?”

“ஒரு பக்கம் மட்டும் போகும் குதிரைக்குத்தான் ஐந்து பணம். உங்கள் குதிரை பின்னாலும் போகிறதே!”

“இதென்ன அநியாயம்?” என்று வருத்தப்பட்டு மேலும் ஐந்து பணம் தந்தனர்.

“இந்தக் குதிரையால் நமக்கு எவ்வளவு பணம் நஷ்டமாகிறது?” என்று சொன்னபடி பயணத்தைத் தொடர்ந்தனர்.

ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்து, ஒரு மடத்துக்குப் போனார்கள். அப்போது இரவு நேரம். எல்லோருக்கும் களைப்பாக இருந்ததால், குதிரையைக் கட்டிப்போட மறந்து, தூங்கி விட்டனர்.

காலையில் எழுந்து ஆளுக்கொரு பக்கமாகத் தேடிக் கொண்டு போனார்கள்.

கடைசியில் ஒரு வயலுக்குப் பக்கத்தில் அந்தக் குதிரை கட்டப்பட்டு இருந்தது!

“இது இரவு முழுவதும் என் வயலில் இறங்கி பயிர்களை எல்லாம் நாசம் செய்து விட்டது. அதற்குப் பதிலாகப் பத்துப் பணம் கொடுத்தால்தான் குதிரையை விடுவேன்” என்று சொன்னான், அதைக் கட்டி வைத்திருந்த உழவன்.

அவனிடம் பேரம் பேசி நான்கு பணம் கொடுத்து விட்டுக் குதிரையை ஓட்டி வந்தனர்.

“சீ…சீ…!” இந்தக் குதிரையால் நமக்குப் பெரும் தொல்லை. என் மானமே போகிறது.! பேசாமல் இதை விட்டு விடலாம்! என்று வருத்தப்பட்டார் குரு.

அப்போது அங்கிருந்த ஒருவன், குதிரைக்குப் பீடை பிடித்துள்ளது. அதனால்தான் இப்படி ஆகிறது. அந்தப் பீடையைக் கழித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். செலவோடு செலவாக எனக்கும் ஐந்து பணம் கொடுங்கள் என்று யோசனை சொன்னான். குருவும், சீடர்களும் மூக்கால் அழுது கொண்டே அவனிடம் பணம் கொடுத்தனர்.

பிறகு, குதிரையின் ஒரு காதைப் பிடித்துக் கொண்டு “ஆ! பீடையெல்லாம் இந்தக் காதிலேதான் இருக்கிறது. இதனால்தான் ஏற்கனவே ஒரு காதை அறுத்திருக்கிறார்கள். இப்போது இந்தக் காதையும் அறுத்து விட்டால் சரியாகி விடும்!” என்றான், ஏமாற்றுக்காரன்.

உடனே மட்டி, மண்ணில் விழுந்து புரண்டு, “சீக்கிரம் காதை அறுங்கள்!” என்று குதித்தான். மூடனோ ஓர் அரிவாளைத் தீட்டிக் கொண்டு வந்து கொடுத்தான்.

எல்லோரும் பிடித்துக் கொள்ள, ஏமாற்றுக்காரன், குதிரையின் காதை அறுத்து எடுத்தான்! குதிரையோ வலி தாங்காமல் கீழே விழுந்து கதறியது. பிறகு உயிரை விட்டது!

எல்லோரும் அறுத்த காதைக் கொண்டு போய் ஆழக் குழி தோண்டிப் புதைத்தனர்.

“ஒழிந்தது பீடை! இனி மேல் கவலையில்லை!” என்றான், ஏமாற்றுக்காரன்.

பரமார்த்த குருவும் சீடர்களும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்கள்.

சிறுவர் கதைகள் – கவலைப்படாதே சகோதரா!

காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

“எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.

அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.

அதைப்பார்த்த சிங்கம், “ஏய்……..ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே…..எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, “இதோ……என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்……….என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்……….”என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. “இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!

கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!” என்று அது புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!

நீதிக் கதைகள் – நடப்பது எல்லாம் நன்மைக்கே!

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.

சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.

இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.

உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.

சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.

வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.

தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.

கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.

இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.

உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை

அரசர் கதைகள் – முல்லைக்குத் தேர்

இயற்கை வளம் நிறைந்த மலை பறம்பு மலை. அந்த மலையைச் சூழ்ந்து அழகான முந்நூறு ஊர்கள் இருந்தன. பறம்பு நாடு என்று அழைத்தனர்.
பறம்பு நாட்டைப் பாரி என்ற அரசர் ஆண்டு வந்தார். தமிழ் மீது பேரன்பு கொண்டிருந்தார் அவர். புலவர்களை மதித்துப் போற்றினார்.

தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். வள்ளல் பாரி என்று அவரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அவர் புகழ் உலகெங்கும் பரவியது.
பெரும் புலவர் கபிலர் அவரின் நெருங்கிய நண்பராக விளங்கினார்.
அவருடைய அரசவையில் புலவர்கள் நிறைந்து இருந்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடுவதைப் புலவர்கள் பெருமையாகக் கருதினார்கள்.

வழக்கம் போல அரசவை கூடியிருந்தது. அரியணையில் அமர்ந்து இருந்தார் பாரி. புலவர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
செல்வம் மிகுந்தவர்களைப் போலப் புலவர்கள் காட்சி தந்தனர்.

புலவர் எழிலனார் எழுந்தார். அரசர் பெருமான் வாழ்க! அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள்?
அவர் வள்ளன்மையால் இரவலர்களே இந்த நாட்டில் இல்லை! என்று புகழ்ந்தார்.
அடுத்ததாகப் புலவர் திண்ணனார் எழுந்தார். புலவர் எழிலனார் சொன்னது முக்காலத்திற்கும் பொருந்தும். வாரி வழங்கும் வள்ளல் என்றாலே அது பாரி தான். அவரைப் போன்று எந்த அரசரும் கடந்த காலத்தில் இருந்தது இல்லை. நிகழ் காலத்திலும் இல்லை. வரும் எதிர் காலத்திலும் இருக்கப் போவது இல்லை . இது உறுதி என்றார்.
பயன் நோக்காமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் விறலியர் வந்தால் போதும். தம் நாட்டையே பரிசாக நல்குவார். அது மட்டும் அல்ல. தம் உயிரையே கேட்டாலும் மகிழ்ச்சியுடன் தருவார்.

பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைகள் தேடி வரும். அதே போலப் புலவர்கள் பாரியை நாடி வந்த வண்ணம் உள்ளார்கள் என்று புகழ்ந்தார் நன்னனார்.
அடுத்ததாகப் பெரும் புலவர் கபிலர் எழுந்தார். எப்பொழுதும் கருத்துகளில் மோதும் புலவர்கள் நீங்கள். என்ன வியப்பு! வள்ளல் பாரியைப் புகழ்வதில் ஒன்று பட்டு இருக்கிறீர்கள்.
புலவர்களிடம் பொது நோக்கு வேண்டாமா? பயன் கருதாமல் வாரி வழங்குபவர் வள்ளல் பாரி மட்டும் தானா? இன்னொருவரும் இருக்கின்றாரே. ஏன் நீங்கள் அவரை மறந்து விட்டீர்கள்? உங்களில் யாரும் அவரைப் புகழ வில்லையே. ஏன்? என்று கேட்டார்.

பாரியை இகழ்ந்து கபிலர் பேசுகிறாரே என்று புலவர்கள் திகைப்பு அடைந்தனர்.
கபிலரே! என்ன பேசுகின்றீர்? முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு. முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். இவ்வாறு பாரியைப் புகழ்ந்து பாடியவர் நீங்கள் தானே.
ஆனால் இப்பொழுதோ பாரியை இகழ்ந்து பேசுகிறீர். இது முறையா? அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள் என்றார் எழிலனார்.

பாரியின் அருள் உள்ளத்தை எல்லோரும் அறிவார்கள். அவரைப் போலவே வாரி வழங்க முடியுடை மூவேந்தர்களும் முயன்றனர். அவர்களால் வெற்றி பெற முடிய வில்லை. வள்ளல் என்று சொன்னாலே அது பாரியைத் தான் குறிக்கும். இதை இந்த உலகமே அறியும்.

கபிலரே! பாரியைப் போன்றே கைம்மாறு கருதாது உதவுபவர் இன்னொருவர் இருக்கிறாரா? யார் அவர்? பெயரைச் சொல்லும் என்று கோபத்துடன் கேட்டார் திண்ணனார்.
பெரும் புலவர் கபிலரே! வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் நீங்கள். அவரது வள்ளன்மையை நன்கு அறிந்தவர். பறம்பு மலைக்கு வந்து யாரும் பரிசில் பெறாமல் சென்றது இல்லை.
கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். இன்னொருவர் இருக்கவே இயலாது. அப்படி இருந்தால் சொல்லுங்கள் என்றார் நன்னனார்.

கபிலர் எழுந்தார். புலவர்களே! வள்ளல் பாரியிடம் நீங்கள் வைத்திருக்கும் பெருமதிப்பைக் கண்டு மகிழ்கிறேன். பாரியைப் போன்றே வாரி வழங்கும் வள்ளல் இன்னொருவர் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அனைவரும் பாரி ஒருவரையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இன்னொருவரை மறந்து விட்டீர்கள் என்றார் அவர்.
கபிலரே! புதிர் போடாதீர்கள். பாரியைப் போன்றே வாரி வழங்கும் இன்னொரு வள்ளல் யார்? அவர் பெயரைச் சொல்லுங்கள என்று கேட்டார் எழிலனார்.

புலவர்களே! பாரி போன்றே மாரியும் கைம்மாறு கருதுவது இல்லை. மழை பொழிந்து இந்த உலகைக் காப்பாற்றுகிறது. மாரி மழை பொழிய வில்லை. பிறகு இந்த உலகின் நிலை என்ன ஆகும்?
நீங்கள் மாரியை மறந்து விட்டீர்கள். வாரி வழங்கும் வள்ளல் என்று பாரியையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இது தகுமா? அதனால் தான் இப்படிக் கேட்டேன் ! என்றார் கபிலர்.
இந்த விளக்கத்தைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர்.

கபிலரே! வள்ளல் பாரிக்கு இணையானவர் யாரும் இந்த நிலவுலகத்தில் இல்லை. கைம்மாறு கருதாமல் மழை பொழிந்து உலகத்தைக் காக்கிறது. மாரி. அந்த மாரி தான் அவருக்கு ஒப்பாகும்.
மாரி போன்றவர் பாரி எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர். உங்கள் புலமைக்கு என் பாராட்டுகள் என்றார் நன்னனார்.

கபிலரே! உம்மைப் பெரும் புலவர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது உண்மை தான் என்றார் எழிலனார்.
புலவர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். பார். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.

அரச உடை அணிந்து பெருமிதமாகக் காட்சி அளித்தார் பாரி. அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தார்.
தேரோட்டி அங்கு வந்தான்.
அரசே! வாழ்க! நீதி நெறி தவறாத மன்னவ வாழ்க! குடிமக்களைக் காக்கும் கோவே வாழ்க! என்று பணிவாக வணங்கினான்.

தேரோட்டியே! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். நம் நாட்டின் மலை வளம் காண விரும்புகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும் என்றார் பாரி.
அரசே! அரண்மனை வாயிலில் தேர் நிற்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம் என்றார் அவர்.
தேரோட்டி முன்னே செல்லப் பாரி பின்னால் வந்தார்.
அரண்மனை வாயிலில் அலங்கரிக்கப் படட அழகான தேர் இருந்தது. அதில் வலிமையான குதிரைகள் பூட்டப் பட்டு இருந்தன.

அரசரும் பெருமிதத்துடன் தேரில் ஏறி அமர்ந்தார்.
சூழ்ந்து நின்ற வீரர்களைப் பார்த்தார் அவர். நான்மலை வளம் காணச் செல்கிறேன். நீங்கள் யாரும் என்னுடன் வர வேண்டாம். நீங்கள் வந்தால் அங்கே பெரும் ஆரவாரம் எழும். நான் காண விரும்பும் இனிய சூழல் கெடும். என்றார்.

வீரத் தலைவன் அரசரைப் பணிவாக வணங்கினான். அரசே! உங்கள் கட்டளைப் படி நடப்போம் என்றான்.
தேரோட்டி! தேரைச் செலுத்து என்றார் அரசர் பாரி.
தேர் வேகமாகச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தலை நகரம் அவர்கள் கண்ணுக்கு மறைந்தது. மலைப் பாதையில் தேர் ஏறத் தொடங்கியது.

தேரோட்டி! தேரை மெல்ல செலுத்து. வளமான பறம்பு மலை எவ்வளவு அழகாகக் காட்சி தருகிறது. இதன் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமே. ஆட்சியைத் துறந்து இங்கேயே இருந்து விடலாம்.
அடிக்கடி இங்கு வர விரும்புகிறேன். அரச அலுவல்களால் அது முடிவது இல்லை. இந்த இயற்கைச் சூழலில் என் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது. வெற்றுப் புகழுரைகளை அரண்மனையில் கேட்டுக் கேட்டு சலித்து விட்டது.
இங்கே என்ன அமைதியான சூழல்! எங்கும் பசுமை நிறைந்து வளமாகக் காட்சி அளிக்கிறதே!
ஆம் அரசே! இந்த மலை வளம் தான் நம் நாட்டிற்கு வற்றாத செல்வத்தைத் தருகிறது.
தேரோட்டி! நீயும் மற்றவர்களைப் போலத் தான் இருக்கிறாய். இந்த மலை தரும் செல்வத்தையே பெரிதாக எண்ணுகிறாய். ஆனால் நானோ இந்தச் செல்வத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னை அறியாத ஏதோ ஒரு இன்ப வெள்ளத்தில் மூழ்குகிறேன்.
அருவி கொட்டும் ஓசை உன் செவிகளில் வீழ்கிறதா?
அரசே! என் செவிகளிலும் வீழ்கிறது. ஆ! என்ன சுவையான அருவி நீர். இதன் சுவையைப் புகழ்ந்து பாடாத புலவர்களே இல்லையே. இந்த அருவி நீரைக் குடித்தவர்க்குத் தேனும் துவர்க்குமே. நம் நாட்டை வளமாக்கும் வற்றாத அருவி ஆயிற்றே!
அந்த அருவி கொட்டும் ஓசை இனிய இசையாக என் செவிகளில் வீழ்கிறது. அந்த இசையில் என்னையே நான் மறந்து விடுகிறேன். மலைப் பகுதிக்கு வந்து விட்டோம். இனிமேல் தேர் அசைந்து மெல்ல செல்லட்டும். தேரில் கட்டியுள்ள மணிகளை எடுத்து விடு.
அப்படியே செய்கிறேன். அரசே என்ற தேரோட்டி மணிகளை எடுக்கிறான்.
எதற்காக மணிகளை எடுக்கச் சொன்னேன்? தெரியுமா?
அரசே! தேரின் மணியோசை கேட்டு இங்குள்ள உயிர்கள் அஞ்சும். அவற்றின் இனிமைக்கு எந்த இடையூரும் ஏற்படக் கூடாது. அதனால் தானே இங்கு வரும் போது தேரின் மணிகளை எடுக்கச் சொல்கிறீர்கள்.
தேரோட்டியே! என் உள்ளத்தைப் புரிந்து வைத்திருக்கிறாய். தேரை நிறுத்து. அதோ அங்கே பார். எவ்வளவு மகிழ்ச்சியாக மான் கூட்டங்கள் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. அந்த மான் குட்டியின் அழகைப் பார். அதன் மருண்ட பார்வைக்கு இந்த உலகத்தையே பரிசாக அளிக்கலாமே.
அரசே! இங்கேயே சிறிது நேரம் இருந்து விட்டோம். மான்கள் கூட்டமும் சென்று விட்டது. தேரை மெல்ல செலுத்தட்டுமா?
செலுத்து .

தேர் மெல்ல நகர்கிறது.
ஆ! மேகக் கூட்டங்களைக் கண்ட மயில்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! தோகையை விரித்து ஆடுகின்றனவே.
இவற்றின் தோகைகள் வான வில்லின் வண்ணத்தையே மிஞ்சுகின்றனவே.
என்ன அழகிய காட்சி! இயற்கை தரும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது?

தேர் அங்கிருந்து மெல்ல நகர்கிறது.
ஆ! மான்களும் மயில்களும் என்னுடன் பேசுவதைப் போல் உணர்கிறேனே. வண்டுகளும் தும்பிகளும் தேனீக்களும் இசை எழுப்புகின்றனவே. அவை என்னை வாழ்த்துவதைப் போல் உள்ளதே!
நிழல் தரும் இந்த இனிய மரங்கள் காற்றில் அசைகின்றனவே. என்னிடம் ஏதோ பேச முற்படுவதைப் போல உள்ளதே. கொடிகள் அசைந்து ஆடுவது என்னிடம் கொஞ்சுவதைப் போல உள்ளதே.
உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுமையானது தானே. அதைச் சொல்ல நா வேண்டுமா? கேட்க செவி வேண்டுமா? நமக்கு உணர்வு இருந்தால் எல்லாவற்றின் உணர்வுகளையும் அறிந்து கொள்ளலாமே.
சூழ்ச்சி வஞ்சம் ஏதும் அறியாத இனிய உலகம் அல்லவா இது. மானாக மயிலாக நான் பிறக்க வில்லையே. அப்படிப் பிறந்து இருந்தால் இங்கேயே மகிழ்ச்சியாக இருப்பேனே.

தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது.
ஒரு முல்லைக் கொடிக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்தது.
இந்த அவலக் காட்சியைக் கண்டார் பாரி.
அவர் உள்ளம் துடித்தது. ஆ என்று அலறினார். தேரிலிருந்து கீழே குதித்தார்.
எதிர்பாராதது நடந்ததைக் கண்டு திகைத்தான் தேரோட்டி, தேரை நிறுத்தினான்.
தேரை விட்டு இறங்கிய அவன் அரசே என்ன நிகழ்ந்தது? என்று பணிவாகக் கேட்டான். அவரைப் பின் தொடர்ந்தான்.
ஏதும் பேசாத அவர் அந்த முல்லைக் கொடியின் அருகே சென்றார். கொழுகொம்பு இல்லாததால் காற்றில் தள்ளாடித் தவிக்கும் அந்தக் கொடியை பார்த்தார். அருள் உள்ளம் கொண்ட அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும அசைந்து துன்புறுகிறாய்.
இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே.

மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே.
என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.

முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர்.
பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார்.
தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி.

குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர்.
குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின.

முல்லைக் கொடியின் அருகே நின்றார்.
அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார்.
தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது.
அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது.

எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார்.
இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள்.
அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள்.
மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார்.

1. பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே!
(புறநானூற்றுப் பாடல் 107, கபிலர் பாடியது.)

 

2.இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி
(புறநானூற்றுப் பாடல் 200, அடிகள் 9 முதல் 12 வரை, கபிலர் பாடியது.)

சிறுவர் கதைகள் – விலங்குகள் பேசுவது புரிந்தால்

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம், காட்டு வழியாகச் சென்றான் அவன். அங்கே புலியிடம் சிக்கிக் கொண்டிருந்த துறவி ஒருவரைக் காப்பாற்றினான்.

மகிழ்ந்த துறவி, பறவைகள், விலங்குகள் என்ன பேசினாலும் இன்றுமுதல் உனக்குக் கேட்கும், இப்படிப்பட்ட ஆற்றல் உனக்குக் கிடைத்திருக்கிறது என்ற உண்மையை யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் தலை வெடித்து நீ இறந்து விடுவாய். போய் வா, என்றான்.
துறவியை வணங்கிவிட்டு அரண்மனைக்குப் புறப்பட்டான் அவன். வழியில் இருந்த விலங்குகள் பறவைகள் பேசிக் கொள்வது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. தற்செயலாகக் கிடைத்த விந்தையான ஆற்றலை எண்ணி மகிழ்ந்தான் அவன்.

இரவு நேரம், அவனும் அரசியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், அப்பொழுது சிறிதளவு தேனும் ஒரு உருண்டை சோறும் தவறித் தரையில் விழுந்தன.

அங்கிருந்த எறும்பு ஒன்று, ஓடி வாருங்கள், கூட்டமாக ஓடி வாருங்கள், நமக்கு இனி உணவுப் பஞ்சமே இல்லை. அரண்மனை மதுக் குடம் உடைந்து தேன் வெள்ளமாகப் பாய்கிறது. பெருஞ்சோற்று மலையே நமக்காகக் கிடக்கிறது, என்று உரத்த குரலில் தன் கூட்டத்தை அழைத்தது.

இதைக் கேட்ட அரசன், இரண்டு சொட்டு தேன், தேன் வெள்ளமா? ஒரு உருண்டை சோறு பெருஞ்சோற்று மலையா? இந்த எறும்பிற்கு அறிவே இல்லையா? இப்படியா வருணிப்பது? என்று நினைத்தான், அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தன்னை மறந்து கலகலவென்று சிரித்தான் அவன்.
அருகிலிருந்த அரசி, ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டாள்.

ஒன்றும் இல்லை, என்று மழுப்பினான் அவன்.

சாப்பிட்டு முடித்த அரசன் பட்டு மெத்தையில் படுத்தான். அரசி வெற்றிலை பாக்கு மடித்துத் தந்து கொண்டிருந்தாள். அறையில் இனிய மணம் பரவியது.

அங்கிருந்த ஆண் ஈ ஒன்று, பெண் ஈயை அழைத்து, எவ்வளவு இனிய சூழல் வா! நாம் இருவரும் அரசனின் முதுகில் இருந்து ஓடியாடி விளையாடுவோம். மகிழ்ச்சியா இருப்போம். இதைப் போன்ற நல்வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? என்றது.

என் முதுகு இந்த ஈக்களுக்கு மெத்தையா? என்று நினைத்தான் அரசன். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மீண்டும் கலகலவென்று சிரித்தான்.

ஏன் சிரிக்கிறீர்கள், என்று கேட்டாள் அரசி.
ஒன்றும் இல்லை, என்று வழக்கம் போல மழுப்பினான் அவன்.

உண்மையைச் சொல்லுங்கள். என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள்? நீங்கள் சொல்லாவிட்டால் நான் இனிமேல் உங்களுடன் பேச மாட்டேன். என் மீது உயிரையே வைத்திருப்பதாக நீங்கள் சொன்னதெல்லாம் நடிப்பு, என்று கோபத்துடன் சொன்னாள் அவள்.

என் உயிருக்கும் மேலாக நான் உன்னிடம் அன்பு வைத்திருக்கிறேன். நான் சிரித்ததற்கான காரணம் மட்டும் கேட்காதே என்றான் அவன்.

நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும், என்று வற்புறுத்தினாள் அவள்.
உண்மையைச் சொன்னால் என் உயிர் போய்விடும், என்றான் அவன்.
அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் சிரித்ததற்கான காரணம் எனக்குத் தெரிய வேண்டும், என்று அடம்பிடித்தாள் அவள்.

என்ன செய்தாலும் தன் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாது என்று உணர்ந்தான் அவன்.
என் உயிரைவிட உனக்கு நான் சிரித்ததற்கான காரணம் தெரிய வேண்டும். நாளை மாலையில் உனக்கு அந்த உண்மையைச் சொல்கிறேன். அப்படியே என் பிண ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்து வை. என்று வருத்தத்துடன் சொன்னான் அவன்.

பொழுது விடிந்தது. வழக்கம் போல அரண்மனைத் தோட்டத்தில் உலாவ வந்தான் அவன். மாலையில் இறக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் சோகமாக இருந்தான். அரண்மனை முழுவதையும் அரசன் இறக்கப் போகும் செய்தி பரவி இருந்தது.

உலாவிக் கொண்டிருந்த அவன் பின்னால் வளர்ப்பு நாய் சோகமாக வந்து கொண்டிருந்தது.

சிறிது தூரத்தில் அரண்மனைச் சேவல் பெட்டைக் கோழிகள் சூழ ஆரவாரமாக உலாவிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த நாயால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏ! சேவலே! உனக்குச் சிறிது கூட நன்றி கிடையாதா? நமக்கு இவ்வளவு காலம் உணவு அளித்துக் காப்பாற்றியவர் இந்த அரசர். இன்று மாலை இவர் இறக்கப் போகிறார். எல்லோரும் சோகமாக இருக்கின்றனர். இந்தச் சூழலில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயே? இது நியாயமா? என்று கேட்டது.

அதற்குச் சேவல், நம் அரசர் பெரிய முட்டாள். அவருக்கு இருப்பது ஒரே ஒரு மனைவி. அவளுக்காக உயிரைவிடத் துணிந்துள்ளார். எனக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் நீயே பார். என் பேச்சைக் கேட்டுத்தான் அவர்கள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குத் தண்டனை தருவேன். மனைவிக்காக இந்த அருமையான உயிரை நான் இழக்க மாட்டேன், என்று பதில் சொன்னது.

இந்தச் சிக்கலிலிருந்து அரசர் உயிர் பிழைக்க வழி இருக்கிறதா? என்று கேட்டது நாய்.

அரசர் மட்டும் அரசியிடம் உன்னைச் சவுக்கால் நூறு அடி அடிப்பேன். அதன் பிறகுதான் உண்மையைச் சொல்வேன் என்று சொல்லட்டும். எல்லாம் நல்லபடியாக நடக்கும், என்றது சேவல்.

