ஒரு நாள் காலையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கோவர்த்தன கிரியின் உச்சியில் விளையாடுவதற்காகச் சென்றார்கள். கள்வர்களும் காவலர்களுமாக அவர்கள் நடித்து விளையாடினார்கள். சிலர் கள்வர்களாகவும் சிலர் ஆட்டுக் குட்டிகளாகவும் பங்கேற்றார்கள். இவ்வாறு அவர்கள் குழந்தைகளாக விளையாடி மகிழ்கையில் வியோமாசுரன் என்ற பெயருடைய ஒரு அரக்கன் அங்கு தோன்றினான். வியோமாசுரன் என்றால் ஆகாயத்தில் பறக்கும் அசுரன் என்று பொருள். அவன் மற்றொரு மாபெரும் அசுரனான மாயா என்பவனின் மகன். இவ்வரக்கர்கள் பல மாயச் செயல்களைப் புரியக் கூடியவர்கள்.

வியோமாசுரன் இடைச் சிறுவனாக உருவம் தாங்கி விளையாட்டில் காவலர்களாக நடித்த சிறுவர்களோடு கலந்து கொண்டு, ஆட்டுக் குட்டிகளாக நடித்த பல சிறுவர்களைக் கவர்ந்து சென்றான். ஒருவர் பின் ஒருவராகப் பல சிறுவர்களை அசுரன் கடத்திச் சென்று, அவர்களை மலைக் குகைகளினுள் பதுக்கி வைத்து, கற்களால் குகைகளின் வாய்களை மூடிவிட்டான். அசுரனின் தந்திரத்தைக் கிருஷ்ணர் அறிந்து கொண்டார்.

vyomasura-vatham

உடனே அவர், சிங்கம் ஆட்டுக் குட்டியைப் பிடிப்பது போல் அசுரனைப் பிடித்து விட்டார். அவரின் பிடியிலிருந்து தப்புவதற்காக அசுரன் ஒரு பெரிய மலையின் அளவிற்குத் தன் உருவத்தைப் பெரிதாக்கினான். ஆனாலும் கிருஷ்ணர் தன் பிடியைத் தளர்த்தவில்லை. மிகுந்த பலத்துடன் அசுரனைத் தரையில் வீழ்த்திக் கொன்றார். வியோமாசுரனைக் கொன்ற பின் கிருஷ்ணர், தம் நண்பர்களையெல்லாம் குகைகளில் இருந்து விடுவித்தார். அவரது வியத்தகு செயல்களுக்காக அவரின் நண்பர்களும் தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். அதன் பின் கிருஷ்ணர், தன் நண்பர்களுடனும் பசுக்களுடனும் விருந்தாவனத்துக்குத் திரும்பிச் சென்றார்.