பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான வசுதேவரையும் தேவகியையும் விடுவித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் அவர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக நேரிட்டது. ஏனெனில் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்று வசுதேவர், தேவகியின் திருமண ஊர்வலத்தன்று ஆகாயத்திலிருந்து அசரீரி கூறிற்று. அதன் காரணமாகவே கம்சன் அவர்களைத் துன்புறுத்தினான்.

தேவகியும் வசுதேவரும் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே கிருஷ்ணர் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினாலும் அவர்கள் அவரைத் தழுவிக் கொள்ளாமல் முழுமுதற் கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு ஆவலாய் நின்றிருந்தார்கள். வசுதேவரும் தேவகியும் மிகுந்த மரியாதையுடன் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவர்கள் தம்மையும் பலராமரையும் குழந்தைகளாகக் காணும்படி தம் யோகமாயையை வியாபிக்கச் செய்தார். அதன்பின் வசுதேவர் மற்றும் தேவகியுடன் மிகுந்த மரியாதையுடன் பேசலானார்:

அன்புள்ள தந்தையே, தாயே எங்கள் உயிரைப் பற்றி நீங்கள் இருவரும் மிகவும் கவலைப்பட்டிருந்தாலும், எங்களை உங்கள் குழந்தைகளாக, வளர்ந்து வரும் சிறுவர்களாக, இளைஞர்களாக நீங்கள் காணும் இன்பம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. என்று கூறினார்.

வசுதேவரும் தேவகியும் தம் மகன்களான கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பாதுகாப்பில் மிகுந்த கவலை கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகவே கிருஷ்ணர் தோன்றியவுடன் அவரை நந்தமகாராஜாவின் இல்லத்திற்கு இடம் மாற்றினார்கள். பலராரும் தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டார். கிருஷ்ணரும் பலராமரும் பத்திரமாக இருக்க வேண்டுமென்று வசுதேவரும் தேவகியும் எண்ணியதால் அவர்களின் குழந்தைப் பருவ லீலைகளை உடனிருந்து கண்டு மகிழ முடியாமற் போயிற்று.

69-krsna-balaramacrop557x281

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார்: துரதிஷ்ட வசமாக எங்கள் விதியின்படி, நாங்கள் எங்கள் பெற்றோர்களின் பார்வையில் பால்ய காலத்தை எங்கள் வீட்டில் கழித்து மகிழ முடியாமல் போயிற்று. அன்புள்ள தாய் தந்தையரே, பௌதிக இருப்பின் நன்மைகளைப் பெற்று அனுபவிக்கும் வாய்ப்பைத் தரும் இவ்வுடலை அளித்த பெற்றோர்களுக்கு ஒருவன் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் உண்டு. வேதக் கோட்பாட்டின்படி, மனித வாழ்வு ஒருவன் மதச் சடங்குகளை நிறைவேற்றவும், விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும், செல்வங்களைப் பெறவும் உதவுகிறது.

ஜட வாழ்விலிருந்து விடுதலை பெறுவதும் இம் மனித வாழ்வில் மட்டுமே சாத்தியமாகிறது. தாய் தந்தையரின் கூட்டுறவால் இவ்வுடல் உருப்பெறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் தாய் தந்தைக்குக் கடமைப்பட்டவன். அக்கடனை அவனால் தீர்க்க முடியாதென்பதையும் அவன் உணரவேண்டும். வளர்ந்த பின் தன் தாய் தந்தையருக்குத் திருப்தி தரும் வகையில் நடந்து கொள்ளாதவன், அல்லது அவர்களுக்குத் தேவையான பொருளுக்கு ஏற்பாடு செய்யாதவன் மரணத்துக்குப் பின் தன் சதையைத் தானே உண்ணும் தண்டனையைப் பெறுவது நிச்சயம்.

வயதான பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆன்மீக குருவுக்கும், பிராமணர்களுக்கும், தன்னைச் சார்ந்திருக்கும் பிறருக்கும் உதவக் கூடிய நிலையில் இருந்தும் உதவாமல் போனால் அவன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் மரித்தவனாகவே கருதப்படுகிறான். அன்புள்ள தாய் தந்தையரே, எங்கள் பாதுகாப்பில் எப்போதும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக நாங்கள் உங்களுக்கு எவ்விதமான சேவையையும் செய்ய முடியாமற் போய்விட்டது. இன்றுவரை எங்கள் காலமெல்லாம் வீணாகிவிட்டது. எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய இயலவில்லை. எனவே இந்தத் தவறுக்கு நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.

இவ்வாறு முழுமுதற் கடவுள் அறியாத ஒரு குழந்தையைப் போல் இனிய சொற்களில் பேசுவதைக் கேட்ட வசுதேவரும் தேவகியும் குழந்தைப் பாசத்தால் உந்தப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் கிருஷ்ணரையும் பலராமரையும் தழுவிக் கொண்டார்கள். கிருஷ்ணரின் சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கியவர்களாய் அவர்கள் பேசவோ, கிருஷ்ணருக்குப் பதில் கூறவோ இயலாமற் போனார்கள். அவர்கள் இருவரையும் அன்புடன் தழுவிக் கொண்டு இடைவிடாது கண்ணீர் விட்டபடி இருந்தார்கள்.