நாயும் சேவலும் பேசிக் கொண்டிருந்ததை ஒன்று விடாமல் கேட்டான் அரசன். அரண்மனை திரும்பினான் அவன்.
மாலை நேரம் வந்தது. அவன் அருகே வந்த அரசி, இப்பொழுது உண்மையைச் சொல்கிறீர்களா? என்று கேட்டாள்.
நீ முதலில் சவுக்கால் நூறு அடி பெற வேண்டும். அதன்பிறகு நான் உண்மையைச் சொல்லிவிட்டு இறந்து விடுவேன், என்றான் அரசன்.

நான் சவுக்கடி பெற்றுக் கொள்கிறேன். எப்படியும் உண்மை தெரிந்தாக வேண்டும், என்றாள் அவன்.
அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் அரசன். கையில் சவுக்கை எடுத்த அவன் அவளை ஒங்கி அடித்தான்.
பத்து அடியைக் கூட அவளால் தாங்க முடியவில்லை. மென்மையான அவளுடைய உடலிலிருந்து குருதி கசியத் தொடங்கியது. ஐயோ! போதும் அடிப்பதை நிறுத்துங்கள். உங்கள் உண்மையும் வேண்டாம். சவுக்கடியும் வேண்டாம், என்று அலறினாள் அவள்.

சவுக்கால் அடிப்பதை நிறுத்தினான் அவன்.

அதன்பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

சிறுவர் கதைகள் – ஒரே அடியில் இருநூறு பேர்

முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் செருப்புத் தைப்பவன் ஒருவன் இருந்தான்.
இங்கு யார் என்னை மதிக்கிறார்கள்? நமக்கு நல்வாய்ப்பு தலைநகரத்தில் காத்திருந்தாலும் காத்திருக்கலாம். இளவரசியைக் கூட நான் மணந்தாலும் மணக்கலாம், என்று நினைத்தான் அவன்.

அறிவு நிரம்பிய அவன் கடைக்குச் சென்று கட்டி வெண்ணெய் வாங்கினான். அதைத் தன் மேசையின் மேல் வைத்தான். நான்கு நாட்கள் சென்றன. அந்த வெண்ணெயைப் பார்த்தான் அவன். அது நிறைய ஈக்கள் இருந்தன.
தான் செய்து வைத்திருந்த செருப்பு ஒன்றை எடுத்தான். அந்த வெண்ணெயில் ஓங்கி அடித்தான். நிறைய ஈக்கள் செத்தன. ஏராளமான ஈக்கள் துடிதுடித்தன.
அவற்ளை எண்ணினான் அவன். இறந்த ஈக்களின் எண்ணிக்கை இருநூறாக இருந்தது. அடிபட்டவற்றின் எண்ணிக்கை முந்நூறாக இருந்தது.

அவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கடைத் தெருவிற்குச் சென்ற அவன் வீரர்கள் அணியும் சீருடை வாங்கினான்.
அதை அணிந்து கொண்டு கம்பீரமாகத் தலை நகரத்துக்குச் சென்றான்.
அரசவைக்குள் நுழைந்த அவன், அரசர் பெருமானே! என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் சிறந்த வீரன். சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த போரில் நான் ஒருவனே இருநூறு பேரைக் கொன்றேன். முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன், என்றான்.

அவனை மேலும் கீழும் பார்த்தான் அரசன். உன்னைப் பார்த்தால் வீரனைப் போலத் தெரியவில்லை. தோற்றத்தை வைத்து முடிவுக்கு வரக் கூடாது. உன்னால் எனக்கு ஒரு வேலை ஆக வேண்டும், என்றான்.
கட்டளை இடுங்கள் அரசே! இந்த வாளும் என் உயிரும் இனி உங்களுடையது, என்று வீரமாகப் பேசினான் அவன்.
வீரனே! தலைநகரை அடுத்து உள்ள காட்டில் ஒரு பூதம் உள்ளது அது அவ்வப்பொழுது நாட்டிற்குள் நுழைந்து மனிதர்களைத் தூக்கிச் சென்று சாப்பிடுகிறது. எத்தனையோவீரர்கள் அதைக் கொல்லப் புறப்பட்டார்கள். யாருமே உயிருடன் திரும்பவில்லை. இந்த நாட்டு மக்கள் எல்லோரும் அஞ்சி அஞ்சி வாழ்கிறார்கள், என்றான் அரசன்.
அரசே என் வீரத்திற்கு இதைப் போன்ற பெரிய வேலையைத்தான் எதிர்பார்த்தேன். நான் அந்தப் பூதத்தின் தலையைக் கொண்டு வருகிறேன். எனக்கு இளவரசியைத் திருமணம் செய்து வைப்பீர்களா? என்று கேட்டான் அவன்.
யாராலும் செய்ய இயலாத செயல் இது. நீ சொன்னபடி செய்து முடித்தால் இளவரசியை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன், என்றான் அரசன்.

நான் அந்தப் பூதத்தைக் கொன்றுவிட்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டுக் கையில் பிடித்த வாளுடன் காட்டிற்குள் நுழைந்தான் அவன்.
எவ்வளவு பெரிய கூர்மையான வாளும் பூதத்தை ஒன்றும் செய்ய முடியாது. எவ்வளவு வேகமாக வலிமையாக வெட்டினாலும் அதற்குச் சிறு காயம்தான் ஏற்படும், என்பதும் அவனுக்குப் புரிந்தது.
தன் கையில் இருந்த வெண்ணெயை மாவில் உருட்டிப் பந்து போலச் செய்து கொண்டான் அவன். பார்ப்பதற்கு அது உருண்டையான கூழாங்கல் போல இருந்தது. அதைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.
குருவி ஒன்றைப் பிடித்த அவன் அதையும் தன் பைக்குள் வைத்துக் கொண்டான்.
அருகே இருந்த பெரிய மரம் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் பெரிய பூதம் ஒன்று அங்கே வந்தது. மூக்கை உறிஞ்சிய அது, இன்று எனக்கு நல்ல வேட்டை, மனித வாடை வீசுகிறதே! எங்கே இருக்கிறாய்? என்னிடம் இருந்து தப்ப முடியாது, என்று மகிழ்ச்சியுடன் கத்தியது.
தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், ஏ! பூதமே! என்னையா தேடுகிறாய்? நான் இந்த மரத்தை விட்டுக் கீழே இறங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த உலகத்திலேயே நான் தான் வலிமையானவன். சென்ற வாரம் கூட ஒரே அடியில் இருநூறு பேரை கொன்று முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன். உன்னைவிட நான் வலிமையானவன். என் ஒரு அடியைக் கூட நீ தாங்க மாட்டாய், என்று பெருமை பேசினான் அவன்.
நீ வலிமையானவன் என்றால் நிரூபித்துக் காட்டு, என்றது பூதம்.

அப்படியா? என்ற அவன் தன் சட்டைப் பையிலிருந்த கூழாங்கல் உருண்டையை எடுத்தான். அந்த உருண்டையை வானத்தில் தூக்கிக் போட்டுப் போட்டுப் பிடித்தான்.
இது என்ன சொல் பார்ப்போம், என்று கேட்டான், அவன்.
உருண்டையான கூழாங்கல், என்றது பூதம்.

என் வலிமையைப் பார், என்ற அவன் அந்த வெண்ணெய் உருண்டையைக் கைக்குள் வைத்து அழுத்தினான். அது பொலபொலவென்று தூள் தூளாகிக் கீழே விழுந்தது.
உண்மையை உணராத அந்த முட்டாள் பூதம் அவனை மிகுந்த வலிமையானவன் என்று நினைத்தது. கீழே வா. உனக்கு இன்னும் ஒரு சோதனை, என்றது அது.
எப்படியும் பூதத்தை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் கீழே குதித்தான் அவன்.
தரையில் கிடந்த சிறு கல்லை எடுத்தது அது. என் வலிமையைப் பார், என்று சொல்லி அந்தக் கல்லை உயரே வானத்தை நோக்கி வீசியது. அரை மணி நேரம் கழித்து அந்தக் கல் கீழே விழுந்தது.
எங்கே இதைப் போலச் செய்து உன் வலிமையைக் காட்டு, என்றது பூதம்.

நான் கல்லை மேலே வீசினால் கீழே விழவே விழாது. வான் உலகத்தைக் கிழித்துக் கொண்டு சென்று விடும். என்று பெருமையுடன் சொன்ன அவன் தன் பைக்குள் இருந்த சிட்டுக் குருவியை எடுத்தான். அதை மேலே தூக்கி எறிந்தான். அப்படியே பறந்து சென்றது அது.

பூதம் நீண்ட நேரம் காத்திருந்தது. மேலே எறிந்த கல் கீழே விழவே இல்லையே. இவனிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் என்னைக் கொன்று விடுவான், என்று நினைத்தது அது.

நீ என் விருந்தினன். என் மாளிகைக்கு வா. விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம், என்று அன்புடன் அழைத்தது அது.
இருவரும் பூதத்தின் மாளிகையை அடைந்தனர். அந்த மாளிகைகளைச் சுற்றிலும் தோட்டம் இருந்தது.
சமையல் செய்ய விறகு இல்லை. காட்டிற்குச் சென்று சிறிது விறகு கொண்டு வா, என்று அவனைப் பார்த்துச் சொன்னது பூதம்.
உடனே அவன், எதற்காக விறகு? நான் அந்தப் பெரிய மரத்தை அப்படியே இழுத்து வருகிறேன், என்றான்.
அந்தப் பெரிய மரத்தைப் பார்த்தது பூதம். அது கீழே விழுந்தால் தன் தோட்டம் பாழாகி விடும். மாளிகைச் சுவரும் இடிந்து விடும் என்று நினைத்தது அது.
பயந்து போன அது நானே, சென்று விறகு கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.
சிறிது நேரத்தில் விறகுடன் அங்கே வந்தது அது.
இன்னும் எப்படி எல்லாம் அதை ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன்.
பூதம் அவனைப் பார்த்து. சமைப்பதற்கு நீர் வேண்டுமே. கிணற்றுக்குச் சென்று இந்தப் பாத்திரத்தில் நீர் கொண்டு வா, என்றது-
பாத்திரத்தில் நீர் கொண்டு வருவதா? எனக்கு எவ்வளவு கேவலம், வலிமை உடைய நான் அந்தக் கிணற்றையே இங்கே இழுத்து வந்து விடுகிறேன். அதைக் கட்டி இழுக்க உறுதியான கயிறு ஒன்றைக் கொடு, என்று கேட்டான் அவன்.

இதைக் கேட்ட பூதம் மேலும் பயந்தது. நீ நீர் கொண்டு வர வேண்டாம். நானே கொண்டு வருகிறேன், என்றது அது.
இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அங்கிருந்த கட்டிலில் அவன் படுத்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த இன்னொரு கட்டிலில் பூதம் படுத்துக் கொண்டது.தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைத்த அவன் தூங்காமலே இருந்தான். பூதம் தூங்கி விட்டதை அறிந்த அவன் கட்டிலிலிருந்து மெல்ல இறங்கினான். ஒரு பூசனிக் காயைத் தன் கட்டிலில் வைத்தான். அதன் மீது போர்வையைப் போட்டு மூடினான். பார்ப்பதற்குக் கட்டிலில் யாரோ படுத்திருப்பது போலத் தோன்றியது.
பிறகு கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டான் அவன்.

நள்ளிரவு நேரம், பூதம் கட்டிலை விட்டு எழுந்தது. பக்கத்தில் இருந்த பெரிய இரும்புத் தடியைத் தூக்கியது.
கட்டிலில் படுத்திருந்த அவன் மண்டையில் தன் வலிமை கொண்ட மட்டும் அந்தத் தடியால் அடித்தது. போர்வைக்குள் இருந்த பூசனிக் காய் உடைந்து சிதறியது.

அவன் இறந்து விட்டான் என்று மகிழ்ந்தது அது. தன் கட்டிலில் படுத்த அது குறட்டை விடத் தொடங்கியது.
கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த அவன் எழுந்தான். பூசனிக் காய்த் துண்டுகளை எடுத்து வெளியே வீசினான். மீண்டும் அந்தக் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினான்.

பொழுது விடிந்தது. விழித்த பூதம் கட்டிலில் அவன் உயிருடன் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது.
கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான் அவன்.

இரவு நன்றாகத் தூங்கினாயா? உன் தூக்கத்திற்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டதா? என்று கேட்டது அது.
நள்ளிரவிலே ஏதோ கொசு ஒன்று என் காதில் கடித்தது போல இருந்தது. புரண்டு படுத்தேன். இங்கே கொசு அதிகமா? என்று கேட்டான் அவன்.

என் வலிமை எல்லாம் பயன்படுத்தி இருமூபுத் தடியால் இவன் மண்டையில் ஓங்கி அடித்தேன். யாராக இருந்தாலும் இறந்திருக்க வேண்டும். இவனோ கொசு கடித்தது போல இருந்தது என்கிறான். இவனிடம் நன்றாக மாட்டிக் கொண்டோமே. எப்படித் தப்பிப்பது? என்று பயந்து நடுங்கியது அது.
நமக்குள் இன்னொரு போட்டி வைத்தால் என்ன? என்று கேட்டான் அவன்.
என்ன போட்டி? என்று கேட்டது அது.

ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி வைப்போம். அதில் பாதியை நான் சிறிது கூட மென்று தின்னாமல் அப்படியே குடித்து விடுகிறேன், என்றான் அவன்.

நான் நம்ப மாட்டேன். நீ மென்றுதான் தின்றிருப்பாய். நீ மெல்லாமல் விழுங்கி இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது? அதை நான் என் வயிற்றுக்குள் இறங்கியா பார்க்க முடியும்? என்று கேட்டது அது.
உன்னால் பார்க்க முடியும். நான் கஞ்சியைக் குடித்ததும் வயிற்றில் ஒரு பகுதியைக் கிழித்துக் காட்டுகிறேன். பிறகு

உனக்கே நான் மென்று தின்றேனா இல்லையா என்பது விளங்கும், என்றான் அவன்.
சரி என்ற பூதம் கஞ்சி சமைக்கத் தொடங்கியது.
வேறு அறைக்குச் சென்ற அவன் சாக்குப் பையை எடுத்துத் தன் வயிற்றில் கட்டிக் கொண்டான். அதன் வாய்ப்பகுதி தன் தொண்டைக்கு நேராக இருக்குமாறு வைத்தான். உள்ளே பை இருப்பது தெரியாத வண்ணம் மேலே சட்டையை போட்டுக் கொண்டான்.

பூதம் கஞ்சி வைத்திருந்தது. அதைப் பாத்திரத்தோடு எடுத்தான் அவன். தன் தொண்டைக்கு அருகே இருந்த பைக்குள் அதைச் சிறிது சிறிதாக ஊற்றினான். குடிப்பது போல நடித்தான்.
சூழ்ச்சியை அறியாத பூதம் அவன் குடிப்பதாகவே நினைத்தது.

பூதத்தைப் பார்த்து அவன், நான் கஞ்சியை எப்படிக் குடித்து இருகூகிறேன் என்று பார். சிறிது கூட மெல்ல வில்லை. அப்படியே அரிசிச் சோறு இருக்கும். என்று சொல்லி கொண்டே கத்தியால் தன் வயிற்றைக் கிழித்தான். உண்மையில் அவன் கிழித்தது வயிற்றுக்குள் கட்டப்பட்டிருந்த சாக்கையே.
அவன் வயிற்றிலிருந்து கொண்டிய கஞ்சியைப் பூதம் பார்த்தது.

உன்னைப் போல நானும் செய்கிறேன், என்ற அது. இன்னொரு பாத்திரத்தில் இருந்த கஞ்சியை அப்படியே குடித்தது.
நான் எதையும் மெல்லவில்லை. அப்படியே குடித்து இருக்கிறேன் பார், என்று சொல்லிக் கொண்டே தன் வயிற்றைக் கத்தியால் கிழித்தது அது.
குருதீ கொட்ட குடல் வெளியே வந்து துடிதுடித்து அங்கேயே இறந்தது அது.

வெற்றி வீரனாகத் திரும்பிய அவனுக்கும் இளவரசிக்கும் ஒரு நல்ல நாளில் திருமணம் நடந்தது.

சிறுவர் கதைகள் – இரண்டு புலிக்கு எங்கே போவேன்?

ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான்.

பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது.

தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஏறினாள் அவள். வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டாள்.
அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. ஆபத்து வரப் போவதை மாடுகள் உணர்ந்தன. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன.

ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினாள் அவள்.

அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தாள் அவள்.

சிறிது தூரத்தல் பயங்கரமான புலி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவள் அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தாள்.
நல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது.

இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினாள். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள்.

குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.

இதைக் கேட்ட புலி நடுங்கியது, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பாள், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது.
ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது.

தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் அவள்.

பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது.

நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி.

இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது.
அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.

அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி.

தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி.

இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.
மரத்தில் இருந்த அவள் நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள் அவள்.

கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.

இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது.
அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.

நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது.
உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி.

வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி எங்கோ ஓடி மறைந்தது.

பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊரை அடைந்தாள்.

சிறுவர் கதைகள் – மொச்சைக்குத் தையல்

வெகு காலத்திற்கு முன் ஓர் ஊரில் ஏழைக் கிழவி ஒருத்தி இருந்தாள். சமைப்பதற்காக ஒரு பாத்திரம் நிறைய மொச்சை வாங்கினாள் அவள்.

அப்பொழுது மொச்சைக்குக் கருப்புப் பகுதி கிடையாது. முழுமையும் வெண்மை கலந்த பழுப்பு நிறமாக இருக்கும்.

மொச்சைகளை ஒரு பாத்திரத்தில் போட்டாள் அவள். அந்தப் பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்தாள். அடுப்பில் நெருப்பு மூட்டினாள். எரிப்பதற்காக வைக்கோலை அடுப்பிற்குள் நுழைத்தாள்.

பாத்திரம் சூடேறத் தொடங்கியது. தப்பிக்க நினைத்த ஒரு மொச்சை பாத்திரத்தில் இருந்து துள்ளிக் கீழே குதித்தது.

தீயில் எரியாமல் ஒரு வைக்கோல் எப்படியோ வெளியே வந்தது.

நெருப்புத் துண்டு ஒன்றும் தப்பித்து வெளியே வந்தது.

மூன்றும் அருகருகே இருந்தன.

“எப்படியோ தப்பித்தேன். இல்லாவிட்டால் கூட்டத்தோடு நானும் இறந்திருப்பேன்” என்றது மொச்சை.

“என் நிலையும் உன்னைப் போலத்தான். கிழவியை ஏமாற்றி விட்டு வெளியே வந்தேன். இல்லாவிட்டால் இந்நேரம் எரிந்து இருப்பேன்” என்றது வைக்கோல்.

“என்னைப் போல இருபது பேரை அந்தக் கிழவி அடுப்பிற்குள் போட்டாள். எல்லோரும் இந்நேரம் புகையால் சூழப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார்கள். நல்ல வேளை. நான் தப்பித்தேன்” என்றது நெருப்புத் துண்டு.

“உங்கள் இருவரையும் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இப்பொழுது நாம் என்ன செய்வது?” என்று கேட்டது மொச்சை.

“நாம் மூவரும் எப்படியோ சாவிலிருந்து தப்பித்தோம். இனிமேல் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். பல ஊர்களுக்குச் செல்வோம். இனிய அனுபவங்களைப் பெறுவோம்” என்றது வைக்கோல்.

நெருப்புத் துண்டும் மொச்சையும் இதை ஏற்றுக் கொண்டன.

அருகருகே இருந்தபடி மூன்றும் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தன.

சிறிது தூரம் சென்றன. அவற்றின் எதிரில் ஒரு ஆறு குறுக்கிட்டது. அதில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது.

மூன்றும் அந்த ஆற்றின் கரையில் நின்றன.

“இந்த ஆற்றை எப்படிக் கடப்பது?” என்று கேட்டது மொச்சை.

“ஆற்றின் நீர் வேகமாக ஓடுகிறது. எனக்குப் பயமாக இருக்கிறது” என்றது நெருப்புத் துண்டு.

இதைக் கேட்ட வைக்கோல், “கவலைப்படாதீர்கள். நான் மிக நீளமாக இருக்கிறேன். இக்கரையில் இருந்து அக்கரை வரை ஆற்றின் மேல் நான் படுத்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் என் மேல் நடந்து அக்கரையை அடைந்து விடுங்கள். பிறகு நானும் அக்கரை வந்து விடுகிறேன்” என்றது.

இரண்டும் அதன் திட்டத்தை ஏற்றுக் கொண்டன. வைக்கோல் நீண்டது. இருகரைகளையும் பிடித்துக் கொண்டு ஆற்றின் மேல் பாலம் போல் நின்றது.

நெருப்புத் துண்டு மெதுவாக வைக்கோலின் மேல் நடந்தது. ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்த அது கீழே பார்த்தது. தண்ணீர் சலசலவென்று ஓடுவதைக் கண்டு அஞ்சியது அது. பயத்தால் தயங்கியபடி சிறிது நேரம் அங்கேயே நின்றது.

அவ்வளவுதான்! நெருப்புத் துண்டின் வெம்மை தாங்காமல் வைக்கோல் எரிந்து இரண்டு துண்டுகள் ஆயிற்று. நெருப்புத் துண்டு ஆற்று நீருக்குள் விழுந்தது. “உஸ்” என்ற சத்தத்துடன் புகை எழுப்பி நீருக்குள் மூழ்கியது அது.

இரண்டு துண்டுகளான வைக்கோலும் ஆற்று நீருக்குள் விழுந்தது. ஆற்று நீர் அதை அடித்துக் கொண்டு சென்றது.

கரையில் இருந்து இந்த வேடிக்கையைப் பார்த்து மொச்சையால் சிரிப்பை அடிக்க முடியவில்லை.

“ஆ! ஆ!” என்று வயிறு குலுங்கச் சிரித்தது அது.

உடனே அதன் வயிறு வெடித்து விட்டது. உள்ளிருந்த குடல் வெளியே தெரிந்தது. வலி தாங்க முடியாமல் வேதனையால் துடித்தது அது.

அந்த வழியாக ஒரு தையல்காரன் வந்தான். மொச்சையின் மீது இரக்கப்பட்டான். தன் கையிலிருந்த ஊசி நூலால் அதன் வயிற்றைத் தைத்தான்.

கறுப்பு நூலால் அவன் தைத்ததால் இன்றும் மொச்சையிக் வயிற்றில் நீண்ட கறுப்புத் தையல் காணப்படுகிறது.

சிறுவர் கதைகள் – பெரியதை எடு!

உழவன் ஒருவன் வீட்டில் வெள்ளாடும் செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன.

தோட்டத்தில் விளையும் செடிகளை எல்லாம் அவை கடித்து நாசம் செய்தன.
கோபம் கொண்ட உழவன், நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள், என்று விரட்டினான்.

இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன.

செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது.
மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது.
சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது.
அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு.

என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு.
இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன.
சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன.
அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு.

இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன.
அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன.

ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள்.

நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு.

அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின.

நண்பர்களா நாய்கள்? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய்.

இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு.

செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது.
செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.
ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு.

அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது.
கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது.
அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு.
இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின.

இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய்.
மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன.

ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.
சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது.

பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது

செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு.
இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன.
ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன.

ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய்.

நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய்.

மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது.
மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.

ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?

சிறுவர் கதைகள் – மூட்டையை வைத்தால்

ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூவருமே அழகிகளாக விளங்கினார்கள்.
எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ஒருவன் வந்தான்.
அம்மா! நான் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். செல்வனாக இருக்கிறேன். என் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண் தேவை. உங்கள் மகள்களில் ஒருத்தியை அனுப்பி வையுங்கள். நான் அவளை அரசி போல வைத்துக் கொள்கிறேன், என்று இனிமையாகப் பேசினான்.
இதைக் கேட்ட மூத்த மகள், அம்மா! இங்கு நாம் வறுமையில் வாடுகிறோம், நான் இவருடன் செல்கிறேன், என்றாள்.
அவர் சொல்கின்ற வேலைகளைச் செய்து நல்ல பெயர் வாங்கு, என்று அவளை அனுப்பி வைத்தாள் தாய்.

அவளை அழைத்துக்கொண்டு நடந்தான் இளைஞன். நீண்ட தூரம் சென்ற பிறகு அவர்கள் ஒரு மாளிகையை அடைந்தார்கள்.
இதுதான் என் மாளிகை. இங்கு நீ உன் விருப்பம் போல இருக்கலாம் எந்த அறையை வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம். ஆனால் அந்தக் கடைசி அறையை மட்டும் நீ திறந்து பார்க்கக் கூடாது. என் கட்டளையை நீ மீறினால் நான் பொல்லாதவனாகி விடுவேன். எல்லா அறைகளின் சாவியும் இங்கே உள்ளது, என்றான் அவன்.
நான் ஏன் உங்கள் கட்டளையை மீறப் போகிறேன்.
அந்த அறையைத் திறந்து பார்க்க மாட்டேன், என்றாள் அவள்.
தோட்டத்தில் இருந்த ஒரு சிவப்பு ரோசாப் பூவைப் பறித்து வந்தான் அவன். அதை அவள் தலையில் சூடினான்.
நான் வெளியே செல்கிறேன். எப்பொழுது வருவேன் என்று எனக்குத் தெரியாது. அந்த அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் அவள். ஒவ்வொரு அறையிலும் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. ஒரு அறையில் நவரத்தினங்களும் பொற்காசுகளும் கொட்டிக் கிடந்தன.
எவ்வளவு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது? நாம் இங்கேயே மகிழ்ச்சியாக இருக்கலாம், என்று நினைத்தாள் அவள்.
பூட்டி இருந்த கடைசி அறை அவள் கண்ணில் பட்டது. அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
அந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கும்? ஏன் நம்மைப் பார்க்க வேண்டாம் என்று தடுக்கிறார்? மெல்லத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடி விடுவோம். கண்டிப்பாக அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை என்று நினைத்தாள் அவள்.

