பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் பூ வியாபாரியின் இடத்தை விட்டுச் சென்றபின், கூனுடைய ஒரு இளம் பெண் சந்தனக் குழம்பு நிரம்பிய ஒரு கோப்பையைத் தெருவில் எடுத்துச் செல்வதைக் கண்டார்கள். ஆனந்தத்தின் இருப்பிடமான கிருஷ்ணர் அந்தக் கூனியிடம் ஹாஸ்யமாகப் பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்க விரும்பினார். கிருஷ்ணர் அவளிடம் கூறினார்: உயர்ந்த இளம் பெண்ணே நீ யார்? யாருக்காக இச் சந்தனத்தை எடுத்துச் செல்கிறாய்? இதை நீ எனக்குத் தருவது பொருந்துமென நான் எண்ணுகிறேன். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உனக்கு நண்மை உண்டாகும். எனக் கூறினார்.

முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் அக் கூனியைப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்திருந்தார். அவளை அவ்வாறு கேட்டபோது, ஒரு அசுரனுக்குச் சேவை செய்வதில் பயனில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அதைவிட கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் சேவை செய்தால் பாவங்களெல்லாம் களையப் பெறலாம்.

அந்தப் பெண் கிருஷ்ணரிடம் கூறியதாவது: அன்புள்ள சியாம சுந்தரா, நான் கம்சனின் வேலைக்காரி. அவருக்கு நான் தினமும் சந்தனம் தயாரித்து அளித்து வருகிறேன். இவ்வளவு நேர்த்தியான சந்தனத்தை நான் கொடுப்பதால் கம்சன் என்னிடம் திருப்தி கொண்டிருக்கிறார். ஆனால் அந்தச் சந்தனத்தைப் பெறுவதற்கான தகுதியை உடையவர் சகோதரர்களான உங்களிருவரையும் தவிர வேறு யாரும் இருக்க முடியாதென்பதை நான் இப்போது உணர்கிறேன். என்று கூறினாள்.

கிருஷ்ணர் மற்றும் பலராமரின் அங்க லட்சணங்களாலும், புன்னகையாலும், கண் பார்வையாலும், மற்ற அம்சங்களாலும் கவரப்பட்ட அக்கூனிப் பெண் சந்தனக் குழம்பை எடுத்து அவர்களின் உடல்களின் மீது மிகுந்த பக்தியுடனும் திருப்தியுடனும் பூசத் தொடங்கினாள். கிருஷ்ணரும் பலராமரும் சந்தனம் பூசப்பட்டதும் மேலும் அழகாகக் காட்சியளித்தார்கள். இந்தத் தொண்டு கிருஷ்ணரை மிகவும் மகிழ்வித்தது. அவளுக்கு என்ன வெகுமதி அளிக்கலாமென்று கிருஷ்ணர் சிந்திக்கலானார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் கால் விரல்களால் கூனியின் பாதங்களை அழுத்தியபடி, கைவிரல்களால் அவளின் முகவாயைத் தாங்கிக் கொண்டு, ஒரே அசைவில் அவளின் கூனை நிமிர்த்தினார். அவள் கூன் நீங்கப் பெற்று நிமிர்ந்து நின்றபோது ஓர் அழகிய இளம் பெண்ணாகக் காட்சியளித்தாள். கூனியான அப்பெண்ணின் சேவையில் திருப்தியடைந்த கிருஷ்ணரின் கைகள் பட்ட உடனே அவள் பெண்களில் சிறந்த அழகியாக உருமாறினாள். அவளின் பக்தி கிருஷ்ணரைக் கவர்ந்தது. கிருஷ்ணருக்குச் சேவை செய்யும் பக்தன் உடனடியாக மிகவுயர்ந்த நிலையை அடைகிறானென்பதை இந்நிகழ்ச்சி நிரூபிக்கின்றது.