சாவியைப் போட்டு மெதுவாக அந்தக் கதவைத் திறந்தாள். உள்ளிருந்து அழுகுரலும் ஓலமும் கேட்டன. உள்ளே நுழைந்தாள்.

அங்கே கொடிய தீயில் பல உயிர்கள் வெந்து கொண்டிருந்தன. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அவை கெஞ்சின.
தன்னை அழைத்து வந்திருப்பது பிசாசு என்ற உண்மை அவளுக்குப் புரிந்தது. அவசரமாக அந்தக் கதவை மூடிப் பூட்டுப் போட்டாள்.

எதுவுமே நடவாதது போலத் தன் அறைக்குள் வந்து அமர்ந்தாள் அவள். அந்தத் தீயின் வெப்பத்தால் அவள் தலையில் இருந்த பூ வாடி விட்டது. இதை அவள் கவனிக்கவில்லை.

மீண்டும் அங்கு வந்த இளைஞன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.
என் கட்டளையை மீறி விட்டாய். அந்த அறையைத் திறந்து பார்த்து இருக்கிறாய். உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கோபத்துடன் கத்தினான் அவன்.
நான் திறக்கவில்லை, என்று நடுங்கிக் கொண்டே சொன்னாள் அவள்.
உன் தலையில் உள்ள ரோசாப் பூ எப்படி வாடியது? என்னிடமா பொய் சொல்கிறாய்? நீயும் அந்தத் தீயில் கிடந்து புலம்ப வேண்டியதுதான், என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவன்.
என்னை மன்னித்து விடுங்கள், இனி மேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன், என்று கதறினாள் அவள்.
அவளை அந்தத் தீயில் தள்ளிவிட்டு அறையைப் பூட்டினான் அவன்.

துணி வெளுப்பவளின் வீட்டிற்கு மீண்டும் வந்தான் அவன், அம்மா! உங்கள் பெண் எங்கள் வீட்டில் நன்றாக இருக்கிறாள். அங்கே அவளுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தங்கையையும் அழைத்து வரச்சொன்னாள். அதனால்தான் வந்தேன், என்றான்.

அடுத்தவளும் அவனுடன் புறப்பட்டான்.
இருவரும் மாளிகையை அடைந்தார்கள். வழக்கம் போல அவளுக்கும் சிவப்பு ரோசாப் பூவை சூடினான் அவன்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடைசி அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான் அவன்.
ஆர்வத்தை அடக்க முடியாத அவளும் அந்த அறையைத் திறந்தாள்.
திரும்பிவந்த அவன் அவளையும் தீக்குள் தள்ளினான்.
துணிவெளுப்பவளின் வீட்டிற்கு மூன்றாம் முறையாக வந்தான் அவன், உங்கள் இரு மகள்களும் என் மாளிகையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவளுக்கு அங்கே வேலை அதிகமாக இருக்கிறதாம். கடைசித் தங்கையையும் அழைத்து வரச் சொன்னார்கள். அதற்காகத்தான் வந்தேன், என்றான் அவன்.

என் மகள்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குப் போதும் இவளையும் அழைத்துச் செல், என்றாள் தாய்.
கடைசி மகளையும் அழைத்து கொண்டு அவன் புறப்பட்டான், இருவரும் மாளிகையை அடைந்தனர்.
வழக்கம் போல அவள் தலையிலும் ரோசாப் பூவை அணிவித்தான் அவன்.
என் அக்கா ரெண்டு பேரும் எங்கே? என்று கேட்டாள் அவள்.
வேறு வேலையாக வெளியே சென்று இருக்கிறார்கள். வர ஒரு வாரம் ஆகும். நீ இந்த மாளிகையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் கடைசி அறையை மட்டும் திறக்கக் கூடாது மீறினால் உனக்குக் கடுந்தண்டனை கிடைக்கும். நான் வெளியே செல்கிறேன். திரும்பி வர நேரம் ஆகும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

அக்கா இருவரையும் காணவில்லை, வந்தவுடன் தலையில் ரோசாப் பூவைச் சூடுகிறான். ஒரு அறைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்கிறான். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது, என்பது அவளுக்குப் புரிந்தது.
அறிவுக்கூர்மை, உடைய அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். திறக்கக் கூடாது என்று தடுத்த அறைக்கும் ரோசாப் பூவிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது, என்று அவளுக்குத் தோன்றியது.
தலையில் இருந்த ரோசாப் பூவை எடுத்தாள். அருகில் இருந்த கிண்ணத்தில் அதை வைத்து மூடினாள்.
மெதுவாக நடந்து அந்த அறைக் கதவைத் திறந்தாள். உள்ளே தீயில் பலர் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களில் தன் இரண்டு அக்காவும் இருப்பதைக் கண்டு திகைத்தாள்.
எங்களால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. தங்கையே! நீதான் எப்படியாவது எங்களைக் காப்பாற்ற வேண்டும். புத்திசாலியாகிய நீ ரோசாப் பூவை சூடாமலேயே வந்து இருக்கிறாய். நீ வந்திருப்பது அந்தப் பிசாசிற்குத் தெரிய வாய்ப்பே இல்லை, என்றாள் மூத்தவள்.

கவலைப் படாதீர்கள் நான் உங்களை எப்படியும் காப்பாற்றுகிறேன், என்று வெளியே சென்றாள் அவள்.
பழையபடி அந்த அறையைப் பூட்டினாள். ரோசாப் பூவை எடுத்துத் தலையில் மீண்டும் அணிந்து கொண்டாள்.
இரவு நேரம், அவன் வந்தான். ரோசாப் பூ வாடாததைக் கண்டான். அவள் அந்த அறைக்குள் நுழைந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள்.

நாள்தோறும் அவள் தலையில் புதிய ரோசாப் பூவை சூடிவிட்டுச் சென்றான் அவன்.
தன் இரண்டு அக்காவையும் எப்படித் தப்பிக்க வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் அவள்.
நான்கு நாட்கள் சென்றன.
இளைஞனைப் பார்த்து அவள், இங்கே எனக்கு ஏராளமான வேலை இருக்கிறது. துணி துவைக்க நேரமே இல்லை. அழுக்குத் துணிகளை எல்லாம் பெரிய மூட்டையாகக் கட்டி வைத்து இருக்கிறேன். என் அம்மாவின் வீட்டில் தந்துவிட்டு வாருங்கள், என்றாள்.
நாளை மாலை அந்த மூட்டையைத் தூக்கிச் செல்கிறேன், என்றான் அவன்.
பொழுது விடிந்தது. அவன் வழக்கம் போல வெளியே சென்றான். அறைக்குள் சென்ற அவள் மூத்த அக்காவை வெளியே கொண்டு வந்தாள்.
நீ நம் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். நான் சொல்கின்றபடி நடந்து கொள். எல்லோரும் தப்பிக்கலாம் என்றாள் அவள்.
பெரிய சாக்கிற்குள் அக்காவை நுழைத்தாள் அவள். சுற்றிலும் அழுக்குத் துணிகளை வைத்தாள். சாக்கை இறுகக் கட்டினாள்.
இளைஞன் வந்தான். அவனிடம் அவள், அழுக்குத் துணி மூட்டை தயாராக உள்ளது. அதைத் தூக்கிச் செல்லுங்கள். வழியில் எங்கும் மூட்டையை வைக்கக் கூடாது. வைத்தால் எனக்குத் தெரிந்து விடும். என்னை ஏமாற்ற முடியாது. மூட்டையைக் கீழே வைத்தால் வைக்காதே என்று குரல் கொடுப்பேன்.
இருட்டுவதற்குள் இந்த மூட்டையை என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள். அவரிடம் அடுத்த வாரம் வேறு அழுக்கு மூட்டை கொண்டு வருகிறேன். இதைத் துவைத்து வையுங்கள். அப்பொழுது எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லுங்கள். அங்கே அதிக நேரம் தங்காதீர்கள் உடனே புறப்பட்டு விடுங்கள் என்றாள் அவள்.
சூழ்ச்சியை அறியாத அவன் மூட்டையை தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.
மூட்டை மிகவும் கனமாக இருந்தது. அழுக்கு மூட்டையா இவ்வளவு கனம்? கீழே வைத்து விட்டு இளைப்பாறலாம் என்று நினைத்தான் அவன்.
தோளில் இருந்து மூட்டையைக் கீழே இறக்க முயற்சி செய்தான்.
அதற்குள் இருந்தவள், நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். மூட்டையைக் கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள்.
மாளிகைக்குள் இருக்கும் பெண்தான் பேசுகிறாள். எவ்வளவு தொலைவில் நடப்பதும் அவள் கண்களுக்குத் தெரிகிறதே? இறக்கி வைத்தால் நம்மைப் பற்றித் தப்பாக நினைப்பாளே, என்று நினைத்தான் அவன். மூட்டையைத் தூக்கிக் கொண்டே நடந்தான்.
ஒரு வழியாக வீட்டை அடைந்தான் அவன். கதவைத் தட்டி, அம்மா! உங்கள் பெண் அழுக்குத் துணி மூட்டையை அனுப்பி இருக்கிறாள். நன்கு துவைத்து வையுங்கள். அடுத்த வாரம் வேறு துணி மூட்டையுடன் வருகிறேன். அப்பொழுது இதை எடுத்துச் செல்கிறேன். எனக்குத் தங்க நேரம் இல்லை. உடனே வீடு திரும்ப வேண்டும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.அடுத்த வாரம், தன் இரண்டாவது அக்காவை மூட்டைக்குள் வைத்துக் கட்டினாள் அவள்.
வழக்கம் போல அவளையும் தூக்கிச் சென்றான் அவன். வழியில் மூட்டையை வைக்க அவன் முயற்சி செய்தான். மூட்டையைக் கீழே வைக்காதே நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன், என்ற குரல் கேட்டது.
எப்படியோ ஒரு வழியாக அவள் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலிலேயே அவனுக்காகத் துணி வெளுப்பவள் காத்திருந்தாள்.

அவளைப் பார்த்து அவன், அம்மா! உன் மகள் அழுக்குத் துணி அனுப்பி இருக்கிறாள். ஒரு வாரத்திற்குள் எப்படித்தான் இவ்வளவு துணி சேர்கின்றதோ தெரியவில்லை. இதையும் வெளுத்து வையுங்கள். அடுத்த முறை வரும்போது இரண்டு மூட்டை துணிகளையும் எடுத்துச் செல்கிறேன். இப்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.
தன் இரண்டாவது மகளும் வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தாள் அவள்.
களைப்புடன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான் அவன். என் வீட்டில் துணி மூட்டையைச் சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டாள் அவள்.

துணி மூட்டையா அது? என்ன கனம்? என்னால் தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை. நான் கீழே வைக்க முயன்றால் போதும். எப்படித்தான் உனக்குத் தெரியுமோ? உடனே நீ கீழே வைக்காதே, என்று குரல் கொடுக்கிறாய். அதைத் தூக்கிச் செல்ல நான் படும் துன்பம் எனக்குத்தான் தெரியும். இனிமேல் அழுக்குத் துணி மூட்டையை நான் எடுத்துச் செல்ல மாட்டேன், என்றான் அவன்.
இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். அதன் பிறகு நானே இங்கு துவைத்துக் கொள்கிறேன். துணியைக்கூட நீங்கள் அங்கிருந்து கொண்டு வர வேண்டாம். இந்த முறை மூட்டை அதிக கனமாக இருக்கும், என்றாள் அவள்.

இதுதான் கடைசி முறை, இனிமேல் முட்டையைத் தூக்கிச் செல்ல மாட்டேன், என்றான் அவன்.
பிறகு வெளியே சென்று விட்டான்.
அந்த மாளிகைக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் திரட்டினாள் அவள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைக்குள் போட்டாள்.

புறப்படும் நாள் வந்தது. இளைஞனிடம் அவள், எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் அறைக்குள் படுத்திருப்பேன். என்னை எழுப்ப வேண்டாம். இன்று மட்டும் இருட்டியதும் அந்த மூட்டையை எடுத்துச் செல்லுங்கள். வழியில் எங்கும் கீழே வைக்காதீர்கள். என்னை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். இங்கிருந்தபடியே எங்கும் நடப்பதை என்னால் சொல்ல முடியும், என்றாள்.
நீ மூட்டை கட்டி வை. நான் திரும்பி வந்ததும் எடுத்துச் செல்கிறேன், என்று வழக்கம் போல வெளியே புறப்பட்டான் அவன்.

உடனே அவள் தன் படுக்கையில் தலையணைகளை வைத்தாள். மேலே போர்வையைப் போட்டு மூடினாள். சிறிது தூரத்தில் இருந்து படுக்கையைப் பார்த்தாள். யாரோ படுத்திருப்பதைப் போன்று தோன்றியது.
சாக்கு மூட்டைக்குள் நுழைந்தாள் அவள். தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்தாள். வெளியே ஒரு கையை மட்டும் நீட்டி சாக்கைக் கட்டினாள். பிறகு கையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் இளைஞன் உள்ளே வந்தான். படுக்கையில் அவள்தான் படுத்து இருக்கிறாள் என்று நினைத்தான்.
சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. தள்ளாடிக் கொண்டே நடந்தான் அவன். பாதி தூரம் கூடக் கடக்கவில்லையே, மூட்டையைக் கீழே வைத்து விட்டு இளைப்பாறுவோம் என்று நினைத்தான் அவன், தோளில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தான்.
உடனே அவள், நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள்.
அவனும் பலமுறை கீழே வைக்கலாம் என்று நினைத்தான், ஒவ்வொரு முறையும் அவள் குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.

எப்படியோ முயன்று அவர்கள் வீட்டை அடைந்தான் அவன். கடைசி மகளின் வருகைக்காகத் தாய் வெளியேயே காத்திருந்தாள். பெரிய மூட்டையுடன் அவனைப் பார்த்ததும் துணி வெளுப்பவளுக்கு மகிழ்ச்சிதாங்கவில்லை.
மூட்டையை இறக்கி வைத்தான் அவன். அப்பாடா! தொல்லை ஒழிந்தது. இனி மூட்டை தூக்கி வரும் வேலை எனக்கு இல்லை, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

சாக்கை அவிழ்த்தாள் அவள். விலை உயர்ந்த பொருள்களுடன் மகளும் வெளியே வந்தாள்.
மகளைக் கட்டித் தழுவிக் கொண்ட அவள், உள் அறிவுக் கூர்மையால் எல்லோரும் அந்தப் பிசாசிடம் இருந்து தப்பி விட்டோம். நிறைய பொருளும் கொண்டு வந்தாய். இனி நமக்கு வறுமையே இல்லை, என்றாள்.
அம்மா! என் திறமையை அந்தப் பிசாசு இந்நேரம் அறிந்து கொண்டிருக்கும். இனி அது நம் வழிக்கே வராது. கவலை இல்லாமல் நாம் இருக்கலாம், என்றாள் மகள்.

மிகுந்த களைப்புடன் தன் மாளிகையை அடைந்தான் அவன். நீ சொன்னபடியே மூட்டையைச் சேர்த்து விட்டேன். மூட்டையா அது? என்ன கனம்? என்று படுக்கையைப் பார்த்துப் பேசினான்.
படுக்கையில் எந்த அசைவும் இல்லை. போர்வையை நீக்கிப் பார்த்தான். தலையணைதான் இருந்தது. பரபரப்புடன் சென்று கடைசி அறையைத் திறந்தான். அந்தப் பெண்கள் இருவரையும் காணவில்லை.
மூவரும் எப்படித் தப்பித்து இருப்பார்கள் என்று குழம்பினான் அவன். மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை விளங்கியது.

நானே ஒவ்வொருவராகச் சுமந்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு வந்திருக்கிறேன். நன்றாக ஏமாந்து விட்டேன், என்று வருந்தினான் அவன்.
நம் உண்மை உருவத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது, என்று நினைத்தான் அவன், அவர்கள் வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தையே விட்டு விட்டான்.

பரமார்த்த குரு கதைகள் – குரங்கு விடு தூது!

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. அதற்காகத் தம்முடைய புத்திகெட்ட சீடர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

“குருதேவா! திருட்டுத் தொழில் செய்தால் என்ன?” என்று கேட்டான், மட்டி

“மாட்டிக் கொண்டால் உதைப்பார்களோ!” என்றான் மடையன்.

“அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் தரலாம்!” என்று யோசனை கூறினான், முட்டாள்.

“ஆகா! அருமையான திட்டம்தான். ஆனால் எப்படிக் குரங்கைப் பிடிப்பது?” என்று கேட்டார், பரமார்த்தர்.

“பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன?” எனக் கேட்டான், மண்டு.

“நமக்குக் குரங்கு வேண்டும் என்றால், முதலில் பிள்ளையாரைப் பிடிக்க வேண்டும். பிறகு அது தானாகவே குரங்காக ஆகிவிடும்” என்று விளக்கம் சொன்னான், மூடன்.

“இதுவும் சரிதான். ஆகவே, இப்பொழுதே சென்று பிள்ளையாரைப் பிடிப்போம், வாருங்கள்” என்றபடி புறப்பட்டார் பரமார்த்தர். சீடர்களும் அவருடன் சென்றனர்.

அரச மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டார் குரு. “சீடர்களே, இப்பொழுது பிள்ளையார் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் சப்தம் போடாமல் மெதுவாகச் சென்று, “லபக்” என்று பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார், பரமார்த்தர்.

சீடர்களும் மரத்தைச் சுற்றி வந்து பிள்ளையார் சிலை மேல் விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர்.

அப்போது, குரங்காட்டி ஒருவனிடம் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று அங்கே வந்தது.

அதைக் கண்ட பரமார்த்தர், “சீடர்களே! இதோ குரங்கு வந்து விட்டது! விடாதீர்கள், பிடியுங்கள்!” என்று கத்தினார்.

மட்டியும் மடையனும் வேகமாகத் துரத்திச் சென்று அந்தக் குரங்கைப் பிடித்து விட்டனர்.

அதைக் கண்ட பரமார்த்தர், இது சாதாரணமான குரங்கு அல்ல. இராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயரே தான்!” என்று சொன்னபடி அதன் கால்களில் விழுந்து வணங்கினார்.

சீடர்களும், “ரங்கா, ரங்கா!” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

மடத்துக்கு வந்து சேர்ந்ததும், “நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால் அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை. அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு வரும்படிக் குரங்கை அனுப்புவோம்” என்றான் மட்டி.

“குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!” என்று அதை ஏவி விட்டான் முட்டாள்.

அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன.

வாணக் கடைக்குச் சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது.

அதைக் கண்ட மடையன், “சொன்னபடி சுருட்டுகளை சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!” என்று மகிழ்ந்தான்.

“ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!” என்றான், முட்டாள்

பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, “நம் குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் புராவும் கருப்பு நிறம் தான். நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் இருக்கின்றன” என்று பெருமைப்பட்டுக் கொண்டான் மண்டு.

பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன், “நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த சாதி சுருட்டு” என்றான்.

சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக் கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு வைத்தான், முட்டாள்.

ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர் சீடர்கள்.

அடுத்த கணம், “டமால், டுமீல்” என்று ஒவ்வொருவர் வாயிலும் இருந்த பட்டாசு வெடித்தது.

வாய் இழந்த சீடர்கள், “ஐயோ, ஆஞ்சநேயா!” என்று அலறிக் கொண்டு உருண்டனர்.

நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், “இனி மேலாவது எனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார்.

“குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்” என்றனர் சீடர்கள்.

பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.

அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு….

அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு.

பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர்.

“குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!” என்றான் மண்டு.

பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள்.

“இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்” என்று புகழ்ந்தான் மட்டி.

மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.

“வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!” என்று புறப்பட்டார், பரமார்த்தர்.

தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர்.

அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதக்கப்பட்டது.

“குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!” என்று புலம்பினார்கள் சீடர்கள்.

சிறுவர் கதைகள் – ஆசை

மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது.

இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை.

பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது.

பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான்.

மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா.

“நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்” என்று கேட்டார் அவன் மாமா.

“நான் படித்து கலெக்டராக வருவேன்” என்றான் மணிவண்ணன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா “தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்” என்றார்.

மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

“ஒரு ஏழையின் மகன் கலக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?” என்று நினைத்தான்.

வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான்.

பாடங்களில் அவன் மனம் லயிக்கவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார்.

ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.

“ஒரு ஏழையின் மகன் கலக்டராக ஆசைப்படுவது பேராசையா” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். “இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்” என்றார்.

அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது.

ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர்,

“உன் சந்தேகத்தை அவரிடமே கேள்” என்றார்.

முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலக்டரிடம் கேட்டான்.

“ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா?”

“நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை” என்று பளிச்சென்று கூறினார் கலக்டர்.

“நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்”

“உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது” என்று பேசி முடித்தார் கலக்டர்.

இருபது ஆண்டுகள் கழிந்தன.

அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.

“நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது” என்று கலக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

சிறுவர் கதைகள் – சாகாத வரம்

வையாபுரி பட்டினம் என்ற நகரம் கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தது.

வையாபுரி பட்டினத்தில் முத்து வியாபாரி மாணிக்கத்தை தெரியாதவர் இருக்கமுடியாது. மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் விசாலமாக இருக்கும்.

முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள்.

இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான்.

அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர்.

முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று தோன்றியது. சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார்.

பேராசை கொண்ட ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் முத்துவை கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள் அண்ணன் முத்து திரும்பி வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

அண்ணனும் தம்பிகள் சொன்னதை நம்பினான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர்.

அடுத்த நாள் அந்த குளக்கரையில இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்தான் முத்து. ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயமும் இல்லை.

தூங்கி எழுந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் பிரத்யட்சமாய் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான்.

“என்ன நடந்தது…?” என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து.

“இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய்….” என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்தார்.

முத்து வீட்டிற்குத் திரும்பினான் ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர்.

“காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம்… உங்களைப் பார்த்த பின்னர் தான்….. எங்களுக்கு உயிரே வந்தது” என்று சொல்லி அழுதனர்.

“என்ன நடந்தது……” என்று கேட்டனர்.

எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னதுடன், 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தையும் பற்றி கூறினான்.

தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டனர்.

பேராசை பிடித்த ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர்.

அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர்.

தூங்கி எழுந்தனர். அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார்.

“உங்களுக்கு என்ன நடந்தது”? என்றார் கடவுள்.

தங்களை விரோதிகள் அடித்துப் போட்டதாக கூறினர்.

“கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும்…..” என்றான் ரத்தினம்.

“நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும்” என்றான் வைரம்.

ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள்.

கடவுளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.

“நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம்..” என்றார் கடவுள்.

“சொல்லுங்கள்… சொல்லுங்கள்” என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக.

“கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்” என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர்.

இருவரும் நீருக்குள் மூழ்கினர். ரத்தினத்தை விட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று வைரம் நினைத்தான்.

வைரத்தைவிட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று நினைத்தான் ரத்தினம்.
யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார் என்று பார்த்தபடி கடவுள் நின்று கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் வைரமும், ரத்தினமும் பிணமாக குளத்தில் மிதந்தனர்.

சிறுவர் கதைகள் – பத்தாவது பாஸ்

நாதஸ்வரம் மற்றம் மேளதாளத்துடன் பாண்டித்தேவரும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸீக்காக காத்துக் கிடந்தனர்.

மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான்.

அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது.

பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.

ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள்.

தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது?

“பாஸ் பண்ணிட்டியாப்பா” என்றாள் அம்மா

“ஆமாம்மா பாஸாயிட்டேன்” ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

“என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?”

“ஆமாம்”

“டாக்டருக்குப் படிக்கப் போறியாமே”

“ஆமாம்”

“இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?”

இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர்

இவனும் ஓயாமல் பொய் சொன்னான்.

“ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்” என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர்.

ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம்

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான்.

அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம்.

பாண்டித்தேவர் வசதியானவர் என்று சொல் முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார்.

ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு.

அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான்.

இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு.

“என்ன என்ன?” என்று பதட்டம் அடைந்தார் பாண்டித்தேவர்.

“நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.

ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர்.

பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார்.

“பாண்டித் தேவர் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார் பாண்டித்தேவர்.

“இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்” என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு.

பாண்டித்தேவருக்குப் பெருமையாக இருந்தது.

அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

அரசர் கதைகள் – மந்திரியான காக்கை அண்ணாச்சி

மங்கள தேவி கோட்டத்தின் கீழ்ப்பகுதியல் குமுளி மலைத் தொடரும். மேற்பகுதியில் தேக்கடி மலைத் தொடரும் காடுகளால் சூழப்பட்டு இருந்தன.

அன்று குமுளி மலைப்பகுதி காடு பரபரப்பாயிருந்தது. காரணம் காட்டுக்குள்ளே அன்று தேர்தல் நடந்தது.

மிருகங்களும், பறவைகளும் மற்றும் புழு பூச்சிகளும் கூட தேர்தலில் கலந்து கொண்டன.

வேங்கைப்பள்ளம் என்ற இடத்தில் இந்தத் தேர்தல் நடந்தது. தோதகத்தி மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் செந்நாய்கள் அதிகம் இருந்தன.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தல். தேர்தலை இந்த முறை செந்நாய்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இந்தத் தேர்தலில் சுகாதார மந்திரிக்கு மட்டும் மும்முனைப் போட்டி வந்துவிட்டது. சுகாதார மந்திரிக்குப் போட்டி இடுபவர் தங்களை தூய்மையானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும்.

சுகாதார மந்திரிப் பதவிக்கு பன்றியும், பட்டாம் பூச்சியும், காக்கையும் போட்டியிட்டன.

போட்டியைத் தவிர்க்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. எனவே ஓட்டு எடுப்பு நடத்துவது அவசியமாகி விட்டது.

சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்கு தேர்தலை நடத்தியது. பல ஆண்டுகள் பிரதமராக இருந்த சிங்கம் வயதான காரணத்தால் சபாநாயர் பதவிக்கு நின்று தோற்றுப் போனது.

காட்டரசுத் தலைவராக முயல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கு மட்டும் போட்டி கடுமையாக இருந்தது.

ஆரம்பத்தில் காட்டு எருமையை ஆதரித்த குரங்குகள் திடீரென்று செந்நாயை ஆதரித்தன. தவிர செந்நாய்கள் அராஜகத்திற்கு பயந்து மான்கள் முழுமையாக செந்நாயை ஆதரித்தன. செந்நாய் பிரதமராகி விட்டது.

நிதி மந்திரியாக வரிக்குதிரையும், பாதுகாப்பு மந்திரியாக ஓநாயும், உணவு மந்திரியாக கழுதையும், சொற்பமான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தன.

வெளியுறவு மந்திரியாக எவ்வித போட்டியும் இன்றி நரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகர் குரங்கார் முதலில் பன்றியாரை அழைத்துத் தனது தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறும்படி பணித்தார்.

பன்றியார் வேகமாக மேடையை நோக்கி நடந்தார். வழியில் நின்றிருந்த யானையார் பட்டென்று நகர்ந்து அவருக்கு வழி விட்டார்.

பன்றியார் மேடைக்கு வந்ததும் காட்டரசுத் தலைவர் நாற்றம் தாள முடியாமல் தனது பெரிய காதுகளை தேய்த்துக் கெண்டார்.

“என்னுடைய வாழ்க்கையே சுகாதாரப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவன். அது மட்டுமல்ல.. யானையார் போன்ற பெரியவர்கள் கூட என்னைக் கண்டதும் விலகி நிற்பார்கள். எனவே என்னை உங்கள் சுகாதார மந்திரியாக தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்…..” என்று சொல்லிவிட்டுப் போய் உட்கார்ந்தார்.

அடுத்து தனது சிவப்பு நிற இறக்கைகளை விரித்துப் பறந்து வந்தது பட்டாம்பூச்சி. முயலார் பட்டாம் பூச்சியின் வண்ணத்தைப் பார்த்து மயங்கினார்.

தனது சிறகுகளை அசைத்தபடி பேசியது பட்டாம்பூச்சி.

“அண்ணாச்சி பன்றியார் வந்து நின்று பேசிய இடத்தை சுத்தம் செய்யவே தனியாக ஒரு சுகாதார மந்திரியைப் போட வேண்டும்” என்றதும் கொல்லென்று எல்லாம் சிரித்தன.

“என்னைப் பாருங்கள்.. என் சிறகுகளைப் பாருங்கள். என்னைப் போல நீங்களும் அழகாக இருக்க உங்கள் வாக்குகளை எனக்கே போடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.

அடுத்து காகம் வந்தது….”பன்றியார் வந்தார் நான் சுகாதாரத்தின் அவதாரம் என்றார்.. நானே சுத்தம் செய்கிறேன் என்றார்….வாஸ்தவம் தான். அவர் இருக்கும் இடம் எப்படிப் பட்ட இடம் என்று நமக்குத் தெரியாதா? அது கிடக்கட்டும். நமது பட்டாம்பூச்சி அண்ணாச்சி குடிப்பது தேன்தான் இல்லை என்று சொல்லவில்லை. அவர் படுப்பது எங்கு என்று தெரியுமா? பிராணிகளின் மலம்.

மலத்தை உண்பவருக்கு உங்கள் ஓட்டா?

மலத்தில் உறங்குபவருக்கு உங்கள் ஓட்டா?”
என்ற கேள்வியுடன் பறந்து சென்றார் காக்கையார்.

அதன் பின்னர் பறவைகளும், மிருகங்களும் இவற்றை ஆதரித்தும், தாக்கியும் பேசி ஓட்டு வேட்டை ஆடின.

கடைசியாக நரியாரை எழுந்து பேசும்படி எல்லாம் வற்புறுத்தின.

நரியார் தனது வாலால் முகத்தைத் துடைத்தபடி மேடையில் ஏறினார். எப்போதும் நரியார் பேச்சுக்கு பரவலான மரியாதை இருந்தது.

“காட்டரசர் நாமம் வாழ்க” என்று பேச ஆரம்பித்தார் நரியார்.

“பன்றியார் சொன்னது போல்….. அவர் மலக்கழிவுகளை உண்டு சுகாதாரத்திற்கு வழி செய்கிறார் என்பது வாஸ்தவம்தான்…. பட்டாம் பூச்சியார் சுத்தமான தேனைக் குடிக்கிறார். பார்க்க அழகாக கவர்ச்சியாக இருக்கிறார் அதுவும் சரிதான்”

நரியார் சொன்னதை எல்லா பறவைகளும் மிருகங்களும் உன்னிப்பாய் கவனித்தன.

“காக்கையாரும் பன்றிகளைப் போல அசுத்தங்களை உண்டு சுத்தப்படுத்துகிறார்.. இது நமக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு நிறுத்தியது. முக்கியமான செய்தியைச் சொல்லும் போது நரியார் இப்படி நின்று நிதானித்துப் பேசுவார்.

“சுத்தம் என்பது தானும் சுத்தமாக இருக்க வேண்டும். தனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூவரில் இதற்குப் பொருத்தமானவர்?” என்ற கேள்வியுடன் மீண்டும் ஒருமுறைத் தனது பேச்சை நிறுத்தினார்.

யானையார் கூட தனது காதுமடல்களை அசைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

“பன்றியாரின் உடம்பையும், உறைவிடத்தையும் சுத்தமானது என்று சொல்ல முடியாது. மலத்திலும் மூத்திரத்திலும் படுத்து உறங்கும் பட்டாம் பூச்சியாரும் சுகாதாரச் சூழலில் வாழ்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால்” கொக்கி போட்டு நிறுத்தினார் நரியார்.

இம்மியளவு இலை விழுந்தால் கூட இடிச்சத்தம் போல் கேட்கும் அளவுக்கு அமைதி.

மீண்டும் நரியார் ஆரம்பித்தார்.

“காக்கையார் உடல் சுத்தம். உள்ளம் சுத்தம். அவர் சுற்றுப் புறமும் சுத்தமானது. நாள் தவறினாலும் அவர் குளியல் தவராது. இனி ஓட்டுப் போடுவது உங்கள் சுதந்திரம்” என்று சொல்லிவிட்டு நடந்தார் நரியார்.

இப்போது எல்லோருக்கும் ஒரு தெளிவான வழியைக் காட்டியது போல் தமக்குள் பேசிக் கொண்டனர்.

சற்று நேரத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. செந்நாய் அமைதிப் படை தில்லுமுல்லுகள் நடக்காமல் பார்த்துக் கொண்டன.

ஓட்டுகள் எண்ணப்பட்டன. காக்கையார் சுத்தம் சோறுபோடும் என்பது உங்களுக்குத் தெரியும் ஆனால் தேர்தலில் ஜெயிக்கவைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று சபாநாயகர் குரங்கார் ஜோக் அடிக்க எல்லோரும் சிரிக்க குமுளி மலைக் காடே அதிர்ந்தது.

சிறுவர் கதைகள் – யானை பல் விளக்குமா?

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

“ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.

“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.

வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.

அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார்.

“ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.

அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.

அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.

அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.

ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர்.

அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா.

“குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு.

பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.

அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.

விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

“பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.

அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.

“தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.

அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.

அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.

அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.

ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.

“சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.

அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.

“அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன் “கொல்” லென்று சிரித்தனர்.

அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

ஜென் கதைகள் – விடுதி

மன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.”சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,”என்றார் அவர்.

மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் ,”குருவே,இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே?”குரு கேட்டார்,”மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?”மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.

அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,”உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”என்று கேட்டார்.மன்னனும்,”அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,”என்று சொன்னான்.அதன் பின் குரு கேட்டார்,”உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?”அரசன் சொன்னான்,”என் மகன்,அதன் பின் என் பேரன்.”குரு,”ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார்.

பிறகு போய் விட்டார்.அதன்பின் உன் தந்தையார் இருந்தார்.பிறகு போய் விட்டார்.இப்போது நீ இருக்கிறாய்.நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய்.உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான்.அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான்.

யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.இப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?”என்று கேட்டார்.

ஜென் கதைகள் – மரணம்

ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.

ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,”குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?”ஞானி சொன்னார்,”பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.

என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன.
இப்போது இரண்டும் போய்விட்டன.இடையில் வந்தவை இடையில் போயின.
இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?”

ஜென் கதைகள் – பணிவு

அசோகா சக்கரவர்த்தி தன ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.

அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.

மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புளித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.

ஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை.விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையையாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.

இப்போது அசோகா மன்னர் சொன்னார்,”தளபதியே,மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது.இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது?இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லைஎன்பது நமக்கு தெரிகிறது.உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?”தளபதிக்கு இப்போது புரிந்தது.

பரமார்த்த குரு கதைகள் – உப்புக்கு வந்த சோதனை, அதிசயித்த குரு
ஒரு கிராமம் ஒன்றில் சிறு ஆசிரமத்தில் பரமார்த்தர் என்னும் குரு இருந்தார். அவருக்கு 5 சீடர்கள் உள்ளனர்.அவர்கள் யாவருமே அடி முட்டாள்கள். எந்த ஒரு காரியத்தையும் முட்டாள் தனமாகவே செய்வார்கள். முட்டாள்தனமான காரியங்களால் சில சமயம் ஏமாந்தும் போவார்கள்.
இப்படிதான் ஒருநாள் அனைவரும் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து எடுத்து செல்ல எண்ணி பரமார்த்த குரு ஒரு சீடனை அழைத்தார். அவனிடம் சிறிது பணமும் துணி பையையும் கொடுத்து நீ சந்தைக்கு சென்று சமயலுக்கு தேவையான சுத்தமான உப்பு வாங்கிவா; என்று அனுப்பினார்.
சீடனும் சரியேன செல்லலானான். வழியில் ஆற்றை கடந்து சந்தையை சென்றடைந்தான். அங்கு ஒரு கடைக்கு சென்ற சீடன் ;ஐயா சுத்தமான உப்பு இருக்கிறதா; என்றான். கடைக்காரர் உப்பை அளந்து எடுத்து சீடனின் பையில் போட்டு கொடுத்தார். உப்பை பார்த்த சீடன் ;இது சுத்தமானதுதானே?; என வினாவினான்.
இதைக்கேட்ட கடைக்காரர் ஐயா உப்பில் சுத்தமானது சுத்தமற்றது என்று இல்லை உப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்; என்றார். கோபமாக ஆ… நீ என்ன இப்படி பேசுகிறாய்! உப்பில் சுத்தமானது இருக்கிறது. என் குரு எனக்கு கூறியிருக்கிறார். வேறோன்றும் பேசாமல் இது சுத்தமானதா என்று மட்டும் கூறு; என்று முட்டாள்தனமாக கேட்டான் சீடன்.
வியந்து போன கடைக்காரர் என்ன சொன்னாலும் புரியவைக்கயிலாத முட்டாள் இவன் என்று எண்ணி ;ஐயா உங்கள் குரு அறிவாளி! நான்தான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் வேண்டும்மென்றால் காய்கறிகளை சமைக்கும் முன் நீரில் கழுவி சுத்தம் செய்வது போல் உப்பையும் கழுவி சுத்தம் செய்துகொள்ளலாம்; என்றார். இதைக்கேட்ட சீடன் ;இப்போதுதான் நீர் சரியாக யோசித்து பேசியுள்ளாய், இந்தாருங்கள் பணம் என்று பணத்தை கொடுத்து விட்டு அவர் சொன்னதை நம்பி மகிழ்சியுடன் கிளம்பினான்.
போகும் வழியில் ஆற்றை கடந்து செல்லும் போது சீடனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ;இந்த உப்பை, அப்படியே எடுத்துச் சென்றால் குரு இது சுத்தமானதா என்று கேட்டு கோபமடைவார். அதை விட இந்த ஆற்று நீரில் உப்பை அலசிச்சென்றால் உப்பு சுத்தமாகிவிடும், குருவுக்கு இது சுத்தமானதுதான் என்று கூறலாம்,அவரும் பாராட்டுவார். என்றவாறே உப்பை துணியுடன் நீரில் முக்கி எடுத்துக தன் தோலில் போட்டுக்கொண்டு சென்றான்.
போகிற வழியில் உப்பு முழுவதுமாக நீரில் கரைந்தே போயிற்று.உப்பு கரைந்துபோனதை அவன் உணரவில்லை. வீடும் வந்தது சீடன் வருவதைக் கண்ட குரு “வாவா…ஏன் தாமதம் உப்பு வாங்கிவிட்டாயா?” என்றவாறு உள்ளிருந்து அவசரமாக வந்தார். ஆம் குருவே நீங்கள் கூறியதுபோல் சுத்தமான உப்பு வாங்கிவந்தேன்; என்று துணிபையை கொடுத்தான் சீடன். அதை வாங்கி பார்த்த குரு “என்னடா பை காலியாக உள்ளது எங்கேடா உப்பைக் காணோம்” என்றார்.
“இல்லை குருவே உப்பு வாங்கும்போது கடைக்காரனிடம் இது சுத்தமானதா என்று கேட்டப்பொழுது உப்பை நீரில் கழுவி சுத்தம் செய்யலாம் என்றான். நானும் வருகிற வழியில் ஆற்று நீரில் உப்பை அலசி எடுத்து வந்தேன். அவ்வளவுதான் என்றான். இதைக் கேட்ட குருவும்…உன் யோசனை நல்ல யோசனைதான், ஆனால் உப்பு எங்கு போனது என்று சமையலையும் மறந்துபோய் சிந்தனையில் ஆழ்ந்தனர் பரமார்த்த குருவும் சீடர்களும்.
பார்த்தீர்களா! இவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று
பரமார்த்த குரு கதைகள் – புத்தியில்லாதவர்களின் வேலை

அந்த ஊர்ப் பண்ணையார் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாக இருந்தது.

பரமார்த்த குருவின் சீடர்கள் “அந்த வேலையைச் செய்தால் என்ன?” என்று அவரிடம் கேட்டனர்.”துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது?” என்றார் பரமார்த்தர். “கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே!” என்றனர் சீடர்கள். இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு. அன்று மாலையே அவர் மடத்துக்குக் கழுதை ஒன்று வந்து சேர்ந்தது.

கழுதையைப் பார்வையிட்ட பரமார்த்தர், அதன் வாலைப் பிடித்து முறுக்கிப் பார்த்தார். கோபம் கொண்ட கழுதை, அவரை ஒரு உதை உதைத்தது. ஐயோ! என்று அலறியபடி தொலைவில் போய் விழுந்த பரமார்த்த குரு, ”முட்டாள்களே! என் பெருமைகளைப் பற்றி கழுதையிடம் ஒன்றுமே சொல்ல வில்லையா? என்று கோபமாகக் கேட்டார். “குருவே! உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெளிவாக எடுத்துச் சொன்னோம்! அதனால்தான் உதைத்ததோ என்னவோ?” என்றான் மடையன். “ஆமாம் குருவே! அப்படியும் இருக்கலாம்” என்று ஆமோதித்தான் மட்டி.

“பரவாயில்லை, அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல் உதைக்கிற கழுதைதான் உண்மையாய் உழைக்கும். ஆகையால் இந்தக் கழுதையே இருக்கட்டும்!” என்றார் பரமார்த்தர். குருவும் சீடர்களும் கழுதை வைத்திருப்பதை அறிந்த உள்ளூர் திருடன், அதை எப்படியாவது திருடிச் செல்ல வேண்டுமென்று திட்டமிட்டான். ஒருநாள், கழுதையின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு இருந்தான், திருடன். ஆனால் அதற்குள் சீடர்கள் வரும் சப்தம் கேட்கவே அவசரம் அவசரமாகக் கழுதையை மட்டும் ஓட்டிவிட்டு, அந்த இடத்தில் தான் நின்று கொண்டான். அங்கு வந்து பார்த்த சீடர்களுக்கு வியப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது.

“இதென்ன? கழுதை இருந்த இடத்தில், மனிதன் இருக்கிறானே?” என்றான் மூடன். “ஒருவேளை இது மாயமந்திரம் தெரிந்த கழுதையாக இருக்குமோ?” எனச் சந்தேகப்பட்டான் மண்டு. அதற்குள் பரமார்த்த குருவும் வந்து சேர்ந்தார். “உன்னைக் கழுதையாகத்தானே வாங்கி வந்தோம். நீ எப்படி மனிதனாக மாறினாய்?” என்று கேட்டான் முட்டாள்.”நான் முதலில் மனிதனாகத்தான் இருந்தேன். ஒரு முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். அவர்தான் என்னைக் கழுதையாகப் போகும்படிச் சாபம் இட்டார்.. இப்போது சாபம் நீங்கி விட்டதால் மறுபடி மனிதனாக மாறி விட்டேன்!” என்று பொய் சொன்னான் அந்தத் திருடன். திருடனின் பொய்யைப் புரிந்து கொள்ளாத பரமார்த்தர், “மனிதனைக் கழுதையாக மாற்றியதால் தப்பித்தோம். அதே முனிவர் சிங்கத்தையோ, புலியையோ கழுதையாக மாற்றியிருந்தால் இந்நேரம் நம்மையெல்லாம் சாப்பிட்டிருக்கும். நல்ல வேளை, தப்பித்தோம்!” என்று மகிழ்ந்தார்.

“சீடர்களும், விட்டது தொல்லை.” என்று மகிழ்ந்தனர். கழுதை இல்லாமலேயே பண்ணையார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த சீடர்கள், துணிகளை மூட்டை கட்டி, பாசி பிடித்த ஒரு குளத்துக்கு எடுத்துச் சென்றார்கள். பளீரென்று வெள்ளையாக என்று இருக்க வேண்டும் என்பது பண்ணையார் கட்டளை என்று சொல்லியபடி, வெவ்வேறு நிறங்களில் இருந்த துணிகளைக் கல்லில் தேய்த்துக் கிழித்தான், மட்டி. வெள்ளையாக இருந்த வேட்டியில் பாசியை தோய்த்துப் பச்சை நிறமாக மாற்றினான் மடையன். ஒரே துணியாக இருந்ததைக் கசக்கிப் பிழிந்து முறுக்கி, பல துண்டுகளாக ஆக்கினார்கள், முட்டாளும் மூடனும். அப்பாடா! ஒரு வழியாக நன்றாக வெளுத்துக் கட்டி விட்டோம்! என்று மகிழ்ந்தபடி பண்ணையார் வீட்டுக்குப் புறப்பட்டனர். “நீங்கள் ஒரு துணி போட்டீர்கள். நான் அதையே பத்தாக்கிக் கொண்டு வந்திருக்கிறேன்!” என்று பெருமை பேசினான் முட்டாள்.

“வெள்ளையைப் பச்சையாக்கி விட்டேன்.” என்று குதித்தான் மடையன். பரமார்த்த குருவின் சீடர்கள் கொண்டு வந்த துணிகளைப் பிரித்துப் பார்த்த பண்ணையாருக்கு கோபம் வந்தது.”அடப்பாவிகளா! முழுசாய் இருந்ததை எல்லாம் கிழித்துக் கோவணத் துணிகளாய் ஆக்கி விட்டீர்களே; புத்தி கெட்டவர்களை நம்பி இந்த வேலையைச் செய்யச் சொன்னேனே!” என்று புலம்பியபடி அவர்களை விரட்டி அடித்தார். “உம்… நம் தொழில் திறமையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே!” என்று வருத்தப்பட்டு மடத்துக்குத் திரும்பினார்கள் அந்த சீடர்கள்.

பரமார்த்த குரு கதைகள் – தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது

திடீரென்று பரமார்த்தரின் படுக்கை அறை தீப்பிடித்து எரிந்து போனது. அத்துடன் குருவின் தாடியும் கொஞ்சம் பொசுங்கி விட்டது! அதைக் கண்டு சீடர்கள் ஐவரும் கவலையுடன் இருந்தனர்.

குருதேவா! உங்கள் மூன்றடி நீளமுள்ள தாடி, இப்படிக் குறுந்தாடியாக ஆகிவிட்டதே! என்று அழுதான், மட்டி.

போனால் போகட்டும். இதற்காகக் கவலைப் படாதீர்கள். மீசை குறைந்தாலும் வீரம் குறையாது. தாடி குறைந்தாலும் தொப்பை குறையாது, என்ற பழமொழி உங்களுக்குத் தெரியாதா? இதோ என் தொப்பை அப்படியே இருக்கிறது பாருங்கள், என்றார், பரமார்த்தர்.

அதைக் கேட்டு சீடர்கள் மகிழ்ந்தனர்.

குருவே! இப்படியே இருந்தால் வயிற்றைக் கவனிப்பது எப்படி? எனக் கேட்டான் மடையன்.

குருநாதா! நேற்று அரசரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அப்போது, உடல் ஊனம் உள்ளவர்களுக்கு வேலைதரும் திட்டம் ஒன்றை அறிவித்தார்கள். அதனால் எப்படியாவது நாங்கள் உடல் ஊனம் உள்ளவர்கள் மாதிரி நடித்துச் சம்பாதித்து வருகிறோம், என்றான், முட்டாள்.

சரி. எல்லோரும் ஒன்றாகப் போனால்தான் தொல்லை வருகிறது. அதனால் தனித்தனியே போய் வாருங்கள். ஊமை மாதிரியும், செவிடு மாதிரியும், குருடாகவும், நொண்டியாகவும் நடியுங்கள். மண்டு மட்டும் எனக்குத் துணையாக இங்கேயே இருக்கட்டும், என்று கூறி, தம் தொப்பையில் வழிந்த வியர்வையைத் தொட்டு வீரத் திலகம் இட்டு அனுப்பினார், குரு.

படைத் தளபதியிடம் சென்ற மட்டி, ஏதாவது வேலை தரும்படி கேட்டான்.

நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை அரசரிடம் சொல்லி விட்டு வா, என்றார், தளபதி.

செவிடனாக நடித்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்த மட்டி, என்ன? புடலங்காயா? நான் பார்த்தது இல்லையே! என்றான்.

தளபதி மறுபடி ரகசியத்தைச் சொன்னார்.

ஓகோ! மன்னருக்கு ஒரே ஒரு மூக்குதான் இருக்கிறதா? தெரியுமே! என்றான், மட்டி.

தலையில் அடித்துக் கொண்ட தளபதி, இந்தச் செவிட்டுப் பயலை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று முணுமுணுத்தார்.

அதைக் கேட்ட மட்டிக்குக் கோபம் வந்தது. யார் செவிடன்? நீ செவிடன்! உங்க ராஜா செவிடன்! அவங்க தாத்தா செவிடன்! என்று திட்டினான்.

அவ்வளவுதான். அடுத்த நிமிடம், மட்டியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள், என்று கட்டளையிட்டார், தளபதி.

பரமார்த்த குரு கதைகள் – தவளைக் குட்டிச் சீடன்

முட்டாளும் மூடனும் தவிர பரமார்த்த குருவும் மற்ற சீடர்களும் ராஜ வீதியில் காத்திருந்தனர். அந்த நாட்டு மன்னன் தேரில் ஊர்வலமாக வந்து கொண்டு இருந்தான்.

தங்கள் அருகே தேர் வந்ததும், கையில் தயாராக வைத்திருந்த செத்துப் போன தவளையையும், ஓணானையும் தேரின் சக்கத்தில் போட்டான், மட்டி.

அதன் மீது சக்கரம் ஏறி நகர்ந்ததும், நசுங்கிப் போன தவளையையும் ஓணானையும் தூக்கி வந்தான், மடையன்.

பரமார்த்தர், தேருக்கு முன்னால் சென்று, ஐயோ! என் சீடர்களைக் கொன்று விட்டாயே! இது தான் நீ குடிமக்களைக் காப்பாற்றும் முறையா? என்று கூச்சலிட்டார்.

மட்டியும் மடையனும் சேர்ந்து கொண்டு, ஐயோ, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எங்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தீர்கள். அதற்குள் இப்படி நசுங்கிக் கூழ் கூழாக ஆகிவிட்டீர்களே! என்று ஒப்பாரி வைத்தனர்.

அரசனுக்கும் அமைச்சர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. யாரைக் கொன்றேன்? எனக் கேட்டான், மன்னன்.

என் அருமையான சீடர்களான முட்டாளையும், மூடனையும் நீதான் தேர் ஏற்றிக் கொன்று விட்டாய்! என்று குற்றம் சாட்டினார், குரு.

அப்படியானால் எங்கே அவர்கள் உடல்கள்? என்று மந்திரி கேட்டார்.

இதோ இவைதான் என்றபடி, நசுங்கிப் போன தவளையையும், ஓணானையும் காட்டினார், பரமார்த்தர்!

எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

இது தவளை அல்லவா? இந்தக் தவளையா உன் சீடன்? எனக் கேட்டான், மன்னன்.

இது ஓணான்! இதுவா உன் சீடன்? யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? என்று கோபமாகக் கேட்டார், ஓர் அமைச்சர்.

அரசே! நான் எதற்கு உன்னை ஏமாற்ற வேண்டும்? உண்மையாகவே இந்தத் தவளையும் ஓணானும் என் சீடர்கள்தாம். நம்மைப் போல மனிதர்களாகத்தான் இவர்கள் இருந்தார்கள். ஒரு மந்திரவாதியின் சாபத்தால் இப்படி ஆகிவிட்டார்கள்! என்று பொய் கூறினார், பரமார்த்தர்.

தவளைதான் என்றாலும் மனிதர்களைப் போலவே பேசுவான்! ஓணான்தான் என்றாலும் தினம் நூறு பொற்காசு சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுப்பான்! என்று புளுகினான் மண்டு.

இதைக் கேட்டு, அரசனுக்கும் மந்திரிகளுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது.

சரி… நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார், அமைச்சர்.

என்ன செய்வதா? இவர்களை வைத்துத்தானே எங்கள் பிழைப்பே நடந்தது. அதனால், மறுபடியும் இதே தவளைக்கும் ஓணானுக்கும் உயிர் கொடுங்கள். இல்லாவிட்டால், தினம் நூறு பொற்காசுகளை நீங்கள் தான் தர வேண்டும், என்றார் பரமார்த்தர்.

வேறு வழி தெரியாத மன்னன், மறுபடியும் உயிர் கொடுக்க முடியாது. அதனால் தினம் நூறு பொற்காசு தந்து விடுகிறேன், என்று ஒப்புக் கொண்டான்.

மடத்துக்கு வந்ததும், செத்துப் போன தவளையையும் ஓணானையும் காட்டி ராஜாவையே ஏமாற்றி விட்டோம்! இனிமேல் தினமும் நூறு பொற்காசு கிடைக்கப் போகிறது, என்று குதித்தார்கள்.

முட்டாளையும் மூடனையும் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் செத்து விட்டதாகக் கூறி விட்டோம். ஆகையால் இனிமேல் மடத்தை விட்டு வெளியே போகவே கூடாது. தப்பித் தவறி வெளியே போனீர்களானால் மாட்டிக் கொள்வோம். ஜாக்கிரதை! என்று எச்சரிக்கை செய்தார், குரு.

ஒரே வாரம் கழிந்தது. இரவு நேரத்தில் எல்லோரும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

முட்டாளும் மூடனும் மட்டும் விழித்துக் கொண்டனர். சோ! ஊர் சுற்றி ஒரு வாரம் ஆகிறது! யாருக்கும் தெரியாமல் ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்து விடலாம்! என்று ஆசைப்பட்டனர்.

கையில் கொள்ளிக் கட்டையுடன் இருவரும் வெளியே புறப்பட்டனர். இரண்டு தெரு சுற்றுவதற்குள், இரவுக் காவலர்கள் கண்ணில் பட்டு விட்டனர்!

உடனே இருவரையும் துரத்திப் பிடித்தனர். பொழுது விடிந்ததும், மற்ற சீடர்களும் குருவும் கைது செய்யப்பட்டனர்.

ஆளை உயிரோடு வைத்துக் கொண்டே செத்து விட்டதாக ஏமாற்றினீர்கள். அதனால், இப்போது உண்மையாகவே இவர்கள் இருவரையும் தேர் ஏற்றிச் சாகடிக்கப் போகிறேன்! என்றான், மன்னன்.

அதைக் கேட்ட குருவும் சீடர்களும், அலறினார்கள். ஐயோ, மன்னா! தெரியாமல் செய்து விட்டோம். உங்களிடம் இருந்து வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். மன்னித்து விட்டு விடுங்கள், என்று அரசனின் கால்களில் விழுந்தார்.

சீடர்களும் கீழே விழுந்து வேண்டினார்கள்.
மன்னனும் போனால் போகிறது என்று மன்னித்து அனைவரையும் விடுதலை செய்தான்!

பரமார்த்த குரு கதைகள் – ஓலைச் சுவடி பத்திரிகை

“குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?” என்று கேட்டான் முட்டாள்.

“பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?” என்றார் பரமார்த்தர்.

“தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்” என்றான் மூடன்.

“அப்படியானால் நம் பத்திரிகைக்குத் ‘தினப் புளுகு’ என்று பெயர் வைக்கலாம்” என்றார் குரு.

“பெயருக்குக் கீழே “கெட்டிக்காரன் புளுகு – எட்டு நாள் உண்மை!” என்று போடலாம்” என்றான் மண்டு.

அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், ‘தினப் புளுகு’ நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர்.

இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான்.

அதைக் கண்ட மட்டி, “அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?” என்று கேட்டான்.

“திருடுவதற்காக இருக்கும்” என்றான் மடையன்.

“ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?” என்று சந்தேகம் கொண்டான், மட்டி.

“எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்” என்று விளக்கினான், மடையன்

“அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!” என்றான் மட்டி.

மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள்.

வேலியே பயிரை மேய்கிறது!

பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!!

இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார்.

இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள்.

“தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்” என்றான் மண்டு.

“மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்” என்று கத்தினான் மூடன்.

உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள்.

அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா!

அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார்.

ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன?

இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு!

இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள்.

“நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!” என்றான் முட்டாள்.

“என்ன எழுதுவது?” எனக் கேட்டான் மூடன்.

சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள்.

‘மண்ணில் புரளுவது எப்படி?’ என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி!

‘தொப்பை வளர்ப்பது எப்படி?’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை ‘அறிவியல்’ பகுதியில் எழுதினார் பரமார்த்தர்.

‘பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! ‘தத்துவத் தந்தை’ பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!’

இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர்.

எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், “எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார்.

பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள்.

‘தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!’ என்று கத்தினான் முட்டாள்.

சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் ‘குற்றப்பத்திரிகை’ வாசிக்கப்பட்டது.

“பரமார்த்தரோ, “இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; ‘தினப் புளுகு’ என்று தானே போட்டிருக்கிறோம்” என்று கூறினார்.

அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

பரமார்த்த குரு கதைகள் – சொர்க்கம் என்ற சோற்று மூட்டை

பரமார்த்தர் எங்கோ வெளியே சென்றிருந்தார். சீடர்கள் மட்டும் திண்ணையில் இருந்தனர். அப்போது புளூகன் ஒருவன் அங்கே வந்தான். திண்ணையில் படுத்தபடி, “அப்பாடா! இப்போதுதான் சொர்க்கத்தில் இருப்பது மாதிரி இருக்கிறது!” என்று கூறினான்.

அதைக் கேட்ட மட்டிக்கு வியப்பாக இருந்தது. “அப்படியானால் நீங்கள் சொர்க்கம் போய் இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“நேராக அங்கே இருந்துதான் வருகிறேன்!” என்றான் புளுகன்.

“அடேயப்பா! எங்களால் சந்திரலோகமே போக முடியவில்லை. நீங்கள் எப்படிச் சொர்க்க லோகம் போய் வந்தீர்கள்?” எனக் கேட்டான், மடையன்.

“சொர்க்கத்தில் யார் யார் இருக்கிறார்கள்?” என்று விசாரித்தான் முட்டாள்.

“உங்கள் குருவுக்குக் குருவான சோற்று மூட்டை அங்கே தான் இருக்கிறார்” என்றான் புளுகன்.

“அப்படியா? அவர் நலமாக இருக்கிறாரா?” என்று கேட்டான் மண்டு.

“ஊகும்! பேர் தான் சோற்று மூட்டையே தவிர சோற்றுக்கே தாளம் போடுகிறார்! கந்தல் துணிகளைக் கட்டிக் கொண்டு, பைத்தியம் மாதிரி திரிகிறார்! பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது!” என்றான் புளுகன்.

“பூலோகத்தில் இருந்த போது சுகமாக இருந்திருப்பார்….. அங்கே போய் இப்படிக் கஷ்டப்படுகிறாரே!.. என்று துக்கப்பட்டான் மூடன்.

“ஐயா நீங்கள் மறுபடி சொர்க்கத்துக்குப் போவீர்களா?” என்று மட்டி கேட்டதும், “ஓ நாளைக்கே போனாலும் போவேன்!” என்றான் புளுகன்.

“அப்படியானால், எங்களிடம் இருக்கிற புதுத் துணிகளை எல்லாம் தருகிறோம். கொஞ்சம் பணமும், சுருட்டும் கொடுக்கிறோம். எல்லாவற்றையும் கொண்டு போய், எங்கள் குருவுக்குக் குருவிடம் தந்து விடுங்கள்.”

“புளுகனோ மகிழ்ச்சியோடு “சரி” என்று சம்மதித்தான். உடனþ ஐந்து சீடர்களும் போட்டி போட்டுக் கொண்டு, மடத்தில் இருந்த துணிமணிகள், சுருட்டு, பணம் பூராவையும் எடுத்து வந்தனர்.

“போகும் வழியில் சாப்பிடுங்கள்” என்று புளி சாதம் தந்தான் மட்டி.

எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்ட புளுகன், சொர்க்கம் போவதாகக் கூறி விட்டு, ஓட்டம் பிடித்தான்.

வெளியே சென்றிருந்த பரமார்த்தர் திரும்பி வந்தார். “குருவே! நீங்கள் இல்லாத சமயத்தில் கூட, நாங்கள் புத்திசாலித்தனமான செயல் செய்துள்ளோம்” என்று பெருமையோடு சொன்னான் மண்டு.

உங்கள் “குருநாதரான சோற்று மூட்டை சுவாமிக்கு இனி கவலையே இல்லை!” என்றான் மூடன்.

“சொர்க்கத்தில் இருந்து ஆள் அனுப்பி இருந்தார். அவரிடம் உங்கள் குருவுக்குத் தேவையானதை எல்லாம் கொடுத்து அனுப்பினோம்!” என்று முட்டாள் சொன்னான்.

பரமார்த்த குருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாங்கள் செய்த காரியத்தை சீடர்கள் விளக்கியதும், “அடப்பாவிகளா! ஏன் இப்படிச் செய்தீர்கள்?” எனக் குதித்தார்.

“நாங்கள் நல்லது தானே செய்தோம்?” உங்கள் குருநாதர் பசியால் வாடலாமா?” என்று மட்டி கேட்டான்.

“முட்டாள்களே! எனக்குக் குருநாதரே யாரும் கிடையாது! இது தெரியாதா உங்களுக்கு? எவனோ உங்களை நன்றாக ஏமாற்றி விட்டுப் போய் விட்டானே!” என்று பரமார்த்தர் சொன்னதும், சீடர்கள் எல்லோரும் ‘திரு திரு’ என்று விழித்தார்கள்.

“சீடர்களே! நீங்கள் ஏமாந்ததும் ஒரு வகையில் நல்லது தானே! அதே திட்டத்தைப் பயன்படுத்தி, நம் ஊர் அரசனை நாம் ஏமாற்றி விடலாம்!” என்றார் பரமார்த்தர்.

அப்போதே குருவும், சீடர்களும் அரண்மனைக்குப் போனார்கள்.

“மன்னா! நாங்கள் நேற்று ராத்திரி சொர்க்கம் போய் வந்தோம். அங்கே எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் தாத்தா மட்டும் பிச்சை எடுத்துத் திரிகிறார்!” என்று புளுகினார்.

“ஆமாம் அரசே! ராஜ குடும்பத்தில் பிறந்தவர் இப்படிப் பிச்சை எடுக்கலாமா?” என்று மட்டி கேட்டான்.

மடையனோ, “அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது!” என்றான்.

“நாங்கள் மறுபடியும் நாளைக்குச் சொர்க்கலோகமம் போகப் போகிறோம். ஏராளமாகப் பணமும் துணியும் உங்களிடம் இருந்து வாங்கி வரச் சொன்னார்!” என்று புளுகினான் முட்டாள்.

“அப்படியே உயர்ந்த இனக் குதிரையாக இரண்டு வாங்கி வரச் சொன்னார்” என்று தள்ளி விட்டான், மண்டு.

“எல்லாவற்றையும் எங்களிடம் தந்து விடுங்கள். நாங்கள் பத்திரமாகக் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம்!” என்றார் பரமார்த்தர்.

அரசனுக்கோ, கோபம் கோபமாக வந்தது.

“யாரங்கே! இந்த ஆறு முட்டாள்களையும், ஆறு நாளைக்குச் சிறையில் தள்ளுங்கள்!” என்று கட்டளை இட்டான்.

“அரசே! நாங்கள் என்ன தவறு செய்தோம்? செத்துப்போன உங்கள் தாத்தாதான் எங்களை அனுப்பினார்!” என்று ஏமாற்ற நினைத்தார், பரமார்த்த குரு.

அரசனோ, “யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இன்னும் என் தாத்தா சாகவே இல்லையே! இதோ உயிரோடு தான் இருக்கிறார்!” என்று சொன்னபடி பக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தாவைக் காட்டினான்.

“ஐயையோ! அரசரின் தாத்தா செத்து விட்டாரே இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே!” என்று குருவும் சீடர்களும் அழுதனர்.

பரமார்த்த குரு கதைகள் – நரபலி சாமியார்

பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள்.

அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்!

“குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே! அது ஏன்?” என்று மட்டி கேட்டான்.

“நாம் எல்லோரும் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது!” என்றார் பரமார்த்தர்.

“குருவே! உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தே ஆக வேண்டும்” என்று சொன்னான், முட்டாள்.

குருவும் சீடர்களும் அன்று இரவே ரகசியமாக ஆலோசனை செய்தார்கள்.

“குருவே! முனிவர்களைப் போல யாகம் செய்தால் நாம் பாவம் எல்லாம் போய்விடும்” என்றான் மூடன்.

“அதற்கு நிறைய பணம் செலவாகும். நம்மால் முடியாது. வேண்டுமானால், நரபலி கொடுக்கலாம்” என்றார் பரமார்த்தர்.

“நரபலியா? ஐயையோ!” என்று சீடர்கள் அனைவரும் அலறினார்கள்.

“சீடர்களே! நமக்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் நரபலி கொடுத்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை” என்று முடிவாகச் சொல்லி விட்டார், பரமார்த்தர்.

“அப்படியானால் யாரைப் பலி கொடுப்பது?” என்று கேட்டான் மண்டு.

“வேறு யாரையாவது பிடிக்கப் போனால் மாட்டிக் கொள்வோம்! அதனால்……சீடர்களே… உங்களில் யாராவது ஒருவர்தான் பலியாக வேண்டும்! இந்த நல்ல செயலுக்கு யார் முன் வருகிறீர்கள்?” என்றார் பரமார்த்தர்.

அவ்வளவுதான்!

“ஐயோ நான் பலியாகிவிட்டால், அப்புறம் உங்கள் சுருட்டுக்குக் கொள்ளி வைப்பது யார்?” என்று அழ ஆரம்பித்தான் முட்டாள்.

“ஐயையோ நான் மாட்டேன்” என்று மூடனும் மூக்கால் அழுதான்.

“குருவே! நாங்களும் பலியாக மாட்டோம்” என்றபடி மற்ற சீடர்களும் தூர ஓடப் பார்த்தனர்.

பரமார்த்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெருதூரம் தாடியை உருவிக் கொண்டு யோசனை செய்தார்.

“சரி, சீடர்களே! நீங்கள் யாரும் பலியாக வேண்டாம்! வேறு ஒரு வழி தோன்றுகிறது. அதன்படிச் செய்வோம்” என்று சொல்லிப் படுத்து விட்டார் பரமார்த்தர்.

மறுநாள், சீடர்கள் அனைவரும் “எங்கள் குரு நரபலி கொடுக்கப் போகிறார்” என்று ஊர் முழுவதும் பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிந்தார்கள்.

அதனால் அந்த ஊர் அரசனுக்கும் செய்தி எட்டியது. பரமார்த்தரை, நரபலி சாமியார் நாகப்பா என்று தவறாக நினைத்து விட்டான்.

“நாகப்பாவையும் அவன் கூட்டத்தையும் கையும் மெய்யுமாகப் பிடித்து வாருங்கள்” என்று ஆணையிட்டான்.

நரபலி இடுவதற்காகக் குறிப்பிட்ட நாளும் வந்தது! பரமார்த்தரும் சீடர்களும் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டு இருந்தார்கள்.

ஊர்க் கோடியில் இருந்த காளி கோயிலை அடைந்ததும் பரமார்த்தர் பரம சந்தோஷம் அடைந்தார்.

மண்டை ஓட்டு மாலையும், நீளம் நீளமான பற்களுமாக இருந்த பத்ரகாளி சிலையைப் பார்த்த சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். “ஏ, காளியம்மா! வாக்குக் கொடுத்தபடி உனக்கு நரபலி கொடுக்கப் போகிறோம்! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெய் காளி” என்று காளியின் கால்களில் விழுந்து வணங்கினார் பரமார்த்தர்.

சீடர்களும் ‘தடால்’ என்று விழுந்து கும்பிட்டார்கள்.

நடு இரவு ஆகிவிட்டதை அறிவிப்பதற்கு, அரண்மனையில் இருந்து மணியோசை கேட்டது.

அப்போது, கோயிலைச் சுற்றிலும் மறைந்தபடி நின்று கொண்டிருந்த அரண்மனைக் காவலர்கள் சுறுசுறுப்பானார்கள்.

“சீடர்களே! சீக்கிரம் நாம் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தின் மீது வையுங்கள்!” என்று அவசரப்படுத்தினார், பரமார்த்தர்.

சீடர்களும் அவசரம் அவசரமாகத் தாங்கள் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தில் வைத்தனர்.

“ஓம்…ரீம்…பத்ரகாளி!…… இந்தா நரபலி!” என்று ஆவேசமாய்க் கத்தியபடி, பலி பீடத்தின் மீது கொடுவாளை வீசினார், பரமார்த்தர்.

உடனே அரண்மனை வீரர்கள் ஓடிவந்தது பரமார்த்தரையும் சீடர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பரமார்த்தர் யாரைப் பலியிட்டார் என்று எல்லோரும் ஆவலோடு பலி பீடத்தைப் பார்த்தனர்.

அங்கே… ஒரு பல்லி, இரண்டு துண்டாகிக் கிடந்தது.

அரண்மனை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

“சே, நரபலி சாமியார் என்று நினைத்தோம். இவர் நரபல்லி சாமியாராக அல்லவா இருக்கிறார்” என்றபடி பரமார்த்தரையும் சீடர்களையும் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள்.

மன்னா! ஏன் எங்களைக் கைது செய்தாய்? நாங்கள் செய்த தவறு என்ன?” என்றார் பரமார்த்தர்.

“நரபலி கொடுப்பது எங்கள் நாட்டுச் சட்டப்படி குற்றம்” என்றான் மன்னன்.

“நாங்கள் என்ன, மனிதர்களையா பலி கொடுத்தோம்? கேவலம் ஒரு பல்லியைத்தானே கொன்றோம்” என்று சொன்னார் பரமார்த்தர்.

“அதுதான் நீங்கள் செய்த தவறு! எங்கள் நாட்டு மக்களின் குலதெய்வம் பல்லி! என் நாட்டுக் கொடியில் இருப்பதும் பல்லி சின்னம்! அந்தப் பல்லியைக் கொன்று, அவமரியாதை செய்த குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் சிறையில் இட ஆணையிடுகிறேன் என்று கட்டளையிட்டான், கந்தபுர மன்னன்.

ஐயோ! நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். அதுவும் ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விட்டதே” என்று புலம்பியபடி குருவும் சீடர்களும் சிறைக்குச் சென்றார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – காணாமல் போனது யார்?

பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக் கடப்பது ஆபத்து எனப் பயந்தார். எனவே, ஆறு தூங்கும் வேளையில் கடப்பது நல்லது என்று முடிவு செய்தார்.

ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தடியில் தனது சீடர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, குரு தனது சீடர்களில் ஒருவனான மட்டியை அழைத்தார். அவன் கையில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொடுத்து, ஆற்றின் அருகில் சென்று, அது இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறதா? தூங்கத் துவங்கிவிட்டதா? என்று பார்த்து வருமாறு அனுப்பினார்.

மட்டி, தன் குருவின் கட்டளையை ஏற்று கொள்ளிக் கட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆற்றை நெருங்கினான்.

ஆற்று நீர் தன் மேல் பட்டுவிடாத படி, எட்டி நின்று கொண்டு, கொள்ளிக்கட்டையை நீரில் அமிழ்த்தினான். அது சுரீரென்று ஒலியுடன் அணைந்து விட்டது.

அந்த ஒலியைக் கேட்டதும் மட்டி பதறிப் போனான். வேகமாகக் குருவை நோக்கி ஓடி வந்தான்.

குருவே ஆறு விழித்துக் கொண்டிருக்கிறது. கொள்ளிக் கட்டையால் அதைக் தொட்டவுடன் சீறி விட்டது. நல்ல வேளை தப்பியோடி வந்து விட்டேன் என்று பயந்து கொண்டே கூறினான்.

அதனைக் கேட்ட குரு, “நீ போய்ச் சோதித்துப் பார்த்துவிட்டு வந்தது நல்லதாய்ப் போயிற்று. ஆறு விழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் ஆற்றைக் கடந்தால் ஆற்றின் பொல்லாத கோபத்துக்குள்ளாகியிருப்போம். அது நன்றாகத் தூங்கும் வரை பொறுத்திருந்து, அதன்பின் பயணத்தைத் தொடர்வோம்” என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

சீடர்கள், அவரவர்களுக்குத் தெரிந்த கதைகளைக் கூறிப் பொழுதைப் போக்கிக்
கொண்டிருந்தனர். பொழுது வெளுக்க ஆரம்பித்தது. அயர்ந்து தூங்கிய குரு திடுக்கிட்டு எழுந்தார். மடையனை அழைத்தார். “மடையா! பொழுது, புலர ஆரம்பித்துவிட்டது. இப்போதாவது ஆறு தூங்குகிறதா, விழித்துக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வா” என்று கூறினார்.

உடனே மடையன், மட்டி கொண்டு வந்த போட்ட அணைந்து போன கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொண்டு ஆற்றை நெருங்கினான். கட்டையை நீருக்குள் விட்டான். எந்தவித ஒலியும் ஏற்படவில்லை. அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேகமாக ஓடி வந்தான்.

“குரு! இப்போது ஆறு நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறது” என்று கூறினான்.

“அப்படியா, இதுதான் சரியான வேளை யாரும் எந்த ஒலியும் எழுப்பாமல் மிகவுவம் அமைதியாக வாருங்கள். சப்தம் போட்டால் ஆறு விழித்துக் கொள்ளும்” என்று தன் சீடர்களை எச்சரித்து விட்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து குரு ஆற்றை நோக்கி நடக்க, சீடர்களும் பின் தொடாந்தனர். பயந்து கொண்டே ஆற்றைக் கடந்து, ஒரு வழியாக அக்கரை வந்து சேர்ந்தனர்.

தன்னுடைய சீடர்கள் அனைவரும் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார்களா என்று சரிபார்க்க குரு எண்ணினார். தனது சீடர்களில் ஒருவனை அழைத்து, “சீடனே! என்னையும் சேர்த்து நாம் ஆறு பேர். நாம் அனைவரும் பத்திரமாக இருக்கிறோமா? நம்மில் யாரையாவது அந்தப் பொல்லாத ஆறு விழுங்கிவிட்டதா? எனச் சரிபார்த்து எண்ணிக்கூறு?” என்று கூறினார்.

அபிஷ்டு தன் முன்னால் நிற்பவர்களை ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பித்தான். தன்னை மட்டும் சேர்க்காமல் மற்றவர்களை மட்டும் எண்ணி, “குருவே, ஐந்து பேர்தான் உள்ளோம்” என்ற கூறினான்.

ஆறு பேரில் ஒருவரைக் காணோம் என்று குரு திடுக்கிட்டுப் போனார். தங்களில் ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது என்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதனால், குரு மீண்டும் எண்ணிப் பார்க்குமாறு மற்றொரு சீடனிடம் கூறினார். அவனும் தன்னை விட்டுவிட்டு மற்றவர்களை மட்டும் எண்ணி விட்டு, “குருவே, மோசம் போனோம். அபிஷ்டு எண்ணியது சரியே! நம்மில் ஒருவரைக் காணோம். ஐவர்தான் உள்ளோம் என்று அலறினான்.

இப்படியே மற்ற சீடர்களும், குருவும் தங்களைச் சேர்க்காமலேயே எண்ணி ஐவர்தான் என்று முடிவு செய்தனர். தங்களில் ஒருவரை இழந்துவிட்ட சோகத்தில் அழுதுகொண்டிருந்தனர்.

குருவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. தன் சீடர்களில் ஒருவரை அபகரித்துக் கொண்ட ஆற்றின் மீது கடுங் கோபம் கொண்டார். அதனைப் பலவாறு பழித்துக் கூறி சாபமிட்டார்.

குருவும் சீடர்களும் துயரம் தாங்காமல் அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆற்றோடு போனவன் தங்களில் யார் என்று அறிந்து கொள்ளாமலேயே துக்கம் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த நேரத்தில் வழிப்போக்கன் ஒருவன் குருவும், சீடர்களும் இருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவர்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு அனுதாபம் கொண்டான். காரணம் என்ன என்று அவர்களிடம் விசாரித்தான். சீடர்கள் நடந்ததைக் கூறி மேலும் அழுதனர். வழிப் போக்கன் அவர்களை எண்ணிப் பார்த்தான். அவர்களின் மடமையை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

“அன்பர்களே! நடந்தது நடந்ததாக இருக்கட்டும். போனவர்களை மீட்கும் மந்திர சக்தி என்னிடம் உண்டு. உங்களில் ஆறு விழுங்கிய நபரை மீட்டுத் தருகிறேன். அதற்கு என்ன சன்மானம் கொடுப்பீர்கள்?” என்று வழிப்போக்கன் கேட்டான். “ஐயா, எங்களில் காணாமல் போனவரைத் தாங்கள் மீட்டுக் கொடுத்தால் எங்களிடம் உள்ள பணம் முழுவதையும் தந்து விடுகிறோம். தங்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்” என்று, குரு நெகிழ்ந்து கூறினார்.

வழிப்போக்கன் தன் கையில் ஒரு குறுந்தடி வைத்திருந்தான். அதனை எடுத்தவாறு, “இந்தக் கோலில்தான் மந்திர சக்தி இருக்கிறது. நீங்கள் வரிசையாக நில்லுங்கள். நான் இந்தத் தடியால் முதலில் நிற்பவர் முதுகில் தட்டுவேன். அவர் ‘ஒன்று’ என்று கூறிவிட்டுத் தன் பெயரைக் கூறவேண்டும்” என்று கூறினான்.

வழிப்போக்கன் கூறியவாறே, குரு வரிசையில் முதலிலும் அதனையடுத்து சீடர்களும் வரிசையாக நின்றனர். முதலில் குருவின் முதுகில் கம்பால் தட்டினான். அவர், “ஒன்று. என் பெயர் பரமார்த்த குரு” என்று கூறினார். அடுத்தவனைத் தட்டியதும் ‘இரண்டு’ என்று கூறித் தன் பெயரையும் சொன்னான். இவ்வாறே மற்றவர்களும் முதுகில் தட்டியதும் தங்கள் பெயருடன் எண்ணிக்கையையும் கூறினர். கடைசியாக நின்றவன் “ஆறு, என் பெயர் மூடம்” என்ற கூறியதும் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. காணாமல் போனவன் கிடைத்து விட்டான், இப்போது ஆறு பேர் உள்ளோம் என்று கூறி ஆனந்தக் கூத்தாடினர்.

தங்களில் ஒருவனை மீட்டுத் தந்த வழிபோக்கனின் அதிசய ஆற்றலை எண்ணி வியந்தனர். அவனைப் போற்றிப் புகழ்ந்து, தங்களிடமிருந்த பணம் முழுவதையும் தந்தனர்.

அதிருஷ்டத்தை நினைத்துக் கடவுளுக்கு நன்றி கூறினான் போக்கன்.

பரமார்த்த குரு கதைகள் – மருத்துவத் தொழில்

“குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?” எனக் கேட்டான், முட்டாள்.
“அதனால் நமக்கு என்ன பயன்?” என்று பரமார்த்த குரு கேட்டார்.

“பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்” என்றான், மூடன்.

“அப்படியே செய்வோம்” என்றார் குரு.

“மனிதர்களுக்கு மட்டும்தானா?” என்று கேட்டான் மண்டு.

“மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!” என்றான் மட்டி.

பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது.

காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், “குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!” என்றான்.

“அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!” என்றார் பரமார்த்தர்.

“அதற்கு என்ன செய்வது?” எனக் கேட்டான் முட்டாள்.

“இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ªரில் அழுத்தி வையுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்” என்றார் குரு.

உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள்.

நோயாளியோ “ஐயோ, அம்மா!” என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். “கண் வலிக்கிறது” என்றாள்.

“இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!” என்றான் முட்டாள்.

கிழவியோ, “ஐயையோ” என்று கத்திக் கொண்டு ஓடினாள்.

சிறிது நேரம் சென்றது. “உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்றபடி ஒருவன் வந்தான்.

“சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்றார் பரமார்த்தர்.

முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர்.

கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, “குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!” என்றான்.

அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான்.

வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான்.

“பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?” என்று கேட்டபடி வேறொருவர் வந்தார்

“வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்” என்றார் பரமார்த்தர்.

சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்!

“இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!” என்றார் பரமார்த்தர்

சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான்.

“உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!” என்றார் பரமார்த்தர்

யானைக்கால் வியாதிக்காரனோ, “காலை விட்டால் போதும்” என்று தப்பினான்.

“ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறþன்” என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். “இவர் வாயை அடைத்து விடுங்கள்!” என்று கட்டளை இட்டார்.

குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி.

“என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது” என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, “தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்” என்றார்.

“வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்” என்றான் மடையன்.

கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள்.

அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன்.

பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் கூடி இனி குருவையும் சீடர்களையும் ஊருள் நுழையவிடக் கூடாதென முடிவெடுத்தனர்..

சிறுவர் கதைகள் – மந்திரியான காக்கை அண்ணாச்சி

மங்கள தேவி கோட்டத்தின் கீழ்ப்பகுதியல் குமுளி மலைத் தொடரும். மேற்பகுதியில் தேக்கடி மலைத் தொடரும் காடுகளால் சூழப்பட்டு இருந்தன.

அன்று குமுளி மலைப்பகுதி காடு பரபரப்பாயிருந்தது. காரணம் காட்டுக்குள்ளே அன்று தேர்தல் நடந்தது.

மிருகங்களும், பறவைகளும் மற்றும் புழு பூச்சிகளும் கூட தேர்தலில் கலந்து கொண்டன.

வேங்கைப்பள்ளம் என்ற இடத்தில் இந்தத் தேர்தல் நடந்தது. தோதகத்தி மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் செந்நாய்கள் அதிகம் இருந்தன.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தல். தேர்தலை இந்த முறை செந்நாய்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இந்தத் தேர்தலில் சுகாதார மந்திரிக்கு மட்டும் மும்முனைப் போட்டி வந்துவிட்டது. சுகாதார மந்திரிக்குப் போட்டி இடுபவர் தங்களை தூய்மையானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும்.

சுகாதார மந்திரிப் பதவிக்கு பன்றியும், பட்டாம் பூச்சியும், காக்கையும் போட்டியிட்டன.

போட்டியைத் தவிர்க்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. எனவே ஓட்டு எடுப்பு நடத்துவது அவசியமாகி விட்டது.

சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்கு தேர்தலை நடத்தியது. பல ஆண்டுகள் பிரதமராக இருந்த சிங்கம் வயதான காரணத்தால் சபாநாயர் பதவிக்கு நின்று தோற்றுப் போனது.

காட்டரசுத் தலைவராக முயல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கு மட்டும் போட்டி கடுமையாக இருந்தது.

ஆரம்பத்தில் காட்டு எருமையை ஆதரித்த குரங்குகள் திடீரென்று செந்நாயை ஆதரித்தன. தவிர செந்நாய்கள் அராஜகத்திற்கு பயந்து மான்கள் முழுமையாக செந்நாயை ஆதரித்தன. செந்நாய் பிரதமராகி விட்டது.

நிதி மந்திரியாக வரிக்குதிரையும், பாதுகாப்பு மந்திரியாக ஓநாயும், உணவு மந்திரியாக கழுதையும், சொற்பமான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தன.

வெளியுறவு மந்திரியாக எவ்வித போட்டியும் இன்றி நரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகர் குரங்கார் முதலில் பன்றியாரை அழைத்துத் தனது தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறும்படி பணித்தார்.

பன்றியார் வேகமாக மேடையை நோக்கி நடந்தார். வழியில் நின்றிருந்த யானையார் பட்டென்று நகர்ந்து அவருக்கு வழி விட்டார்.

பன்றியார் மேடைக்கு வந்ததும் காட்டரசுத் தலைவர் நாற்றம் தாள முடியாமல் தனது பெரிய காதுகளை தேய்த்துக் கெண்டார்.

“என்னுடைய வாழ்க்கையே சுகாதாரப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவன். அது மட்டுமல்ல.. யானையார் போன்ற பெரியவர்கள் கூட என்னைக் கண்டதும் விலகி நிற்பார்கள். எனவே என்னை உங்கள் சுகாதார மந்திரியாக தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்…..” என்று சொல்லிவிட்டுப் போய் உட்கார்ந்தார்.

அடுத்து தனது சிவப்பு நிற இறக்கைகளை விரித்துப் பறந்து வந்தது பட்டாம்பூச்சி. முயலார் பட்டாம் பூச்சியின் வண்ணத்தைப் பார்த்து மயங்கினார்.

தனது சிறகுகளை அசைத்தபடி பேசியது பட்டாம்பூச்சி.

“அண்ணாச்சி பன்றியார் வந்து நின்று பேசிய இடத்தை சுத்தம் செய்யவே தனியாக ஒரு சுகாதார மந்திரியைப் போட வேண்டும்” என்றதும் கொல்லென்று எல்லாம் சிரித்தன.

“என்னைப் பாருங்கள்.. என் சிறகுகளைப் பாருங்கள். என்னைப் போல நீங்களும் அழகாக இருக்க உங்கள் வாக்குகளை எனக்கே போடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.

அடுத்து காகம் வந்தது….”பன்றியார் வந்தார் நான் சுகாதாரத்தின் அவதாரம் என்றார்.. நானே சுத்தம் செய்கிறேன் என்றார்….வாஸ்தவம் தான். அவர் இருக்கும் இடம் எப்படிப் பட்ட இடம் என்று நமக்குத் தெரியாதா? அது கிடக்கட்டும். நமது பட்டாம்பூச்சி அண்ணாச்சி குடிப்பது தேன்தான் இல்லை என்று சொல்லவில்லை. அவர் படுப்பது எங்கு என்று தெரியுமா? பிராணிகளின் மலம்.

மலத்தை உண்பவருக்கு உங்கள் ஓட்டா?

மலத்தில் உறங்குபவருக்கு உங்கள் ஓட்டா?”
என்ற கேள்வியுடன் பறந்து சென்றார் காக்கையார்.

அதன் பின்னர் பறவைகளும், மிருகங்களும் இவற்றை ஆதரித்தும், தாக்கியும் பேசி ஓட்டு வேட்டை ஆடின.

கடைசியாக நரியாரை எழுந்து பேசும்படி எல்லாம் வற்புறுத்தின.

நரியார் தனது வாலால் முகத்தைத் துடைத்தபடி மேடையில் ஏறினார். எப்போதும் நரியார் பேச்சுக்கு பரவலான மரியாதை இருந்தது.

“காட்டரசர் நாமம் வாழ்க” என்று பேச ஆரம்பித்தார் நரியார்.

“பன்றியார் சொன்னது போல்….. அவர் மலக்கழிவுகளை உண்டு சுகாதாரத்திற்கு வழி செய்கிறார் என்பது வாஸ்தவம்தான்…. பட்டாம் பூச்சியார் சுத்தமான தேனைக் குடிக்கிறார். பார்க்க அழகாக கவர்ச்சியாக இருக்கிறார் அதுவும் சரிதான்”

நரியார் சொன்னதை எல்லா பறவைகளும் மிருகங்களும் உன்னிப்பாய் கவனித்தன.

“காக்கையாரும் பன்றிகளைப் போல அசுத்தங்களை உண்டு சுத்தப்படுத்துகிறார்.. இது நமக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு நிறுத்தியது. முக்கியமான செய்தியைச் சொல்லும் போது நரியார் இப்படி நின்று நிதானித்துப் பேசுவார்.

“சுத்தம் என்பது தானும் சுத்தமாக இருக்க வேண்டும். தனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூவரில் இதற்குப் பொருத்தமானவர்?” என்ற கேள்வியுடன் மீண்டும் ஒருமுறைத் தனது பேச்சை நிறுத்தினார்.

யானையார் கூட தனது காதுமடல்களை அசைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

“பன்றியாரின் உடம்பையும், உறைவிடத்தையும் சுத்தமானது என்று சொல்ல முடியாது. மலத்திலும் மூத்திரத்திலும் படுத்து உறங்கும் பட்டாம் பூச்சியாரும் சுகாதாரச் சூழலில் வாழ்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால்” கொக்கி போட்டு நிறுத்தினார் நரியார்.

இம்மியளவு இலை விழுந்தால் கூட இடிச்சத்தம் போல் கேட்கும் அளவுக்கு அமைதி.

மீண்டும் நரியார் ஆரம்பித்தார்.

“காக்கையார் உடல் சுத்தம். உள்ளம் சுத்தம். அவர் சுற்றுப் புறமும் சுத்தமானது. நாள் தவறினாலும் அவர் குளியல் தவராது. இனி ஓட்டுப் போடுவது உங்கள் சுதந்திரம்” என்று சொல்லிவிட்டு நடந்தார் நரியார்.

இப்போது எல்லோருக்கும் ஒரு தெளிவான வழியைக் காட்டியது போல் தமக்குள் பேசிக் கொண்டனர்.

சற்று நேரத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. செந்நாய் அமைதிப் படை தில்லுமுல்லுகள் நடக்காமல் பார்த்துக் கொண்டன.

ஓட்டுகள் எண்ணப்பட்டன. காக்கையார் சுத்தம் சோறுபோடும் என்பது உங்களுக்குத் தெரியும் ஆனால் தேர்தலில் ஜெயிக்கவைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று சபாநாயகர் குரங்கார் ஜோக் அடிக்க எல்லோரும் சிரிக்க குமுளி மலைக் காடே அதிர்ந்தது.

சிறுவர் கதைகள் – யானை பல் விளக்குமா?

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

“ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.

“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.

வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.

அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார்.

“ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.

அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.

அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.

அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.

ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர்.

அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா.

“குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு.

பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.

அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.

விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

“பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.

அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.

“தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.

அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.

அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.

அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.

ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.

“சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.

அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.

“அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன் “கொல்” லென்று சிரித்தனர்.

அப்புவுக்கும் சிரிப்பு வந்தது

சிறுவர் கதைகள் – தேவதை

மாலைப்பொழுது வானத்துக்கு மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுத்து திரும்ப வாங்கிய வண்ணம் கதிரவன் மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது.

ஆறாம் வகுப்புப் படிக்கும் கணேஷ் பள்ளியில் இருந்து வந்தவுடன் புத்தகப்பையை இறக்கிவிட்டு அடுப்படியில் கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்திருந்த பொரிகடலையை இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு தெருவின் முற்றத்தில் விளையாடப் போய்விட்டான்.

இருள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

“ஏய்…கணேஷ்! விளையாடியது போதும், வந்து படிடா” என்று அம்மா கூவ, ஓடிவந்தான்.

“போய் கை, கால் அலம்பிட்டு மாடி மேலே போயி படி”

கணேஷ் நெடுநேரம் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான்.

“கணேஷ் நேரமாயிடுச்சு. சாப்பிட்டு தாத்தா கூடப் போய்ப்படு. காலையில் படிக்கலாம்” என்றாள் அம்மா.

சாப்பிட்டுவிட்டு தாத்தாவுடன் படுத்தான். தூக்கம் வரவில்லை. “தாத்தா ஒரு கதை சொல்லுங்க தாத்தா” என்றான்.

பேரக்குழந்தை கேட்கிறதே என்று தாத்தாவும் கதை கூற ஆரம்பித்தார்:

ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரு ஆட்சியில மாதம் மும்மாரி பொழிந்தது. அந்த ராஜாவுக்கு மீனான்னு ஒரு ராஜகுமாரி. தேவதை போல கொள்ளை அழகு. குருகுலத்துல நல்லா பாடம் படிச்சும் வீர, தீர வித்தைகளை கத்துகிட்டும் இருந்தது. அழகும் அறிவும் இணைந்த பொக்கிஷம் என்று நாட்டு மக்கள் இளவரசியைப் புகழ்ந்தார்கள்.

மீனாவுக்காகவே வனம் போன்ற அழகுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் நந்தவனம் அமைத்துக் கொடுத்தார் ராஜா. மாதம் ஒரு தடவை அரண்மனையை விட்டு வெளியே வரும் மீனா, நந்தவனம் வந்து உலவிவிட்டுப் போவாள்.

அந்த ஊர் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா இருக்கிற நேரத்துல அந்த ஊருக்குள்ள ஒரு வேதாளம் புகுந்தது. அந்த வேதாளம் ராத்திரி நேரம் ஊருக்குள் வந்து கல்யாணம் ஆகாத பொண்ணுங்க யாரு வந்தாலும் அடிச்சி ரத்தம் குடிச்சு கொன்னு போட்டுடும். கல்யாணம் ஆகாத பெண்களை விட்டுட்டு வேற யாரையும் தொடுறதும் இல்லை. கண்ணுக்குத் தட்டுப்படறதும் இல்லை.

இந்த விஷயம் ராஜாவுக்குத் தெரிஞ்சி, வேதாளத்தைக் கொல்ல ஆட்களை அனுப்பினார். ஆனாலும் அதைக் கொல்ல முடியவில்லை. ராஜா குழம்பிப் போய் சோர்வாக இருந்தார்.

ராஜாவின் மனக்கவலையை மீனா அறிந்தாள்.

ஒரு நாள் ராஜகுமாரி ரொம்ப தைரியமாக ராத்திரி நேரம் அரண்மனைப் பின்பக்க வாசல் வழியா வேதாளத்தைப் பார்க்க கிளம்பினாள். கொஞ்சதூரம் போயி ஊரைக் கடந்ததும் வெள்ளிக்கொலுசை மாட்டி “ஜலக் ஜலக்” -னு சத்தம் வர்ற மாதிரி நடக்க ஆரம்பிச்சா.

உடனே பக்கத்துல இருக்குற ஒரு மரத்துல இருந்த அந்த வேதாளம் பாய்ந்து வந்து நின்றது. ராஜகுமாரி மீனாவுக்கு அதைப் பார்த்ததும் பயமாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேதாளத்தைப் பார்க்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள்.

அந்த நேரம் ராஜகுமாரியின் கண்ணைப் பார்த்த வேதாளம் மின்னல் தாக்கின மாதிரி தடுமாறியது. அதே வேளையில் ராஜகு‘ரி சுதாரித்தபடி, தனது இடுப்பில் இருந்த கத்தியைத் தூக்கி வேதாளத்தின் நெஞ்சில் எறிந்தாள். வேதாளத்தின் நெஞ்சு பிளந்து ரத்தம் பீறிட்டது.

வேதாளம் சாகப்போற நேரத்துல ராஜகுமாரியை கூப்பிட்டுச் சொன்னது, “தேவியாரே! நான் வேதாளம் இல்லை. பக்கத்து நாட்டு அரக்க வம்சத்தவன். உங்கள் ஊரில் செல்வச் செழிப்போடு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை சீர்குலைக்க எங்கள் ராஜாவால் வேதாளம் வேஷம் போட்டு அனுப்பப்பட்டவன் நான்” என்று சொன்னான். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் உயிர் பிரிந்தது.

நாடே ராஜகுமாரியைப் புகழ்ந்தது. வீரத்திருமகள்னு அவளை முடிசூட்டி இளவரசி ஆக்கினார்கள்.

“என்னடா பேரப்புள்ள அந்த ராஜகுமாரி மாதிரி நீயும் நல்லா படிச்சி வீரமா, நல்ல தைரியத்தோடு, எதுக்கும் பயப்படாம இருக்கணும் என்ன!” என்று தாத்தா கேட்க, “கொர்…கொர்” என்ற குறட்டையுடன் கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தான்.

விடியற்காலை ஐந்து மணிக்கு படிப்பதற்காக கணேஷை எழுப்பி விட்டார். கணேஷூம் எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து புத்தகத்தை எடுத்தவாறு தாத்தாவிடம் கேட்டான்:

“என்ன தாத்தா! ராத்திரி நீங்க ஏதோ ராஜா, ராஜகுமாரி, வேதாளம்னு சொன்னீங்க. ஆனா எனக்கு முழுக்கதையும் ஏன் சொல்லலை?” என்று கேட்டான்.

தாத்தா கலகலவென்று சிரித்து விட்டார்.

பரமார்த்த குரு கதைகள் – நரகலோகத்தில் பரமார்த்தர்

மட்டியும் மடையனும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, கவலையோடு இருந்தனர்.

மண்டுவும் மூடனும் போனாரே! எங்கள் குரு செத்துப் போனாரே! என்று மூக்கால் அழுது கொண்டு இருந்தனர்.

“இனி மேல் யார் சுருட்டுக்கு நான் கொள்ளி வைப்பேன்? எங்களைத் தனியாக விட்டுட்டு, இப்படி அநியாயமாச் செத்துட்டீங்களே!” என்று ஒப்பாரி வைத்தான், முட்டாள்

அதன் பிறகு, ஐந்து சீடர்களும் மடத்துக்கு எதிரே தெருவில் கட்டிப்பிடித்து உருண்டார்கள்.

“செத்துப்போன நம் குரு, எங்கே போயிருப்பார்?” என்றான் மட்டி

“எமலோகத்துக்குப் போனால் பார்க்கலாம்”

“ஒரு வேளை, சொர்க்கத்துக்குப் போயிருப்பாரோ?”

“நம் குரு நிறைய பாவம் செய்தவர். அதனால் நரகத்துக்குத் தான் போயிருப்பார்”

முட்டாளும் மூடனும் இப்படிப் பேசிக் கொண்டு இருந்தனர்.

“நாமும் நரகத்துக்குப் போனால் நம் குருவைப் பார்க்கலாமே!” என்று யோசனை சொன்னான், மண்டு.

“நம் குருவை மீண்டும் பார்ப்பதற்கு இது தான் ஒரே வழி!” என்று குதித்தான் மடையன்.

உடனே மண்டுவும் மூடனும் கைகோர்த்தபடி, தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்தனர்.

முட்டாளோ, கையில் இருந்த கொள்ளிக் கட்டையால் தலையில் நெருப்பு வைத்துக் கொண்டான்.

சற்று நேரத்துக்கெல்லாம், பரமார்த்த குருவின் அருமைச் சீடர்கள் ஐந்து பேரும் உயிரை விட்டனர்.

எங்கு பார்த்தாலும் ஒரே புகை மயமாக இருந்தது. சீடர்களுக்கோ, ஒன்றுமே புரியவில்லை.

“நாம் தான் செத்து விட்டோமே, மறுபடியும் இப்போது எங்கே இருக்கிறோம்?” என்று கேட்டான் மட்டி.

அப்போது, “அதோ பாருங்கள், நரலோகம்!” என்று கத்தினான் மடையன்.

நரகத்திற்கு வந்து சேர்ந்து விட்டதை உணர்ந்த சீடர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

“வாருங்கள், நம் குருவைத் தேடிப் பார்ப்போம்!” என்று ஒவ்வொரு இடமாகப் பரமார்த்தரைத் தேடிக் கொண்டே சென்றார்கள்.

ஓரிடத்தில் பெரிய பெரிய செக்குகள் சுழன்று கொண்டு இருந்தன. பாவம் செய்த சிலரை அதனுள் போட்டு நசுக்கிக் கொண்டு இருந்தனர்.

அதைப் பார்த்த மட்டியும் மடையனும், “நம் குரு, இதன் உள்ளே இருந்தாலும் இருப்பார்!” என்று சொன்னபடி செக்குக்குள் தலையை விட்டார்கள்.

அவ்வளவுதான்! “ஐயோ! ஐயையோ!” என்று தலை நசுங்கி, ரத்தம் ஒழுகக் கீழே விழுந்தனர்.

இன்னொரு இடத்தில், உயரமான கொப்பரைகளில் எண்ணெய் கொதித்துக் கொண்டு இருந்தது.

அதைப் பார்த்த முட்டாள், “நம் குருவை இந்தக் கொப்பரையில் தான் போட்டிருப்பார்கள்!” என்று கூறிக்கொண்டே, கொப்பரைக்குள் எகிறிக் குதித்தான்!

முட்டாள் விழுவதைக் கண்ட மூடன், தானும் ஓடிப் போய் ஒரு கொப்பரையில் குதித்தான்!

கொதிக்கும் எண்ணெய் உடல் முழுவதும் பட்டதும், லபோ திபோ என அலறியவாறு இருவரும் சுருண்டு விழுந்தனர்.

மண்டு மட்டும் பல இடங்களில் பரமார்த்தரைத் தேடிக் கொண்டே சென்றான்.

நரக லோகத்தின் சனி மூலையில் ஏராளமான விறகுக் கட்டைகளை வைத்துத் திகு திகு என்று எரியும் அடுப்பைக் கண்டான்.

நம் குரு இந்த நெருப்புக்கு உள்ளே ஒளிந்து கொண்டு இருந்தாலும் இருப்பார் என்றபடி அதற்குள் நுழைந்தான்.

அடுத்த கணம், “ஆ, நெருப்பு! அம்மாடி நெருப்பு!” என்று கதறியவாறு விழுந்து புரண்டான்.

இதே சமயத்தில், நரக லோகத்தில் கட்டப்பட்டு இருந்த விஷ மண்டலத்தில் பரமார்த்தர் அலறிக் கொண்டு இருந்தார்.

அவரைச் சுற்றிலும் ராட்சத தேள்களும், பாம்புகளும், நண்டுகளும் படையெடுத்து வந்தன.

“ஐயோ, தேளே! நீ வாழ்க! உன் கொடுக்கு வாழ்க! என்னை மட்டும் கொட்டாதே!” என்று கும்பிட்டார்.

அதற்குள் ஐந்து சீடர்களும் அவர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

“ஐயோ! பாம்பு, பாம்பு!” என்று அலறியபடி திண்ணை மேலிருந்து தடால் என்று கீழே விழுந்தார், பரமார்த்தர்.

சீடர்கள் அனைவரும் ஓடி வந்து பார்த்தார்கள்.

அப்பொழுதுதான் பரமார்த்தர் சுற்றும் முற்றும் பார்த்தார். “நல்ல காலம்! மடத்தில் தான் இருக்கிறேன். நரக லோகத்தில் மாட்டிக் கொண்டது போல வெறும் கனவுதான் கண்டிருக்கிறேன்!” என்று மகிழ்வுடன் தொப்பையைத் தடவிக் கொண்டார்.

சீடர்களும் மகிழ்ச்சியுடன் குதித்தார்கள்.

அரசர் கதைகள் – போர்க்களத்தில் எதிரி

மலைவளம் நிறைந்த நாடு சேர நாடு. அந்த நாட்டின் தலைநகரம் கருவூர். அங்கே இரும்பொறை என்ற அரசர் சிறப்புடன் ஆண்டு வந்தார். குல மரபையும் சேர்த்து அந்துவஞ் சேரல் இரும்பொறை, என்று அவரை அழைத்தார்கள்.

வீரம் நிறைந்த அவர் நீதிநெறி தவறாது ஆட்சி நடத்தினார். அவருடைய அரசவையில் புலவர்கள் பலர் சிறப்புப் பெற்றிருந்தனர்.

இரும்பொறையின் நெருங்கிய நண்பராக உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் இருந்தார். இருவரும் இணை பிரியாது இருந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர்.

முடமோசியாரின் அறிவுரைகளைக் கேட்டு ஆட்சி செய்தார் இரும்பொறை.

வழக்கம் போல இருவரும் சோலையில் உலாவிக் கொண்டிருந்தார்கள்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த இரும்பொறை ஏதும் பேசவில்லை.

அரசர் ஏதோ குழப்பத்தில் உள்ளார் என்பது முடமோசியார்க்குப் புரிந்தது.

அரசே! உங்கள் ஆட்சி நல்லாட்சியாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வீரத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது.

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே. ஆட்சியில் ஏதேனும் குறை நேர்ந்து விட்டதா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.

புலவரே! உங்கள் அறிவுரைப் படி ஆட்சி செய்து வருகிறேன், எப்படிக் குறை வர முடியும்?
அரசே! வாரி வழங்கியதால் கருவூலம் காலியாகி விட்டதா? மக்களின் மேல் அதிக வரி விதிக்கும் நிலை வந்து விட்டதா?

புலவரே! மலை வளம் மிக்க நாடு நம் சேர நாடு. எவ்வளவு வாரி வழங்கினாலும் இதன் வளம் குறையாது. மக்களும் உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். நாட்டின் வளம் பெருகிக் கொண்டே செல்கிறது.

அரசே! ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே?

புலவரே! வளம் மிக மிக நம் நாட்டிற்குத் தீங்கு வருமோ? மக்கள் துன்பம் அடைவார்களோ? இதை நினைத்து என் உள்ளம் கலக்கம் கொள்கிறது.

அரசே! வீரம் மிகுந்த நீங்களா இப்படிக் கலங்குகிறீர்கள்? எனக்கு வியப்பாக உள்ளது.
புலவரே! சேரர் குடியில் பிறந்தவன் நான். அச்சம் என்ற சொல்லையே அறியாதவன். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி அதிர்ச்சியைத் தந்தது. போர் மேகங்கள் நம் நாட்டைச் சூழ்ந்து வருகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் போர் நிகழலாம்.

மக்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு வருமோ என்று தான் கலங்குகிறேன்.

அரசே! வீரம் மிக்கவர் நீங்கள். நாட்டைக் காக்க வலிமை வாய்ந்த பெரும் படை உள்ளது. எல்லா நாட்டு அரசர்களும் இதை அறிவார்கள். தனக்கே அழிவைத் தேடும் வீண் முயற்சியில் இறங்கும் அந்த அரசன் யார்?
புலவரே! சோழன் தான் அந்த அரசன். சேர நாட்டைக் கைப்பற்ற பெரும்பாட்டை திரட்டி வருகிறானாம். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி இது.

சோழ அரசர் குடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியா. அவருக்கா நாடு பிடிக்கும் பேராசை? இதனால் எத்தனை உயிர்கள் அழியப் போகின்றன? இரண்டு நாடுகளுக்கும் எவ்வளவு இழப்புகள் ஏற்படப் போகின்றன? இதை அவர் அறிய வில்லையா?

புலவரே! புகழ் வெறி யாரை விட்டது? பெரும்படை இருக்கின்றது என்ற ஆணவம் அந்தச் சோழனுக்கு. இங்கே அவனுக்கும் நல்ல பாடம் கிடைக்கப் போகிறது.

அமைதியான இந்த நாட்டில் போர் ஆரவாரம் தான் எங்கும் கேட்கும். நாமும் வழக்கம் போல் அடிக்கடி சந்தித்து உரையாட இயலாது.

நாட்டின் பாதுகாப்பு வலுவாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். படைத் தலைவர்கள். வீரர்களோடு இது குறித்துப் பேச வேண்டும். நாம் அரண்மனை திரும்புவோம், என்றார் இரும்பொறை.
இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

சோழ நாட்டுத் தலை நகரம் உறையூர். அரசவை கூடியுள்ளது. அரியணையில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி பெருமிதத்துடன் வீற்றிருந்தார்.

அமைச்சர்கள், படைத் தலைவர், அவையினர் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
அவையினரே! என் முன்னோர்கள் இமயத்தை வென்று வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்கள் வீரத்தால் இந்தச் சோழ நாடே பெருமை பெற்றது. அவர்களைப் போன்று நானும் பெருமை பெற விரும்புகிறேன், என்றார் அரசர்.
படைத் தலைவர் எழுந்து, அரசே! கடல் போன்று சோழ நாட்டுப் படை உள்ளது. உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறது. விண்ணுலகையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்தவர்கள் நம் வீரர்கள். இமயத்தை வெல்லுவதா அவர்களுக்கு அரிய செயல், என்றார்.

படைத் தலைவரே! என் எண்ணத்தை அண்மையில் தான் வெளியிட்டேன். உடனே பெரும்படை திரட்டி விட்டீர்களே. மிக்க மகிழ்ச்சி.

அரசே! நம் வீரர்கள் எப்பொழுது போர் வருமென்று ஆவலுடன் காத்திருந்தார்கள். செய்தி அறிந்தவுடன் எல்லோரும் போருக்குத் தயாராகி விட்டார்கள்.

சேர நாட்டின் மீது படை எடுக்க வேண்டும். அதை வெல்ல வேண்டும். இதுதான் முதல் முயற்சி.
அமைச்சர் எழுந்து அரசே! என் கருத்தை இங்கே சொல்லலாமா? என்று கேட்டார்.

அமைச்சரே! எல்லோர் கருத்தையும் கேட்பதற்காகத்தான் அரசவை உள்ளது. தயங்காமல் சொல்லுங்கள்.
அரசே! நமக்கும் சேர நாட்டிற்கும் பகை ஏதும் இல்லை. சேர நாட்டு அரசரும் உங்களைப் போலவே சிறந்த வீரர். அந்நாட்டு மக்களும் வீரம் மிக்கவர்கள். பேரழிவை ஏற்படுத்தும் இந்தப் போர் தேவையா? சிந்தியுங்கள்.
அமைச்சரே! வலிமை வாய்ந்த அரசனோடு போரிட்டு வென்றால்தானே நமக்குப் பெருமை. பக்கத்தில் வலிமை வாய்ந்த நாடு இருப்பது நமக்கு எப்போதுமே தொல்லை. சேர அரசனை வென்றால் என் புகழ் உலகெங்கும் பரவும். அந்த நாட்டின் செல்வமும் நம் கருவூலத்தில் சேரும். நம் நாடு மேலும் வளம் பெறும்.

அரசே! அமைதியை விரும்பிய நான் என் எண்ணத்தைச் சொன்னேன். வீரம் மிக்கவராகிய நீங்கள் போர் செய்யவே துடிக்கிறீர்கள், என்று அமர்ந்தார் அமைச்சர்.

படைத் தலைவரே! ஒரு திங்களில் நம் படை சேர நாட்டிற்குப் புறப்பட வேண்டும். இந்தப் போருக்கு நானே தலைமை ஏற்கப் போகிறேன். என் வீரத்தை உலகமே அறிந்து போற்றப் போகிறது. எல்லா ஏற்பாடுகளையும் விரைந்து செய்து முடியுங்கள்.

அரசே! கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன், என்றார் படைத் தலைவர்.
என் எண்ணம் நிறைவேறும் நாள் வந்து விட்டது. சோழ நாட்டு வெற்றிக் கொடி பல நாடுகளில் பறக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அவையினர் உணர்ச்சிப் பெருக்குடன், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

கருவூர் நகர வீதிகளில் போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அமைதி தவழ்ந்த அந்த நகரத்தில் எங்கும் ஆரவாரம் கேட்டது.

அரண்மனையில் அரசனும் புலவர் முடமோசியாரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த படைத் தலைவர் பணிவாக அரசனை வணங்கினார்.

படைத் தலைவரே! என்ன செய்தி?

அரசே! சோழர் படை நம் நாட்டிற்குள் நுழைந்து விட்டது. நம் காப்பு அரண்களை எல்லாம் அழித்து விட்டார்கள். தலை நகரின் அருகே பாசறை அமைத்துத் தங்கி உள்ளார்கள். எங்கே எப்பொழுது போரிடலாம்? இது குறித்து நம் பதிலை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

நாம் அவர்களைக் காக்க வைக்க வேண்டாம். விரைவில் போர் செய்வோம். எதிரிகளை விரட்டி அடிப்போம். நம் படைகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளனவா?

அரசே! நம் நால்வகைப் படைகளும் போருக்குத் தயாராக உள்ளன. நம் படையினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். நம் படைகளின் அணிவகுப்பை நீங்கள் பார்வையிட வேண்டும்.

படைத் தலைவரே! கோட்டைக்கு வெளியே நாளை நம் படை வீரர்கள் அணிவகுத்து நிற்கட்டும். நானும் முடமோசியாரும் கருவூர்க் கோட்டை வேண்மாடத்தில் இருந்து பார்வை இடுகிறோம். நாளை மறுநாள் படைக்குத்
தலைமை தாங்குகிறேன். எதிரிகளோடு போரிட்டு வெல்கிறேன்.
தங்கள் கட்டளை அரசே! என்ற படைத் தலைவர் வணங்கி விட்டுச் சென்றார்.

முடமாசியாரே! போர் நிகழ உள்ளது. நம் வீரர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள். பார்த்தீரா?

ஆம் அரசே! நம் நாட்டு மக்கள் வீரம் மிக்கவர்கள். எதற்கும் கலங்காதவர்கள். எத்தகைய பெரிய படையையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள்.

புலவரே! சேரனின் வீரத்தை இந்த உலகமே வியந்து போற்றப் போகிறது. பகைவரின் செங்குருதி வெள்ளத்தில் நில மகள் நீராடப் போகிறாள், என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் இரும்பொறை.

அரசே! நாம் நாளை சந்திப்போம், என்று சொல்லி விடை பெற்றார் முடிமோசியார்.

கருவூர்க் கோட்டைக்குச் சிறிது தொலைவில் சோழர் படையின் பாசறை இருந்தது.
காலை நேரம். சோழ வீரர்கள் ஆங்காங்கே போர்ப் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.
சோழ அரசர் நற்கிள்ளி அவர்களைப் பாராட்டிக் கொண்டே சென்றார்.

குன்றுகளை ஒத்த யானைகள் இருந்த இடத்திற்கு வந்தார் அவர். வலிமை வாய்ந்த யானைப் படையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

எதிரிகளை வெல்ல இந்த யானைப் படையே போதுமே. நம்மை எதிர்த்து ஒரு நாள் கூட அவர்களால் போர் செய்ய முடியாது, என்று நினைத்தார் அவர்.

அங்கிருந்த பட்டத்து யானை பிளிறியது. அந்த யானையின் அருகே சென்றார் அவர்.
பாகன் பரபரப்புடன் ஓடி வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான்.
பாகனே! பட்டத்து யானையின் மேல் அமர்ந்து நம் படையை பார்வையிட விரும்புகிறேன்.

தயக்கத்துடன் பாகன், அரசர் பெருமானே! பட்டத்து யானை அடிக்கடி பிளிறுகிறது. இரண்டு நாட்களாக எனக்கும் கட்டுப்பட மறுக்கிறது. மதம் பிடித்தது போல உள்ளது.

பட்டத்து யானையின் மேல் அமர வேண்டாம். இன்று மாலைக்குள் பட்டத்து யானையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுவேன். என்னை மன்னியுங்கள், என்று பணிவுடன் சொன்னான்.

பாகனே! மதம் கொண்ட யானையை நான் அடக்குகிறேன், என்று சொன்னார் அவர். யானையின் மேல் ஏறி அமர்ந்தார்.

அரசே! வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள், என்று கெஞ்சினான் பாகன்.
யானையோ பிளிறியபடி வேகமாக ஓடத் தொடங்கியது.
பாகன் திகைத்து நின்றான்.

பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அரசரைச் சுமந்து ஓடுகிறது, என்ற கூக்குரல் பாசறை எங்கும் ஒலித்தது.
வீரர்கள் ஓடி வந்தார்கள்.

ஐயோ! பட்டத்து யானை கருவூர்க் கோட்டையை நோக்கிச் செல்கிறதே. அதைத் தடுப்பார் இல்லையே, என்று எல்லோரும் அலறினார்கள்.
வேகமாக ஓடிய யானையைப் பின் தொடர வீரர்களால் முடியவில்லை.
யானை அவர்கள் கண்களில் இருந்து மறைந்தது.
கருவூர்க் கோட்டைத் திடலில் சேர நாட்டு வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

கோட்டையின் வேண்மாடத்தில் இரும்பொறையும் முடமோசியாரும் நின்று இருந்தனர். படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்தனர்.

புலவரே! கண்ணுக்கு எட்டிய தொலைவு நம் வீரர்களே உள்ளனர். சேர அரசர் வாழ்க! வெற்றி வேந்தர் வாழ்க, என்று விண்ணதிர முழக்கம் செய்கின்றனர். போர் வேண்டி அவர்கள் செய்யும் ஆரவாரம் உங்களுக்குக் கேட்கிறதா?
அரசே! சேர வீரர்களின் வீரத்தை எல்லோரும் அறிவார்கள். எங்களைப் போன்ற புலவர்கள் போரை விரும்ப மாட்டார்கள். அதனால் மக்களுக்கு அழிவுதான் ஏற்படுகிறது. ஒரு போர் மற்றொரு போருக்கு அழைத்துச் செல்கிறது. அதனால் மக்கள் தொடர்ந்து பெருந் துன்பத்தை அடைகிறார்கள்.

புலவரே! நாங்கள் போரையா விரும்பினோம்? சோழன் தூங்கும் புலியை எழுப்பி விட்டான். புலியின் சீற்றத்தையும் வலிமையையும் அவன் சந்தித்தே ஆக வேண்டும்.

அரசே! அதோ பாருங்கள். எங்கிருந்தோ யானை ஒன்று ஓடி வருகிறது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. தன் துதிக்கையால் வீரர்கள் சிலரைத் தூக்கி எறிந்து விட்டது. அந்த யானையின் மேல் ஒரு வீரன் அமர்ந்து உள்ளான்.

ஆம் புலவரே! அந்த யானையின் மேல் நம் எதிரி ஒருவன் உள்ளான். படை அணிவகுப்பிற்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்கிறான். என்ன துணிவு அவனுக்கு?

அரசே! நம் வீரர்கள் அந்த யானையைச் சூழ்ந்து விட்டனர். யானையும் கோட்டையின் அருகே வந்து விட்டது. இனி எந்த எதிரியால் தப்ப முடியாது. அவன் தோற்றம் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது.
புலவர் தனக்குள் ஆ! யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர் நற்கிள்ளி அல்லவா? எதற்காக அவர் யானையின் மேல் தனியே இங்கு வந்தார்?

மதம் கொண்ட யானையை அவர் அடக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அவருக்குக் கட்டுப்படாத யானை இங்கே வந்திருக்க வேண்டும். அரசர் இரும்பொறைக்கு உண்மையை உணர்த்த வேண்டும்? என்று நினைத்தார்.
புலவரே! ஏன் திடீரென்று அமைதியாகி விட்டீர்?

அரசே! அந்த யானையில் மேல் இருப்பவர் சோழ அரசர்.
புலவரே! நீங்கள் சொல்வது உண்மையா? யானையின் மேல் இருப்பது சோழ அரசனா? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்.

அரசே! அவர் சோழ அரசர் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளிதான். நான் அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன்.

அவர் ஏன் யானையின் மேல் அமர்ந்து தனியே இங்கே வந்தார்?
அரசே! யானைக்கு மதம் பிடித்திருக்க வேண்டும். அதை அடக்க அவர் முயற்சி செய்திருக்க வேண்டும். அவர்க்கு அடங்காமல் யானை இங்கே வந்திருக்க வேண்டும்.

புலவரே! நீங்கள் சொல்வது போலத்தான் நடந்திருக்க வேண்டும். அங்கே பாருங்கள். நம் வீரர்கள் அந்த யானையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

அரசே! யானையின் மேல் இருப்பவர் உங்கள் எதிரிதான். தனியே உங்களிடம் சிக்கி உள்ளார். அவருக்கு எந்தத் துன்பமும் செய்யாதீர்கள்.

அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் உலகம் என்ன சொல்லும்? தனியே தளர்ந்து வந்த அரசனைக் கொன்றான் சேரன். இவ்வாறு உலகமே உங்களை இகழும். புகழ் வாய்ந்த சேரர் குடிக்கே தீராப் பழி நேரும்.

புலவரே! என்னோடு இவ்வளவு காலம் பழகி இருக்கிறீர்கள். என் உள்ளத்தை அறிய வில்லையே. உண்மையான வீரர்கள் போர்க்களத்தில் தான் வீரத்தைக் காட்டுவார்கள். எந்தச் சூழலிலும் போர் அறத்தை விட மாட்டார்கள். தனியே சிக்கிய எதிரிக்குத் தொல்லை தருபவனா நான்?

அருகில் நின்றிருந்த வீரனைப் பார்த்து, யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர். அரசருக்கு உரிய சிறப்புடன் இங்கே அழைத்து வாருங்கள். என்று கட்டளை இட்டார்.

அரசர் வாழ்க, என்ற அந்த வீரன் சென்றான்.
சிறிது நேரத்தில் வீரர்கள் சூழச் சோழ அரசர் அங்கு வந்தார். தலை கவிழ்ந்த வண்ணம் அவர் இருந்தார்.
முகம் மலர அவரை வரவேற்றார் சேர அரசர்.
வாருங்கள்! சோழ அரசரே! எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பு இது. உங்கள் வருகையால் இந்தக் கருவூர் நகரமே சிறப்புப் பெற்றது. என் அருகே இருப்பவர் பெரும்புலவர் ஏணிச்சேரி முடமோசியார். என் இனிய நண்பர். அவரால்தான் உங்களை அறிந்து கொள்ளும் பேறு பெற்றேன், என்றார்.
ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்தபடி நின்றார் சோழ அரசர்.
இங்கு வந்த சூழலை எண்ணி நீங்கள் வருந்த வேண்டாம். எங்கள் விருந்தினராகச் சிறிது நேரம் இங்கே இருங்கள். பிறகு உங்கள் எண்ணம் போலச் செய்யுங்கள்.

இங்கே உங்களைத் தடுப்பார் யாரும் இல்லை. நாளை நாம் இருவரும் போர்க்களத்தில் சந்திப்போம்.
போர்க்களத்தில் தான் நீங்கள் என் எதிரி. எதிர்பாராத நிகழ்ச்சிகளால் நீங்கள் இங்கே வந்து விட்டீர்கள். தனியே நுழைந்த நீங்கள் என் நண்பர். எந்தச் சூழலிலும் போர் அறத்தை நான் மீற மாட்டேன், என்றார் இரும்பொறை.
நற்கிள்ளி தலை நிமிர்ந்து இரும்பொறையைப் பார்த்தார்.

நண்பரே! மண்ணாசையால் உங்களோடு போரிடப் பெரும் படையுடன் வந்தேன். யானை மதம் பட்டதால் உங்கள் பெருமித உள்ளத்தை அறிந்தேன்.

உங்களைப் போரில் வெற்றி கொள்ள நினைத்தேன். உண்மையில் வெற்றி பெற்றவர் நீங்கள் தான். இனி நமக்குள் போரே வேண்டாம். நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம், என்றார்.
இரு அரசர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

நண்பரே! நீங்களும் உங்கள் வீரர்களும் எங்களின் விருந்தினர்களாக இங்கே தங்க வேண்டும். சேர நாட்டு விருந்தோம்பலை நீங்கள் அறிய வேண்டும். இது என் வேண்டுகோள், என்றார் இரும்பொறை.
அப்படியே ஆகட்டும், என்றார் சோழ அரசர்.

அருகில் இருந்த புலவர் மகிழ்ச்சியுடன் போரே இல்லாத உலகத்தைக் கனவு கண்டேன். அப்படிப்பட்ட உலகத்தில் மக்கள் அமைதியாகவும். வளமாகவும் வாழ்வார்கள். நற்பண்புகள் கொண்ட உங்கள் இருவரால் என் எண்ணம் நிறைவேறியது. உங்களுக்கு என் பாராட்டுகள், என்றார்.

அணிவகுத்து நின்ற சேர வீரர்கள், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

இரண்டு அரசர்களும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டே அரண்மனைக்குள் நுழைந்தார்கள்.

இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்று மிசையோனே
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே

(புறநானூற்றுப் பாடல் 13, அடிகள் 1 முதல் 8 வரை. பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்)

பரமார்த்த குரு கதைகள் – வெள்ளை யானை பறக்கிறது

மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது.

குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன்.

குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள்.

உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது!

கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை, என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார்.

குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது… வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு.

ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன்.

ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள்.

ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி.

பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர்.

அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார்.

ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி.

பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான்.

நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன்.

அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள்.

கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு.

பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார்.

குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன்.

ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள்.

இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர்.

குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன்.

எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார்.

மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான்.

திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான்.

தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு.

ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன்.

தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள்.

இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன.

உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது.

இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது!

சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது – ஊகும் – கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை

பரமார்த்த குரு கதைகள் – தோட்டத்தில் மேயுது

அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.

செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, “ஐயோ! போச்சு! போச்சு!” என்று அலறினான்.

பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.

மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.

“அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்; எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே” என்று வருத்தப்பட்டார் பரமார்த்தர்.

செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை யோசனை கூறுமாறு கேட்டார்.

“குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!” என்றான் முட்டாள்.

“நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில் கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்!” என்றான்ன மூடன்.

“புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும் நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்றுவிடுமே!” என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.

அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது. “ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம் இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!” என்றான்.

இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர் கூறிவிட்டார்.

“தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது, பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்! வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்விடும்!” என்று சொன்னான் மட்டி

“ஆமாம்! இதுதான் சரியான வழி!” என்று, ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.

வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும் ஒரே நாளில் செத்து விட்டன.

“குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து போய்விடும்!” என்று சொன்னான் மடையன்.
மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக் கவிழ்த்து வைத்தனர்.

சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.

குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது. “குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும். நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினான் மடையன். “இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!” என்றபடி குதித்தான் மட்டி

மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும் தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.

இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய் இருந்த வேறொரு பசுமாடு வந்தது.

மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால் என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.

மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில் சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான் மடையன்.

“அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து விட்டோம்!” என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு படுக்கச் சென்றார்கள்.

பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.

பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப் பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.

“டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த எடுத்து வையுங்கள்!” என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும் உதைக்க ஆரம்பித்தான்.

“கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்” என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத் தொடங்கினார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – பரமார்த்தரின் பக்தி

பரமார்த்தரின் வேண்டுகோள்படி மதுரை மன்னன், அவருக்கும் சீடர்களுக்கும் அரண்மனையில் விருந்து அளித்து ஒருநாள் தங்க வைத்தான்.

பட்டு மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்த பரமார்த்தர், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். சீடர்களில் மண்டுவுக்கும் மூடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை.

“குருவே! சற்று நேரம் உலாவினால் தூக்கம் வரும் என்று வைத்தியர் காலையில் யாரிடமோ சொன்னாரே… அதேபோல் நாமும் எங்காவது சென்று உலாவி விட்டு வரலாமே என்றான் மண்டு.

நல்லது! அப்படியே செய்வோம்” என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் பரமார்த்தர்.

தெருவில் நடந்தால், நம்மைத் திருடர்கள் என்று காவலர்கள் பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் உப்பரிகைக்குச் சென்று உலாவலாம்!” என்றான், மூடன்.

அதன்படியே மற்ற சீடர்களையும் எழுப்பிக் கொண்டு, எல்லோரும் மெதுவாக நடந்து சென்றனர்.

உப்பரிகையின் படிகள் இருக்குமிடம் வந்ததும், மட்டி மட்டும் குருவை மிஞ்சிய சீடனைப் போல கட கட என்று அவரைத் தள்ளிக் கொண்டு வேகமாக மேலே ஏறினான்.

நான்கு படிகள் ஏறுவதற்குள் கால் வழுக்கிக தடதட என்று உருண்டு கீழே வந்தான். உருண்டு வந்த வேகத்தில் குருவின் மேல் மோதி அவர் பின்னால் வந்த சீடர்களை மோதி எல்லோரும் உருண்டு கீழே வந்து சேர்ந்தனர்.

“மட்டியே! அவசரப்படுகிறாயே!” என்று திட்டினார் பரமார்த்தர். மறுபடியும் எல்லோரும்
மெதுவாக ஏறி, உப்பரிகையை அடைந்தார்கள்.

அன்று முழு நிலவு நாள். அதனால், நாடும் நகரமும் அழகாகத் தெரிந்தது. “அற்புதம், அற்புதம்” என்று குரு மகிழ்ந்தார்.

அப்போது மடையன் மட்டும் அலறினான்

“என்ன? என்ன?” என்று பதறினார் குரு.

“குளிர்கிறதே” என்றான் மடையன்.

“அப்படியானால் நீ மட்டும் கீழே போய்ப் படுத்துக் கொள். நாங்கள் பிறகு வருகிறோம்” என்று பரமார்த்தர் சொன்னதும் அவன் கீழே இறங்கிப் போய்விட்டான்.

குருவும் மற்ற சீடர்களும் நகர அழகைக் கண்டு கொண்டு இருந்தனர்.

அரச வீதிகளில் நிறைய காவல் இருந்தது. குதிரையில் வீரர்கள் அப்படியும் இப்படியும் பாரா வந்து கொண்டு இருந்தனர்.

அந்த வீரர்களைப் பார்த்துக் குருவுக்கும், குதிரைகளைப் பாத்துச் சீடர்களுக்கும் நடுக்கம் ஏற்பட்டது.

அதற்கள் கீழே இறங்கிப் போன மடையன், மறுபடி மேலே ஏறி வந்து, “குருவே.. நான் கீழே இறங்கிப் போனேன். அங்கே இரண்டு பேர். ஒருவன் குண்டாக இருந்தான்; இன்னொருவனுக்குத் தாடியும் மீசையும் உள்ளது. இருவரும் அரண்மனையை விட்டு வெளியே போகிறார்கள். நிச்சயமாக அவங்க இரண்டு பேரும் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்” என்று மூச்சு வாங்கக் கூறினான்.

“அப்படியா? அப்படியானால் உடனே அவர்களைப் பிடித்தாக வேண்டுமே!” என்ற பரமார்த்தர், “எல்லோரும் வாருங்கள், கீழே போவோம்” என்றபடி இறங்கினார்.

எல்லோரும் வேகமாக அரண்மனை வாசலுக்கு ஓடிவந்து பார்த்தனர். மடையன் சொன்னபடி இரண்டுபேர் குண்டாக ஒருவரும், ஒல்லியாக ஒருவரும் வேகமாக மறைந்து மறைந்து போவது தெரிந்தது.

அப்போது அங்கே சிலக காவலர்கள் ஓடிவந்தார்கள். அவர்களிடம், “மடையர்களே! அதோ பாருங்கள், இரண்டு திருடர்கள் அரண்மனையிலிருந்து பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டு போகிறார்கள். ஓடிப் போய் அவர்களைப் பிடியுங்கள்!” என்று கோபத்துடன் திட்டினார்.

வீரர்கள், குருகாட்டிய திசையில் ஓடினார்கள். பரமார்த்தரும், சீடர்களும் திருடன்!திருடன்! விடாதே, பிடி! என்று கத்தியபடியே பின்னாலேயே துரத்தினார்கள்.

அதற்குள் சப்தம் கேட்டு அரண்மனையிலும் நகரத்திலும் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். எல்லோரும் தெருவுக்கு ஓடி வந்து பார்த்தனர்.

ராஜ வீதியில் ஒரே கலவரம். கூக்குரல்கள். அப்போது மூடன், “அதோ…அதோ.. பிடியுங்கள்” என்று கத்தினான்.

பரமார்த்தரும் சீடர்களும் அந்த இருவர் மீதும் தடால் என்று விழுந்து உருட்டி, அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

வீரர்கள் அவர்களை விலக்கி, திருடர்களை உற்றுப் பார்த்தனர். உடனே, “அரசே! மந்திரியே! நீங்களா?!” என்று வியந்தனர்.

“எல்லோரும் அரசர் காலில் விழுந்து, “எங்களை மன்னியுங்கள்! இந்தக் குருவும் சீடர்களும்தான் உங்களைத் திருடர்கள் என்று கூறினர்” என்று நடுங்கியபடி கூறினர்.

பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அரசரையே திருடன் என்று சொல்லி விட்டோமே என்று பயந்து நடுங்கினார்கள். கோபம் அடைந்த மக்கள் குருவையும் சீடர்களையும் அடிப்பதற்குச் சென்றனர்.

உடனே அரசர், “பொதுமக்களே! நானும் மந்திரியும் நகர சோதனைக்குச் செல்வது தெரியாமல் பரமார்த்த குரு தவறாக நினைத்து விட்டார். உண்மையிலேயே திருடர்களாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சீடர்களையும், பரமார்த்தருக்கு இருக்கும் அரச பக்தியையும் நான் பாராட்டுகிறேன். பரமார்த்தரும் சீடர்களும் இரவில் கூடத் தூங்காமல் காவல் செய்வதை நினைத்துப் பூரிப்படைகிறேன். இதற்காக நாளையே அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம்!” என்று கூறினார்.

மக்களும், பரமார்த்த குரு வாழ்க! சீடர்கள் வாழ்க! என்று முழக்கமிட்டனர்.

குருவும் சீடர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.

பரமார்த்த குரு கதைகள் – பூவரசம் மரமே புத்திகொடு

மரத்தடியில், உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்துக் கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்து எழுந்து, “சீடர்களே! புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானம் பிறந்ததாம். அதுபோல் இப்போது எனக்கு இந்த பூவரசம் மரத்தடியில் புத்தி பிறந்து விட்டது!” என்று மகிழ்ச்சியுடன் கத்தினார்.

அதைக் கேட்ட சீடர்கள், “புத்தருக்கு ஒரு போதி; எங்கள் பரமார்த்தருக்கு ஒரு பூவரசம்! புத்தி கொடுத்த மரமே, நீ வாழ்க!” என்று அந்த மரத்தைச் சுற்றி வந்து வணங்கினார்கள்.

“சீடர்களே! நாம் யாருடனாவது கூட்டு சேர்ந்து பயிர் வைப்போம்; கொள்ளை லாபம் அடிப்போம்!” என்றார் குரு.

பரமார்த்தரின் யோசனையைக் கேள்விப்பட்ட ஒருவன், அவர்களுடன் கூட்டாகப் பயிர் செய்வதற்கு ஒப்புக் கொண்டான். எப்படியும் குருவும், சீடர்களும் ஏமாந்து விடுவார்கள் என்று நம்பினான்.

“கூட்டு வாணிகம் என்பதால், மண்ணுக்கு மேலே விளைவதை ஒருவரும், பூமிக்குக் கீழே கிடப்பதை இன்னொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் லாபம் சமமாக இருக்கும். உங்களுக்குப் பூமிக்குக் கீழே விளைவது வேண்டுமா? மேலே கிடைப்பது வேண்டுமா?” என்று கேட்டான், கூட்டாளி.

குருவும் சீடர்களும் தனியாகச் சென்று யோசித்தார்கள். “குருவே! பூமிக்கு மேலே இருப்பது வேண்டாம்! அதை யார் காவல் காப்பது? பூமிக்கு அடியில் இருப்பதையே எடுத்துக் கொள்வோம். எல்லாம் பத்திரமாக இருக்கும்!” என்றனர் சீடர்கள்.

சீடர்கள் பேச்சை நம்பிய பரமார்த்தரும், “பூமிக்குக் கீழே இருப்பது எல்லாம் எங்களுக்கே!” என்று கூறி விட்டார்.

ஏமாற்ற நினைத்த கூட்டாளியோ, சோளம், கம்பு, கேழ்வரகு என்று மண்ணுக்கு மேலே கிடைப்பவையாகப் பயிரிட்டான்!

செடிகள் நன்றாகச் செழித்து வளர்வதைக் கண்ட பரமார்த்தர், “பலே! மண்ணுக்கு மேலேயே இவ்வளவு செழிப்பாக இருந்தால், அடியில் இன்னும் வளமாகக் காய்க்குமே! இந்தத் தடவை நமக்கு நல்ல லாபம் நிச்சயமாகக் கிடைக்கப் போகிறது!” என்று மகிழ்ந்தார்.

சீடர்களும் நம் கூட்டாளியும் நன்றாக ஏமாந்து போனான். நம்முடைய திட்டம் அவனுக்குப் புரியவில்லை! என்று நினைத்தனர்.

அறுவடைக் காலம் வந்தது. குருவையும் சீடர்களையும் அழைத்து வந்த கூட்டாளி, “இதோ பாருங்கள்! பேசிய பேச்சை மீறக்கூடாது. பூமிக்கு அடியில் இருப்பதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். மேலே இருப்பதை மட்டும் நான் கொண்டு போகிறேன்” என்று கூறினான்.

அவன் எல்லாவற்றையும் அறுத்துச் சென்ற பிறகு, குருவும் சீடர்களும் வெறும் மண்ணைக் கிளற ஆரம்பித்தார்கள்.

எங்கு தோண்டினாலும் வெறும் வேர் மட்டுமே இருந்தது.

“குருவே! மோசம் போனோம்!” என்று அலறினான் மட்டி.

“ஏதோ மாய வேலை நடந்து விட்டது!” என்று அழுதான் மடையன்.

“குருவே! பாதாள உலகத்தில் இருப்பவர்கள் தான் எல்லாவற்றையும் அடியிலிருந்தே திருடிக் கொண்டு போய் விட்டார்கள்!” என்றான் முட்டாள்.

“இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு உழைத்தோம். எல்லாம் பாழாகி விட்டதே!” என்று வருத்தப்பட்டார், பரமார்த்தர்.

“குருதேவா! அடுத்த முறை பயிர் செய்யும் போது மேலே இருப்பதை நாம் எடுத்துக் கொள்வோம். நாம் ஏமாந்தது போல அவனும் ஏமாற வேண்டும்!” என்றான் மூடன்.

அடுத்த முறை பயிர் செய்யும் காலம் வந்தது. இந்தத் தடவை மண்ணுக்கு மேலே இருப்பது எல்லாம் எங்களுக்கு!” என்று கூறிவிட்டனர், குருவும் சீடர்களும்.

மறுபடியும் ஏமாற்ற நினைத்த கூட்டாளி, இந்தத் தடவை வேர்க் கடலையும் மரவள்ளிக் கிழங்கும் பயிர் வைத்தான்.

குருவும் சீடர்களும் கடுமையாக உழைத்தார்கள். “குருவே! செடிகள் வளமாக வளர்கின்றன. கொள்ளை லாபம் கிடைக்கப் போகிறது!” என்றான் மண்டு. அறுவடை நேரம் வந்தது. “சீக்கிரம் மேலே இருப்பதை எல்லாம் கொண்டு போங்கள். நான் மண்ணை தோண்ட வேண்டும்” என்றான் ஏமாற்றுக்காரன்.

செடியில் ஒன்றுமே காய்க்காததைக் கண்ட சீடர்கள், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டனர்.

“குருதேவா! இந்தத் தடவையும் மோசம் போய் விட்டோம்!” என்று கண்ணீர் விட்டான் மட்டி.

“இரவு பகலாகக் காவல் காத்தும் பயனில்லாமல் போச்சே!” என்றும் புலம்பினான் மடையன். இது ஏதோ சைத்தான் வேலையாகத்தான் இருக்கும்!” என்றான் முட்டாள்.

பரமார்த்தர், தனிமையில சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்! “சீடர்களே! இது சைத்தான் வேலையுமல்ல; சனீஸ்வரன் வேலையுமல்ல! எல்லாம் நான் செய்த தவறுதான்!” என்றார்.

“என்ன! நீங்கள் செய்த தவறா? என்ன அது?” என்று சீடர்கள் வியப்போடு கேட்டனர்.

“மரத்தடியில் படுத்துத் தூங்கியபோது, புத்தி வந்ததாகக் கூறினேன். அது தவறு. அந்த மரம் பூவரசம் மரம் இல்லை என்பது தான் நேற்று தான் தெரிந்தது. வேறு ஏதோ ஒரு மரத்தடியில் மாறிப் போய்த் தவறுதலாகத் தூங்கி விட்டேன்! வாருங்கள், உண்மையாக பூவரசம் மரத்தடிக்குப் போவோம்!” என்றார்.

சீடர்களும், “பூவரசம் மரமே! புத்தி கொடு!” என்று மீண்டும் தவம் செய்யத் தொடங்கினார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – மாடு பிடிப்போம், நாடு ஆள்வோம்

அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது.

பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர்.

மறுநாள் – மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது.

“குருவே…குருவே..” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. “இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!”

“பந்தயமா? என்ன அது?” என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள்.

“காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்” என்று சொன்னான் மண்டு.

இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்தது.

“சீடர்களே! எப்படியாவது இந்தப் பந்தயத்தில் நாம் ஜெயித்து விட்டால்…. நான் பல ஊர்களுக்குத் தலைவன் ஆகிவிடுவேன்! உங்களுக்கும் பதவி கிடைக்கும். அப்புறம் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை”

குருவின் திட்டத்தைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் எகிறி எகிறிக் குதித்தனர்.

“குருவே! நீங்கள் கவலையே படாதீர்கள். எப்படியும் நாங்கள் வெற்றிபெற்றுக் காட்டுகிறோம்!” என்று முட்டாள் சொன்னான்.

“நம் குரு மட்டும் எப்படியாவது ராஜா ஆகி விட்டால்… மகிழ்ச்சியாக இருக்கலாமே! விதம் விதமான குதிரைகள் பூட்டிய தேரில் ஜம்மென்று ஊர்வலம் வரலாம்!” என்று கனவு கண்டான் மூடன்.

“அது மட்டுமா? தெருவில் போனால், எல்லோரும் நம் காலில் விழுந்து விழுந்து கும்பிடுவார்களே!” என்று சிரித்தான், மட்டி.

“ஆமாம், ஆமாம். எனக்கும்கூட இலவசமாக நிறைய சுருட்டுகள் கிடைக்கும். பணத்துக்குப் பதில் சுருட்டையே வரியாகக் கட்டச் சொல்ல வேண்டும்!” என்றார் பரமார்த்தர்.

“குருவே! இன்னொரு கட்டளையும் போட வேண்டும். “இனிமேல் புதிதாகக் குதிரைகள் போடும் முட்டைகள் எல்லாம் மன்னருக்கே சொநதம்” என்று சொல்லி விட்டால், எல்லா குதிரைகளும் நமக்கே கிடைத்து விடும் என்று மடையன் யோசனை சொன்னான்.

“சீடர்களே, அற்புதமான யோசனைகள்! அருமையான எதிர்காலம்! வெற்றி நமக்கே! விடாதீர்கள்… ஓடுங்கள்…” என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டார், பரமார்த்தார்.

“குருவுக்கு ஜே” என்றபடி எல்லோரும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.

ஒரு வீதியில் குருவும் சீடர்களும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.

“ஐயா! அந்த மாட்டைப் பிடியுங்கள்” என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு தடித்த அம்மாள் பரங்கிக்காய் போன்ற தன் உடலை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள்.

இலேசாகக் காற்று வீசினால் கூட மூன்று முறை குட்டிக்கரணம் போட்டு உருளும் அளவுக்கு ஒரு பசுமாடு வாயில் நுரை வழிய நொண்டி நொண்டித் தள்ளாடி நடந்துவந்தது. அது, அவளுக்குப் “போக்கு” காட்டிக் கொண்டிருந்தது. அதன் விலாவில் வரிவரியாக எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.

மாட்டுப் பொங்கல் என்பதால் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பூவும் சுற்றப்பட்டு இருந்தது.

பொங்கல் தயாரித்த பின் அதைத் தன் அருமையான பசுமாட்டுக்கு ஊட்டுவதற்காக ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்திருந்தாள். அந்தக் கிண்ணம் அடிக்கடி பசுமாட்டுக்கு மருந்து கரைத்து ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவது. எனவே ஏதோ மருந்து ஊட்ட வருகிறாள் என்று நினைத்துப் பசு தள்ளாடித் தடுக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருந்தது.

இதற்கிடையே தாடி மீசையும், சுருட்டும் புகையுமாக பரமார்த்த குருவும், அலங்கோல விசித்திரங்களாக அவரது சீடர்களும் எதிரே வரவே அவர்களைக் கண்டு மாடு மிரண்டது.

“இதோ ஒரு ஜல்லிக்கட்டு காளை! மைதானத்திலிருந்து தப்பி வந்திருக்கிறது!” என்று சீடர்கள் அதைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“விடாதே! விடாதே! வாலைப்பிடி! இதை அடக்கி மன்னரிடம் பரிசு வாங்கி விடலாம்!” என்று குரு கட்டளையிட எல்லா சீடர்களும் ஒரே நேரத்தில் மாட்டின் வாலைப் பிடித்து இழுத்தார்கள். வால் பாதியாக அறுந்தது.

வேதனை தாளாமல் குரல் எழுப்பிய மாடு தன்னிடமிருந்த கொஞ்சம் நஞ்சம் சக்தியையும் திரட்டி, கழுதைபோல் ஒரு உதை விட்டது. இதில் மட்டிக்கம் மடையனுக்கும் மூக்கு பிய்ந்தது. இருவரும் கதறிக் கொண்டு தூரப்போய் விழுந்தார்கள்.

“இது மாடா? அல்லது கழுதையா?” என்று திகைத்த குரு, கொம்பு இருப்பதைப் பார்த்து “பொல்லாத மாடாக இருக்கிறதே! கொம்மைப் பிடியுங்கள்! அப்போதுதான் அடங்கும்!” என்று பதறியவாறே சொன்னார்.

முட்டாளும் மூடனும் மண்டுவும், மாட்டின் மீது போய் விழுந்தார்கள். இவர்கள் பாய்ந்த வேகத்தில் இரண்டு கொம்புகளும் பிய்ந்து கையோடு வந்து விட்டன. பசு கால்களை விரித்துப் படுத்தே விட்டது.

“ஆ..! மாடு அடங்கி விட்டது! அடங்கி விட்டது!” என்று குருவும் சீடர்களும் குதித்தார்கள்.

“ஐயோ! என் கண்ணுன! என் செல்லம்.. போச்சே! தினமும் நாலுபடி பால் கறக்கும் அருமைப் பசுவைக் கொன்று விட்டீர்களே! என்று குண்டுக் கிழவி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டாள்.

“கவலைப்படாதே பாட்டி! மாட்டை அடக்கிய வீரச் செயலை மன்னரிடம் சொல்லி, கிடைக்கும் பரிசுப் பணத்தில் உனக்கு நஷ்ட ஈடு கொடுத்து விடுகிறோம்!” என்று கூறி அவளைச் சீடர்கள் சமாதானப்படுத்தினார்கள். குற்றுயிராகக் கிடந்த பசு மாட்டை ஒரு கட்டை வண்டியில தூக்கிப் போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குப் போனார்கள். போய் சேருவதற்கள் மாடு இறந்து விட்டது.

ஜல்லிக் கட்டுக் காளையை அடக்குவதாக நினைத்து நோஞ்சான் பசு மாட்டின் உயிரையும் போக்கிய குருவையும் சீடர்களையும் கண்டு மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.

ஆனால், ஒரு பசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் குருவுக்கும் சீடர்களுக்கும் சாட்டையடிகள் தரப்பட்டன.

பரமார்த்த குரு கதைகள் – அன்புள்ள ஆவியே

“ஙொய்ய்ய்…” என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது. படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார்.

“குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச் சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!” என்றான் மட்டி.

அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன.

வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர்.

“குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?” எனக் கேட்டான், மடையன்.

அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், “ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள் இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன” என்று புளுகினார்.

உடனே சிஷ்யர்கள், “அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்” என்று ஒவ்வொரு கொசுவிடமும் வேண்டினார்கள்.

“உஸ்ஸ்… சத்தம் போடாதே… ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்” என்று மெல்லக் கூறினான், முட்டாள்.

“குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!” என்று குதித்தான், மூடன்.

“அதைவிட, அதற்குக் “கிச்சு கிச்சு” மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!” என்றான் மண்டு.

“சரி…சரி… முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்” என்று கட்டளை இட்டார் குரு.

மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.

மண்டையில நெருப்புப் பட்டதும், “ஐயோ…” என்று கதறினான் மண்டு.

மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது.

சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன.

“குருவே” இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன” என்றான்.

“வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்” என்றான், மண்டு.

“இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்” என்றான் முட்டாள்.

முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர்.

இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன.

“சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?” என்று பரமார்த்தர் கேட்டார்.

“குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. “மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்” என்று சொல்கிறார்களே! அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி.

“ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!” என்றான் மடையன்.

“குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!” என்றான் மூடன்.

“அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?” என்றான் மண்டு.

“செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!” என்றான் மூடன்.

“பலே மூடா!” என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர்.

அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர்.

“திகு, திகு” என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.

சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள்.

அப்போதும் “சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே!” என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!

சிறுவர் கதைகள் – அன்பின் மதிப்பு

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.

ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.

அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.

அவன் மன்னனிடம், “அரசே……..உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?” என்று கேட்டார். மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.

நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

சிறுவர் கதைகள் – அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது.

ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.

“அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.

“சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.

“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.

“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.

அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை…அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?

சிறுவர் கதைகள் – அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.

சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

சிறுவர் கதைகள் – மறைக்க முடியாத பொய்

ஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.

பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.

அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.

“மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?” என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.

“நான் இல்லை”, “நான் இல்லை” என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து “நான் தின்னவில்லை” என்று சொன்னாள்.

“ஓகே……..யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது” என்றாள் ஜானகி ஆன்ட்டி.

பட்டுக்குட்டி பயந்துபோய், “இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்” என்று கூறி அழத் தொடங்கினாள்.

“பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது……….என்ன?” என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.

சிறுவர் கதைகள் – சிஙகமும் பங்கும் – ஆப்பிரிக்கக் குட்டிக் கதை

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக்
கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”
“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.

நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

சிறுவர் கதைகள் – எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, “பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு” என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், “இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்” என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்” என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!” என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு “மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!” என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.எப்படி இருக்கு?

சிறுவர் கதைகள் – ஏமாந்த சிறுத்தை – கிழக்கு ஆப்பிரிக்க குட்டிக் கதை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

சிறுவர் கதைகள் – கருத்துடன் செயல்படு – ஐரோப்பிய குட்டிக் கதை

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

சிறுவர் கதைகள் – உழைப்பே அதிர்ஷ்டம் தரும்

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா “இரண்டடி” என்று சொல்வதற்கு பதிலாக “ஓரடி” என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

‘இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்’ என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் ‘சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்’ என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

சிறுவர் கதைகள் – உழைப்பே அதிர்ஷ்டம் தரும்

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா “இரண்டடி” என்று சொல்வதற்கு பதிலாக “ஓரடி” என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

‘இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்’ என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் ‘சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்’ என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

சிறுவர் கதைகள் – தாய்மையின் சக்தி

ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை.

ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள்.

சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர்.
இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர்.

அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் “நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?” என்று வியப்புடன் கேட்டார்கள்.

அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி “இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்” என்று பதில் சொன்னாள்.

சிறுவர் கதைகள் – உங்களுக்குப் பயன் தேவையா? அடுத்தவருக்கு உதவுங்கள் !

ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?”

ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்”

ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!

1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்

2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.

3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது

4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை